வள்ளலார் முதலில் பாசுரங்களைப் பாடி வந்தவராகவே இருந்திருக்கிறார். வள்ளலாருக்கு தாக்கத்தை ஏற்படுத்திய தமிழ் பக்தி மரபைச் சேர்ந்தவர்கள் என்று கூறினால், மாணிக்கவாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பட்டினத்தார், தாயுமானவர். இவர்கள் ஏற்படுத்தியது, தமிழ் பக்தி மரபுகளில் மிக முக்கியமான மரபு. இந்த மரபில் தான் வள்ளலார் ஊறியிருந்தார். இந்த மரபு சார்ந்து தான் பாடல்களை அவர் எழுதிக் கொண்டிருந்தார். சைவம் ரீதியாக அவர் தத்துவார்த்தமாக பேசவும், படிக்கவும் தொடங்குகிறார். வள்ளலாருக்கு முன்பே ஒரு சில பேர் சன்மார்க்க சங்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். 'ஒழிவில் ஒடுக்கம்' நூலில் கூட சன்மார்க்க சங்கம் என்ற சொல் புழக்கத்தில் வருகிறது. சன்மார்க்கம் என்றால் என்ன ? என்ற சிந்தனைக்கு அவர் ஆட்படுத்தப்படுகிறார். வெறுமனே பாசுரங்களைப் பாடிக்கொண்டிருந்த இளைஞன் என்ற நிலையிலிருந்து பாசுரங்களுக்குப் பின்னே இருக்கக் கூடிய தத்துவார்த்த மரபுகளைப் பற்றியும் பேசுவதற்கு தனக்கான ஒரு வாய்ப்பை அவர் உருவாக்கிக் கொள்கிறார். அதனுடைய மிக முக்கியமான செயல்பாடாகத்தான் 1858 காலகட்டத்தில், சாஸ்திரச் சங்கம் சார்பில் 'மனு நீதி கண்ட வாசகம்' என்று சொல்லக்கூடிய புத்தகத்தை அவரை எழுதச் சொல்கிறார்கள். மனுநீதி என்பது இந்திய வரலாற்றில் மிகுந்த, விரிந்த பொருளைக் கொண்டது. சோழ மன்னர்களை மனு என்ற சொல் கொண்டு அழைப்பார்கள். அந்த சொல் புழக்கத்தில் அதிகம் இருந்தது. மனுஸ்மிருதி வேறு, இங்கு மன்னர்களை மனு என்று பெயர் கொண்டு அழைப்பது என்பதும் வேறு. இந்த பின்புலத்தில் மன்னர்களைப் பற்றி எழுதச் சொல்கிறார்கள்.சோழ அரசனின் மகன் தேரோட்டிச் சென்ற போது, ஒரு பசுவின் மீது மோதி அது உயிர் விட்டது. அதன் காரணமாக அந்த சோழ அரசன் தனது மகனையே பலி கொடுத்த கதை மனு நீதிச் சோழன். இப்படி தமிழ் மரபுகளில் இருப்பதை உரை நடை வடிவில் எழுதுவதற்கு சாஸ்திரச் சங்கம் அனுமதித்தது. அப்போது அவர் எழுதிய “மனுநீதி கண்ட வாசகம்” என்ற நூல் மிக மிக முக்கியமான நூல். அதில் உள்ள வாசகங்களை நாம் பார்த்தோ மானால் 35 வயதில் வள்ளலார் எந்த மாதிரியான சிந்தனையில் இருந்துள்ளார் என்பது நமக்குத் தெரிய வரும்.
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்க உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!
ஆசைகாட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவவிட்டேனோ!
கலங்கி யொளித்தோரைக் காட்டிக்கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்பமழித்துக் களித்திருந்தேனோ!
குருவை வணங்கக் கூசிநின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழைசொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டிவைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!
அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொதுமண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ!
சுத்த ஞானிகளைத் துஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென்றறியேனே !”
இப்படி அனைத்து விசயங்களைப் பற்றியான, உணர்வுப்பூர்வமான, ஆழமாக ஒரு மனிதராக அந்த காலகட்டத்தில் அவர் உருப்பெற்று விடுகிறார். இந்த பாடலில் ஒவ்வொன்றையும் எடுத்துப் பார்த்தோ மானால் அப்போதைய காலனிய ஆட்சிக் காலத்தில் மக்கள் அடைந்த துன்பங்களை வைத்து தான் எழுதியிருப்பார்.
இப்படியான மனநிலையில் உருவான இராமலிங்கருக்கு சென்னை வாழ்வில் பிடிப்பில்லை. திருமண வாழ்வில் பிடிப்பில்லை. சென்னையில் வாழ்வதை ஏற்றுக் கொள்ளாத அவரது மனம் சென்னையை விட்டு கிளம்பிவிடுகிறார். தென்னாற்காடு மாவட்டம் என்று சொல்லக்கூடிய கருங்குழி என்ற ஊரிற்கு சென்று அங்கிருந்த புரவலர்களின் உதவியுடன் வாழ்ந்த செய்தி களெல்லாம் இருக்கிறது. அங்கு அவர் வாழ்ந்த காலத்திலிருந்து வேறு பல பரிமாணங்களும் உருவாகி வருகிறது. அதே போல 1858 காலம் தொடங்கி 1865 இந்த இடைப்பட்ட காலத்தில் “ஜீவ காருண்ய ஒழுக்கம்” என்ற நூலை எழுதினார். “கடவுள் அருளை ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் பெறக்கூடுமல்லது, வேறு எந்த வழியானும் பெறக் கூடாதென்பது. எப்படியெனில் அருள் என்பது கடவுள் தயவு. கடவுளின் இயற்கை விளக்கம். சீவகாருண்யம் என்பது சீவர்களின் தயவு. சீவர்கள் ஆன்ம இயற்கை வாழ்வு கொண்டு வாழ்கிறவர்கள். கடவுளைப் பெறுவதற்கு சீவகாருண்யமே வழியானதனால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருண்ய ஒழுக்கம் என்றும் அஞ்ஞான வழியென்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமை என்றும் நான் கருதுகிறேன்” என்று கூறுகிறார்.
சீவகாருண்யம் என்றால் என்ன ? “மக்கள் மீது அன்பு” பட்டினி கிடக்கக்கூடிய மக்கள் மீதும் அது சார்ந்து வாழக்கூடிய மக்கள் மீதும் உள்ள அன்பைப் பற்றி அவர் இந்த சீவகாருண்ய உரை நடைப் பகுதியில் எழுதுகிறார். அந்த காலத்தில் உரை நடையில் எழுதுகிற மரபு கிடையாது. செய்யுள் மரபு தான் ஆதிக்கம் செலுத்திய காலம். உரைநடையை கொண்டு வந்தவர்கள் இரண்டு நபர்கள் தான். ஒன்று ஆறுமுக நாவலர் மற்றொருவர் வள்ளலார். இவர்கள் தான் இதைத் தொடங்கினார்கள். உரைநடையில் எழுதுவது என்பதே மிக முக்கியமான அரசியல். அனைத்து மக்களுக்கும் புரிந்து கொள்வதற்காகவும், சென்றடைவதற்காகவும் இந்த உரைநடையில் எழுதுவதை தொடங்குகிறார்கள்.
சீவகாருண்ய ஒழுக்கம் என்பது, “பசித்தவர்களுக்குப் பசியாற்றுவதையே விரதமாகக் கொண்ட சீவகாருண்யமுள்ள சம்சாரிகளுக்கு கோடையில் வெயிலும் வருத்தாது, மண்ணும் சூடு செய்யாது, பெரும் காற்று, பெரும் மழை, பெரும் பனி, பெரும் இடி, பெரு நெருப்பு முதலியவை துன்பம் செய்விக்க மாட்டா” இது தான் சீவகாருண்யம். பசித்தவர் களுக்கு யார் பசியாற்றுகிறார்களோ அவர்களை இந்த இயற்கை எந்த உபாதைகளும் செய்யாது என்கிறார். இப்படி பசி, பட்டினி, தயவு இதை மட்டுமே அவர் குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
“சீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம். சீவகாருண்யம் விளங்கும் போது அறிவும், அன்பும் விளங்கும். அதனால் உபகார சக்தி விளங்கும். அந்த உபகார சக்தியால் எல்லா நல்ல காரியங்களும் தோன்றும். சீவகாருண்யம் மறையும் போது அறிவும், அன்பும் உடனாக நின்று மறையும். அதனால் உபகார சக்தி மறையும். உபகார சக்தி மறையவே எல்லா தீமைகளும் தோன்றும். ஆதலால் புண்ணியம் என்பது சீவகாருண்யம் ஒன்றே. பாவம் என்பது சீவகாருண்யம் இல்லாமல் இருப்பது ஒன்றே என்றும் அறியுங்கள். சீவகாருண்யத்தால் வரும் விளக்கம் மட்டுமே கடவுள் விளக்கம் என்றும் அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்று அறிக” . ஜீவகாருண்யம் என்பது ஒரு சமஸ்கிருத சொல். இதை எப்படி நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமானால், அருகில் உள்ள மனிதர்கள் மீது அன்பு கொள்வது அவர்களுக்குப் பசிப்பிணி இருந்தால் போக்குவது இது தான் ஜீவகாருண்யம். இது தான் கடவுள் வழிபாடு என்கிறார். இதுதான் சன்மார்க்கம் என்கிறார்.
இந்திய தத்துவ மரபில், ஞானிகள் என்று கூறப்படுபவர்களில் யாரவது ஒருவர் இப்படி பசியைப் போக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்களா ? பெரியார் எப்படி 'சுயமரியாதை' என்ற மிகப்பெரிய விசயத்தைக் கண்டுபிடித்தாரோ, அதைப்போலவே வள்ளலார் மனிதர்களுக்கு உதவக்கூடிய ஜீவகாருண்யமே வாழ்க்கை என்று கண்டுபிடித்தவர். அது சார்ந்தே தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். 1865 தொடக்கத்திலிருந்து அவர் மறைகிற 1874 என்ற ஒன்பது ஆண்டுகளில் அவருடைய செயல்பாடுகள் என்பது இவர் பேசிய ஜீவகாருண்யம் சார்ந்த செயல்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்புக்களை உருவாக்குகிறார். அந்த காலகட்டங்களில் இங்கு மிகக் கொடுமையான பஞ்சம் இருந்தது. 19 ஆம் நூற்றாண்டில் 5 முறை பஞ்சம் வந்திருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர். இவற்றை வள்ளலார் தன் கண்ணால் கண்டவர். அந்த மக்களின் கொடுமைகளைப் புரிந்தவர்.
அவர் உபதேசக் குறிப்புகளில் சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றி அவர் சொல்கிறார். ‘சர்வ சித்தி’ உடைய தனித் தலைமைப் பதவி உடைய ஆண்டவரை வேண்டி, தபசு செய்து,
சிருஷ்டிக்குள் சித்தியைப் பெற்றுக் கொண்டவன் பிரம்மன். சிருட்டி, திதி ஆகிய திதிகளைப் பெற்றவன் விஷ்ணு. சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்ரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுஷ்டிக்கிறவர்கள் இவர்களை அந்தந்த சமயங்களுக்கு தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்து வந்தார்கள். இம்மூர்த்திகளின் தேசம் ஏகதேசம் கூட அல்ல. ஆகையால் இவர்கள் அந்த சர்வ சித்தி உடைய கடவுளுக்கு ஒப்பாவார்கள். கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள். ஆகையால் சமயத் தெய்வங்களை வழிபாடு செய்து அந்த சமயத் தெய்வங்களைப் பெற்றுக் கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறி பூரண சித்தியை அடையாமல் தடைபட்டு நிற்றல் நில்லாமல் சர்வ சித்தி உடைய கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை உண்மையின் பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டும் என்றும் கொள்ள வேண்டுவதே சன்மார்க்க சங்கத்தினுடைய கோட்பாடு" என்று அவர் கூறுகிறார். அதாவது இங்கு இருக்கிற அனைத்து சமயங்களும் சரியில்லை. அதைத் தவிர்த்து ஜீவகாருண்யத்தை பேச வேண்டும் என்கிறார். மற்றொரு வரியில், “தத்துவ ஒழுக்கங்கள் பற்றி சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் ஒழுக்கங்கள் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்கு தடையாக இருப்பன. சமய ஏற்பாடு, ஜாதி ஏற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்” பசி போக்குவதற்கும், கருணைக்கும் தடையாக இருப்பது சமயங்களும், ஜாதியும் தான் என்கிறார் வள்ளலார்.
கட்டுப்பாட்டு ஆசாரங்கள் என்றால் என்ன? பட்டியலிடுகிறார் வள்ளலார், 'ஜாதி ஆசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாச்சாரம், சாதனாசாரம், சாத்திரசாரம் முதலிய ஆசாரங்கள் அதனால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து சுத்த சிவஞான ஆசாரத்தை வழங்கி பொது நோக்கம் வந்தால் மேற்படி காருண்ய விருத்தியாகி கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமே அல்லாது இல்லாவிடில் கூடாது" அந்த காலத்தில் சமூகத்தில் இருந்த ஜாதி, சமயம், கலாச்சாரம் ஆகிய அனைத்தும் மனித கருணைக்கு எதிரானதாக கூறுகிறார். அவர் கடவுளை அடைய வேண்டும் என்றால் இந்த அனைத்தையும் ஒழிக்க வேண்டும் என்கிறார்.
வள்ளலார் பாசுரங்களைப் பாடும் போது வேறுமாதிரியாகவும், கட்டுரைகள் எழுதும் போது வேறாகவும் எழுதுகிறார். கட்டுரைகளில் ஜாதி, சமயங்களை முற்றிலும் எதிர்த்தே எழுதுகிறார். ஆனால் இங்கோ, வள்ளலாரின் பாடல்கள் மட்டும் தான் பாடப்படுகிறது. கட்டுரைகளை யாரும் கூறுவதேயில்லை. அருட்பெருஞ்ஜோதி, அருட்பெரும்ஜோதி என்று பாடல்களை மட்டும் பாடிவிட்டு வள்ளலாரின் ஜாதி எதிர்ப்பு, சமய எதிர்ப்புக்களை யாரும் பதிவு செய்வதில்லை. ஆனால் நாம் வள்ளலாரின் கட்டுரைகளைப் படித்து, வள்ளலார் ஜாதிக்கு எதிராகவும், சமயங்களுக்கு எதிராகவும் பேசியதை மக்களிடம் பரப்புவோம்.
(சென்னை மாவட்டக் கழகம் சார்பாக, ‘வைதீகத்தை எதிர்த்த வள்ளலார்’ என்ற தலைப்பில், 22.10.2022 அன்று சென்னை, தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் “வள்ளலாரின் இறுதிப் பத்தாண்டுகள்” என்ற தலைப்பில் பேராசிரியர் வீ.அரசு ஆற்றிய உரை.)