கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!
சீர் வாசகர் வட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு 2025-ஆம் ஆண்டுக்கான சமூகப் போராளி விருது வழங்குகிறது. விருது தொகை ரூ. 1 இலட்சம். இது தொடர்பாக சீர் வாசகர் வட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் போராட்டக் களங்களில் 50 ஆண்டுகளுக்கு மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர் என்று பாராட்டி உள்ளது.வாசகர் வட்டத்தின் அறிக்கை:
சாதி ஒழிப்பு, சமூகநீதி, பாலின சமத்துவம், பகுத்தறிவுப் பரப்புரை, சுரண்டல் எதிர்ப்பு என மானுட விடுதலைக்கான அனைத்துத் தளங்களிலும் போராட்டக் களங்களிலும் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாய் முதல் வரிசையில் நிற்கும் முன்கள வீரர்.
இட ஒதுக்கீட்டு வரலாறு, விடுதலை வேட்கை, தமிழர் பண்பாடு, பெரியாரும் தனித்தமிழ்நாடும், பெரியாருக்கு எதிரான முனை மழுங்கும் வாதங்கள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.
தமிழர், தமிழ்நாடு நலன்சார்ந்த போராட்டங்களுக்காக எண்ணற்ற முறை சிறை சென்றவர். சட்டத்தை விட நியாயமே மேலானது என்பதை உரத்துச் சொல்பவர். தன் பேச்சையும் மூச்சையும் தமிழ்ச் சமூகத்துக்காகவே அர்ப்பணித்துக் கொண்ட வாழ்நாள் போராளி.
தமிழ்நாட்டு மக்களின் சிந்தனையில் மாபெரும் அறிவுப்புரட்சியை நிகழ்த்திய தந்தை பெரியாரின் #குடிஅரசு இதழ் தொகுப்பை அடுத்தத் தலைமுறைக்குக் கையளித்த குடிஅரசு நாயகர் தோழர் கொளத்தூர் தா.செ. மணி அவர்களுக்கு குடிஅரசு நூற்றாண்டில் அவரது செயல்பாடுகளுக்காக விருது வழங்குவதில் பெருமை கொள்கிறது சீர் வாசகர் வட்டம்.
கொண்டாட்ட நிகழ்வு தள்ளிவைப்பு!
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்த மே18 அன்று திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் நட்சத்திர இசை திருவிழா நாகர்கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி கீழ்க்கண்ட அறிக்கையை விடுத்து இருந்தார்.
துயர மிகுந்த இந்த நாளில் இவ்வாறான கொண்டாட்டத்தை நடத்துவது இன உணர்வுமிக்க தமிழர்களின் உணர்வுகளைப் பதறவைக்கும் ஒன்றாகும்.
அந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களை இதனை வேறு நாளுக்கு ஒத்திவைக்க வேண்டுமாறு முதற்கட்டமாக கனிவுடன் கோருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் இதில் தலையிட்டு நிகழ்ச்சியைத் தள்ளி வைக்க முயற்சிகளை எடுத்தார். அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டது. இத்தகவலை திரு நாசர் கழகத் தலைவருக்கு கடிதமாக எழுதியுள்ளார்.
இனமுரசு சத்தியராஜ் இந்த கடிதத்தை கழகத் தலைவருக்கு அனுப்பியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்ட அறிக்கையில்: ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் நாங்களும் இன உணர்வாளர்களும் வைத்த கோரிக்கையை ஏற்று நட்சத்திரக் கொண்டாட்ட நாளை தள்ளி வைக்க ஆவன செய்த தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இனமுரசு சத்யராஜ் மற்றும் பொறுப்பாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், தோழர்கள் தியாகு, கோவை கு.இராமகிருட்டிணன், சுப.உதயகுமாரன், கண.குறிஞ்சி, பொழிலன், இயக்குனர்கள் களஞ்சியம், கௌதமன், மருதுபாண்டியன் ஆகியோரும் இந்நிகழ்வின் தேதியை மாற்றக் கோரி குரல் கொடுத்தனர்.