கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் என்று கூறுவது தவறு. அவர் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார்.

14.4.2011 வியாழக்கிழமை அம்பேத்கர் பிறந்த நாளில் சேலத்தில் ஆற்றிய உரை:

புரட்சியாளர் அம்பேத்கரை நாம் எப்படி புரிந்து கொள்ள வேண்டும்? நாம் ஏன் அவரை மற்றவர்களிடம் இருந்து பிரித்து வேறுபடுத்தி தனித்துவமாக பார்க்கிறோம் என்பதில்தான் அம்பேத்கருக்கு பிறந்த நாள் எடுப்பதன் பலனாக இருக்கும். புரட்சியாளர் அம்பேத்கர் பல சிறப்புகளை கொண்டவர். அவர் ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், வெளிநாடுகளுக்கு  சென்று படிக்கிற வாய்ப்பினைப் பெற்றார். அங்கு போய் ஆய்வு பட்டங்களையும், பல உயர் பட்டங் களையும் பெற்றார். தத்துவ துறையில், பொருளியல் துறையில், சட்டத் துறையில் பட்டங்களைப் பெற்று திரும்பி வந்தார் என்றால் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அல்ல.

இந்த இந்திய சமுதாயத்தை திருத்த பலர் வந்தார்கள். இந்த சமுதாயத்தில் இருக்கிற கேடுகளை நீக்க வேண்டும் என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது. ஆனால், இந்த சமுதாயத்தை மிகச் சரியாக புரிந்து கொண்டவர்கள் சிலர் மட்டுமே.  ஜோதிபா புலே தொடங்கி வைத்த புரட்சியை, சரியான பார்வையை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் போன்றவர்கள்தான் எடுத்துச் சென்றார்கள். மற்றவர்கள் எல்லாம் இருந்ததை மெல்ல சீர்திருத்தி, கொஞ்சம் மாற்றி, அதற்கு புதிய வண்ணத்தைப் பூசிவிட்டு செல்வதாக இருந்த காலத்தில், அடிப் படையையே மாற்றியாக வேண்டும் என்று எண்ணிய தலைவர், அதற்காக தனது முழு அறிவை, உழைப்பை, எல்லாவற்றையும் பயன்படுத்திய தலைவர், தத்துவத் துறையில் ஆய்வு செய்யப் போனவர், ஆய்வு மாணவராக இருந்த காலத்தில் ஒரு ஆய்வு கட்டுரை எழுதுகிறார். இந்திய சாதியினுடைய தோற்றம், அதன் செயல்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்து மாந்தவியல் துறையில் அந்த அறிக்கையை தருகிறார்.  அவருடைய இருபத்தி ஐந்தாம் வயதில், அவர் ஆற்றிய ஆய்வுரை இன்றைக்கு வரைக்கும் எல்லா விதத்திலும் அதை நாம் புரட்டிப் பார்க்கிற பொழுது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் ஆற்றப்பட்ட உரை. இந்த சமுதாயத்தின் கேடுகளாக, இந்த சமுதாயத்தின் நோயை தீர்ப்பதற்கான வழியாக அவர் சொன்னதைத் தான் நாம் மீள் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.

அவர் மகத் மாநாட்டில் பேசினார். பல இடங்களில் பல செய்திகளை பதிவு செய்தார் என்றாலும், லாகூர் மாநாட்டில் அவர்ஆற்ற இருந்த உரை (ஆற்றிய உரை அல்ல) சாதி ஒழிப்பு சங்கத்தார் என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் இவரை தலைமை தாங்கி, தலைமை உரையாற்ற அழைக்கிறார்கள். இவர் உரையை எழுதி அனுப்புகிறார். அதை படித்து பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்துவிடுகிறார்கள். இந்த சாதி ஒழிப்புக்காக அவர் சொல்லுகிற வழிமுறைகளைப் பார்த்து அதிர்ச்சி அடைய காரணம்... “இந்து சாஸ்திரங்களின் அதிகாரங்கள் தகர்க்கப்பட வேண்டும். அக மண முறை ஒழிக்கப்பட வேண்டும். இந்து மதம் தகர்ந்தாக வேண்டும். அர்ச்சகர் ஆகும் உரிமையை, உரிய பட்டயம் பெற்றால் அனைத்து சாதியினருக்கும் அளிக்க வேண்டும் என்பதையெல்லாம் வழிமுறையாக சொல் கிறார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் கொஞ்சம் மாற்றிக் கொள்ள சொல்லி கேட்கிறார்கள். அதில் ஒரு கால் புள்ளியை மாற்றவும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். வேண்டாம் என்றால் திருப்பி அனுப்பி விடுங்கள்” என்று அம்பேத்கர் கேட்கிறார். மாநாட்டையே ஒத்தி வைத்து விடுகிறார்கள்.

நாம் புரட்சியாளர் அம்பேத்கரை, அவரின் கொள்கைகளை புரிந்து கொள்ள வேண்டுமானால், ஒவ்வொருவரும் படிக்க வேண்டியது அந்த நூல். அவர் ஆற்ற இருந்த உரையை நூலாக வெளியிட்டார். நூல் வெளி வந்த இரண்டாம் மாதத்தில், அம்பேத்கரின் அனுமதியோடு தமிழில் பெரியார் வெளியிட்டார். அந்த நூல் தாங்கியிருந்த சிந்தனையைதான் பெரியாரும் கொண்டிருந்தார். அரசியல் நிலைபாடுகளில் இருவருக்கும் சிறு சிறு மாற்றங்கள் இருந்திருக்கலாம். அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியாவை விரும்பினார். பெரியார் தனித் தமிழ்நாடு பேசினார். இந்தி ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்று அம்பேத்கர் விரும்பினார். பெரியார் இந்தி கூடாது என்று சொன்னார். அரசியல் நிலைகளில் அவரவர்களுக்கு இருந்த கருத்தின் அடிப்படையில் சொன்னார்கள். தாழ்த்தப்பட் டோரின் குடியிருப்பை பிற சாதியினர் வாழும் பகுதிகளில் நிறுவ வேண்டும் என்பது பெரியாரின் கருத்தாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர் களுக்கு தனிக் கிணறு வெட்ட காங்கிரஸ் நிதி அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த பெரியார் வந்த நாற்பத்தி எட்டாயிரம் ரூபாயை திருப்பி அனுப்பினார். பொதுக் கிணற்றில் நீர் எடுக்க போராட வேண்டுமே தவிர தனிக் கிணறு கூடாது என்பது பெரியார் கருத்து. இன்னொரு பக்கம் அம்பேத்கர் தனிக் குடியிருப்பு வேண்டும் என போராட்டம் நடத்தினார். இப்படி பார்த்தால் அவர்களின் கோரிக்கைகளில் வேறுபாடுகள் போல தெரியும். ஆனால் அடி நீரோட்டமாய் இருவர் கருத்தும் சாதி ஒழிப்பே சமூக விடுதலை என்பதாகத் தான் இருந்தது.

பல பேர் படிக்கிறார்கள், பட்டம் பெறுகிறார்கள், தனி மனித வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் தான் பெற்ற அறிவை, கல்வியை, பதவியை அனைத்தையும் சமூக மேம்பாட்டிற்காக, சமூக மாற்றத்திற்காக பயன்படுத்திய தலைவர். 1935 இல் மராட்டியத்தில், பம்பாய் மாகாணத்தில் சட்டமன்றத்திற்கு உறுப் பினராக நியமிக்கிறார்கள். நியமனம் பெற்று அவர் ஆற்றிய முதல் உரையிலேயே அங்கிருந்த நில உடமை யாளர்களின் ஆதிக்கத்தை எதிர்த்து பேசுகிறார். ஆங்கில அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு செய்த துரோகங்கள் பற்றி பேசுகிறார். அவர் ஒரு நியமன உறுப்பினராக இருந்தும், நியமித்தவர்களையே விமர்சித்து பேசுகிறார். அவர் பதவி முக்கியம் எனக் கருதவில்லை. அவர் சமஸ்கிருதம் படித்தார், வேதங்களை படித்தார், புராணங்களை படித்தார், சாஸ்திரங்களை படித்தார். எதற்கு பயன்படுத்தினார்? இந்திய சமுதாயத்தில் சாதிய பிடியில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்று அறிவதற்குப் படித்தார். மனுதர்மத்தைப் பற்றி அவர் செய்த ஆய்வு, யாருடனும் ஒப்பிட முடியாத அளவிற்குரிய ஆய்வாகும். மனுதர்ம சாஸ்திரத்திற்கு முன்னால் இருந்த காலத்தில் அனைவருக்கும் இருந்த உரிமைகளை எடுத்துக் காட்டினார். அவர் ஒவ்வொரு நாட்டின் சரித்திரங்களை படித்து, அடிமைத் தனத்தைவிட கொடுமையானது தீண்டாமைதான் என்பதை பல அடிமைத்தனத்தோடு ஒப்பிட்டு எழுதினார்.

அம்பேத்கர், வைஸ்ராய் கவுன்சில் உறுப்பினராக (இன்றைய மத்திய அமைச்சருக்கு இணையான பதவி) தேர்ந்தெடுக்கப்பட்டார். பதவி ஏற்பதற்கு முன்னால் நாக்பூரில் ஒரு மாநாட்டைக் கூட்டினார். கற்பி போராடு ஒன்று சேர் என்ற வாசகங்களை பேசியது அந்த மாநாட்டில்தான். பெண்கள் உரிமைக்காக தனியாக ஒரு மாநாடு, சமத்துவ தொண்டர் படை என்ற ஒரு மாநாடு, காந்தியோடு முரண்பட்டிருந்த அம்பேத்கர், இம்சைக்கு எதிரான சொல்தான் அகிம்சை. சாதியவாதிகளால் தாக்கப்பட்டால் திருப்பி தாக்கலாம் என்பதை தனது தொண்டர் களுக்கு சொன்னார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என விளம்பரம் செய்து, அம்பேத்கரை தாழ்த்தப்பட்ட வர்களின் தலைவராக சுருக்கிவிட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவெள்ளி என்றோ அரசியல் சட்டத்தை எழுதியவர் என்றோ சொல்வது அவருக்கு பெருமை அல்ல. அவர் சொன்னார்... இந்து சமுதாயத்திற்கு வேதங்கள் தேவைபட்டது தாழ்த்தப் பட்ட வியாசனை வைத்துக் கொண்டார்கள். அவர் களுக்கு இதிகாசம் தேவைபட்டது. தாழ்த்தப்பட்ட வால்மீகியை வைத்து எழுதிக் கொண்டார்கள். இவர்களுக்கு அரசியல் சட்டம் தேவைப்பட்டது.

என்னைப் பயன்படுத்திக் கொண்டார்கள். அப்படித் தான் சொன்னார். இவர்கள் எங்கு போனாலும் தாழ்த்தப்பட்ட மக்களை பயன்படுத்தித்தான் தங்கள் உயர்வை நிறுவிக் கொண்டார்கள் என்று சொன்னார். நான் இந்த சட்டத்திற்கு கட்டுப்பட்டவன். ஆனால் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொன்னவர் அவர்தான். அவர் எழுதிய சட்டத்தைப் பற்றி. நான் வாடகை குதிரையாக பயன்படுத்தப்பட் டேன், என்னுடைய விருப்பத்திற்கு எதிராக பலவற்றை எழுதினேன் என்று சொன்னார். பேனாவை பிடித்தது மட்டும்தான் என் கை, அதை ஆட்டுவித்தவர்கள் பார்ப்பனர்கள் என்றும் சொன்னார். ஆந்திர பிரிவினை விவாதத்தின்போது பேசியவர்கள், ‘நீங்கள் தானே சட்டத்தை எழுதினீர்கள்’ என்று கேட்டனர்.  அவா சொன்னார்... ‘ஆம் நான் தான் எழுதினேன். அதை எரிக்கும் முதல் ஆளாக நான்தான் இருக்கப் போகிறேன்’ என்று. அரசியல் வரைவு குழுவிற்குள் நுழைந்தபோது, என்னுடைய மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை தவிர, எனக்கு வேறு எந்த ஆசையும் இருக்கவில்லை என்று சொன்னார்.

‘பெட்டி திருட்டுப் போனாலும் சாவி என்னிடம் இருக்கிறது என்றானாம் நாயர்’ என்று மலையாள பழமொழி ஒன்று இருக்கிறது. அதுபோல அரசியல் சட்டத்திற்கு விளக்கம் சொல்பவர்கள் பார்ப்பனர் களாக இருக்கிறார்கள். ஆனால் எழுதப்பட்ட அரசியல் சட்டங்களில் பலவற்றை அம்பேத்கர் செய்தார். எட்டு மணி நேர வேலை என்பதை வலியுறுத்தி, பிரஞ்சு இந்தியாவில் பாண்டிச்சேரியில் மட்டும் ஒரு போராட்டம் நடந்திருக்கிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் யாரும் போராடவில்லை. அம்பேத்கர் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது, அதற்கான சட்டத்தை கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் செய்ததா அது? பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு காலத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என்பதை கொண்டு வந்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் தான்.

அரசியல் சட்டம் எழுதப்பட்டபோது, தாழ்த்தப் பட்ட மக்களுக்கு மட்டும் தான் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டை வைத்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வைக்கவில்லை என்று அவர் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இதில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தாழ்த்தப் பட்டவர்களுக்கு மட்டும் தான் பட்டியல் இருந்தது. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு பட்டியல் இல்லை.

1935 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முன்னாலேயே இரண்டு பட்டியலை தயாரித்து இருந்தார்கள். ஒன்று தீண்டாமைக்கு உட்பட்ட மக்கள், மற்றொன்று பொதுச் சமுதாயத்திலிருந்து விலகி, தனித்து வாழும் மக்கள். இந்த மக்களை பட்டியல் இன மக்கள் என தனியாக பிரிந்தார்கள். இந்த பட்டியலில் இருந்தவர் களுக்கான இடத்தை ஒதுக்கி அவரால் எழுத முடிந்தது. பட்டியலில் இல்லாத பிற்படுத்தப்பட்டவர் களுக்கு அரசியல் சட்டத்தில் 340 என்ற ஒரு பிரிவை எழுதினார். அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சமுதாயத்திலும், கல்வியிலும் பின் தங்கியிருக்கும் மக்களின் பட்டியலை தயாரித்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்பதுதான் அந்த 340 ஆவது பிரிவு. எழுதியதோடு நிற்கவில்லை. அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளில் அவர் பதவியில் இருந்து விலகினார். பதவியில் இருந்து விலகுவதற்கு சில காரணங்களை கடிதத்தில் எழுதியிருந்தார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆணையம் அமைத்து, அவர்களின் மேம்பாட்டிற்கு செயல்பட வேண்டும் என்று சட்டம் இயற்றி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், அதற்கான ஆணையம்கூட அமைக்கவில்லை என்பது, அவர் பதவி விலக எழுதிய காரணங்களில் ஒன்று. இப்படிப்பட்டவரைத்தான் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர் என்று சொல்கிறார்கள்.

(அடுத்த இதழில் முடியும்)