கீற்றில் தேட...

ambetkar periyar"கடைசி தலித்” கொல்லப்படும் வரை, தீண்டாமையை ஒழிக்க இந்திய ஆட்சி நிர்வாகம் கடுமையாகப் போராடிக் கொண்டே இருக்கப் போகிறது"

“கெடுவாய்ப்பாக நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால் அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக்கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன் நான் ஒரு இந்துவாகச் சாக மாட்டேன்”.

(13.10.1935இல் இயோலா என்ற இடத்தில் நடந்த மாநாட்டில் டாக்டர்  அம்பேத்கர் பேசியது)

ஒருவரை ஒருவர் தொடக்கூடாது என்கிற அளவுக்கு மனிதர்களைக் கீழ்த்தரமாக நடத்தும் நிலைமை இந்து சமூகத்தில் இருப்பது போல் வேறு எங்கும் இருக்கிறதா? ஒரு தீண்டத்தகாதவன் தொட்டால் உடல் தீட்டாகிவிடுகிறது, அவன் தண்ணீரைத் தொட்டால் தண்ணீர் அசுத்தம் ஆகிவிடுகிறது, கடவுளை வணங்கினால் கடவுள் சக்தியற்றவராக ஆகிவிடுகிறார் என்று தொழு நோயாளியை நடத்துவதற்கும் தீண்டத்தகாதவர்கள் நடத்துவதற்கும் இந்து சமூகத்தில் எந்த வேறுபாடும் இருக்கிறதா? என்று 17.05.1936இல் மும்பை தானேவில் அம்பேத்கர் கேட்கிறார்.

சனாதனம் சாதியின் பிறப்பிடம்; சாதி ஏற்றத்தாழ்வைக் கொள்கையாகக் கொண்டது.  சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது. சாதியின்   தொகுப்பே இந்து மதம். இந்து மதத்தில் இருக்கும் வரை நம் மீதான ஒடுக்குமுறை, அவமானங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். இந்து மதத்துடனான உங்கள் தொடர்பைத் துண்டித்துவிட்டு வேறு ஏதேனும் மதத்திற்கு மாறுங்கள் என்று அம்பேத்கர் கேட்டுக்கொண்டார்.

அம்பேத்கர் மதம் மாறப் போகிறேன் என்று அறிவித்த அடுத்த வாரத்திலேயே அதனை 'சபாஷ் அம்பேத்கர்' என்று பாராட்டி விடுதலையில் தலையங்கம் எழுதியதோடு பத்து லட்சம் மக்களோடு மதம் மாறத் தந்தி அடித்து வேண்டுகோள் வைத்தார் பெரியார்.

தீண்டத்தகாதவர்களுக்கு மதமாற்றம் அடைவது முக்கியக் கொள்கையாக 1935ல் அம்பேத்கர் அறிவித்தார்.

மதம் மாறுவதற்கு 20ஆண்டு காலம் எடுத்துக்கொண்டதற்கான காரணத்தைப் பெரியாரே சொல்கிறார்: தோழர் அம்பேத்கரைப் பொறுத்தவரையில் சிறிது நாள் பொறுத்துதான் மதத்தைப் போக்கிக்கொள்ள வேண்டும் ஏனெனில் நமது பார்ப்பனர்களுக்கு, இப்படிப்பட்ட ஆட்கள் இந்து மதத்தை விட்டுப் போய்விட்டால் இவர்களுடைய தொல்லை ஒழிந்தது என்று சந்தோஷம் அடைந்து விடுவார்கள் என்கிறார்.

அந்த இருபது ஆண்டு காலத்தில் மதமாற்றப் பரப்புரை செய்து தீண்டத்தகாதவர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வி, வேலைவாய்ப்பு, சமூக அந்தஸ்து அனைத்தையும் உருவாக்கும் கருத்தியலையும் சமூகக் கட்டமைப்பில் அம்பேத்கர் தொடர்ந்து பரப்பி வந்தார்

அதனைப் பெரியார் 23.03.1947 குடிஅரசில், நான் இந்து அல்ல, பஞ்சமன் அல்ல, இந்து மதத்தில் எந்த பாதுகாப்புக்கும் சம்பந்தப்பட்டவன் அல்ல என்று அம்பேத்கர் சொன்னதால்தான் கோவில் திறக்கப்பட்டது. லிஸ்ட் கொடுங்கள் உத்தியோகம் கொடுக்கிறேன் என்று மந்திரி கேட்பதும்,  நானும் ஆதிதிராவிடன், பங்கி (தோட்டி) என்று காந்தியார் சொல்லுவதுமான காரியங்களுக்குக் காரணம், நான் இந்து அல்ல என்கிற அதிர்ஷ்டக்கார மந்திரமாகும் என்றார்.

இந்து மதத்தை விட்டு வெளியேறுவதற்கு மிக முக்கியக் காரணம் தீண்டாமை இந்து மதத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கம் என்கிறார் அம்பேத்கர்.

ஒரு தீண்டத்தகாதவன் இந்து மதத்தின் மீது பற்று வைத்திருக்கிறேன் என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம். நான் தீண்டத்தகாதவன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன், அதிலும் கடவுளுடைய ஏற்பாட்டின்படி தீண்டத்தகாதவனாகவே படைக்கப்பட்டேன் என்பதை ஏற்றுக் கொள்கிறேன் என்பதுதான் அர்த்தம்.

இந்து மதத்தைப் பொறுத்தவரை,  பார்ப்பனர்களுக்கும் சாதி இந்துக்களின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதே தீண்டத்தகாதவனின் கர்மா. அதைத் தவிர்த்து வேறெந்த உரிமையும் தீண்டத்தகாதவனுக்கு இந்து மதத்தில் கிடையாது.

தீண்டத்தகாதவர்களுக்கு முழு விடுதலைக்கான வழியை அம்பேத்கர் முன்வைத்தார்; அதுதான் மதமாற்றம்.

20.10.1935இல் குடிஅரசில், எந்த மதத்தினர் உங்களுக்குச் சம அந்தஸ்து கொடுத்துச் சமத்துவமாய் நடத்துகிறார்களோ அப்படிப்பட்ட மதம் எதுவாயினும் அதில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று  பெரியார் சொன்னார்.

பெரியாரின் குடிஅரசு  கருத்தை, அன்றைய சுயமரியாதைக்காரர்கள் சிலர் குறைகூறித் திரிந்ததாய்த் தெரிகிறது,  ஒரு தோழர் மதமாற்றத்தை விலக்க வேண்டும் என்று பெரியாரிடம் கேட்டதற்கு, "தீவிர நாஸ்திகர் ஒருவரை ஒரு பறையன் கண்டு வணங்கி, அய்யா எனக்கு சாமியை விட்டுவிட போதிய அறிவோ, தைரியமோ, தியாக புத்தியோ வரவில்லை. ஆனால் எனக்கு இந்தத் தீண்டத் தகாதவனாக இருக்க ஒரு நிமிஷம் கூடச் சகிக்கவில்லை. ஏதாவது ஒரு வழியைச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று கெஞ்சினால் அவனுக்கு இந்த நாஸ்திகர் என்ன பதில் சொல்வார் என்று கேட்கின்றோம்.

நீ சாமியை விடுவதற்குத் தைரியமில்லாதவன். உனக்கு நான் யோசனை சொல்ல மாட்டேன். ஆதலால் நீ தீண்டத்தகாதவனாக இருந்து செத்துப்போ என்று சொல்வார்களா? அல்லது அதைப்பற்றி நமக்குக் கவலை இல்லை நீ எக்கேடு கெட்டுப்போ என்று சொல்வார்களா என்று கேட்கின்றோம்

ஆதலால் அம்பேத்கருடைய முடிவை மனமார ஆதரிப்பதுடன் அம்முடிவுப்படி சரியான செயலுக்கு நம்மாலான உதவி அளிக்க வேண்டியதும் ஒவ்வொரு நாத்திகர்களுக்கும் கடமையாகும் என்பதே நமது அபிப்ராயமாகும்   என்றார் பெரியார் (குடிஅரசு 17.11.1935).

பெரியார் அம்பேத்கரின் மதமாற்றத்தை ஆதரித்தார். அம்பேத்கரோ பெரியார் கடைபிடித்த பவுத்தக் கொள்கையையே தன் மதமாக மாற்றினார்.

1930முதல் தன் இறுதிக்காலம் வரை பெரியார் பவுத்தத்தை ஆதரித்துப் பேசி வந்துள்ளார்.

புத்தருடைய கொள்கைகளுக்கும் உண்மைகளுக்கும் இந்நாட்டில் தான் மதிப்பின்றிப் போகும்படி செய்துவிட்டனர். புத்தரை நினைத்தால் நினைத்த மனதைக் கழுவ வேண்டும். அவரைப் பற்றிக் காதினால் கேட்டால் காதைக் கழுவ வேண்டும் என்கிற அளவுக்குப் புத்தரை வெறுக்கும் மனப்பான்மையை உண்டாக்கி விட்டனர்  என்று விடுதலையில் 28.05.1956இல் (அம்பேத்கர் பவுத்த மதம் மாறுவதற்கு ஐந்து மாதத்திற்கு முன்) பெரியார் எழுதினார்.

கடவுளுக்கு இடமில்லாத ஒரு நாத்திக மதமே பவுத்தம்; பவுத்த மதத்திற்கு இனப்பற்றோ மொழிப்பற்றோ கிடையாது. பெரியாரோ எனக்கு தேசாபிமானம், பாஷாபிமானமும் கிடையாது என்றார்.

அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறுவதற்கு முன்பே 1954இல் ஈரோட்டில் புத்த மாநாடு நடத்தினார் பெரியார். அத்துடன் ஓரிரு மாதங்களிலேயே சென்னையில் பெரம்பூரில், குரோம்பேட்டையில் புத்தர் கொள்கைகளை, கருத்தைப் பரப்பினார்.

அம்பேத்கரின் அழைப்பை ஏற்று உலகிலேயே முதல் முதலாக 14.10.1956இல் 10 லட்சம் பேர் நாக்பூரில் திரண்டார்கள். அம்பேத்கரின் முன்னிலையில் இந்து மதத்தைவிட்டு 22 உறுதிமொழிகளுடன் பவுத்தம் மதத்திற்கு மாறினர்.

நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன் என்பதைச் சனாதன வாதிகளுக்கு  உணர்த்திவிட்டு மதம் மாறிய இரண்டு மாதத்திலே அம்பேத்கர் மறைந்தார்.

04.03.1959 விடுதலையில், அறிவின்படி நடந்து கொள்ளுங்கள் என்று சொன்னவர்கள் 2500 வருடங்களுக்கு முன் புத்தரும், அவருக்குப் பிறகு டாக்டர் அம்பேத்கரும்தான் காணப்படுகிறார்கள். வேறு யாரும் இல்லை என்று சொல்லலாம் என்று பெரியார் சொன்னதோடு, 07.12.1956 விடுதலையில், இப்பொழுது பேருக்குத்தான் அவர் புத்த மதத்தில் சேர்ந்ததாகச் சொல்கிறாரே தவிர வெகுநாட்களாக அவர் புத்தர்தான் என்றும், 28.12.1956 விடுதலையில் அம்பேத்கர் புத்த மதத்தில் சேர்ந்து எவை எவை நம்பவில்லை என்று சொன்னாரோ எவை எவைகளையும் செய்யமாட்டேன் என்று சொன்னாரோ அவைகளெல்லாம் நாம் இப்போதே நம்புவதில்லை என்று புத்தமதம் மாறாமலேயே பவுத்தக் கொள்கைகளைக் கடைபிடித்து  வாழ்ந்தார் பெரியார்.

அம்பேத்கர் மதம் மாறினார்; பெரியார் மதம் மாறாமலே தன் கொள்கையில் இறுதிவரை இருந்தார் என்று அம்பேத்கரைச் சிறுமைப் படுத்தும் போக்கு அறியாமையின் வெளிப்பாடு.

பெரியார், இப்போது நீங்கள் போய் பவுத்த மதத்தில் சேருங்கள், நான் இப்பொழுது சேருவது ஏற்றதல்ல என்று பர்மாவில் நடந்த பௌத்த மாநாட்டில் அம்பேத்கரின் பௌத்த மத மாற்றம் அழைப்பிற்கு பதில் அளித்துள்ளார்.

பெரியார் நான் இந்து மதத்தை விட்டு வரமாட்டேன் என்று சொல்லவில்லை, தற்சமயம் மாற மாட்டேன் என்று அம்பேத்கரிடம் பதிலளித்துள்ளார். அதேபோல பெரியார் என்றைக்குமே நான் ஓர் இந்து என்று அடையாளப்படுத்தியதுமில்லை.

இறுதியாக அம்பேத்கரின் மதமாற்றம், பெரியாரின் மனமாற்ற வேலை இரண்டுமே ஒற்றைக் கருத்தியல் நோக்கிய பயணமே. பெரியார் பவுத்தத்தைக் கொண்டாடினார், அம்பேத்கர் பவுத்தத்தை அரியணை ஏற்றினார். இதை எப்படித் தர்க்கம் செய்தாலும் அது வெங்காயத்திற்குள் விதையைத் தேடுவது போல.

-இக்லாஸ் உசேன்