பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களின் தலைவர், அவர் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. பெரியார் “ஒரு கன்னடர்”. அவர் தமிழர்களுக்காக எதுவும் செய்யவில்லை திராவிடர் என்று பேசிப்பேசி தமிழர் அல்லாதவரின் ஆதிக்கம் நிலைபெற காரணமானவர். இப்படி இரண்டு வகையான குற்றசாட்டுகள் அல்லது அவதூறுகள் “விமர்சனம்” எனும் பேரில் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன.
இவற்றிற்குத் தந்தை பெரியாரே பதிலளித்துவிட்டார். பெரியார் இயக்கங்களும் பெரியார் தொண்டர்கள் மட்டுமல்லாது பல சமூக ஆய்வாளர்களும் பல கட்டங்களில் இவற்றிக்கான பதில்களைக் கொடுத்து விட்டனர். இருந்தபோதிலும் இந்த விமர்சன அவதூறுகள் வேறுவேறு வடிவங்களில் புது புது அவதாரங்களுடன் வந்து கொண்டே இருப்பதால் தினமும் நாம் பங்கிற்கு இதுபற்றி ஏதாவது பேசினால் என்ன? என்று தோன்றியபோதிலும்,
இந்த அவதூறுகளின் பின்னணியில் உள்ள சூழ்ச்சிகளை அம்பலப்படுத்துவதும், இந்தச் சூழ்ச்சிகளின் உண்மையறியாமாலும், இதிலே மயங்கிக் கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்கள் கூட்டத்தை தெளிவிப்பதும் ஆன கடமைகள் நமக்கும் இருக்கிறது என்று கருதியதாலும் இதை எழுத நேர்ந்திருக்கிறது என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.
எது, எப்படியோ பெரியாருக்கு எதிராக இன உணர்ச்சி கொண்ட தமிழ் இளைஞர்களையும், விடுதலை உணர்ச்சிகொண்ட தலித் இளைஞர்களையம் முன்னிறுத்தும் இந்தக் கருத்துப் போர் இன்னும் கொஞ்சம் வலுவாகத் தொடர வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பில் காத்திருக்கிறது ஆரியப் பார்ப்பனக் கூட்டம். அதற்கு நாம் இடங்கொடுத்து விடக்கூடது என்கிற கவலையும் பெரியார் தொண்டர்களுக்கு இருப்பதாலேயே பல நேரங்களில் பலவற்றைக் கடந்து போக நேர்ந்திருக்கிறதே அன்றி பதிலளிக்க முடியாமால் இல்லை என்பதை தெரிவிக்கும் வகையிலும் இதை எழுத நேர்ந்துவிட்டது.
1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் நாளோடு பெரியாரின் பெரும்பணி பெரும்பயணம் முடிவுக்கு வந்து விட்டது. இன்னும் சரியாகச் சொல்லப் போனால டிசம்பர் 19 ஆம் நாள் சென்னை தியாகராய நகரில் பேசிய கூட்டம் பெரியாரின் கடைசிகூட்டம். நியாயமாக 1973 டிசம்பர் 19 ஆம் நாளோடு பெரியாரின் நெடிய உழைப்பு நிரந்தர ஒய்வை எட்டிவிட்டது. ஒருமனிதரின் சுவாசம் நின்றுபோய் 45 ஆண்டுகள் கடந்த பின்னும் அவர் இன்றும் விவாதப்பெருளாக இருக்கிறார் என்றால் அது தான் பெரியாரின் உழைப்புக்குக் கிடைத்திருக்கிற பெரு மரியாதை. அது ஒருபுறம் இருக்கட்டும்
பெரியாரின் எதிபர்ப்பின் எல்லை எது என்று பார்த்தால் பெரியார் எதிர்ப்பின் பிண்ணனியை உணர்ந்து கொள்வது எளிது. பெரியாரை தமிழர் இல்லை என்பவர்கள், கையோடு பார்ப்பனர்களை தமிழர்கள் என்று பாராட்டுகிறார்கள். பெரியாரைத் தலித் விரோதியாகச் சித்தரிப்பவர்கள். பரர்ப்பனர்களை நல்லவர்கள் என்று சான்று உரைக்கின்றனர். பார்ப்பனர் அல்லாத பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும், தாழ்த்தப்பட்ட சமூக மக்களும் இணைந்து எழுவதுதான் சமூகநீதியின் வெற்றியாக முடியும் என்கிற பெரியாரின் எதர்த்தமான உண்மை கணிசமான வெற்றியை ஈட்டியுள்ள தழிகத்தில், பிற்படுத்தப்பட்ட சமூகத்தையும், தாழ்த்தப்பட்ட சமூகத்தையம் நிரந்தரமாகப் பிரித்துவைக்கப் பார்ப்பனர்கள் செய்கிற சூழ்ச்சியே பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இடைவெளியை ஏற்படுத்தும் முயற்சி.
இந்தச் சூழ்ச்சியான முயற்சிக்கு முட்டுக் கொடுக்கவே தலித் மக்களுக்குப் பெரியார் என்ன செய்தார்? என்கிற வினாவைத் தலித் இயக்கங்களின் பேரால் எழுப்புகிறது பாரப்பனியம். இந்தச் சூழ்ச்சிக்கு மெத்த படித்த மருத்துவர்களே! இரையாகி வருகிறபோது நம்முடைய திரைப்பட இயக்குநர் தோழர் இரஞ்சித் போன்றவர்கள் கொஞ்சம் மயக்கத்தில் சார்ந்திருப்பது வியப்பில்லைதான் என்றாலும்
சேரிகளில் பெரியார் கொண்டாப்படும் அளவு ஊர்களுக்குள் அம்பேத்கர் கொண்டாடப்படுகிறாரா? என்ற தோழர் இரஞ்சித்தின் கேள்வியை அப்படியே கடந்து போவது சரியான அணுகுமுறையாக இருக்காது என்கிற கவலையும், இதற்கு யாரேனும் மறுப்பெழுத மாட்டார்களா? எதிர்ப்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நேரத்தில் செப்டம்பர் மாத ‘காட்டாறு’ இதழ் “சுய ஜாதித் துரோகிகளின் தலைவர் பெரியார்” எனும் தலைப்பில் ஓர் அருமையான பதிவையே பதிலாகப் பதிந்திருந்தது. வரலாற்று ஆதாரங்களாடு நிறுவப்பட்டிருந்தது. தோழர் அதிஅசுரனின் பதிவு பலரது மயக்கங்களை தெளிவிக்கும் பலரது சூழ்ச்சிகளை அமல்படுத்தும், என்பதில் அய்யமில்லை. அதை மேலும் பரப்பவேண்டும் என்றே நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இந்தக் கட்டுரை குறித்து 08.10.2017 ஞாயிறன்று தமிழ்நாடு மாணவர் மன்றம் பூந்சோலையில் நான்கு மணிநேரம் விவாத்தை நடத்தியிருக்கிறார்கள். அதில் பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.
ஜாதீய ஒடுக்குமுறைக்கு எதிராக கோபப்பட்டே தோழர் இரஞ்சித் அந்த வினாவைத் தொடுத்திருக்கக் கூடும் என்று நாம் கருதுகிறோம். தோழர் இரஞ்சித் போன்ற பல இளைஞர்கள் இப்படியான பல கேள்விகளை எழுப்பும்படியான சமூகச்சூழல்களால் தூண்டப்படுகிறார்கள். இப்படித் தூண்டப்படும் இளைஞர்கள் பலரும் பெரியார் காலத்திய சமூகச் சூழலையோ, பெரியாரையோ படித்தறியாதவர்கள். அதனால் அவர்கள் எளிதாக இப்படிக் கோள்விகளை முன்வைத்து விட்டு நகர்ந்து விடுகிறார்கள். இவர்களைத் தெளிவு படுத்தவேண்டிய பொறுப்பு, பார்ப்பனீயத்திற்கு எதிராகப் பார்ப்பனர் அல்லாத மக்களை அணிதிரட்ட வேண்டிய பொறுப்பு பெரியார்- அம்பேத்கர் தொண்டரகளுக்கே இருக்கிறது.
அதேநேரத்தில் பெரியார் இயக்கங்களின் வீச்சில் காலத்திற்கேற்ற மாற்றங்களை இன்னும் கூடுதலாக எதிர்பார்க்கிறது இந்த சமூகம். பிற்போக்குகளை விதைத்து பிரிவினைகளையும் வன்முறைகளயும் அறுவடை செய்கிற ஜாதி மதவாத இயக்கங்கள் எல்லாம் இன்றைக்கு காலச் சூழல்களுக்கேற்ற அறிவியல் மாற்றங்களில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போது முற்போக்கையும் பகுத்தறிவையும் கொள்கையால் கொண்ட இயக்கங்களின் வளர்ச்சியில் செயல்பாடுகளில் புதிய புதிய மாற்றங்களை வேண்டுகிற உரிமை அந்த சமூகத்திற்கு இருக்கிறது என்றே நாங்கள் கருதுகிறோம்.
பெரியார் தமிழருக்கு என்றோ, தாழ்த்தப்பட்டோருக்கு என்றோ தனித்தனியே பேசிய தலைவரில்லை. மானமும் அறிவும் மனிதருக்கு அழகு என்றுதான் சொன்னார். அவர் மனித சமூக முன்னேற்றத்தை வளர்ச்சியும் உயர்வும் சமத்துவமாக இருக்கவேண்டும் என்று எதிர்ப்பார்த்தவர்.
ஆக, நேரிடையாக பெரியார் யாருக்கும் எதிரானவர் அல்ல. மனித சமத்துவத்திற்கு எதிரானவர்கள் தாமாகவே பெரியாரின் எதிரிகளாகப்போனார்கள் அவ்வாளவுதான். மனிதநேயத்தின் எதிரிகளும் அறிவுக்குள்ளர்களும் பெரியாரை எதிரியாக்கருதினார்கள். எதிரியாகச் சித்தரிக்கின்றனர்.
இந்த இந்திய இந்துச் சமூக அமைப்பே சமத்துவத்திற்கு எதிரானது என்பதால் பெரியார் இந்த அமைப்பையே எதிர்த்தார். இந்த அமைப்பை எதிர்க்கத் துணியாதவர்களும் எதிர்க்கத் தெரியாதவர் களும்தான் இங்கு பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஏதோ ஒருவகையில் இந்த சமுக அமைப்பின் சிக்கல்களுக்குள் அவலங்களுக்குள் இழிவுகளுக்குள் சிக்கி மூழ்கி முச்சுத் திணறுகிறார்கள்.
தங்கள் துன்பத்திற்கும் அவமாத்திற்கும் இழிவுக்கும் இந்த சமூக அமைப்புதான் காரணம் என்று பலருக்கும் தெரிவதில்லை. தெரிந்த சிலருக்கு அதை வெளிச் சொல்லி இதிலிருந்து வெளியேறும் துணிச்சல் இருப்பதில்லை.
புத்தருக்குப் பிந்திய இரண்டாயிரம் ஆண்டுகால இடைவெளியில் மிக துணிச்சலாக இந்த சமூக அமைப்பின் ஆணி வேரை அசைத்து அதன் அசிங்களை அம்பலபடுத்திய தலைவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் தந்தைபெரியார் இன்னொருவர் புரட்சியாளர் அம்பேத்கர். புத்தருக்கும் பெரியாருக்கும் இடைப்பட்ட காலத்தில் பலர் பார்ப்பன எதிர்ப்பைப் பேசினார்கள், எழுதினர்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரின் வாக்கு மூலம் கூட நால்வருண வேத கருத்துக்கு மறுப்பு தானே தவிர வேறு அல்ல. சித்தர்களின் தத்துவங்கள் பார்ப்பனீயத்திற்கு எதிரானவை. ஆனால் இவையெல்லாம் வெகுமக்களின் கவனத்தைத் திருப்பாத காரணத்தால் பார்ப்பனர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களை எளிதாக அழித்தொழித்தனர்.
பார்ப்பனச் சூழ்ச்சி வலைகளை அறுத்து திருக்குறளை எடுத்து வந்து மக்கள் மன்றத்தில் போட்டு, தமிழனின் ஈராயிரம் ஆண்டு முந்திய அறிவை பாருங்கள் உலத்தின் முன்னால் திருக்குறளின் பெருமையை புகழை உயர்த்தி காட்டிய பெரியார்... தமிழர் விரோதி?
சாதிப் படிநிலையில் கடைசியாக இருக்கிற தாழ்த்தப்பட்ட மக்களின் ஒடுக்கு முறைக்கு எதிராக “பறையன் பட்டம் போகாமல் சூத்திர பட்டம் போகாது” என்று பிற்படுத்தப்பட்ட இடைநிலை சாதித் தலைவர்களை எச்சரித்த பெரியார்.
“சாதியை அழித்தொழிக்கும் வழி” என்கிற புரட்சியாளரின் கருத்துக்களை முதன்முதலில் தமிழில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டு மக்களிடையே பரப்பிய பெரியார் இங்கே... தாழ்த்தப்பட்டோரின் எதிரி?
புரட்சியாளர்கள் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி, சமூக சமத்துவத்திற்கு எதிரான இந்தச் சமுக அமைப்பை அடியோடு வெறுத்தனர். இந்த அமைப்பின் அடிக்கட்டுமானத்தின் மீது தங்கள் தாக்குதலைத் தொடுத்தனர். இருவரும் இருவேறு பகுதிகளில் இருவேறு தளங்களில் நின்றவர்கள். குறிப்பாக, புரட்சியாளர் அம்பேத்கர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர். ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து கடுமையான ஒடுக்குமுறைகளைச் சந்தித்து, அதனிடையே நிகரற்ற தமது கல்வி அறிவால் இந்த சனாதான சமூகத்தின் மீது தமது அறிவுச் சாட்டையை சுழற்றிப் போரடினார். தந்தை பெரியார் தென்னகத்தில் பிறந்தவர். பெரிய படிப்புகள் படிக்காதவர். ஆனால் சமூக அமைப்பில் ஆதிக்க ஜாதியில் பிறந்த பெரும் பணக்காரராக வளர்ந்தவர். பல பட்டங்களும் பதவிகளும் அவரைத் தேடி வந்தன. பிறகு அனைத்தையும் துறந்து சமுக வெளியில் பயணித்த தலைவர்.
இந்த இரண்டு பேருடைய வாழ்வியல் அமைப்புகள் வேறு வேறானாவை. இரண்டு பேருடைய தொடக்கால சமூக பங்களிப்புகள் வேறு வேறானவை. ஆனால், இருவருடைய பயணமும் ஒரு புள்ளியில் வந்து சந்தித்துக் கொண்டது. அவர்கள் காலத்திலேயே இருவருடைய சிந்தனை, எண்ணம், எதிர்பார்ப்பு, லட்சியம் எல்லாம் ஒன்றாகி இன்றைக்கும் அவை இணைகோடுகளைகப் பயணிக்கின்றன. இந்த மண்ணில் ‘சமத்துவ சமுகம்’ ஒன்று மலரும் என்றால் அதன் அடியுரமாக பெரியர் - அம்பேத்கர் ஆகியோரது தத்துவங்களே இருக்குமே தவிர, வேறு ஒன்றும் இருக்கமுடியாது .
அப்படிபட்ட இந்த இரண்டு தத்துவத்தலைவர்களைப் பற்றிப் பேசுகிறபோது இருவருக்கும் இடையில் ஒரு வர்ணாசிரம வேறுபாடு இருப்பது போல் சுட்டி காட்டுவதும் அதன் மூலம் பெரியாரைத் தனிமைப்படுத்த முயல்வதும் ஆன செயல்கள் யாருக்கு நன்மை விளைவிக்கும்? அது யாருக்கு எதிராக அமையும்? என்கிற சாதாரண அறிவு கூட இல்லாமல் பேசுவதை எந்த வகையிலும் சமாதானம் செய்ய முடியாது என்பதுதான் உண்மை.
புரட்சியாளர் அம்பேத்கர், “நான் இந்துவாகப் பிறந்துவிட்டேன்! ஆனால், இந்துவாகச் சாக மாட்டேன்!” என்று இந்துச் சனாதானத்தின் முகத்தில் அறைந்து சொன்னார். சொன்னபடி இலட்சக்கணக்கான மக்களோடு இந்து மதத்திலிருந்து வெளியேறி புத்தநெறியில் கலந்து விட்டார். அம்பேத்கரின் இந்த புரட்சிகர நடவடிக்கை இன்று 60 ஆண்டுகளை கடந்து விட்டது. நாடு முழுவதும் அம்பேத்கர் இயக்கங்கள், லட்சக்கணக்கான அம்பேத்கர் பின்பற்றாளர்கள் நாள்தோறும் தோன்றிய வண்ணம் இருக்கிறார்கள். மகிழ்ச்சி! ஆனால், எத்தனை சேரிகள் இன்று சனாதானத்திலிருந்து வெளியேறி புத்த நெறியை பின்பற்றுகின்றன? இது சிந்தனைக்கான கேள்வியே தவிர யாரையும் சங்கடப்படுத்த அல்ல!
ஆனால், ஆரியப் பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும் வேதகால சனாதானத்தைப் பாதுகாக்கவுமே நிறுவப்பட்ட பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் இன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாளை கொண்டாடுகிறது! சென்னை அய்.அய்.டி.யில் அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டம் குறித்த பிரச்சனையில் “அம்பேத்கரை ஒப்புக் கொள்வோம்! ஈவேராவை ஏற்க மாட்டோம்” என இந்துத்துவ சக்திகள் வெளிப்படையாகவே பேசின. கலவரப் பிள்ளையார் ஊர்வலங்களின் விளம்பரங்களில் தலைவர்களின் வரிசையில் புரட்சியாளர் அம்பேத்கரின் படத்தை துணிச்சலாகப் பயன்படுத்துகின்றனர்.
இவையெல்லாம் சொல்ல வருகிற சேதி என்ன? புத்தரைப் போல மகாவீரரைப் போல புரட்சியாளர் அம்பேத்கரையும் விழுங்கப் முயற்சிக்கிறது பார்ப்பனீயம் என்பதுதானே! அம்பேத்கரின் பின்பற்றாளர்கள் என்போர் இதற்காக ஆற்றிய எதிர்வினை என்ன?
“இந்து மதத்தின் எந்த கடவுளையும் நான் வணங்கவும் மாட்டேன், இந்து மதத்தின் எந்தவொரு சடங்கையும் நான் பின்பற்றவும் மாட்டேன்” என்பதை அறிவிக்கும் புரட்சியாளரின் 22 கட்டளைகளை மக்களிடையே கொண்டு சேர்த்த இயக்கங்கள் எத்தனை? குறைந்த பட்சம் தலித் மக்களிடையே இந்து மத எதிர்ப்புணர்ச்சிகளைப் பதியச் செய்த தலித் இயக்கங்கள் எத்தனை? அப்படி ஒரு முயற்சி நடந்திருக்குமானால் இந்நேரம் சேரிகளிலிருக்கும் மதுரைவீரன், வீரமாத்தி கோவில்களில் விநாயகனுக்கு பதிலாக குறைந்தபட்சம் புத்தராவது இருந்திருப்பாரே! மதுரைவீரனுக்கு இந்து முறைப்படி கும்பாபிசேகம் நடக்காமலாவது இருந்திருக்குமே!
தலித் விடுதலைக்கு பெரியார் என்ன செய்தார்? என்று கேட்கும் போராளி தலித்துகள் இவை குறித்தெல்லாம் சிந்தித்தார்களா? எந்தவொரு பெரியாரிஸ்டாவது இதுவரை பொதுவெளியில் இப்படி கேள்வி கேட்டிருப்பார்களா? இல்லையே! காரணம் என்ன? பெரியரிஸ்டுகளும் தலித் இயக்கங்களும் இப்படியான விமர்சனங்களில் தங்கள் உழைப்பை, நேரத்தை, சிந்தனையை செலவழித்துக் கொண்டு திரிய வேண்டுமே தவிர, தவறியும் இருவரும் ஒன்றாகச் சேர்ந்து தங்கள் பொது எதிரி பார்ப்பான் தான் என்று எதிர்ப்பை ஓரிடத்தில் குவித்துவிடக்கூடது என்கிற பெருங்கவலையில் இருக்கும் பார்ப்பனர்களுக்கு இடமளித்து விடக்கூடது என்பதால் தான்!
பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் பெரியாரிஸ்டுகள் என்போரும், அம்பேத்கரிஸ்டுகள் என்போரும் இணைந்து எழ வேண்டியவர்களே தவிர பிரிந்து விழுந்துவிடக் கூடாதவர்கள் என்கிற எண்ணமும் சிந்தனையும் தான்! இதை ஏன் அம்பேத்கர் பெயரைப் பயன்படுத்திக்கெண்டு பெரியாரை விமர்சிப்பவர்கள் உணர்வதில்லை?
இப்படியே கொஞ்சம் திரும்பிப் பார்த்தோமேயானால் அம்பேத்கரை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி பிறந்த நாள் கொண்டாடும் பார்ப்பன சக்திகள் பெரியாரை எதன் அடிப்படையிலும் நெருங்கவே தயங்குகிறார்கள் ஏன்? பெரியார் இன்றைக்கும் பார்ப்பன வர்ணாசிரம தர்மிகளின் எதிரியாகவே அடையாங் காணப்படுகிறார்.
பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் இந்திய சனாதான சமூகத்தில் சமூகநீதிக்கான தேரோடும் தண்டவாளங்கள். பெரியாரையும் அம்பேத்கரையும் பிரித்துப் போடும் எந்தவொரு சூழ்ச்சிக்கும் எந்தவொரு பெரியாரிஸ்டும் இடம் கொடுத்ததே இல்லை. ஆனால், அம்பேத்கரின் பெயரை படத்தை வைத்துக்கொண்டு சாதி அடையாளத்தையும் பத்திரப்படுத்திக் கொண்டு, தலித் இயக்கங்களுக்கும் ஒளிந்து கொண்டு பெரியாரை விமர்சனம் செய்துகொண்டிருக்கிற பார்ப்பன அடிமைகள் பலர் இன்றைக்கும் இருக்கிறார்கள். இவர்கள் தலித் விடுதலைக்கும் சாதி ஒழிப்புக்குமே எதிரானவர்கள். தலித் இயக்கம் அல்லாது தலித் அடையாளம் தாங்கியவாறு பெரியாரை விமர்சிக்கின்றனர் அப்பட்டமான தலித் விரோதிகள் என்றே நாங்கள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டுகிறோம்!
இன்றைக்கு இந்து - இந்தியச் சமூகத்தில் வேறெந்த தேசிய இனங்களைக் காட்டிலும் தமிழரின் கல்வி - சமூக - அரசியல் பொருளாதர நிலை மேம்பட்டதாகவே இருக்கிறது. இந்தியாவின் வேறெந்த மாநிலங்களைவிட தமிழ்நாட்டு தாழ்த்தப்பட்டோர் மேம்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். இந்த மாற்றம் பெரியாரால் உண்டானது.
இந்தியாவின் வேறெந்த மாநிலங்களை விட, தமிழ்நாட்டில்தான் பட்டிதொட்டி எங்கும் அம்பேத்கர் கொண்டப்படுகிறார். தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அம்பேத்கரைப் போற்றாத இயக்கங்கள் இல்லை. சாதி - ஒழிப்பு, மதவாத எதிர்ப்பு, இன உரிமை, பெண் விடுதலை என எந்தத் தளத்தில் இயங்குகிற இயக்கமாக இருந்தாலும் அங்கே பெரியாரோடு, அம்பேத்கர் கட்டாயம் இருப்பார். காரணம் பெரியாரிஸ்டுகள்.
பெரியாரை நேருக்கு நேர் எதிர்கொள்ள துணிவில்லாத பார்ப்பனீயம் தமிழர் - திராவிடர் சிக்கலை உருவாக்குகிறது .பெரியாரையும் அம்பேத்கரையும் பிரித்துப் போட முயற்சிக்கும் பார்ப்பனீயம் பெரியாரைத் தலித் விரோதியாவும் காட்ட துடிக்கிறது. இந்தச் சூழ்ச்சிக்கு சுயநலத்தோடு இரையானவர்கள் பெரியாரை, சமூகநீயை இகழ்ந்து எதிரியாகக் காட்டி பார்ப்பனர்களின் தயவைப் பெற்று வளமடைகிறார்கள், வாழ்வில் செழிப்படைகிறார்கள்.
இந்தச் சுயநல சூழ்ச்சிக்காரர்களின் ஏமாற்று வித்தையில் தோழர் இரஞ்சித் போன்ற இளைஞர்கள் மயங்கிவிடக்கூடாது. மாறாக, தங்களின் இழிவுக்குக் காரணம் யார் என்பது பெரியார் அம்பேத்கர் பார்வையில் அடையாளங்கண்டு எதிர்க்கிற களத்துக்கு வரவேண்டும்.
பார்ப்பனர் அல்லாத மக்களின் குறிப்பாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமையில் தான் உண்மையான சமூகநீதி இருக்கிறது. பெரியார் அம்பேத்கர் தத்துவங்கள் இரு தத்துவத் தலைவர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்வதற்கு ஏராளம் இருக்கிறது.
தந்தை பெரியாரின் பெரும்பணியில் பெரியாரிஸ்டுகளின் தொடர்பினால் எந்த இடத்திலும் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கோ, புரட்சியாளர் அம்பேத்கருக்கோ எதிராக எந்தவொரு நிலைப்பாடும் இல்லை. ஆனால், தலித் என்கிற அடையாளத்தோடு பெரியாருக்கு எதிரான தீண்டமையை யாரும் கையலெடுக்காதீர்கள் என்கிற வேண்டுகோளையே இந்த ஆய்வுக் கட்டுரையின் வாயிலாக முன்வைக்கிறோம், மறுப்பு இருப்பின் வரவேற்கிறோம்!
- கா.சு.நாகராசன், சுயமரியாதை - சமதர்மக் கழகம்