சென்ற வாரம், அண்ணல் அம்பேத்கர் குறித்த கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொள்வதற்காகத் திருத்துறைப்பூண்டி சென்றிருந்தேன். பேசிவிட்டுத் திரும்பும்போதுதான் அந்த மானுட அவமானம் குறித்து நண்பர்கள் கூறினர்.

நாகை மாவட்டம், மயிலாடுதுறை - மாவூர் அருகே, திருநாள் கொண்டசேரி என்று ஓர் ஊர். அங்கே நவம்பர் மாத இறுதியில் குஞ்சம்மாள் என்ற முதிய அம்மையார் ஒருவரும், டிசம்பர் முதல் வாரம் அவருடைய கணவரும் இறந்து போயுள்ளனர்.

இருவரும் தலித் மக்கள் என்பதால் அவர்களுடைய உடல்களை ஊர் வழியாக எடுத்துச் செல்ல ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேரன், உயர்நீதி மன்றம் சென்று இந்த அநீதிக்கு எதிராக ஆணை பெற்று வந்துள்ளார். ஆனால் அந்த ஆணைக்கும் எந்த மதிப்புமில்லை.

நீதியைக் காலில் போட்டு மிதித்துச் சாதி கொக்கரித்துள்ளது. அதற்குக் காவல்துறை துணை போயிருக்கிறது. இறுதியில், வயல் வரப்பு வழியாக எடுத்துச் சென்று உடல்களை அடக்கம்செய்துள்ளனர்.

சாதியை ஒழிக்காதவரை, நாம் நாகரிகமானவர்கள் என்றும்,நம் பண்பாடு மிக உயர்ந்தது என்றும் சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்கில்லை. 

Pin It