உணர்ச்சியும் உத்வேகமும் ஊட்டும் ஒரு இயக்கத்தின் உருக்குலையாத படப்பிடிப்பு
இரண்டாவது உலகயுத்தம் முடிந்த பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சோவியத் செஞ்சேனையின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு முதலாளித்துவ வர்த்தக வட்டத்திற்குள் இருந்து விலகிவிட்டன. அவ்வேளையில் உலகின் 23 முதலாளித்துவ நாடுகள் 1947ம் ஆண்டு ஒருங்கிணைந்து காட்(GAAT) ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அந்த ஒப்பந்தம் உலகம் முழுவதிலும் நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை விரிவாக்குவதையும் நாடுகளுக்கிடையில் இருந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை அகற்றுவதையும் நோக்காகக் கொண்டு செய்து கொள்ளப்பட்டது.
இரண்டாவது உலகயுத்தம் முடிந்த பின்னர் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் சோவியத் செஞ்சேனையின் உதவியுடன் விடுவிக்கப்பட்டு முதலாளித்துவ வர்த்தக வட்டத்திற்குள் இருந்து விலகிவிட்டன. அவ்வேளையில் உலகின் 23 முதலாளித்துவ நாடுகள் 1947ம் ஆண்டு ஒருங்கிணைந்து காட்(GAAT) ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அந்த ஒப்பந்தம் உலகம் முழுவதிலும் நாடுகளுக்கிடையேயான வர்த்தகத்தை விரிவாக்குவதையும் நாடுகளுக்கிடையில் இருந்த வர்த்தகக் கட்டுப்பாடுகளை அகற்றுவதையும் நோக்காகக் கொண்டு செய்து கொள்ளப்பட்டது.
உலக வர்த்தக அமைப்பின் உதயம்
அதன்பின்னர் சோவியத் யூனியனிலும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிசம் முதலாளித்துவ ஏகாதிபத்தியங்களின் கூட்டுசதியாலும் சோசலிச நாடுகளுக்குள் கம்யூனிஸ்ட் என்ற போர்வையில் உடன் பிறந்தே கொள்ளும் பிணியாக இருந்த தூரோகக் கும்பலின் உதவியாலும் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் 1995ம் ஆண்டு உலக வர்த்தக அமைப்பு என்ற ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1995ம் ஆண்டு 151 நாடுகளை உள்ளடக்கி உருவான அந்த டபிள்யு.டி.ஓ. வின் இலக்கு உலகின் 90 சதவீத வர்த்தகத்தைத் தனது வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும் என்பதாக இருந்தது.
எல்லைகள் தொல்லைகள்
உலகளாவிய வர்த்தகம் என்ற சக்திமிக்க வெடிகுண்டினால் நாடுகளின் எல்லைகள் தகர்த்தெறிப்பட வேண்டும் என்பதே அதன் குறிக்கோள். அதன் விளைவாக உலகின் பல நாடுகளின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் அந்தந்த நாடுகளின் சந்தைகளுக்கு என்றில்லாமல் உலகச் சந்தையின் சரக்குகள் ஆயின. அவர்களின் உயர் தொழில் நுட்பத்தினால் மலிவான செலவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை உலகெங்கும் விற்று அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்ற காரணத்திற்காகவே முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் இதனை முன்கை எடுத்து கொண்டுவந்தன.
விஞ்ஞான கண்டுபிடிப்புகள் குறிப்பாக மருந்துப் பொருள் உற்பத்தி முறைகளைக் கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு தொகையை அவர்கள் அவற்றைச் செய்யும் வழிமுறையைக் கண்டுபிடித்ததற்காக வழங்கிய பின்னரே பயன்படுத்தப்பட வேண்டும் என்ற நிலை இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமலுக்கு வந்தது. இதனால் மூன்றாவது உலகநாடுகளில் விற்பனை செய்யப்படும் அந்நியநாட்டு உயிர்க்காப்பு மருந்துகளின் விலைகள் எட்டிப்பிடிக்க முடியாவண்ணம் உயரும் பேரபாயம் ஏற்பட்டது. உலக வர்த்தக அமைப்பு உலக நாடுகளின் உற்பத்திப் பொருட்களை மட்டுமின்றி உலகநாட்டு மக்களின் உழைப்புத் திறனையும் உலகச் சந்தையின் சரக்காக்கியது. அதன் விளைவாக எங்கெல்லாம் மலிவான கூலிக்கு உழைப்பாளர் கிடைக்கிறார்களோ அங்கெல்லாம் உலக முதலாளிகளின் மூலதனம் சீறிப்பாயத் தொடங்கியது.
வேற்றிட வேலை வாய்ப்பு என்ற சொல்லாடல் முதலாளித்துவ வியாபாரப் பொருளகராதியில் ஒரு முக்கிய இடத்தினைப் பிடித்தது. இதனால் குறைந்தபட்சக் கூலி வழங்கல் கூட வழக்கிலில்லாத மூன்றாவது உலக நாடுகளுக்கு உலகின் முன்னேறிய நாடுகளின் வேலை வாய்ப்புகள் இடம்பெயரத் தொடங்கின. வாழ்க்கைச் சம்பளம் என்ற அடிப்படையில் கூடுதல் ஊதியம் பெற்றுக் கொண்டிருந்த மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கத்தின் வேலை வாய்ப்புகள் அதன் காரணமாக அடிமட்டமாகக் குறைந்தன. வேலையின்மைப் பிரச்னை அந்நாடுகளை உலுக்கி எடுக்கத் தொடங்கியது.
விவசாயிகளின் துயரம்
உலக நாடுகளில் சுயதேவைப் பூர்த்திப் பொருளாதாரம், உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டுப் பொருள்களுக்குக் கூடுதல் வரிவிதிக்கும் போக்கு ஆகியவை தகர்ந்து நொறுங்கின. விவசாய விளைபொருள் உட்பட அனைத்துப் பொருள்களும் உலகச் சந்தையின் சரக்கானதால் பல நாடுகளின் விவசாய விளைபொருட்களின் விலைகளில் திடீர் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலையை மேலை நாட்டு அரசாங்கங்கள் அந்நாடுகளின் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கிச் சரிசெய்தன. அந்த வகையில் தாங்களும் மானியம் வழங்கி தங்கள் நாட்டு விவசாயிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக இந்தியா போன்ற பல வளர்முக நாடுகளின் அரசாங்கங்கள் மானியம் கொடுப்பதை நிறுத்துமாறு அந்நியநாட்டு அரசாங்கங்களை வற்புறுத்துவதிலேயே கவனம் செலுத்தின. நீங்கள் மானியம் வழங்குவது தொடர்ந்தால் நாங்களும் எங்கள் விவசாயிகளுக்கு மானியம் வழங்கி குறைந்த விலைக்கு எங்கள் விவசாயிகளின் விளைபொருட்களை உங்கள் நாட்டுச் சந்தைகளில் கொண்டுவந்து குவிப்போம் என்று கூற அவர்கள் முன்வரவில்லை. அதற்குக் காரணம் மேலை நாடுகளின் நிர்ப்பந்தங்கள் எதுவுமல்ல. மாறாக வளர்முக நாட்டு அரசாங்கங்களின் தொழில் முதலாளித்துவச் சார்பு நிலையே. இதனால் இந்தியா போன்ற நாடுகளின் விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்து கடன் சுமையினால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை தோன்றியது.
தங்கள் நாட்டு மக்களின் பொருள் வாங்கும் திறன் குன்றிப் போனதால் தாங்கள் ஈட்டும் லாப விகிதம் குறைந்து தேக்கநிலைக்கு ஆளாகியிருந்த மேலைநாட்டு முதலாளி வர்க்கத்திற்கு பெருலாபம் ஈட்ட புது வாய்ப்பினை டபிள்யு.டி.ஓ. வழங்கியது. ஆனால் அவ்வொப்பந்தம் அந்நாடுகளின் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பையும் கொடிய வறுமையையுமே பரிசாகக் கொடுத்தது. லாபவெறி தலைக்கேறிய மேலைநாட்டு முதலாளிவர்க்கம் தனது அளவு கடந்த லாபவெறிக்கு இயற்கையையும் சுற்றுப்புறச் சூழலையும் கூட இரையாக்கத் தயங்கவில்லை. லட்சக்கணக்கான மரங்களை வெட்டிக் காடுகளை அழித்து தனது பகாசுர லாபப் பசிக்கு தீனியாக்கிக் கொண்டது.
இதன் மற்றொரு விளைவாக உலகெங்கிலும் அனைத்து நாடுகளிலும் முதலாளித்துவ வாதிகளால் மனித உரிமை மனித உரிமை என வாய்கிழியக் கூறப்படும் தனிமனித சுதந்திரமும் மனித உரிமைகளும் வியாபார நோக்கங்களுக்குக் கட்டுபட்டவையாக ஆக்கப்பட்டன.இவ்வாறு டபிள்யு.டி.ஓவினால் பாதிக்கப்பட்டு வேலையிழந்து, வாழ்விழந்த மேலைநாட்டுத் தொழிலாளி வர்க்கம் உள்ளூர பொங்கிக் குமுறிக் கொண்டிருந்தது. அவ்வேளையில் அமெரிக்க நாட்டின் சியாட்டில் நகரம் உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் நடைபெறும் இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அக்கூட்டம் 1999ம் ஆண்டு நவம்பர் 29ம் நாள் தொடங்கி நடைபெற்றது. அத்தருணத்தில் அந்நகரின் தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் அக்கூட்டத்திற்கு எதிராக அணிதிரண்டு தங்களது கடுமையான எதிர்ப்பினை அமெரிக்க நிர்வாகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் வெளிப்படுத்தினர்.
சுற்றுப்புறச் சூழல் மற்றும் மனிதஉரிமை ஆர்வலர்கள், மாற்று உலகம் ஒன்றைப் படைப்போம் என்று மார்தட்டி நின்ற கம்யூனிஸ்ட்கள் ஆகிய அனைவரும் அணிதிரண்டு சியாட்டில் நகரில் பாரமவுண்ட் தியேட்டர் வளாகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்திற்கு கலந்து கொள்ள வந்த பிரதிநிதிகளை கூட்டவளாகத்திற்குள்ளேயே வரமுடியாதபடி வன்முறையில்லாத தங்களது போராட்டங்கள் மூலம் முற்றுகையிட்டுத் தடுத்தனர். ஜனநாயக உரிமைகளைத் தனது தலையாய கடமையாக காப்பாற்றப் போவதாக பெருமிதத்துடன் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கிய சியாட்டில் நகர்த் தலைவர் கூட்டமே நடத்த முடியாத அளவிற்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர், குடிமக்கள், சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் அணிதிரண்ட வேளையில் தனது வாக்குறுதியைப் பாதுகாக்க முடியாமல் தேசிய பாதுகாப்புப் படையினரை அடக்குமுறைத் தாக்குதல் நடத்துவதற்கு அதாவது கண்ணீர்ப்புகை, தடியடி எனக் காட்டுத்தாக்குதலை நடத்துவதற்கு ஏவிவிட்டார்.
கறுப்பு உடையணிந்து கருங்காலித்தனம்
தேசியப் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலை நியாயப்படுத்துவதற்காக காவல்துறையினரே கறுப்பு உடையணிந்து ஆர்பாட்டக்காரர் வேடத்தில் பல கடைகளின் கண்ணாடிக் அடைப்புகளை அடித்து நொறுக்கினர். ஆர்ப்பாட்டம் வன்முறை வடிவம் எடுத்தவுடன் தான் நாங்கள் அதனைத் தாக்கிக் கலைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளானோம் என்று அதன்மூலம் நிறுவமுயன்றனர். நவம்பர் 30 அன்று முற்றாகவே பெரும்பாலான பிரதிநிதிகள் ஆர்பாட்டக் காரர்களின் முற்றுகை காரணமாகக் கூட்டத்தில் பங்கேற்க முடியாமற்போனது. மறுநாள் அடக்குமுறையின் மூலம் முற்றுகையில் ஈடுபட்ட தொழிலாளரைக் கலைத்து பிரதிநிதிகள் பலர் கலந்துகொள்ளும் சூழ்நிலையை தேசியப் பாதுகாப்புப் படை உருவாக்கியது. அவ்வாறு நடந்த இந்த அமைப்பின் கூட்டம் எவ்வளவு தூரம் ஜனநாயக நெறிமுறைகள் தவறி நடத்தப்பட முடியுமோ அவ்வளவு தூரம் முறைதவறி நடத்தப்பட்டது. பன்னாட்டு மருந்துப் பொருட்களின் விலையேற்றத்திற்கு டபிள்யு.டி.ஓ. ஒப்பந்தத்தின் மூலம் வழிவகுத்ததை கண்டித்தும் ஆப்பிரிக்கா போன்ற பின்தங்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் மூலம் எவ்வாறு பாதிப்புக்கு ஆளாகின்றன என்பது போன்ற விசயங்களை முன்னிறுத்தியும் பேசத் தொடங்கிய பிரதிநிதிகளின் வாதங்கள் சபையில் முன்வைக்கப்பட முடியாமல் கூட்டத்தை நடத்தியவர்களால் அப்பட்டமாகவே தடுக்கப்பட்டன. பல பிரதிநிதிகளை வெளிநடப்பு செய்யச் செய்வது போன்ற நாசூக்கான யுக்திகள் மூலமும் மேலும் பலர் பேசவிடாமல் செய்யப்பட்டனர். இத்தகைய கூட்டங்கள் உண்மையில் மனம் திறந்த விவாதங்களுக்கு வாய்ப்பளித்து ஜனநாயகப்பூர்வ முறையில் முடிவுகள் எடுத்து அமைப்பை வழிநடத்திச் செல்வதற்காகக் கூட்டப்படுவதில்லை. மாறாக பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் லாபவெறி நோக்கங்களுக்காக ஏற்கனவே எடுத்து வைத்துள்ள முடிவுகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கே கூட்டப் படுகின்றன என்பதை அக்கூட்டம் சந்தேகத்திற்கிடமின்றி வெளிப்படுத்தியது.
பேசமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட அப்பிரதிநிதிகள் வெளியில் நடந்த ஆர்ப்பாட்டப் பின்னணியில் உறுதி பெற்று மீண்டும் தங்களது உரிமைக் குரலை கூட்டத்தில் எழுப்பினர்.
போலி ஜனநாயகம் முன்னேறிய, பின்தங்கிய என்ற பாகுபாடின்றி அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் பெயரலவிலான ஜனநாயகங்களும் போலித் தன்மை வாய்ந்தவையே என்பதை நிரூபிக்கும் விதத்தில் அமைதியாக நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் 600 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இரண்டாண்டுகளுக்கு இதுபோன்ற ஆர்பாட்டங்களில் ஈடுபடப் போவதில்லை என்று உறுதியளித்தால் மட்டுமே விடுதலை செய்யப்படுவர் என்று நகர்மன்றத் தலைவர் நிபந்தனை விதித்தார்.
அதற்கு ஒப்புக்கொண்டு எந்தச் சூழ்நிலையிலும் தங்களது சிவில் உரிமைகளைக் காவு கொடுக்கப்போவதில்லை எனவும் சிவில் மற்றும் அடிப்படை உரிமைகளைத் தட்டிப் பறித்து சியாட்டில் நிர்வாகம் ஜனநாயகத்தையே கற்பழித்துள்ளது எனவும் கைது செய்யப் பட்டவர்களை சந்திக்க அவர்களின் வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படாததன் மூலம் அரசியல் சாசனம் மீறப்பட்டுள்ளது, மேலும் உரிமைகளை மீறி கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் கட்டாயப்படுத்திப் பெறப்பட்டுள்ளன என்றும் கூறி ஆர்ப்பாட்டக் காரர்களின் வழக்கறிஞர்கள் இம்மியளவும் அரசு அதிகார வர்க்கத்தின் ஆணைக்கு மசிந்து கொடுக்காமல் நிமிர்ந்து நின்றனர்.
மசிந்து கொடுக்காத அரசு நிர்வாகம் எனும் கழுதையின் முதுகெலும்பை முறிக்கும் கடைசிச் சுமையாக ஆர்ப்பாட்டக் காரர்களின் வழக்கறிஞர்கள் முன்வைத்த பொது வேலைநிறுத்த அறிவிப்பு அமைந்தது. மிரண்டுபோன நகர நிர்வாகம் எவ்வித நிபந்தனையுமின்றி கைதான 600 பேரையும் விடுதலை செய்தது.
ஆர்ப்பாட்டத்தின் பின்பலத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் நிமிர்ந்து நின்று தங்கள் கருத்துக்களை வலியுறுத்தத் தொடங்கினர். அதன் விளைவாகப் பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்களால் அவை நினைத்த விதத்தில் கூட்டத்தை நடத்த முடியாமற்போனது. பல விசயங்களில் முடிவெதுவும் எட்டப்படாமல் அக்கூட்டம் தோல்வியில் முடிந்தது.
கூட்டச் செய்திகளை சேகரித்து ஊடகங்களில் வழங்குவதற்காக வந்த ஊடகச் செய்திச் சேகரிப்பாளரில் சிலரும் கூட ஆர்ப்பாட்டத்தின் குறிக்கோளாலும் அதில் கலந்து கொண்டவர்களின் உறுதியாலும் கவரப்பட்டனர். அத்துடன் சியாட்டில் நிர்வாகத்தின் ஜனநாயக விரோதப்போக்குகளின் மீதான தங்கள் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் அவர்களும் பங்கேற்றனர்.
6 மாத காலத் தயாரிப்பில் உருவான இந்த இயக்கம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் பங்கேற்புடன் அரசு நிர்வாகத்தையும் காவல் துறையினரையும் மிரண்டு போகச் செய்தது. அதிகபட்சம் ஏழாயிரம் பேரிலிருந்து 10 ஆயிரம் பேரே பங்கேற்பர் என்று காவல்துறை எதிர்பார்த்து. அதனை எதிர் கொள்ளத் தேவையான ஏற்பாடுகளையே செய்திருந்தது. நவம்பர் 29ம் நாள் மிகப் பிரம்மாண்டமான சக்தியுடன் சுனாமிப் பேரலையயனத் தலைதூக்கிய எழுச்சியைத் தடுக்க ஒன்றுமே செய்ய முடியாதவர்களாக அவர்கள் முடங்கிப் போய்விட்டனர். இவ்வளவு பேர் கலந்து கொண்டாலும் மிகுந்த கட்டுப் பாட்டுடன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அவ்வியக்கத்தில் நடந்த அசம்பாவிதங்கள் அனைத்தும் வேற்றுடை அணிந்த காவல் துறையினராலேயே செய்யப்பட்டன.
இந்த இயக்கத்தை ‘பேட்டில் இன் சியாட்டில்’ என்ற பெயரில் இயக்குனர் டெளன்செண்ட் மிக இயல்பாகவும் யதார்த்தமாகவும் அதே சமயத்தில் விறுவிறுப்புக் குறையாமலும் படமாக்கியிருக்கிறார். ஒரு இயக்கத்தில் இருக்கும், உருவாக்கப்படும் உயர்ந்த அம்சங்கள் அனைத்தையும் உருக்குலையாமல் பார்ப்பவர் மனதில் பதித்திருக்கிறார்.எந்தவொரு சமூக இயக்கமும் உண்மையில் தோல்வியடைவதில்லை; வீணாவதுமில்லை. அது அடையும் வெற்றி பல சமயங்களில் வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிவதில்லை. தோல்வியடைந்த மகத்தான சமூக இயக்கங்களைக் கூட வெற்றி பெறப் போகும் அடுத்த இயக்கங்களுக்கான ஒத்திகையாகவே லெனின் போன்ற மாபெரும் தலைவர்கள் பார்த்தனர். ஆம். 1905ம் ஆண்டு தோல்வியில் முடிந்த ரஷ்யப் புரட்சியை அவர் 1917 ம் ஆண்டு வெற்றி பெற்ற புரட்சிக்கான ஒத்திகை என்றே பார்த்தார். அதைப் போல் இந்த சியாட்டில் இயக்கமும் அதில் பங்கேற்றவர் உட்பட பலரிடையே எதையும் சாதிக்காமல் இயக்கம் வீணாகிவிட்டது என்ற மனநிலையை ஏற்படுத்தினாலும் இறுதியில் சியாட்டிலில் நடந்த டபிள்யு.டி.ஓவின் கூட்டத்தால் எதிர்பார்த்த எதையும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சாதிக்க முடியவில்லை என்ற அழுத்தமானதொரு தாக்கத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. லாபவெறி கொண்ட அந்நிறுவனங்களின் சதித் திட்டத்திற்கு இத்தனை எதிர்ப்பு இருக்கிறது என்பதைக் கண்டு கொண்டதாலேயே மூன்றாவது உலக நாடுகளின் பிரதிநிதிகள் துணிச்சலுடன் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்து பன்னாட்டு நிறுவனங்களின் நாசகரமான திட்டங்களை நிறைவேறவிடாமல் செய்தனர். இது போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி.
அதைப்போல் வெளிப்படையாக உள்ளடக்கத்தில் பாசிஸ அமைப்புகளாக விளங்குபவையே அமெரிக்கா போன்ற நாடுகளின் அரசு அமைப்புகள்; அவற்றிற்கு விரோதமாக இயக்கம் கட்டுவோர் அனைவரையும், கண்காணித்தல், கணக்கெடுத்தல், அவர்கள் குறித்த தனிப்பட்ட குறிப்புகளைத் தயார் செய்து கோப்புகளாக்குதல் போன்றவற்றைச் செய்து எவ்வாறு அரசு நிர்வாகம் மக்கள் இயக்கங்களை நசுக்குகிறது என்பதைப் படம் தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதையும் மீறி போராட்டத்தில் கலந்து கொண்டோரைத் தங்கள் கூட்டு வலிமையால் நகரின் உணர்வுபெற்ற மக்கள் போராடி விடுவித்தது போராட்டத்திற்குக் கிடைத்த அடுத்த வெற்றியாகும். சிறையில் அடைபட்டிருப்போருக்குக் கேட்கும் வண்ணம் சிறைக்கு வெளியே இருந்துகொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’ ‘ஒன்றுபட்ட மக்களை யாராலும் பிரிக்க முடியாது’ போன்ற முழக்கங்களை எழுப்பி அவர்களை உற்சாகப் படுத்துவது அமெரிக்கா போன்ற தனிமனிதவாதம் கொடிகட்டிப் பறக்கும் நாட்டின் மக்களிடமும் உயர்ந்த கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் ஒன்றுபட்ட இயக்கங்கள் நடத்துவது சாத்தியமே என்பதைப் புலப்படுத்துகிறது. எந்தவகை நிபந்தனையுமின்றி கைது செய்யப்பட்ட 600 பேர் விடுவிக்கப்பட்டது படமாக்கப் பட்டுள்ள விதம் படம் பார்ப்போருக்கு உற்சாகத்தையும் போராட்டங்களில் ஈடுபாட்டையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இயக்கம் உருவாக்கும் நட்பும் நேசமும்
உயர்ந்த நட்பும், நேசமும் இதுபோன்ற போராட்ட சமயங்களில் தான் உருவாகின்றன, உறுதிப்படுகின்றன. படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திமான ஜே ஏற்கனவே இருமுறை கைதுசெய்யப்பட்டுள்ளவன். அவன் மீண்டும் ஒருமுறை கைதானால் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து அவனது ஆயுட்காலம் முழுவதையுமே சிறையில் கழிக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில் உள்ளான். அதனால் அவன் கூடுமானவரை கைதாவதைத் தவிர்க்கிறான். இது அவனது பெண் தோழியான Looyie Philipeபால் கோழைத்தனமெனப் புரிந்துகொள்ளப் படுகிறது. உண்மை தெரிந்தபின் கைதாகி சிறையில் பக்கத்து அறையில் இருக்கும் அவனது கரத்தை அவள் பற்றி அவனைத் தவறாக நினைத்ததற்காக வருந்தும் காட்சி நினைவைவிட்டு அகலாத ஒன்றாக அமைந்துள்ளது.
தொழில் தர்மத்தை நிலைநாட்டப் போராட வேண்டியநிலை
அதைப்போல் போராட்டத்தை நேரடியாக ஒலிபரப்பிவரும் பத்திரிக்கை நிருபர் ஜேனின் மனிதாபிமானமும், சமூக உணர்வும் தன்னால் முடிந்தவரை தன்னை வேலைக்கு வைத்திருக்கும் முதலாளித்துவ ஊடக நிறுவனத் தலைமை இடும் பணியையும் மீறி உண்மையை வெளிக் கொணரத்துடிக்கும் தொழில் தர்மமும் பிரமிக்க வைக்கின்றன. அரசு நிர்வாகம் கறுப்பு உடையணிந்த சிலரை ஏவி கடைகளை அடித்து நொறுக்கி ஆர்ப்பாட்டம் வன்முறை வடிவத்தை எடுத்து விட்டதென காட்ட முயல்வதை அவள் தனது நிறுவனத் தலைமைக்குத் தெரிவிப்பதும்; அதைக் காதில் வாங்காமலே ஜனாதிபதி பில் கிளிண்டன் வருகையை ஒலிபரப்பச் செல்லுமாறு அவளது நிறுவனத்தலைவர் ஆணையிடுவதும் அரசால் நடத்தப்படும் வன்முறை ஊடகங்களால் எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படுகிறது என்பதை வெளிப்படுத்தி தொழில் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு உண்மையான ஊடகப் பணியாளர் உண்மையாய் இருக்க எத்தனை சிரமத்தினை ஜனநாயகமும், மனித உரிமைகளும் கொடிகட்டிப் பறப்பதாகக் கூறப்படும் அமெரிக்காவில் கூட சந்திக்க நேர்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
கிளிண்டன் வருகையை ஒலிபரப்பச் செல்லாமல் ஆர்ப்பாட்டத்தை ஒலிபரப்ப முயன்று அதில் தோல்வியடைந்த பின்னர் மனித உரிமை மீறலை எதிர்த்து கைதாபவரோடு வாயில் துணியைக் கட்டிக் கொண்டு ஜேனும் கைதாவது இத்தகைய உயர்ந்த உணர்வினை ஊடகவாதிகளே பிரதிபலிக்கையில் நம்மைப் போன்ற பொதுவாழ்க்கையையே தனிவாழ்க்கையாக ஆக்கவேண்டும் என்று விரும்புபவர்கள் எத்தகைய உணர்வினைப் பிரதிபலிக்கத் தயாராக வேண்டும் என்ற எண்ணத்தை நம்மனதில் மேலோங்கச் செய்கிறது. தலைமையின் ஆணையை மீறி கிளிண்டனின் வருகையைக் காட்டிலும் உண்மையிலேயே முக்கியச் செய்தியான ஆர்ப்பாட்டத்தின் மீது ஏவிவிடப்படும் அடக்குமுறையை ஒலிபரப்பப் போகின்றோமா என்று கேட்டுவிட்டு அதற்குத் தனது ஒத்துழைப்பையும் தர அவளது சகாவான கேமராமேன் முன்வருவது படத்தில் வரும் சிறந்த காட்சிகளில் ஒன்று. இறுதியில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வரும் ஜேனை கேமராமேன் அன்பொழுகத் தழுவிக் கொள்வது இதுதான் உண்மையான கொள்கை மற்றும் தொழில் தர்மத்தின் அடிப்படையிலான உயர்ந்த நட்பு என்பதை மிக அழகாக வெளிப்படுத்தும் மற்றொரு காட்சி.
உளவியல் உண்மை
தன் இலாக்காவைச் சேர்ந்தவர்களாலேயே காட்டுத்தனமாகத் தாக்கப்பட்டு, தங்களது கனவுகளின் முழுஉருவாக நினைத்திருந்த குழந்தையை தன் மனைவியின் கருவிலேயே இழந்த நிலையில் பித்துப்பிடித்தது போன்ற மனநிலைக்கு ஆளாகி அதனால் காரணமேதுமின்றி ஆர்ப்பாட்டக்காரர்களின் ஒரு முக்கியத் தலைவனான ஜேயை விரட்டித் தாக்கும் காவல்துறையைச் சேர்ந்தவரின் பாத்திரம் படத்தில் உளவியல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது. மனைவிக்குக் கருச்சிதைவு ஏற்பட்ட நிலையில் விடுமுறை கேட்கும் அவரை விடுமுறை இல்லை என்று வெளிப்படையாகக் கூறாமல் இந்நிலையில் நிலைமையைச் சமாளிக்க ஒவ்வொருவரின் பணியும் தேவைப்படுகிறது என்று கூறி வாயடைக்கும் அதிகாரியின் மீது ஏற்படும் கையாலாகாத கோபமும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தப்படும் குழந்தையின் உருவமும், குழந்தை பற்றிய பேச்சும் ஒரு இனம் புரியாத வெறியை அவரிடம் உருவாக்குகிறது. அந்த வெறியின் காரணமாகவே ஜேயை அவர் காட்டுத்தனமாகத் தாக்குகிறார்.
பின்னர் தன் தவறை உணர்ந்து சிறையில் ஜே இருக்கும் அறைக்கு வந்து அவனிடம் அவர் மன்னிப்புக் கோருவதும் முதலில் தனிமனித ரீதியில் அவர்மேல் இருந்த கோபத்தில் பதில் கூறாதிருந்துவிட்டுப் பின்னர் அவரை அழைத்து அவர்மேல் கோபம் எதுவுமில்லை என்பதையும் உண்மையில் நாம் அனைவருமே கோபப்பட வேண்டியது யார் மற்றும் எதன் மேல் என்பதையும் ‘பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை அழிப்பவர்கள் யாராலும் தொடப்படாமல், யாரிடமும் அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டியதில்லை என்ற நிலையில் உள்ளனர்’ என்ற உரையாடல் மூலம் வெளிப்படுத்தி ‘அதனை எதிர்த்துப் போராடவே நாம் உண்மையில் முடுக்கிவிடப் படவேண்டும், நாம் நிச்சயம் போராட வேண்டும்’ என்று கூறுகிறான். அதன் மூலம் ஜே, தான் எத்தனை யதார்த்தமான அதே சமயத்தில் பக்குவமான தலைவன் என்பதையும் அருமையாக வெளிப்படுத்துகிறான்.
அரசு எந்திரத்துக்கு அடிபணியும் மக்கள் பிரதிநிதி
அரசு என்பது ஒரு எந்திரம். அது எதற்காக உருவாக்கப் பட்டிருக்கிறதோ அதையே செய்யும். அதாவது இங்கு டபிள்யு.டி.ஓ. கூட்டம் பன்னாட்டு மூலதன நிறுவனங்களுக்கு இன்னும் அதிகபட்ச லாபத்தினை ஈட்டுவதற்கு உதவும் முடிவுகளை எடுக்கக் கூட்டப்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டம் எதுவும் கூட்டம் அதன் இலக்கை எட்டுவதைத் தடுத்துவிடாமல் பார்த்து கொள்வதே அரசு எந்திரத்தின் பணி. அதற்காக ஆர்ப்பாட்டக் காரர்களை அடித்து நொறுக்கி அது செவ்வனே நடைபெற உதவுவதே அதன் வேலை. அதனைத் தேவைப்பட்டால் அரக்கத்தனமாகச் செய்து முடிக்கக் கூட அந்த எந்திரம் தயங்காது.
அந்த எந்திரத்தை இயக்குபவர்கள் என்று கூறப்படும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அதன் மேற்கூறிய விருப்பத்திற்கு விரோதமாக எதையும் செய்துவிட முடியாது. இந்த யதார்த்தம் சியாட்டில் நகரத்தலைவருக்கும் அரசு எந்திரத்தின் நிரந்தர அங்கங்களான நிர்வாக மற்றும் காவல்துறைத் தலைமைக்கும் இடையில் முதல் நாள் ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் அது தீர்க்கப்படும் விதம் குறித்த காட்சிகள் மூலம் அருமையாகச் சுருங்கக் கூறி விளங்கவைக்கப்படுகிறது.
சியாட்டில் நகரத் தலைவர் தான் ஆர்ப்பாட்டக் காரர்களுக்கு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற குறிப்பாக தேசியப் பாதுகாப்புப் படையை ஈடுபடுத்துவதை எதிர்க்கிறார். அதற்காக அவர் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் எவ்வாறு மிகச் சாதாரணமாக முறியடிக்கப்பட்டு அவர் அரசு எந்திரத்தின் வழிக்குக் கொண்டுவரப்படுகிறார் என்பது தத்ரூபமாக அதாவது ஜனநாயகம் எனக் கூறப்படுவது எத்தனை மோசடி என்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் விதத்தில் படம்பிடித்துக்காட்டப் பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் அவ்வப்போது எழும் கோபதாபங்கள், கருத்து வேறுபாடுகள் அனைத்தும் உயர்ந்த குறிக்கோள் மற்றும் போராட்டம் உருவாக்கும் தியாக உணர்வு ஆகியவற்றால் அதாகவே சரியாகிவிடும் விதம் மிகப் பொருத்தமான விதத்தில் சிறிதும் மிகைப்படுத்துதல் இல்லாத காட்சிகள் மூலம் அருமையாக மனதில் பதிக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால் சியாட்டில் நகரில் நடந்த ஆர்ப்பாட்டம் டபிள்யு.டி.ஓ. அடுத்து ஜெனோவா, தோகா போன்ற பல நகர்களில் நடத்திய அனைத்துக் கூட்டங்களும் எதிர்கொள்ள நேர்ந்த சங்கிலித் தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கான கதவுகளைத் திறந்துவிட்டது. சியாட்டில் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் தான் அமெரிக்கா ஈராக்கின் மீது தொடுத்த ஆக்கிரமிப்புப் போருக்கெதிரான உலகைக் குலுக்கிய பல ஆர்ப்பாட்டங்களும் நடந்தன.
அதைப்போல் சியாட்டில் இயக்கத்தை உரிய முறையில் சிறப்புடன் மக்கள் முன் கொண்டுவந்த இத்திரைப்படம் ஒரு இயக்க ஆதரவு மனநிலையை, இயக்கங்களில் நம்பிக்கை ஏற்படுத்தும் போக்கை, இயக்கங்கள் மூலம் மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்ற உற்சாகத்தை, ஜனநாயகம், மனித உரிமை என்ற அனைத்தும் ஆளும் வர்க்கம் புனையும் வேசம் என்ற புரிதலை, இயக்கம் மிக உன்னத உறவுகளை உருவாக்க வல்லது என்ற உணர்வை பார்ப்பவர் மனங்களில் நிரப்பும் விதத்தில் அவர்களின் மனக் கதவுகளைத் திறந்து விடுகிறது.
- ஆனந்தன்