ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தன்னுடைய கட்சி விதிகளில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய சமூக நீதிக் கொள்கையை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என்று மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன தலைவர்கள் அந்த தீர்மானத்தை தோற்கடித்ததன் காரணமாக பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரியார் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டைகளை தூக்கி கொண்டு ஊர் ஊராக விற்பனை செய்தவர் தான், கள்ளுண்ணாமை என்ற கொள்கையை ஆதரித்து தன் தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தியவர் தான் பெரியார், கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை ஈரோட்டில் இந்தியாவே வியக்கும் அளவுக்கு நடத்தி முடித்தவர் தான் பெரியார், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்குப் பிறகு அதன் காந்தியக் கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்.  கதர் என்ற கொள்கை அறிவியலுக்கு எதிரான கொள்கை என்றும் மதுவிலக்கு கொள்கை என்பது காலத்தால் பின்பற்ற முடியாத அறிவியலுக்கு எதிரானது என்றும் இது சமூக மாற்றத்திற்குப் பயன்படாது என்றும் கடுமையாக எதிர்த்தார். மதுவிலக்கு, கதர், ஆதாரக் கல்வித் திட்டங்களை எதிர்த்தார்.

இப்போது ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தனது கட்சி விதிகளில் முக்கியத் திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது, காங்கிரஸ் கட்சியில் ஒருவர் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றால் அவர் மது அருந்தக்கூடாது என்ற விதி இருந்தது. அந்த விதி இப்போது காலத்திற்கு பொருந்தாது என்று கூறி நீக்கியுள்ளது. அதேபோல் கதர் அணிவது கட்டாயம் என்ற காங்கிரஸ் கட்சியின் விதியும் கைவிடப்பட்டு விருப்பமுள்ளவர்கள் அணியலாம் என்ற திருத்தத்தையும் கொண்டு வந்துள்ளது.

மூன்றாவதாக காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்களில் 50 சதவீத இடங்களை பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினருக்கு ஒதுக்க வேண்டும் என்ற திருத்தத்தையும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சர்ஜிவாலா இந்தத் திருத்தத்தை கொண்டு வந்து கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பெரியார் எந்தக் கொள்கைகளுக்காக அன்றைக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து குரல் கொடுத்தாரோ அதே பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டு கட்சியிலே சில திருத்தங்களை கொண்டு வந்திருப்பது தான் வரலாற்றுத் திருப்பம். பெரியார் வெற்றி பெறுகிறார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It