IIT letter 450சமூக நீதிக்கு சாவுமணி அடிக்கும் ‘மனுதர்ம’க் கூட்டம் – 2

உயர்கல்வியில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்வதற்கான சட்டத்திருத்தம் வந்தபோது, இடஒதுக்கீடு எதிர்ப்புப் போராட்டக் களமாக இந்த உயர்கல்வி நிறுவனங்கள் மாற்றப்பட்டன. அதற்கெல்லாம் நிர்வாகம் தாராளமான சுதந்திரத்தை வழங்கவே செய்தது. அய்.அய்.டி. வளாகத்துக்குள் மட்டுமல்ல; வெளியே வந்தும் போராடினார்கள். 2006, மே 15 அன்று இடஒதுக்கீட்டை எதிர்த்து, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு, அய்.அய்.டி. மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த அய்.அய்.டி. நிர்வாகம் அனுமதித்தது. அப்போதெல்லாம் மாணவர்களுக்கு அரசியல் தேவையா என்ற கேள்வியை எழுப்புவதற்கு அய்.அய்.டி. ‘அறிவு ஜீவிகள்’ தயாராக இல்லை. அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் வரும்போது மட்டும்தான் இவர்கள் ஆவேசத்துடன் மாணவர்களிடையே பிளவு ஏற்படுத்தக் கூடாது என்றும், அரசியல் நுழையக் கூடாது என்றும் ‘வேதாந்தம்’ பேசுகிறார்கள். இவை மட்டுமா?

மிகக் குறைந்த எண்ணிக்கையில் அய்.அய்.டி.க்குள் காலடி எடுத்து வைக்கும் தலித் மாணவர்கள், அவமதிப்புக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்படுவதும், உயர்ஜாதிப் பேராசிரியர்களால் புறக்கணிக்கப்படுவதும் வழக்கமாகிவிட்டது. இதுவரை 50க்கும் மேற்பட்ட தலித் மாணவர்கள் வளாகத்துக்குள்ளேயும் விடுதிகளிலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்குமுன் ரூர்க்கேலா அய்.அய்.டி. வளாகத்தில் மனிஷ்குமார் என்ற ‘சாமார்’ சாதிப் பிரிவில் பிறந்த (செருப்பு தைக்கும் சமூகம்) மாணவர், வளாகத்துக்குள் பிணமாகக் கிடந்தார். அவரது சாவின் ‘மர்மம்’ அப்படியே நீடிக்கிறது. 2014ஆம் ஆண்டு பம்பாய் அய்.அய்.டி. விடுதியில் அனிஹட் அம்ப்ஹோர் என்ற தலித் மாணவர் மர்மமாக இறந்து கிடந்தார். ஜாதி அவமானத்துக்கு உள்ளாகியே தனது மகன் பிணமானார் என்று பெற்றோர்கள் புகார் தந்தார்கள். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

2000ஆம் ஆண்டில் சென்னை அய்.அய்.டி.-யில் நடந்த ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட வேண்டும். பழங்குடி-தலித் இணையர்களுக்குப் பிறந்த சுஜி என்ற பழங்குடி பெண், 12ஆம் வகுப்பில் ஆந்திராவில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று, மாநில அரசின் விருது பெற்றவர். மாதம் ரூ.17,500 உதவித் தொகை பெற்று, 4 ஆண்டு பொறியியல் படிப்பை முடிக்க முடியும். ஆந்திராவிலே தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் சேர்ந்து படிக்க அழைப்பு விடுத்தும்கூட, அந்தப் பெண், சென்னை அய்.அய்.டி.யிலேயே படிக்க விரும்பினார். (பொதுவாக அய்.அய்.டி.களில் மாணவர்கள் சேர்க்கை தான் அதிகம் இருக்கும்.

மாணவிகள் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே சேர்க்கப்படுகிறார்கள். இதிலும்கூட மனுதர்மக் கொள்கைதான்) தலித் மாணவர் என்றால் அவர்களுக்காக ஓராண்டு கூடுதல் படிப்பு. அதற்குப் பெயர் ‘தயாரிப்புப் பயிற்சி’. மாநிலத்திலே முதலிடம் பெற்ற மாணவியாக இருந்தாலும்கூட தலித் என்றால் அவருக்கும் தனிப்பயிற்சி கட்டாயம். இயற்பியல் (Physics) மிகச் சிறந்த அறிவு பெற்றவர் சுஜி. தனிப் பயிற்சி வகுப்பில் டாக்டர் எம்.வி. சத்யநாராயணன் என்ற பார்ப்பனப் பேராசிரியர், வகுப்பில் இயற்பியல் தொடர்பாக ஒரு பாடத்தில் தடுமாறிக் கொண்டிருந்தபோது, மாணவி சுஜி, பேராசிரியர் பாடத்தில் செய்த தவறை திருத்தினார். அவ்வளவுதான்.

தனக்கு அவமானம் நேர்ந்து விட்டதாகக் கருதிய அந்த பேராசிரியர், அந்த மாணவியை தனிப் பயிற்சி தேர்விலேயே தோல்வியைத் தழுவச் செய்தார். அதிர்ச்சியுற்ற மாணவியின் பெற்றோர்கள், அப் போது அய்.அய்.டி. எதிர்ப்புப் போராட்டக்களத்தில் நின்ற பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் என்னை (விடுதலை இராசேந்திரன்) இல்லத்தில் சந்தித்து, கண்ணீர் விட்டனர். உடனேகளத்தில் இறங்கினோம்.

பெரியார் திராவிடர் கழகம் பல்லாயிரக்கணக்கில் சுவரொட்டிகள் அச்சடித்து, அதன் வழியாக இந்த அநீதியை சென்னை நகரம் முழுதும் மக்களிடையே கொண்டு சென்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம். அய்.அய்.டி. வளாக வாயிலிலேயே பொதுக் கூட்டம் நடத்தி, நிர்வாகத்தின் முறை கேடுகளை அம்பலப்படுத்தினோம். தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அய்.அய்.டி.யிடம் விளக்கம் கேட்டது.

தேசிய - தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையத்தின் சார்பில் அதன் உதவி இயக்குனர் ஏ.சத்ய நாராயணன், 8.6.2000 அன்று சென்னை அய்.அய்.டி. இயக்குனர் நடராஜனுக்கு ஒரு தாக்கீது அனுப்பினார். அதில், “தயாரிப்புப் பயிற்சியில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள பழங்குடிப் பிரிவு மாணவி சுஜியின் விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். அல்லது மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். இதை செய்து முடித்த பிறகே அதிகாரபூர்வ தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். அதுவரை இப்போது வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று அந்த தாக்கீதில் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டது. பெரியார் திராவிடர் கழகம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றி இது.

அய்.அய்.டி.க்கு எதிரான போராட்டங்கள் எதையும், தமிழ்நாட்டின் ஆங்கில-தமிழ் நாளேடுகள் இருட்டடித்தன. அய்.அய்.டி. நிர்வாகம் பத்திரிகைகளோடு நெருக்கமான தொடர்புகொண்டு, செய்திகள் வராமல் பார்த்துக் கொண்டது. மறைந்த பேராசிரியர் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன், ‘எக்னாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’யில் இது பற்றி எழுதினார். ‘ஸ்டேட்ஸ்மேன்’, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேடுகள் மட்டும் துணிந்து சுஜி பழிவாங்கப்பட்ட செய்திகளை வெளியிட்டன. (அதற்காக, அந்த ஏடுகளின் செய்தியாளர்கள் முறையே ஜெயா மேனன் மற்றும் பகவான் சிங் மீதும் அந்த ஏடுகளின் நிர்வாகத்தின் மீதும் அய்.அய்.டி. இயக்குனர் அவதூறு வழக்கு தொடர்ந்தார்) இவ்வளவு போராட்டத்துக்குப் பிறகு அய்.அய்.டி. நிர்வாகம், அதன் வரலாற்றிலேயே முதன் முதலாக தலித் மாணவியை தோல்வி அடையச் செய்த தனது அநீதியான முடிவை திரும்பப் பெற முன் வந்தது. சுஜி, தொடர்ந்து படித்தாலும் அவரால் கல்வியை அங்கே தொடர முடியவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன், அனுப்குமார் எனும் மாணவர், ‘அய்.அய்.டி.’களில் ஜாதியம் குறித்து நேரடி விசாரணை நடத்தி, ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். இதேபோன்று பல்கலைக்கழக நிதிக்குழுவின் முன்னாள் தலைவர் சுகதேவ் தோரட். நேரடி ஆய்வுகளை நடத்தி, 72 சதவீத தலித் மாணவர்கள் புறக்கணிப்புக்கும் அவமானத்துக்கும் உள்ளாகிறார்கள் என்பதை வெளிச்சப்படுத்தினார் (டைம்ஸ் ஆப் இந்தியா, செப்.2014).

சில மாதங்களுக்கு முன், ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஒருவர், மனித வளத்துறைக்கு எழுதிய கடிதத்தை அந்த அமைச்சகம் அனைத்து அய்.அய்.டி.களுக்கும் நகல் எடுத்து அனுப்பி, அதன் பேரில் விளக்கம் கேட்டது. சைவம், அசைவம் சாப்பிடுகிற மாணவர்களை, ஒரே இடத்தில் உணவருந்த அய்.அய்.டி. அனுமதிப்பதாக அந்த ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கடிதத்தில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சென்னை அய்.அய்.டி., உடனே இதற்கு பதில் எழுதியது. சைவ, அசைவ உணவுகள் ஒரே உணவு கூடத்தில் சாப்பிட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அய்.அய்.டி. தந்த பதில். சென்னை அய்.அய்.டி.யின் இணையதளம் உணவு விடுதிகள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளது. இதன்படி 15 மாணவர் விடுதிகளும் இரண்டு மாணவியர் விடுதிகளும் இவற்றிற்கு 6 உணவுக் கூடங்களும் செயல்படுகின்றன. இதில் அய்ந்து உணவுக் கூடங்கள் (பெண்கள் உணவுக் கூடங்களும் சேர்த்து) தனியார் நடத்துபவை.

ஒரு உணவுக் கூடத்தை அய்.அய்.டி. நிர்வாகமே நடத்துகிறது. இது தவிர, பல்வேறு உணவகங்கள் ஒரே இடத்தில் செயல்படும் உணவுக் கூடமும் (Food Court) உண்டு. அனைத்து உணவுக் கூடங்களிலும் அசைவ உணவுகள் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன. சைவ உணவு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சைவத்திலேயே சமண மதத்தினருக்கு மட்டும் தனி சமையல் கூடம். அசைவ உணவை விரும்பும் மாணவர்கள் வெளியிலிருந்து எடுத்து வந்து வளாகத்துக்குள் சாப்பிடலாம் என்ற அனுமதி மட்டும் இருக்கிறது. இதுவும் எந்த நேரத்திலும் பறிக்கப்பட்டுவிடலாம் என்று அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்ட மாணவர்கள் தங்கள் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

நவீன தொழில்நுட்பக் கல்வி வளாகம் ஒன்று - அதுவும் வெகு மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறிக் கொண்டு வெகுமக்கள் உணவு முறைக்குதடை போடுகிறது. இவர்கள் படித்த உடனேயே சைவ-அசைவ உணவு வேறுபாடுகள் ஏதுமற்ற - வெளிநாடுகளுக்கு வேலைக்குப் போகக் காத்துக்கிடப்பவர்கள். அத்தகைய வளாகத்துக்குள்ளேயே ‘அசைவ’ உணவு வெறுப்புக்கும் தடைக்கும் உள்ளாக்கப்படுகிறது. உழைக்கும் மக்களின் உணவுக் கலாச்சாரமே இங்கு அவமதிக்கப்படுகிறது. இதற்குப் பெயர் கல்வி வளாகமா அல்லது சங்கர மடமா? என்று கேட்க வேண்டியிருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்தப் பிறகு, ஒவ்வொரு துறையின் பெயர் பலகையும் சமஸ்கிருதமாக்கப்பட்ட இந்தி மொழிகளிலேயே மாற்றப்பட்டுள்ளன. இந்தி தெரிந்த மாணவர்களால்கூட இதைப் படிக்க இயலவில்லை என்று தொலைக்காட்சி விவாதங்களில் அய்.அய்.டி. மாணவர் கூறுகின்றனர். நாடாளுமன்ற தோதலுக்கு முன்பு காங்கிரசின் பொருளாதாரக் கொள்கையை கடுமையாக விமர்சிக்கும் கருத்தரங்குகளை அய்.அய்.டி. நிர்வாகமே ஏற்பாடு செய்தது. குருமூர்த்தி, அரவிந்த் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ். ஊதுகுழல்களை அய்.அய்.டி. நிர்வாகம் பேச வைத்து, மோடிக்கு மறைமுக ஆதரவைத் திரட்டியது என்ற செய்தியை மாணவர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கூறினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் ‘ஷாகாக்களும்’ அய்.அய்.டி.யில் அனுமதிக்கப்படுவதோடு, ‘அரே ராமா அரே கிருஷ்ணா’ அமைப்பும் அதற்குரிய ‘பூணூல்-குடுமி’ அடையாளங்களோடு வலம் வருகின்றன.

அய்.அய்.டி. தொடங்கியது முதல் இயக்குனர்களாக பி.வி. இந்திரேசன், எல்.எஸ். சிறீநாத், என்.வி.சி. சாமி, ஆர்.நடராஜன், அனந்த் என்று தொடங்கி, பாஸ்கர் இராமமூர்த்தி வரை பார்ப்பனர்கள் மட்டுமே தொடருகின்றனர். இவர்களின் ‘சாம்ராஜ்யத்தில்’ பதவி நியமனங்களில் வெளிப்படைத் தன்மை ஏதும் பின்பற்றாமல், கொல்லைப்புற வழிகளில் ‘அட்ஹாக்’ நியமன முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஏடுகளில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதும் இல்லை. இந்த முறைகேடுகளை எதிர்த்து, ஏராளமான வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் குவிந்து கிடக்கின்றன.

ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் நாடாளுமன்ற சட்டத்தின் வழியாக உருவாக்கப்பட்ட, இந்த நிறுவனங்கள் பெற்றுள்ள சுயாட்சி உரிமைகள் முறைகேடாகவே பயன்படுத்தப்படுகின்றன. சென்னை அய்.அய்.டி., அதிகாரக் குவியல்களை சட்டப்பூர்வமாக்கி, அதற்கேற்ற திருத்தங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அய்.அய்.டி. சட்டத்தின் 13(5)ஆவது பிரிவு ஒரு பேராசிரியரையோ ஊழியரையோ விளக்கம் ஏதும் கேட்காமலே பதவி நீக்கம் செய்ய முடியும். பிரிவு 12(1) - நியமனங்களுக்கான விளம்பரத்தை வெளியிடாமல், இயக்குனர் பரிந்துரையை ஏற்று நிர்வாகக் குழுவே நியமனம் செய்ய முடியும் என்ற உரிமையை வழங்குகிறது. அதுமட்டுமின்றி தற்போதுள்ள சட்டங்களையே மாற்றியமைக்கவும், உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், இயக்குனருக்கு அதிகாரம் அளிக்கப்1பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தங்களுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்ற சட்ட நடைமுறை பின்பற்றப்படாமல், அனைத்தையும் புறந்தள்ளி, ‘மனுதர்ம’ ஆட்சியை அங்கே நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில், இயக்கங்கள் நடத்திய போராட்டங்களால் அம்பேத்கர்- பெரியார் படிப்பு வட்டத்தின் மீதான தடை நீங்கியிருக்கிறது. ஆனால், அம்பேத்கரும்-பெரியாரும் வலியுறுத்திய ‘சமூகநீதி’ அய்.அய்.டி.க்குள் நுழையுமா? அதற்கு அனுமதிப்பார்களா? மக்கள் வரிப்பணத்தில் பல்லாயிரம் கோடியை விழுங்கி மக்களுக்கே பயன்படாத இருந்த அய்.அய்.டி.களை இழுத்து மூடிவிட்டு இந்தப் பணத்தில் பல நூறு “அய்.டி.அய்.”கள் (சிறு தொழில் பயிற்சி நிறுவனங்கள்) உருவாக்கினாலேயே, அது வெகு மக்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக இருக்கும்.

Pin It