சிவகெங்கை எஸ்டேட்டிலுள்ள சுமார் 600 கோவில்களையும் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் திறந்து விடுவதென்று சிவகங்கை மன்னர் முடிவு செய்திருப்பதாகச் செய்தி கிடைத்திருக்கிறது. நல்ல முடிவுதான்!

kuthoosi gurusamy 300திராவிடக் குறுநில மன்னர் ஒருவர் துணிவு கொண்டு இம்மாதிரி முடிவு செய்திருப்பது தமிழர்களுக்கே பெருமை என்று கூடக் கூறலாம்.

சிவகங்கைப் பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு வார்த்தை! “கோவிலுக்குள் நுழையப் போகிறீர்களா? போங்கள்! கோவிலை “விபசார விடுதி” என்று கூறியிருக்கிறார், தோழர் காந்தியார். “கள்வர் குகை” என்று கூறியிருக்கிறார், ஏசுநாதர். “அறிவைப் பறிமுதல் செய்யும் ஆரியர் கோட்டை,” என்கிறார், பெரியார். ஆகையால் உங்கள் அறிவு ஜாக்கிரதை! பணமுடிச்சு ஜாக்கிரதை! கிண்டி குதிரைப் பந்தயத்திற்குச் சென்னையிலிருந்து ரயில் வழியாகப் போகிறவர்கள், “ரிட்டர்ன் டிக்கெட்” வாங்கிப் போவதுண்டு. ஏன் தெரியுமா? திரும்பி வர வேண்டுமே, அதற்காக. அதைப்போல நீங்களும் உங்கள் மணிபர்ஸை (ஒரு வேளை இரண்டொருவருக்கு இருந்தால்) வீட்டில் வைத்து விட்டுப் போங்கள்! பண முடிச்சும் பத்திரம் திருடர்கள் கத்திரித்து விடுவார்கள்! அதிகாரத் திருடர்கள் கேட்டு வாங்கி விடுவார்கள்!

அது மட்டுமல்ல; பெரிய பெரிய புத்திசாலிகளை யெல்லாம் மண்டியிடச் செய்யும் இடம், அது! உலகப் புகழ்பெற்ற அரசியல் நிபுணர்களைக் கூடத் தலை வணங்கச் செய்யக்கூடிய திமிங்கிலங்கள் உண்டு, கோவிலுக்குள்ளே! உஷார்! ஏமாந்து விடாதீர்கள்! பல பணக்காரர்களை ஓட்டாண்டியாக்கி யிருக்கிறது, கோவில்!

மளமளவென்று எல்லா இடங்களுக்கும் போங்கள்! கண்காட்சிகளைப் பார்ப்பதுபோல எல்லாச் சிலைகளையும், வாகனங்களையும், தட்டு முட்டு சாமான்களையும் பார்த்து விடுங்கள்! சிலைகளையும் வாகனங்களையும் தொட்டுப் பார்க்க வேண்டுமென்று ஆசையிருக்குமே! இயற்கைதானே! ஆஹா! பேஷாய்த் தொட்டுப் பாருங்கள்! பரவாயில்லை! ஆனால் எங்கேயும் அசுத்தப்படுத்தாதீர்கள்! அந்த வேலையை மடப்பள்ளிப் பெருச்சாளிகளுக்கும் அர்ச்சகப் பூனைகளுக்குமே விட்டு விடுங்கள்! உங்களுக்குத் தெரியாத எதையாவது கூறினால் மானமற்ற இதர மக்கள் செய்வது மாதிரி ஊமையாய் நிற்காமல், ‘தமிழிலே சொல்லித் தொலையேண்டா! அதுதானே முதலாவது பாஷை என்று மந்திரி அவனாசிலிங்கஞ் செட்டியார் கூட உத்தரவு போட்டிருக்கிறார்,” என்று கன்னத்தில் அறைவது மாதிரிக் கேளுங்கள்.

கடைசியாக ஒரு விஷயம்! ஒரே நாளில் எல்லாவற்றையும் பார்த்து விட்ட பிறகு, மீண்டும் சும்மா - சும்மா, உள்ளே போகதீர்கள்! “விபசார விடுதியில் நமக்கென்ன வேலை” என்று காந்தியார் கேட்பார்.

இதெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தரும் எச்சரிக்கை. இனி, பரந்த மனங்கொண்ட ராஜாவுக்கும் ஒரு விஷயம் கூற வேண்டியிருக்கிறது.

“ராஜா அவர்களே! தாழ்த்தப்பட்டவர்களை நீங்கள் உயர்த்தி விட்டீர்கள், கோவிலைப் பொறுத்த மட்டிலாவது இனித் தங்களை “உயர்த்திக்” கொள்ள வேண்டாமா? எப்போது. நாளேயே புறப்படுங்கள்! உற்றார், உறவினரோடு மூல விக்கிரகம் உள்ள இருட்டறைக்கும் போங்கள்! போகும்போது “எலெக்டிரிக் டார்ச் எடுத்துச் செல்லுங்கள், மறந்துவிடாமல்! கீழே அர்ச்சகர் வெற்றிலை பாக்குத் துப்பியிருப்பார்! மூலையில் வாழைப்பழத் தோல் கிடக்கும்! கரப்பாம் பூச்சிகள் நட மாடும். பெருச்சாளிகள் சப்ளாங்கூடு (சடு குடு) விளையாட்டு விளையாடும்! கையில் விசிறியும் இருக்கட்டும்! வேர்த்துக் கொட்டும்! மூலவர் மீதுள்ள துணியைத் தொட்டு விடாதீர்கள்! ஜாக்கிரதை! ஏன் தெரியுமா?” “தீட்டுப்பட்டு விடும்” என்பார், அர்ச்சகர். சோப் போட்டுக் கையைக் கழுவ வேண்டுமே, தாங்கள் என்கிறேன், நான்!

அதோ மூலையில் இருக்கிறதே, “டிபன் காரியர்” அதைத் திறந்து பார்த்து விடாதீர்கள்! அதில் அர்ச்சகர் திருடி வைத்திருக்கும் உணவுப் பொருள்கள் இருக்கின்றன! பிறகு தங்களுக்கு அவர் மீது கோபம் வரும்! அடே மறந்து போனேனே! அதைத் தொடுவதற்கு விடுவாரா, அர்ச்சகர்?

இந்த மாதிரி சத்தியாக்கிரக மேற்பார்வை முடிந்து வீட்டுக்கு வந்ததும் தங்களுக்கு ஒரு மாதிரியான துணிவும் அறிவும் உதயமாகும். உடனே தங்கள் சுற்றத்தாரில் ஒருவரையே அர்ச்சகர் வேலையில் போடுங்கள்! தமிழிலேயே அர்ச்சனை செய்யச் சொல்லுங்கள் (தாய் மொழி முதலாவது மொழி என நம் மந்திரியார் கூறி யிருப்பது நினைவிருக்கட்டும்)

இவைகளை யெல்லாம் செய்து விட்டீர்களானால் கோவிலைப் பொறுத்த வரையிலாவது தாங்கள் ஓரளவு சமஉரிமை பெற்றவர்கள் எனக் கூறுவேன். அது வரையில் தாங்களும் ஒரு வகையில் தீண்டப்படாதவர் தானே!

(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)

நன்றி: வாலாசா வல்லவன்

Pin It