இதுவரை கூறியவற்றிலிருந்து தெளிவாகியிருக்கும் இரண்டு விஷயங்களை மனத்தில் கொள்ள வேண்டும். ஒன்று, தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த பிளவு; இன்னொன்று இவ்விரு பிரிவினருக்கும் இடையில் உள்ள ஆழ்ந்த பகைமை.

ambedkar 250 copyஒவ்வொரு கிராமத்திலும் இரண்டு பகுதிகள் உள்ளன தீண்டத்தக்கவர்கள் வசிக்கும் பகுதி, தீண்டப்படாதவர்கள் வசிக்கும் பகுதி. இந்தப் பகுதிகள் அமைந்துள்ள நிலப்பகுதிகள் தனித்தனியாக உள்ளன. இரண்டுக்கும் இடையே கணிசமான தூரம் இருக்கும். எப்படியானாலும் இரண்டு பகுதிகளும் ஒன்றையொன்று அடுத்து அல்லது அருகருகே இருப்பதில்லை. தீண்டப்படாதவர்கள் வசிக்கும் பகுதிக்குத் தனியாக ஒரு பெயர் – மாஹர்வாடா, மாங்க்வாடா, சம்ரோத்தி, காட்கானா என்பது போல இருக்கிறது. சட்டப்படி வருவாய்த்துறை நிர்வாகம், அஞ்சல் தொடர்பு ஆகியவற்றுக்குத் தீண்டப்படாதவர்கள் வசிக்கும் பகுதி கிராமத்தில் அடங்கியதாகவே உள்ளது. ஆனால், உண்மை நடைமுறையில், அது கிராமத்திலிருந்து தனிப்பட்டதாகும். ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்து, தன் கிராமம் என்று பேசும்போது அதனுடைய சாதி இந்துக்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் மட்டுமே அவர் குறிப்பிடுகிறார். இதேபோல தீண்டப்படாதவர் ஒருவர், கிராமம் என்று கூறும்போது தீண்டப்படாதவர்களையும் அவர்கள் வசிக்கும் பகுதியையும் விலக்கியே குறிப்பிடுகிறார். இவ்வாறாக ஒவ்வொரு கிராமத்திலும் தீண்டத்தக்கவர்களும் தீண்டப்படாதவர்களும் இரண்டு தனித்தனிக் குழுக்களாகவே உள்ளனர். அவர்களிடையே பொதுவாக ஒன்றும் இல்லை1. இவர்கள் ஒரே மக்கள் தொகுதியாக இல்லை. இது தான் முதலாவதாகக் கருத்தில் கொள்ள வேண்டியது.

 கிராமம் இரண்டு குழுக்களாகப் பிரிந்து அமைந்துள்ளதில் கவனிக்க வேண்டிய இரண்டாவது விஷயம், இந்தக் குழுக்கள் உண்மையிலேயே குழும அமைப்புகளாகவும் இவற்றில் உள்ளவர்கள் இவற்றை விட்டு வெளியே செல்ல முடியாதவர்களாகவும் இருப்பதாகும். ஒரு அமெரிக்கர் அல்லது ஐரோப்பியர் பல்வேறு வகையான குழுக்களைச் சேர்ந்தவராக உள்ளார் என்றும், ஆனால் இவற்றில் பெரும்பாலானவற்றில் அவர் தாமே சென்று “சேருகிறார்” என்றும் பொருத்தமாகக் கூறப்பட்டுள்ளது. அவர் ஒரு குடும்பத்தில் பிறக்கிறார் என்பது உண்மை என்றாலும், அவர் தாமே விரும்பினலான்றி ஆயுட்காலம் முழுவதும் அந்தக் குடும்பத்திலேயே இருந்துவிடுவதில்லை. அவர் தமது விருப்பப்படி தம்முடைய தொழில், வசிக்குமிடம், மனைவி, அரசியல் கட்சி ஆகியவற்றைத் தெரிந்தெடுத்துக் கொள்ளலாம்.

பொதுவாகச் சொன்னால், அவர் தம்முடைய செயல்களைத் தவிர வேறு யாருடைய செயல்களுக்கும் பொறுப்பாளியல்ல. அவர் ஒரு “தனி நபர்” என்று கூறுவதில் அதிகப் பொருள் உள்ளது; ஏனென்றால் அவருடைய எல்லா உறவுகளையும் அவர் தாமே, தமக்காகவே முடிவு செய்கிறார் தீண்டப்படாதவரோ, தீண்டத்தக்கவரோ எந்த வகையிலும் தனி நபர்கள் அல்ல. ஏனென்றால் அவருடைய எல்லா உறவுகளும் அல்லது அநேகமாக எல்லா உறவுகளும், அவர் ஒரு குறிப்பிட்ட குழுவில் பிறந்தவுடனேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. அவருடைய தொழில், வசிக்குமிடம், கடவுள்கள், அரசியல் ஆகிய எல்லாமே அவருக்காக அவரது குழுவால் தீர்மானிக்கப்படுகின்றன. தீண்டத்தக்கவர்களும் தீண்டப்படாதவர்களும் சந்திக்கும்போது, அவர்கள் மனிதருடன் மனிதர் அல்லது தனி நபருடன் தனி நபர் என்ற முறையில் சந்திப்பதில்லை. குழுக்களின் உறுப்பிர்களாக அல்லது இரண்டு தனி நாடுகளின் குடிமக்கள் போலத்தான் சந்திக்கிறார்கள்.

ஒரு கிராமத்தின் தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையிலான உறவில் இந்த உண்மை முக்கியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆரம்பகாலச் சமுதாயத்தில் பல்வேறு குலக் குழுக்களுக்கிடையே இருந்த உறவைப் போல இந்த உறவு காணப்படுகிறது. ஆரம்பகாலச் சமுதாயத்தில் குலக்குழுவின் உறுப்பினருக்கு அதில் ஓர் உரிமை உண்டு, ஆனால் வெளியாருக்கு அதில் எந்தவிதமான இடமும் கிடையாது. அவர் அன்பாக, விருந்தினராக நடத்தப்படலாம்; ஆனால் தம்முடைய சொந்த குலக்குழுவைத் தவிர வேறு எதிலும் அவர் “நீதி”யை உரிமையாகக் கோரமுடியாது.

ஒரு குலக்குழுவுக்கும் மற்றொரு குலக்குழுவுக்கும் இடையிலான உறவு நிலை, போர் அல்லது பேச்சுவார்த்தை மூலமே முடிவாகிறது; சட்ட அடிப்படையிலான உறவு நிலை என்பது கிடையாது. குலக்குழு இல்லாதவன் நடைமுறையிலும் பெயரிலும் சட்டத்துக்குப் புறம்பானவன். எனவே அன்னியர்களுக்கெதிரான சட்டவிரோதச் செயல்கள் சட்டபூர்வமாகின்றன. தீண்டப்படாதவர், தீண்டத்தக்கவர்கள் குழுவைச் சேர்ந்தவர் அல்ல என்பதால் அவர் ஓர் அன்னியர். அவர் ஒட்டுறவு உள்ளவர் அல்ல. அவர் சட்டத்துக்குப் புறம்பானவர். அவர் நீதி கேட்க முடியாது. தீண்டத்தக்கவர் மதிக்கக் கடமைப்பட்ட உரிமைகள் எதையும் அவர் கோரமுடியாது.

மூன்றாவதாகக் கவனிக்க வேண்டிய விஷயம், தீண்டத்தக்கவர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் இடையிலான உறவு இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தீர்மானித்து வைக்கப்பட்டுள்ளது. அது அந்தஸ்தைக் குறிக்கும் விஷயமாக உள்ளது. இந்த அந்தஸ்தின்படி, தீண்டப்படாதவர்களுக்குத் தீண்டத்தக்கவர்களை விடத் தாழ்வான நிலை சந்தேகத்துக்கிடமில்லாமல் தரப்பட்டுள்ளது. இந்தத் தாழ்வான அந்தஸ்தை வலியுறுத்துவதாகவே சமூக நடத்தை நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நெறிமுறைப்படிதான் தீண்டப்படாதவர்கள் நடந்து கொள்ளவேண்டும். இது எப்படிப்பட்ட நெறிமுறை என்பது ஏற்கெனவே விவரிக்கப்பட்டுள்ளது. தீண்டப்படாதவர் இந்த நெறிமுறைப்படி நடக்க விரும்பவில்லை. சீசருக்கு உரியதை சீசருக்குக் கொடுக்க அவர் தயாராயில்லை.

தீண்டத்தக்கவருடன் தம்முடைய உறவுகள் ஒப்பந்த அடிப்படையில் இருக்கவேண்டும் என்ற தீண்டப்படாதவர் விரும்புகிறார். ஆனால் தீண்டப்படாதவர்கள் இந்த அந்தஸ்து விதிகளின்படியே நடக்கவேண்டும் என்றும், அதைவிட மேல்நிலைக்குச் செல்லக்கூடாது என்றும் தீண்டத்தக்கவர் விரும்புகிறார். இவ்வாறாக, என்றென்றைக்குமாகத் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்று தீண்டத்தக்கவர் கருதுகின்ற ஒரு விஷயத்தை, மீண்டும் தீர்மானிப்பதில், கிராமத்தின் இரண்டு பகுதிகளான தீண்டத்தக்கவர்களும் தீண்டப்படாதவர்களும் இப்போது போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் மையமான கேள்வி இதுதான் – இந்த உறவு எந்த அடிப்படையில் இருக்கவேண்டும்? ஒப்பந்த அடிப்படையிலா அல்லது அந்தஸ்து அடிப்படையிலா?

இதிலிருந்து சில சுவாரஸ்யமான கேள்விகள் எழுகின்றன. தீண்டப்படாதவர்களுக்கு இவ்வாறு மிகத் தாழ்ந்த அந்தஸ்து எப்படி வந்தது? தீண்டப்படாதவர்களிடம் இத்தகைய பகைமையும் இழிப்பும் இந்துவிடம் எவ்வாறு ஏற்பட்டன? தீண்டப்படாதவர்களை ஒடுக்குவதற்குச் சட்டவிரோதச் செயல்களே சட்டபூர்வமானது என்பது போல சட்டவிரோதச் செயல்களில் அவர் ஏன் ஈடுபடுகிறார்?

இந்தக் கேள்விக்குச் சரியான விடை அளிப்பதற்கு இந்துக்களின் சட்டத்தைப் பார்க்கவேண்டும். இந்துச் சட்டத்தின் விதிகள் பற்றிய அறிவு இல்லாமல் இந்தக் கேள்விக்குத் திருப்தியான விடை கூறமுடியாது. நமது நோக்கத்திற்கு இந்துச் சட்டத்தின் எல்லாப் பிரிவுகளையும் பார்கக வேண்டியதில்லை. இந்துச் சட்டத்தில் நபர்களின் சட்டம் என்று கூறக்கூடியதான பிரிவை மட்டும் தெரிந்துகொண்டால் போதும். இந்தப் பிரிவை எளிமையான சொற்களில் கூறினால், அந்தஸ்து வேறுபாடு காரணமாக மனிதர்களிடையே உரிமை, கடமை, இயங்குதல் ஆகியவற்றில் உள்ள வேறுபாடுகளைக் கூறும் சட்டம் என்று கூறலாம்.

எனவே, நபர்கள் பற்றிய இந்துச் சட்டத்தின் விதிகளின் பட்டியல் ஒன்று தரப்படும். இந்த விதிகள், மனு, யாக்ஞவல்கியர், நாரதர், விஷ்ணு, காத்யாயனர் முதலானவர்களின் சட்டப் புத்தகங்களிலிருந்து தொகுத்துத் தரப்படுகின்றன. சட்டம் விதிப்பதற்கு அதிகாரம் உள்ளவர்கள் என்று இந்துக்களால் ஏற்கப்படும் சட்ட நூல் ஆசிரியர்களில் முக்கியமானவர்களில் இவர்கள் சிலராவார்கள். இந்த விதிகளை அப்படியே எடுத்துக் கொடுத்தால், நபர்கள் பற்றிய இந்துச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைப் படிப்பவர் தெரிந்து கொள்ள உதவியாயிராது. அதற்கு இவற்றை ஏதேனும் வகையில் வரிசைப்படுத்தித் தரவேண்டும். எனவே, இந்த விதிகளைப் பல பிரிவுகளின் கீழ், ஒவ்வொரு பிரிவும் ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றியதாக இருக்குமாறு தொகுத்துத் தருகிறேன்.

 வெவ்வேறு வகுப்புகள்: அவற்றின் தோற்றமும் கடமைகளும்

 • இது (பிரபஞ்சம்) இருள் வடிவமாகவும், உணரப்படாமலும், குறிப்பான அடையாளங்கள் எதுவும் இல்லாமலும், அறிவு வாதத்திற்கு அடங்காததாகவும், அறியமுடியாததாகவும், ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிக் கிடப்பதுபோல, இருந்தது. மனு I.5;
 • பின்பு தெய்விகமான, தானே உள்ளவர் (சுயம்பு) தாம் உணரப்படாதவராக இருந்துகொண்டு (ஆனால்) இவற்றை (எல்லாம்), ஐம்பெரும் பூதங்களையும் மற்றவற்றையும்; உணரக் கூடியதாகச் செய்து கொண்டு, தடுக்க முடியாத (படைப்புச்) சக்தியுடன், இருளை நீக்கிக் கொண்டு, தோன்றினார். மேற்படி I.6
 • ஆனால், உலகங்களின் நலத்துக்காக அவர் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோரைத் தம்முடைய வாய், தோள்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றிலிருந்து தோற்றுவித்தார். மேற்படி I.31;
 • ஆனால், பிரபஞ்சத்தைப் பாதுகாப்பதற்காக, ஒளிமயமான அவர் தமது வாய், தோள்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றிலிருந்து தோன்றியவர்களுக்கு, தனித்தனியான (கடமைகளையும்) தொழில்களையும் அளித்தார்.மேற்படி I.87;
 • பிராமணர்களுக்கு, அவர் (வேதங்களை) ஓதல், ஓதுவித்தல், (வேள்விகளை) தங்களுக்காக இயற்றுதல், பிறருக்காக இயற்றுவித்தல், (பிச்சை) ஈதல், ஏற்றல் என்ற தொழில்களை அளித்தார். மேற்படி I.88
 • சத்திரியர்கள், மக்களைக் காப்பதற்கும், கொடை அளிப்பதற்கும், வேள்வி நடத்துவதற்கும், (வேதங்களை) ஓதுவதற்கும், புலன் இன்பங்களில் பற்றுக் கொள்ளாமலிருப்பதற்கும் அவர் கட்டளையிட்டார். மேற்படி I.89
 • வைசியர்கள், கால்நடை வளர்க்கவும், கொடை அளிக்கவும், வேள்வி நடத்தவும், (வேதம்) ஓதவும், வாணிபம் செய்யவும், லேவாதேவி நடத்தவும், நிலத்தில் பயிர் செய்யவும் படைத்தார். மனு I.90
 • சூத்திரர்களுக்கு இறைவன் ஒரு தொழில் மட்டுமே அளித்தார் இந்த (மற்ற) மூன்று சாதியினருக்கும் அடங்கிப் பணி செய்வதே அது. மேற்படி I.91;
 • மாணாக்கன், தொழில பயில்வோன், ஊதியத்திற்கு அமர்த்தப்பட்ட வேலையான், நான்காவதாக, அதிகாரி ஆகியோர் உழைப்பாளர்களாகக் கருதப்படவேண்டும். அடிமைகள் என்போர் வீட்டில் பிறப்பவர்களும் மற்றவர்களும். நாரதர் V.3;
 • பணியாளர்கள், சட்டத்தின்படி ஐந்து வகை என்று அறிஞர்கள் வகுத்துள்ளனர். (மேலே கூறப்பட்ட) நான்கு வகை உழைப்பாளர்கள் இவர்களில் சேர்ந்தவர்கள். மேற்படி V.2;

பதினைந்து விதமான அடிமைகள் (ஐந்தாம் வகை)

 • (எஜமானனின்) வீட்டில் பிறந்தவன், விலைக்கு வாங்கப்பட்டவன், (தானமாகப்) பெறப்பட்டவன், வாரிசுரிமை உடைமையாகக் கிடைத்தவன், பஞ்சக் காலத்தில் வைத்துப் பராமரிக்கப்பட்டவன், உரிமையாளனால் அடகு வைக்கப்பட்டவன். (மேற்படி V.26)
 • பெரும் கடனிலிருந்து விடுவிக்கப்பட்டவன், சண்டையில் பிடிக்கப்பட்டவன், பந்தயத்தில் வெல்லப்பட்டவன், ‘நான் உன்னுடைமை’ என்று கூறிக்கொண்டு வந்தவன், சன்னியாசத்தைக் கைவிட்டவன், குறிப்பிட்ட காலத்துக்கு அடிமையாக்கப்பட்டவன். மேற்படி V.27
 • தனக்குப் பராமரிப்புப் பெறுவதற்காக அடிமையானவன், அடிமையான பெண்ணுடன் உள்ள தொடர்பு காரணமாக அடிமையாக்கப்பட்டவன், தன்னைத்தானே விற்றவன். இவர்கள் சட்டத்தில் கூறப்பட்ட பதினைந்து விதமான அடிமைகள். மேற்படி V.28;
 • இவர்களில் முதலில் கூறப்பட்ட நான்கு விதமான அடிமைகளை இவர்களின் உடைமையாளர்கள் மனமுவந்து விடுவித்தாலன்றி அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கமுடியாது. இவர்களின் அடிமைநிலை பரம்பரையாகத் தொடர்வது. மேற்படி V.29
 • இவர்கள் அனைவருக்கும் உடைமையாளனைச் சார்ந்திருக்கும் நிலை பொதுவானது. ஆனால் இவர்களுக்குள்ள இடமும் ஒரு வருமானம் பெறுவதும் இவர்களின் சாதியையும் தொழிலையும் பொறுத்தது. மேற்படி V.4.

 சட்டத்தின் முன் சமத்துவம்

 • இரண்டு பேர் ஒருவரையொருவர் வசைமொழி கூறும்போது, அவர்கள் சமமான சாதியினராயிருந்தால் அவர்களின் தண்டனை சமமாயிருக்கும்; அவர்களில் ஒருவன் தாழ்ந்த சாதியாயிருந்தால் அவனுடைய தண்டனை இரண்டு மடங்காகும்; உயர்ந்த சாதியைச் சேர்ந்தவனுக்கு (சாதாரண தண்டனையில்) பாதி விதிக்கப்படும். பிருகஸ்பது XX.5;
 • சத்திரியன் மேல் வசைமொழி கூறும் பிராமணனுக்கு அபராதம் அரை நூறு (ஐம்பது பணம்), வைசியன்மீது வசைமொழி கூறினால் ஐம்பதில் பாதி (இருபத்தைந்து பணம்); சூத்திரன்மீது வசைமொழி கூறினால் பன்னிரண்டரை. (மேற்படி XX.7)
 • தவறு எதுவும் செய்யாத, ஒழுக்கம் உடைய சூத்திரன் மீது (வசைமொழி) கூறியவனுக்குத்தான் இந்தத் தண்டனை விதிக்கப்படுகிறது; ஒழுக்கமில்லாத (சூத்திரன்மீது) வசைமொழி கூறிய பிராமணன்மீது குற்றம் கூறமுடியாது.பிரகஸ்பதி XX.8;
 • சத்திரியன்மீது வசைமொழி கூறிய வைசியனுக்கு நூறு (பணம்) அபராதம் விதிக்கப்படும். வைசியன்மீது வசைமொழி கூறிய சத்திரியன், அதில் பாதித் தொகை அபராதம் செலுத்தவேண்டும். மேற்படி XX.9;
 • சூத்திரன்மீது வசைமொழி கூறிய சத்திரியனுக்கு அபராதம் இருபது பணம்; வைசியனுக்கு அபராதம் இரண்டு மடங்கு என்று சட்டம் அறிந்தோர் அறிவிக்கின்றனர். (மேற்படி XX.10)
 • வைசியன்மீது வசைமொழி கூறிய சூத்திரனுக்கு முதல் அபராதம் விதிக்கப்படும்; சத்திரியன்மீது (வசைமொழி கூறியதற்கு) நடுத்தர அபராதம்; பிராமணன் மீது (வசைமொழி கூறியதற்கு) மிக அதிக அபராதம். மேற்படி XX.11;
 • பிராமணன்மீது அவதூறு கூறிய சத்தியனுக்கு நூறு (பணம்) அபராதம் விதிக்கப்படும்; வைசியனுக்கு நூற்றைம்பது அல்லது இருநூறு; சூத்திரன், தண்டனையாக அடிக்கப்படுவான். மனு VIII.267
 • சத்திரியன்மீது அவதூறு கூறிய பிராமணனுக்கு ஐம்பது (பணம்) அபராதம் விதிக்கப்படும்; வைசியன் (விஷயத்தில்) அபராதம் இருபத்தைந்து பணமாகும்; சூத்திரன் (விஷயத்தில்) பன்னிரண்டு. மேற்படி 268;
 • ஒரு பிறப்பாளன் (சூத்திரன்) ஒருவன், இருபிறப்பாளனைக் கடும் வசைமொழியால் அவமதித்தால் அவனுடைய நாக்கு துண்டிக்கப்படும்; ஏனென்றால், அவன் தாழ்ந்த பிறப்பை உடையவன். ) மேற்படி VIII.270
 • அவன் (இருபிறப்பாளர்களின்) பெயர்களையும் சாதிகளையும் அவமதிப்புடன் கூறினால், பத்து விரல் நீளம் உள்ள, சிவக்கக் காய்ச்சிய இரும்பு ஆணி அவன் வாயில் செலுத்தப்படும். மேற்படி VIII.271;
 • அவன், அகம்பாவத்துடன் பிராமணர்களுக்கு அவர்களுடைய கடமையை அறிவுறுத்தினால், மன்னன் அவன் வாயிலும் காதிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றவேண்டும். மேற்படி VIII.272;
 • பிராமணனும் சத்திரியனும் ஒருவர்மீது ஒருவர் வசைமொழி பேசினால், விவேகமுள்ள (மன்னன்) பிராமணனுக்கு மிகக் குறைந்த அபராதமும், சத்திரியனுக்கு மிகவும் நடுவான அபராதமும் விதிக்கவேண்டும். மேற்படி VIII.276;
 • தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் எந்த உறுப்பினால் (மூன்று) உயர் (சாதிகளைச் சேர்ந்தவனுக்கு) தீங்கு செய்கிறானோ, அந்த உறுப்பு துண்டிக்கப்படும்; இது மனுவின் போதனை. மேற்படி VIII.279;
 • தன் கையை அல்லது கம்பை உயர்த்துகின்ற (தாழ்ந்த சாதிமனிதனான) அவனுடைய கை துண்டிக்கப்படும்; கோபத்தில் பாதத்தால் உதைக்கின்றவனுடைய பாதம் துண்டிக்கப்படும். மேற்படி VIII.280;
 • உயர் சாதி மனிதன் ஒருவனுடன் ஒரே ஆசனத்தில் அமர முயலும் தாழ்ந்த சாதி மனிதனுடைய இடுப்பில் சூடு போடப்பட்டு, அவன் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவான்; அல்லது (மன்னன்) அவனுடைய பிட்டத்தில் வெட்டச் செய்யவேண்டும். மேற்படி VIII.281
 • அகம்பாவத்தினால் அவன் (மேலானவன்மீது) துப்பினால் மன்னன் அவனுடைய இரண்டு உதடுகளையும் வெட்டச் செய்ய வேண்டும்; அவன் (அவன்மீது) சிறுநீர் கழித்தால் அவனுடைய ஆண்குறியை; அவன் (அவன்மீது) அபான வாயு விட்டால், குதத்தை வெட்ட வேண்டும். மனு VIII.282
 • அவன் (மேலானவனுடைய) முடியைப் பிடித்தால், (மன்னன்) தயக்கமின்றி அவனுடைய கையை வெட்டிவிடவேண்டும்; இதேபோல அவன் (அவனுடைய பாதத்தை), தாடியை, கழுத்தை, குறிவிதைகளைப் பிடித்தாலும். மேற்படி VIII.283

 ஒவ்வொரு வகுப்பின் அந்தஸ்து, கௌரவம், இடம்

 • மனிதன் கொப்பூழுக்கு மேல் (கீழே உள்ளதை விட) தூய்மையானவன் என்று கூறப்படுகிறது; எனவே, தானே உள்ளவர் (சுயம்பு) தம்முடைய மிகத் தூய்மையான (பகுதி) தமது வாய் என்று அறிவித்தார். மனு I.92;
 • பிராமணன் வாயிலிருந்து தோன்றியதாலும், அவன் முதலில் பிறந்ததாலும், அவனிடம் வேதம் இருப்பதாலும், அவன் உரிமைப்படி, படைப்பு அனைத்துக்கும் அதிபதியாயிருக்கிறான். மேற்படி I.93;
 • தானே உள்ளவர் (சுயம்பு) தவங்கள் செய்து முதலில் அவனைத் தம் வாயிலிருந்து தோற்றுவித்தார்; அவியாகக் கொடுக்கப்படும் பொருள்கள் தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் சென்று சேருவதற்காகவும் பிரபஞ்சம் பாதுகாப்பாயிருப்பதற்காகவும் இவ்வாறு செய்தார். மேற்படி I.94;
 • யாருடைய வாயின் மூலம் தேவர்கள் வேள்வியில் அளிக்கப்படும் உணவுகளை இடைவிடாது உண்கிறார்களோ, பித்ருக்கள் தங்களுக்கு அளிக்கப்படும் பொருள்களை உண்கிறார்களோ, அவனைவிட உயர்ந்ததாகப், படைக்கப்பட்ட பொருள் எது இருக்கமுடியும்? மேற்படி I.95
 • படைக்கப்பட்டவற்றில் உயிருள்ளவை சிறந்தவையாகும்; உயிருள்ளவற்றில் சிறந்தவை அறிவு பெற்றவையாகும்; அறிவுபெற்ற உயிர்களில் மனிதன் சிறந்தவன்; மனிதர்களில் பிராமணர்கள் சிறந்தவர்கள். மேற்படி I.96
 • பிராமணன் தோன்றும்போது உலகில் மிக உயர்ந்தவனாக, படைக்கப்பட்டவை அனைத்துக்கும் அதிபதியாகப் பிறக்கிறான். மேற்படி I.99;
 • உலகத்தில் உள்ளவை அனைத்துமே பிராமணனின் உடைமையாகும்; தனது தோற்றத்தின் உயர்வு காரணமாக பிராமணன் உண்மையிலேயே எல்லாவற்றுக்கும் உரிமையாளன் ஆவான். ) மேற்படி I.100;
 • பிராமணன் கல்லாதவன் ஆனாலும் கற்றவன் ஆனாலும் பெரிய தேவன் ஆவான்; நெருப்பு (அவி போடப்படுவதற்காக) எடுத்துச் செல்லப்பட்டாலும், இல்லையென்றாலும், பெரிய தேவனாயிருப்பதுபோல. மேற்படி IX.317
 • பிராமணர்கள் எல்லா (விதமான) தாழ்ந்த தொழில்களிலும் ஈடுபட்டாலும் அவர்களை எல்லா வகையிலும் கௌரவிக்கவேண்டும்; ஏனென்றால் அவர்கள் (ஒவ்வொருவரும்) பெரிய தேவர்கள் ஆவார்கள். மேற்படி IX.319
 • ஆனால், (குழந்தைக்குப் பெயர் வைக்கும் சடங்கான) நாம தேயத்தை (குழந்தை பிறந்தபின்) பத்தாவது அல்லது பன்னிரண்டாம் நாளில், அல்லது அதிர்ஷ்டமான திதியில், அதிர்ஷ்டமான முகூர்த்தத்தில், சுபமான லக்கினத்தில் (தந்தை செய்ய வேண்டும் அல்லது) செய்விக்க வேண்டும். மேற்படி II.30;
 • பிராமணனுடைய பெயரின் (முதல் பகுதி) மங்களமான (எதையேனும் குறிப்பதாக) இருக்கட்டும். சத்திரியனுடையது வலிமையையும், வைசியனுடையது செல்வத்தையும், சூத்திரனுடையது இகழ்வான (எதையேனும் குறிப்பதாக) இருக்கட்டும். மனு II.31
 • பிராமணனுடைய (பெயரின்) (இரண்டாம் பகுதி) மகிழ்ச்சியைக் குறிக்கும் (சொல்லாக), சத்திரியனுடையது, காத்தல் செய்வதைக் குறிக்கும் (சொல்லாக), வைசியனுடையது, வளவாழ்வைக் குறிக்கும் (சொல்லாக) சூத்திரனுடையது, சேவையைக் குறிக்கும் (சொல்லாக) இருக்கவேண்டும். மேற்படி II.32;
 • (பிராமணன்) சூத்திரர்களை ஆட்சியாளர்களாகக் கொண்ட நாட்டில் வசிக்காதிருப்பானாக. அறவழியில் செல்லாத மனிதர்களால் சூழப்பட்ட நாட்டிலும், சமயநெறிக்கு முரணாக உள்ளவர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாட்டிலும், தாழ்ந்த சாதி மனிதர்கள் நிறைந்த நாட்டிலும் அவன் வசிக்கவேண்டாம். மேற்படி IV.61;
 • (வழக்காடுவோரின்) வழக்குகளில், மன்னன் தானே தீர்ப்புக் காண முடியாதபோது, பல்வேறு சாத்திரங்களையும் கற்ற பிராமணன் ஒருவனை அதற்கு நியமிக்கவேண்டும். காத்யாயனர் 63;
 • (குறிப்பிடப்பட்ட தகுதிகளைப் பெற்ற) பிராமணன் கிடைக்காதபோது (மன்னன்) புனிதச் சட்டத்தில் தேர்ச்சிபெற்ற சத்திரியனை அல்லது வைசியனை நியமிக்கவேண்டும்; ஆனால் சூத்திரனை நீதிபதியாக நியமிப்பதை (மன்னன்) கவனமாகத் தவிர்க்க வேண்டும். மேற்படி 67
 • இவர்களைத் தவிர, மற்றவர்கள் (நீதிபதிகளாக) என்ன செய்தாலும் அது தவறானதாகவே கருதப்படவேண்டும். அவர்கள் (மன்னனின்) அதிகாரிகளாக இருந்தாலும், அவர்கள் செய்த முடிவுகள் புனித நூல்களில் கூறப்பட்டபடியே அமைந்திருந்தாலும் இவ்வாறே கருதவேண்டும். ) மேற்படி 68
 • தனது சாதியின் பெயரை மட்டுமே வைத்து வாழ்கின்ற ஒரு பிராமணன், அல்லது தன்னை பிராமணன் என்று கூறிக்கொள்ளும் ஒருவன் (அவனுடைய பூர்விகம் நிச்சயமாகத் தெரியாமலிருந்தாலும்), மன்னன் விரும்பினால் சட்டத்தை உரைக்கலாம்; ஆனால், ஒருபோதும் சூத்திரன் அதைச் செய்யக்கூடாது. மனு VIII.21;
 • சூத்திரன் சட்ட முடிவுகள் செய்வதைப் பார்த்துக்கொண்டிருக்கும் மன்னனுடைய நாடு, புதை சேற்றில் மூழ்கிப் போகும் பசுவைப்போல (தாழ்ந்து) மூழ்கிப் போகும். மேற்படி VII.21
 • சட்டத்தை அறிந்த பிராமணன் (குற்றச் செயலை) மன்னனின் கவனத்துக்குக் கொண்டுவரத் தேவையில்லை; அவன் தன்னுடைய சொந்த அதிகாரத்தினாலேயே, தனக்குத் தீங்கு செய்வோரைத் தண்டிக்கலாம். மேற்படி XI.31;
 • அவனுடைய சொந்த அதிகாரம் மன்னனின் அதிகாரத்தை விடப் பெரியது; எனவே பிராமணன் தனது எதிரிகளைத் தன்னுடைய சொந்த அதிகாரத்தை மட்டுமே வைத்து தண்டிக்கலாம். மேற்படி XI.32;
 • பிராமணன் (உலகத்தைப்) படைத்தவனாகவும், தண்டிப்பவனாகவும், குருவாகவும் (உள்ளவன்) என்றும், (எனவே) (படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும்) நன்மை செய்வோன் என்றும் அறிவிக்கப்படுகிறது. அவனிடம் யாரும் மங்களமல்லாத எதையும் சொல்லவோ, கடுமையான சொற்களைப் பேசவோ, கூடாது. மேற்படி XI.35

 வகுப்புகளின் இடையிலான உறவு

I

 • நான்கு சாதிகள் எதிர்முறை வரிசையில் அடிமையாதல் விதிக்கப்படவில்லை. நாரதர் ப.39
 • மூன்று வருணங்களைச் சேர்ந்தவர்கள் அடிமையாக முடியும். ஆனால், பிராமணன் ஒரு போதும் அடிமையாக முடியாது. (மூன்று) வருணத்தினர், அதாவது, சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகியோர் இந்த நேர்வரிசை முறையில் முடியாது. சூத்திரன் நான்கு சாதிகளையும் சேர்ந்த எந்த எஜமானனுக்கும் அடிமையாகலாம்; வைசியன், முதல் மூன்று சாதிகளையும் சேர்ந்த எந்த எஜமானனுக்கும் அடிமையாகலாம், ஆனால் சூத்திர எஜமானுக்கு அடிமையாக முடியாது; சத்திரியன், பிராமணசாதியை அல்லது சத்திரிய சாதியைச் சேர்ந்த எஜமானுக்கு அடிமையாகலாம், ஆனால், வைசிய சாதியை அல்லது சூத்திர சாதியைச் சேர்ந்த எஜமானுக்கு அடிமையாக முடியாது. காத்யாயனர் 715-716
 • ஒரே சாதியைச் சேர்ந்தவன் (அதாவது, பிராமணன்) கூட, பிராமணனை அடிமையாக வேலை செய்யவைக்கக் கூடாது. சத்திரியன், வைசியன் அல்லது சூத்திரன் எப்போதேனும் தன்னுடைய சாதியைச் சேர்ந்த ஒருவனுக்கு அடிமையாக வேலை செய்யலாம், ஆனால் பிராமணனை ஒருபோதும் அடிமை வேலை செய்யவைக்கக்கூடாது.மேலது 717-718,

 II

 • இருபிறப்பாளர்களான ஆண்களின் முதல் திருமணத்திற்குச் சம சாதி (மனைவியர்) ஏற்கத்தக்கவர்கள்; ஆனால் (மீண்டும் திருமணம் செய்ய) விரும்புபவர்களுக்கு (சாதிகளின்) நேர் வரிசைப்படி (தெரிந்தெடுக்கப்படும்) பின்வரும் பெண்கள் மிகவும் ஏற்கத்தக்கவர்கள். மனு 111.12
 • சூத்திரப் பெண் மட்டுமே சூத்திரனின் மனைவியாக இருக்க முடியும்; அவளும், அவனுடைய சொந்த சாதியைச் சேர்ந்த பெண்களும் வைசியனின் (மனைவிகள்) ஆக முடியும்; இந்த இரண்டு சாதிப் பெண்களும் அவனுடைய சொந்த சாதிப் பெண்களும் சத்திரியனின் (மனைவிகள்) ஆக முடியும், இந்த மூன்று சாதிப் பெண்களும் அவனுடைய சொந்த சாதிப் பெண்ணும் பிராமணனின் (மனைவிகள்) ஆக முடியும். மேலது 111.12
 • இருபிறப்பாளரான ஆண்கள் தங்கள் சாதியையும் மற்ற (கீழ் சாதிகளையும் சேர்ந்த) பெண்களையும் மணந்தால் இந்த (மனைவிகளின்) வரிசைமுறையும் கௌரவமும் வசிக்குமிடமும் இந்தச் சாதிகளின் (வருணங்களின்) வரிசைமுறைப்படி தீர்மானிக்கப்படும். (மேலது IX.85)
 • (இருபிறப்பாளரான ஆண்கள் எல்லோரிலும்) சம சாதியைச் சேர்ந்த மனைவி மட்டுமே கணவனின் கூட இருந்து அவனுடைய தினசரி புனிதக் கடமைகளில் உதவி செய்ய வேண்டும்; மற்ற சாதி மனைவி செய்யக்கூடாது. (மேலது IX.86)
 • இருபிறப்புச் சாதியைச் சேர்ந்த பாதுகாப்புள்ள அல்லது பாதுகாப்பில்லாத சூத்திரன் (பின்வருமாறு தண்டிக்கப்படவேண்டும்); பாதுகாப்பு இல்லாத பெண்ணாக இருந்தால், அவன் (தவறுசெய்த) உறுப்பையும் தன்னுடைய சொத்துக்கள் எல்லாவ்ற்றையும் இழக்கிறான்; பாதுகாப்பு உள்ள பெண் என்றால் எல்லாவற்றையும் (உயிரையும் கூட) இழக்கிறான். மேலது (ப. 111.374)
 • (பாதுகாப்பு உள்ள பிராமணப் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும்) வைசியன் ஓராண்டு சிறையில் வைக்கப்பட்ட பின் அவனுடைய சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்படும்; சத்திரியனுக்கு ஆயிரம் (பணாம்) அபராதம் விதிக்கப்படுவதுடன் கழுதையின் மூத்திரத்தைக் கொண்டு சவரம் செய்யப்படுவான். (மேலது VIII.375)
 • வைசியன் அல்லது சத்திரியன் பாதுகாப்பு இல்லாத பிராமணப் பெண்ணுடன் தொடர்பு கொண்டால் வைசியனுக்கு ஐந்நூறு (பணம்) சத்திரியனுக்கு ஆயிரம் அபராதம் விதிக்கவேண்டும். மேலது ப.376
 • ஒரு வைசியன், பாதுகாப்பு உள்ள சத்திரியப் பெண்ணை அணுகினாலும், சத்திரியன் (பாதுகாப்பு உள்ள) வைசியப் பெண்ணை அணுகினாலும், இருவருக்கும் பாதுகாப்பு இல்லாத பிராமணப் பெண்ணின் விஷயத்தில் உள்ள தண்டனை அளிக்கப்படவேண்டும். மனு VIII.382
 • ஒரு பிராமணன் அந்த இரண்டு (சாதிகளின்) (பெண்களுடன்) உடலுறவு கொண்டால் ஆயிரம் (பணம்) அபராதம் செலுத்தவேண்டும்; பாதுகாப்பு உள்ள சூத்திரப் பெண்ணிடம் தவறு செய்தால் சத்திரியன் அல்லது வைசியனுக்கு ஆயிரம் (பணம் அபராதம் விதிக்கப்படும்). மேற்படி VIII.383
 • பாதுகாப்பு இல்லாத சத்திரிய (பெண்ணுடன்) உடலுறவு கொள்ளும் வைசியனுக்கு ஐந்நூறு (பணம் அபராதம் விழும்); இதே குற்றத்தைச் செய்த சத்திரியன் (கழுதையின்) மூத்திரத்தைக் கொண்டு சவரம் செய்யப்படுவான், அல்லது அதே அபராதம் (செலுத்த வேண்டும்). மேற்படி VIII.384;
 • (இல்வாழ்வான்) தன் வீட்டிற்குத் தாமே வரும் விருந்தினருக்கு, விதிப்படி ஆசனமும் தண்ணீரும் கொடுத்துத், தனது சக்திக்குத் தக்கபடி (நறுமணப் பொருள்கள்) சேர்க்கப்பட்ட உணவும் அளிக்கவும். மேற்படி III.93
 • ஆனால், ஒரு பிராமணனின் வீட்டிற்கு (வரும்) சத்திரியன் விருந்தினர் (அதிதி) எனக் கூறப்படுவதில்லை; அவ்வாறே ஒரு வைசியன், ஒரு சூத்திரன், ஒரு நண்பன், ஒரு உறவினன், ஆசிரியர் ஆகியோரும் கூறப்படுவதில்லை. மேற்படி III.110
 • ஆனால், ஒரு சத்திரியன் பிராமணனின் வீட்டிற்கு விருந்தாளியைப் போல வந்தால், (இல் வாழ்வான்) பிராமணர்கள் உண்டபின் அவனுக்குத் தன் விருப்பப்படி உணவு அளிக்கலாம். மேற்படி III.111
 • ஒரு வைசியனோ சூத்திரனோ கூட விருந்தாளிகளைப் போலத் தன் வீட்டிற்கு வந்தாலும், அவர்கள் தன்னுடைய வேலைக்காரர்களுடன் உண்ண அவன் அனுமதிக்கலாம்; அவன் தன்னுடைய கருணை உள்ளத்தை (இதன் மூலம் காட்டலாம்). (மேற்படி III.112.)

கடமைகள் – சிறப்பு உரிமைகள் – விலக்கு உரிமைகள் இயலாமைகள்

I

 • பிரம்மத்துடன் (ஒன்றுவதற்கு) வழிகாண்பதில் தீவிரமாக உள்ளவர்களும் தங்கள் கடமைகளை (நிறைவேற்றுவதில்) உறுதியாக உள்ளவர்களுமான பிராமணர்கள், (உரிய) வரிசையில் எடுத்துக் கூறப்பட்டுள்ள பின்வரும் ஆறு செயல்களை முறைப்படி செய்து வாழ்வார்கள்.(மனு X.74)
 • கற்பித்தல், கற்றல், தனக்காக வேள்வி செய்தல், பிறருக்காக வேள்வி செய்தல், தானம் ஈதல், தானம் ஏற்றல் ஆகியவை பிராமணனுக்கு (விதிக்கப்பட்ட) ஆறு செயல்கள்.(மனு X.75)
 • அவனுக்கு (விதிக்கப்பட்ட) ஆறு செயல்களுள் மூன்று, அதாவது, பிறருக்காக வேள்வி செய்தல், கற்பித்தல், நல்லவர்களான மனிதர்களிடமிருந்து தானம் ஏற்றல் ஆகியவை அவனுடைய வாழ்க்கை ஆதார வழிகளாகும்.( மேற்படி X.76)
 • பிராமணனை அடுத்து சத்திரியனை (எடுத்துக் கொண்டால்), (முன்னவனின் கடமையாக உள்ள) மூன்று செயல்கள், அதாவது, கற்பித்தல், பிறருக்காக வேள்வி செய்தல், அதன்மூலம் தானங்களை ஏற்றல் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.( மேற்படி X.77)
 • இதே போல, இவை, வைசியனுக்கும் தடை செய்யப்படுகின்றன; இது முடிவான விதியாகும்; படைப்புயிர்களின் அதிபதியான (பிரஜாபதி) மனு இவற்றை இந்த இரண்டு (சாதிகளின்) (மனிதர்களுக்கு) விதிக்கவில்லை.( மேற்படி X.78)
 • அடிப்பதற்கும் எய்வதற்குமான ஆயுதங்களை ஏந்திச் செல்வது சத்தியர்களுக்கு வாழ்க்கை ஆதார வழியாக (விதிக்கப்படுகிறது); வாணிபம் செய்வது, கால்நடை (வளர்ப்பது), விவசாயம் வைசியர்களுக்கு; ஆனால் இவர்களின் கடமைகள் கொடுத்தல், வேதம் கற்றல், வேள்வி செய்தல் ஆகும்.( மேற்படி X.79)
 • பலவகைத் தொழில்களுள்ளும் வேதத்தைக் கற்பித்தல் பிராமணனுக்கும், மக்களைப் பாதுகாத்தல் சத்திரியனுக்கும், வாணிபம் வைசியனுக்கும் மிகச் சிறந்தவையாகும். (மேற்படி X.80)
 • பிராமணர்களுக்குச் சேவை செய்வது மட்டுமே சூத்திரனுக்கு மிகச் சிறந்த தொழில் என்று அறிவிக்கப்படுகிறது; இதைத் தவிர அவன் எதைச் செய்தாலும் அதனால் அவனுக்குப் பயன் கிடைக்காது. (மேற்படி X.123)

II

 • ஆனால், ஒரு பிராமணன் இங்கு அவனுக்கு விதித்துக் கூறப்பட்ட சிறப்புத் தொழில்கள் மூலம் வாழ்க்கை நடத்த முடியவில்லை என்றால், அவன் சத்திரியனுக்கு உரிய சட்டத்தின்படி வாழலாம்; ஏனென்றால் சத்திரியன், வரிசையில் அவனுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறான்.(மேற்படி X.81)
 • இந்த இரண்டு வகை (தொழில்களாலும்) அவன் வாழ முடியவில்லை என்றால் (என்ன செய்வது என்று வினவினால் அதற்கு விடை) அவன் வைசியனின் வாழ்க்கை முறையை மேற்கொண்டு, விவசாயத்திலும் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபடலாம்.(மேற்படி X.82)
 • துன்பத்தில் வீழ்ந்துவிட்ட சத்திரியன் (வைசியனுக்கு அனுமதிக்கப்பட்ட வழிகளின்மூலம் வாழலாம்).( மேற்படி X.95)
 • தனது சொந்தக் கடமைகளின் மூலம் வாழமுடுயாத வைசியன் சூத்திரனின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி உயிர்வாழலாம்; (ஆயினும்) (அவனுக்குத்) தடை செய்யப்பட்ட செயல்களைத் தவிர்க்க வேண்டும்; அவனால் முடியும்போது இந்த வாழ்க்கை முறையை விட்டுவிடவேண்டும்.( மேற்படி X.98)
 • ஆனால், ஒரு சூத்திரன் இருபிறப்பாளரிடம் சேவை செய்யக் கிடைக்காமல் (பசியினால்) மனைவி மக்களை இழந்துவிடக்கூடிய அபாயம் நேர்ந்தால் கைத்தொழில்கள் செய்து வாழ்க்கை நடத்தலாம். (மேற்படி X.99)
 • ஒரு சத்திரியன் ஒருபோதும் அகம்பாவத்துடன் தன்னைவிட மேலானவர்களுக்கு, அதாவது பிராமணர்களுக்கு (விதிக்கப்பட்ட) வாழ்க்கை முறையைப் பின்பற்றக்கூடாது.( மனு X.95)
 • வைசியன் வாணிபம் செய்யவும், லேவாதேவி நடத்தவும், நிலத்தில் பயிர் செய்யவும், காலநடை வளர்ககவும், சூத்திரன் இருபிறப்பாளருக்குச் சேவை செய்யவும் மன்னன் கட்டளையிட வேண்டும்.( மேற்படி VIII.)
 • வைசியர்களும் சூத்திரர்களும் தங்களுக்கு (விதிக்கப்பட்ட) வேலையைச் செய்யும்படி (மன்னன்) கவனமாகக் கட்டாயப்படுத்த வேண்டும்; ஏனென்றால், இந்த இரண்டு (சாதிகளும்) தங்களுடைய கடமைகளிலிருந்து விலகினால், அது இந்த, உலகம் (முழுவதையும்) குழப்பத்தில் தள்ளிவிடும். (மேற்படி VIII.418410)

IV

 • பார்வையில்லாதவன், மந்த மதியுடையவன், ஊன்றுகோல் உதவியுடன் நடமாடும் (ஊனமுற்றவன்), எழுபது வயது நிரம்பியவன், சுரோத்திரியர்களுக்கு நன்மைகள் அளிப்பவன் ஆகிய இவர்கள் வரி செலுத்தும்படி (மன்னன்) கட்டாயப் படுத்தக்கூடாது. (மனு VIII.334)
 • (நிதி இன்மையால்) இறப்பதாயிருந்தாலும் மன்னன் சுரோத்திரியர்கள் மீது வரி விதிக்கக் கூடாது; அவனுடைய நாட்டில் வசிக்கும் சுரோத்திரியர் யாரும் பசியால் மடியக்கூடாது. (மனு VII.133)
 • மன்னன் தன் நாட்டில் பொருள்கள் விற்று வாழ்க்கை நடத்தும் சாதாரண மக்கள், ஆண்டுக்கொரு முறை ஒரு சிறுதொகையை வரியாகச் செலுத்தச் செய்வானாக. (மனு VIII.137)
 • இயந்திர வேலை செய்வோர், கைத்தொழில்கள் செய்வோர், உடல் உழைப்பால் வாழ்க்கை நடத்தும் சூத்திரர்கள் ஆகியோரை அவன் (மன்னன்) ஒவ்வொரு மாதமும் ஒரு (நாள்) (தனக்காக) வேலை செய்ய வைக்கலாம். (மேற்படி VII.138)
 • (தலையை) மழிப்பது, பிராமணனுக்கு (மரண தண்டனைக்குப் பதிலாக) விதிக்கப்படுகிறது; ஆனால் மற்ற சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும். (மேற்படி VIII.379)
 • பிராமணன் எல்லாக் குற்றங்களையும் செய்திருந்தாலும் (மன்னன்) ஒருபோதும் அவனைக் கொல்லக்கூடாது. அப்படிப்பட்ட (குற்றவாளியை) அவனுடைய சொத்துக்களையெல்லாம் (தனக்கு) விட்டு விட்டு, அவனுடைய (உடலுக்குத்) தீங்கு இல்லாமல் நாட்டைவிட்டு நீங்கச் செய்யவும். (மனு VIII.380)
 • பிராமணனைக் கொல்வதைவிடப் பெரிய குற்றம் பூமியில் கிடையாது; எனவே மன்னன் தன் மனத்தில் கூட பிராமணனைக் கொல்வது பற்றி நினைக்கக் கூடாது. (மனு VIII.381)
 • கல்வி கற்ற பிராமணன் ஒருவன் முந்தைய (காலங்களில்) வைக்கப்பட்ட புதையலைக் கண்டால், அவன் (அது) முழுவதையும் எடுத்துக் கொள்ளலாம்; ஏனென்றால் அவன் எல்லாவற்றுக்கும் அதிபதியாவான். (மேற்படி VIII.37;)
 • மன்னன் பழங்காலத்தில் பூமியில் மறைத்துவைக்கப்பட்ட புதையலைக் கண்டால், பாதியைப் பிராமணர்களுக்குக் கொடுத்துவிட்டு; (மற்றப்) பாதியைத் தனது கருவூலத்தில் வைப்பானாக. (மேற்படி VIII.33)

வாழ்க்கை முறை

 • தூயவனாகத், தன்னைவிட மேலானவர்களின் பணியாளனாகப், பேச்சில் சாந்தமானவனாகக், கர்வம் இல்லாதவனாக, எப்போதும் பிராமணர்களிடம் புகலடைபவனாக (உள்ள சூத்திரன்) அடுத்த பிறவியில் மேல் சாதியைப் பெறுகிறான். (மனு IX.335)
 • ஆனால் சூத்திரன், சுவர்க்கத்திற்காகவாவது, அல்லது (இம்மை, மறுமை ஆகிய) இரண்டிற்காகவாவது பிராமணர்களுக்குப் பணி செய்யவும்; ஏனென்றால் பிராமணர்களின் பணியாளன் என்று அழைக்கப்படுபவன் அதன் மூலம் தன்னுடைய எல்லா நோக்கங்களையும் அடைகிறான். (மேற்படி X.122)
 • சூத்திரன் (பிராமணர்களிடம் பணிசெய்து வாழ முடிவில்லையென்றால்) அவன் சத்திரியர்களிடம் பணிசெய்யலாம், அல்லது செல்வந்தனான வைசியனிடம் பணி செய்து வாழலாம். (மேற்படி X.121)
 • அவர்கள் தங்களுடைய குடும்பச் சொத்தில் இருந்து தகுந்த ஒரு பராமரிப்பை, அவனுடைய திறமைக்கும், உழைப்புக்கும், அவன் காப்பாற்ற வேண்டியவர்களின் எண்ணிக்கைக்கும் தகுந்தபடி ஒதுக்கிக் கொடுக்க வேண்டும்.(மேற்படி X.124;)
 • அவர்களுடைய உணவின் மிச்சம் அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும்; அவர்களுடைய பழைய துணிகள், கழிவு தானியங்கள், பழைய வீட்டுச் சாமான்கள் ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். (மேற்படி X.125)
 • சூத்திரன் செல்வம் சேர்க்கும் திறன் பெற்றவனாயிருந்தாலும் அவன் செல்வம் சேர்க்கக்கூடாது; ஏனென்றால் செல்வம் சேர்த்துள்ள சூத்திரன், பிராமணர்களுக்கு வேதனை தருகிறான். (மேற்படி X.129)
 • சட்டத்தின்படி வாழ்கின்ற சூத்திரர்கள் (தங்கள் தலைகளை) ஒவ்வொரு மாதமும் சவரம் செய்யவேண்டும்; அவர்கள் தூய்மை செய்து கொள்ளும் முறை வைசியர்களின் முறையே ஆகும். அவர்களுடைய உணவு, ஆரியன் உண்ணும் உணவின் துணுக்குகளே ஆகும். (மேற்படி ப.140.) முன்னமே கூறியது போல, புராதன சட்ட ஆசிரியர்கள் கருத்தில் கொண்டு சட்டம் இயற்றிய சமூகத்தில் இரண்டு பகுதிகள் இருந்தன – இவற்றில் ஒன்று சதுர்வர்ண முறையின் உள்ளே அமைந்திருந்தது. மற்றப் பகுதி சதுர்வர்ண முறைக்கு வெளியே உள்ள மக்களைக் கொண்டது. இவர்கள் தாழ்ந்த சாதியினர் என்று பேசப்படுகிறார்கள். இந்தத் தாழ்ந்த சாதிகள் எப்படி ஏற்பட்டன என்பதுபற்றி நான் இப்போது ஆராயவில்லை. புராதான இந்துச் சட்ட ஆசிரியர்களின் கூற்றுப்படி சதுர்வர்ண முறையின் உள்ளே உள்ள அந்த நான்கு சாதிகளிடையே – பிராமணர்கள் சத்திரியர்கள் வைசியர்கள் – சூத்திரர்கள் ஆகியோரிடையே ஏற்பட்ட கலப்பு மணங்களால் தோன்றிய சந்ததிகளால் இவை உருவாயின என்று மட்டும் கூறுவது போதுமானது. இது எவ்வளவு தூரம் உண்மை என்பது வேறொரு சமயத்தில் ஆராயப்படும். நாம் இப்போது முதன்மையாக, சமூக உறவுகள் பற்றித்தான் ஆராய்கிறோம், அவற்றின் தோற்றம் பற்றி அல்ல. இதுவரை சதுர்வர்ண முறையின் உள்ளே உள்ளவர்கள் சம்பந்தப்பட்ட சட்டங்கள் மட்டுமே தரப்பட்டன. சதுர்வர்ண முறையின் வெளியே உள்ளவர்கள் அல்லது தாழ்ந்த சாதிகள் என்று அழைக்கப்பட்டவர்கள் பற்றிய சட்டங்களைத் தருவதுதான் இனி மிஞ்சியுள்ளது. தாழ்ந்த சாதிகளின் வாழ்க்கையை ஒழுங்கு படுத்தும் சட்டங்கள் மிகச் சிலவே என்பது விசித்திரமானது. அவை சிலவாக இருந்தாலும் அவை நறுக்கென்று கூறப்பட்டிருப்பதால் விரிவான சட்டங்களுக்குத் தேவை இருப்பதாகத் தோன்றவில்லை. அவை வருமாறு:
 • (பிரம்மத்தின்) வாய், தோள்கள், தொடைகள், பாதங்கள் ஆகியவற்றில் இருந்து தோன்றியவர்களின் சமுதாயத்திற்கு வெளியில் உள்ள எல்லா இனக்குழுக்களும், அவர்கள் மிலேச்சர்களின் (நாகரிகமற்றவர்களின்) மொழியை அல்லது ஆரியர்களின் மொழியைப் பேசினாலும், தஸ்யூக்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். (1) மனு X.45)
 • நன்கு அறியப்பட்ட மரங்களுக்கும் சுடுகாட்டிற்கும் அருகிலும் மலைகளில் மேலும் இந்த (இனக்குழுக்கள்), (சில குறிகளால் அறியப்பட்டனவாக) தங்களுக்கே உரியவையான தொழில்களைச் செய்து கொண்டு வசிக்கட்டும்.(மேற்படி X.50)
 • ஆனால், சண்டாளர்களும் ஷ்வாபகர்களும் வசிக்குமிடம் கிராமத்திற்கு வெளியே இருக்கவேண்டும். அவர்கள் அபபத்திரர்கள் ஆக்கப்படவேண்டும். அவர்களுடைய செல்வம் நாய்களும் கழுதைகளும் ஆகும். (மேற்படி X.51)
 • அவர்களின் உடை, இறந்தவர்களின் துணிகளே (ஆகும்); தங்கள் உணவை, உடைந்த தட்டுக்களிலிருந்து, (அவர்கள் உண்பார்கள்); கரும் இரும்பே அவர்களின் அணிகலன் (ஆகும்); அவர்கள் எப்போதும் ஒரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்குத் திரிந்து கொண்டேயிருக்க வேண்டும். (மேற்படி X.52)
 • சமயக் கடமைகளை நிறைவேற்றுபவன் அவர்களுடன் உடலுறவை நாடக்கூடாது; அவர்களுடைய தொடர்புகள் அவர்களுக்கிடைலேயே இருக்கும்; அவர்களின் திருமணங்கள் அவர்களுக்குச் சமமானவர்களுடனேயே இருக்கும்.(மேற்படி X.53)
 • அவர்களின் உணவு அவர்களுக்கு (ஆசிரியர் தவிர) மற்றவர்களால், உடைந்த தட்டில் கொடுக்கப்படும்; இரவில் அவர்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் நடந்துசெல்லக்கூடாது. (மேற்படி X.54)
 • பகலில் அவர்கள், மன்னனின் கட்டளைப்படி அடையாளக் குறிகளுடன் தங்கள் வேலைகலைச் செய்யச் செல்ல வேண்டும்; உறவினர் இல்லாத (மனிதர்களின்) சவங்களை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்; இது முடிவான விதியாகும். (மேற்படி X.55)
 • மன்னனின் உத்தரவுப்படி அவர்கள் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின்படி மரணதண்டனையை நிறைவேற்றுவார்கள்; அந்தக் குற்றவாளிகளின் துணிகள், படுக்கைகள், அணிகலன்கள் ஆகியவற்றை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.(மேற்படி X.56)
 • மிகத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த பெண்ணுடன் தொடர்பு கொண்டவன் கொல்லப்படுவான். ((9) விஷ்ணு V.43)
 • (ஒரு சண்டாளன் அல்லது வேறு தாழ்ந்த சாதியைச் சேர்ந்த) தீண்டத் தகாதவன், வேண்டுமென்றே, இருபிறப்பாளர்களாலேயே தீண்டத் தகுந்த (இருபிறப்புச் சாதியைச் சேர்ந்த) ஒருவனைத் தொட்டுத் தீட்டாக்கினால் அப்படிச் செய்தவன் கொல்லப்படுவான். (10) விஷ்ணு V.104)

 (டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் - தொகுதி 9, இயல் 7)