டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் மறுக்கப்பட்ட தமிழக அரசின் ஊர்திகள், சென்னையில் நடைபெறுகிற தமிழக அரசின் குடியரசு நாள் விழாவில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வரப்படும் என்ற சரியான பதிலடியை தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ்நாட்டின் முக்கிய ஊர்கள் தோறும், இந்த தமிழ்நாட்டு போராட்ட வீரர்களின் ஊர்திகள் அணிவகுத்து மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

குடியரசு நாளை கொண்டாடுகிற டெல்லி, தமிழ்நாட்டை ஓரங்கட்டி, புறக்கணிக்க நினைத்தாலும் தமிழ்நாடு தனக்குள்ள இறையாண்மை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியநாட்டுக் குடியரசில் தமிழகத்தில் போராடிய தலைவர்களுக்கு உரிய மரியாதை தரப்படும் என்ற செய்தியை நாட்டிற்கு முதலமைச்சரின் இந்த அறிவிப்பு வெளிப்படுத்துகிறது.

இந்த சூழ்நிலையில் பெரியாரின் கருத்து ஒன்றை சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். ஜனவரி 26ஆம் நாள் குடியரசு நாள் அமுலுக்கு வந்த நாளை பெரியார் அதைத் துக்க நாள் என்று கூறியதோடு மற்றொரு கருத்தையும் வெளியிட்டார். “புதிய குடியரசுத் தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்படுவதால், இராஜகோபாலாச்சாரி தனது கவர்னர் ஜெனரல் பதவியை முடித்துக் கொண்டு தென்னாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவது நமக்கு கிடைத்த வெற்றி. பார்ப்பனர் ஆனாலும் கூட அவர் தென்னாட்டுக்காரர். தேவையில்லை. வடநாட்டுக்காரருக்கென்று நிரூபிக்கப் பட்டிருக்கிறதல்லவா! மேலும் விரைவில் சுமையை இறக்கி வைத்துவிட்டு இங்கே வந்து விடுவதாக ஆச்சாரியார் முன்பே கூறி சென்றிருக்கிறாராம். வந்த பின் அவர் நமக்கு பயன்படுகிறாரா என்று பார்க்கலாம்” என்று பெரியார் கூறியிருக்கிறார்.

ஆக, இராஜாஜி ஒரு பார்ப்பனராக இருந்தாலும் கூட அவர் தென்னாட்டுக்காரர் என்று வடநாட்டிலிருந்து விடைபெற்று வருவதை அரவணைத்து அறிக்கை வெளியிட்டவர் பெரியார். அதே பார்வையில் தான் இன்றைக்கு தமிழ்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை வடநாடு ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், மீண்டும் அது தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்து தமிழ்நாட்டுக் குடியரசு தின விழாவில் கம்பீரமாக பவனி வருவது என்பது தமிழ்நாட்டுக் குடியரசிற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றி! தமிழர்கள் ஒவ்வொருவரும் இதற்காக பெருமைப்படுவோம், முதல்வருக்கு நன்றி செலுத்துவோம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It