இராஜாஜி குறித்து ம.பொ.சி. கூறிய பொய்!
பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி)
ம.பொ.சி. அப்போது சட்ட மேலவையில் உறுப்பினராக இருந்தார். அப்போது அவர் பேசியதாவது -
“மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, நம்முடைய முதல் அமைச்சர் அவர்கள் இந்தக் கவுன்சிலின் முன்பு வைத்துள்ள ஆந்திர ராஜ்ய அமைப்பு மசோதாவை நான் மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன்...
இந்த எல்லைப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் ஒரு நியாயம் நடந்திருக்கவேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள பிரதேசமாக இருப்பதால் அதை எஞ்சிய சென்னை ராஜ்யத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். சித்தூர் ஜில்லா தகராறுள்ள ஜில்லா என்று முத்திரைப்போட்டு எஞ்சிய சென்னை ராஜ்ஜியத்தில் தான் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும். அப்படியில்லாமல் மொழியின் அடிப்படையிலே அமைக்கப்படுகிற ஆந்திர ராஜ்ஜியத்தில் தகராறுள்ள இந்தச் சித்தூர் ஜில்லாவை சேர்த்திருக்கக்கூடாது.
எஞ்சிய சென்னை ராஜ்ஜியத் தில் சேர்க்காமல், ஆந்திர ராஜ்ஜியத்தில் சேர்ப்பதற்கு நியாயமில்லை. ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை, தயக்கம், முதலிய விஷயங்கள் வேறுவிதமாக மாற்றி அமைத்து விட்டது. ஆயினும் இதைப் பெரிதாகக் கொள்ளாமல் எல்லைக் கமிஷன் அமைக்கப்படும் வரையில் பொறுத்திருந்தது. இதற்கு முடிவு காண்பதில் ஆட்சேபனை ஒன்றுமில்லை. ஆகவே எல்லைக் கமிஷன் சீக்கிரமாக வரவேண்டும்.....
ஏற்கெனவே பிரிந்துபோன ராஜ்ஜியங்களுக்கு நஷ்டஈடு கொடுக்கப்படவில்லை. ஆனால் இங்கே மட்டும் நஷ்டஈடு என்ற ஒரு பிரிவு இருக்கிறதைப் பார்க்கும்போது ஒரு புது சம்பிராதயமாக இருக்குமோ என்று தோன்றுகிறது. இப்படி கொடுக்க உத்தேசித் திருப்பதை நஷ்டஈடு என்று சொல்லாமல், சகோதரர்களுக்கு செய்யும் உதவி என்று வேண்டுமானால் சொல்லலாம், கொடுக்கலாம்” என்று கூறுகிறார். எந்த பெயரில் கொடுத்தாலும் தமிழகத்தின் பணம் ஆந்திராவுக்குத் தானே போகும். (சட்டமேலவை விவாதங்கள் பக் 111-116 நாள் 21.7.53)
திருத்தணி, சித்தூர், திருப்பதி முதலான பகுதிகளை ஆந்திராவோடு இணைத்து இராஜாஜி ஆந்திரா பிரிவினை மசோதா தயாரித்திருந்தார். ம.பொ.சி. இதைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்கிறார். தேவிகுளம் பீர்மேடு கேரளாவுக்கே சொந்தம் என்றபோது காமராஜர் ஆட்சி பதவி விலக வேண்டும் என்று கூறிய ம.பொ.சி. இராஜாஜி செய்தியில் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்கிறார். இவர்தான் வடக்கெல்லைப் பாதுகாப்புக் குழுத் தலைவர்.
காங்கிர°ஸ்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோசல் ராமன் பேசிய அளவுக்குக்கூட ம.பொ.சி. பேச வில்லை. இராஜாஜிக்கு சார்பாகவே பேசியுள்ளார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. திருவில்லிப் புத்தூர் காங்கிர° சட்டமன்ற உறுப்பினர் கே.டி.கோசல் ராமன் ஆந்திர பிரிவினை மசோதாவின் மீது சட்டமன்றத்தில் இராஜாஜின் ஆந்திர ஆதரவுப் போக்கை வன்மையாகக் கண்டித்தார்.
“இந்த ராஜ்யத்தின் தலைவராகிய கனம் இராஜாஜி அவர்கள் பிரிந்துபோகின்ற ஆந்திரர்களுக்குச் சலுகைக் காட்டும் வகையில் தமிழர்களுடைய உரிமைகளை ஏன் விட்டுக்கொடுக்க வேண்டுமென்று தான் நான் கேட்கிறேன்? எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்று நீங்கள் கேட்கலாம். சித்தூர் ஜில்லாவில் 6 தாலுக்காக்கள் தமிழர்கள் வாழுகின்ற பிரதேசம்.
தமிழ் காலாச்சாரம், நாகரீகம், இலக்கியம் தழைத்திருக்கின்ற பிரதேசம். அதையும் ஆந்திர மாகாணத்தோடு சேர்ந்திருப்பதைக் கண்டு அங்குள்ள தமிழர்கள் உள்ளம் குமுறுகிறார்கள். புள்ளி விவரங் களுடன் கூட அந்தத் தாலுக்காக்கள் தமிழர்களுடைய தாலுக்காக்கள் தான் என்று நிரூபிக்கிறார்கள்..... சந்திரகிரி தாலுக்கா என்றத் திருப்பதிதான் நமது மதிப்பிற்குரிய தலைவர் கனம் இராஜகோபாலாச் சாரியார் அவர்களின் பரம்பரையினர் பிறந்த இடம்.
அங்கிருந்து வந்தவர்தான் நமது சக்கர வர்த்தி இராஜாஜி அவர்கள். அப்படி இருக்கும் போது கனம் இராஜாஜி அவர்கள் அந்த தாலுக்காக் களையெல்லாம் ஆந்திரர்களுக்கு விட்டுக்கொடுக்க எப்படி முன் வந்தார்கள் என்றுதான் தெரியவில்லை.”
“முதலமைச்சர் இராஜாஜி குறுக்கிட்டு அது அவருடைய தாராள குணத்தினால்” அவையில் ஒரே (சிரிப்பு)
கே.டி.கோசல்ராமன்: “தன்னுடைய தாராள குணத்தினால்தான் விட்டுக் கொடுத்திருப்பதாக கனம் இராஜாஜி சொல்லுகிறார்கள். தமிழர்கள் எல்லோரும் தாராள மனப்பான்மையும், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்தான் உடையவர்கள்.
ஆனால் மிக அதிகமான தமிழர்களின் உரிமைகள் பறிக்கப்படுகிற போது அதை தாராளமான மனப் பான்மையென்று சொல்லி விட்டுக் கொடுக்கவே முடியாது. தமிழர்கள் எல்லோரும் இன்றைய தினம் என்னச் சொல்லு கிறார்கள் என்றால், கனம் இராஜாஜி அவர்கள் ஆந்திரர்களுக்கு சலுகைக் காட்டுகிறார்களே தவிர தமிழர்களின் உரிமையைக் காக்க முயற்சிக்கவில்லை என்று கூறுகிறார்கள்....
பெல்லாரி ஜில்லாவை எதனுடன் சேர்ப்பது என்று விசாரிக்க ஒரு நீதிபதியை அனுப்பினார்களே, ‘நீதிபதி மி°ரா’ அது மாதிரியாக சித்தூர் ஜில்லாவைப் பற்றியும் விசாரணை செய்து ஒரு முடிவு அறிவிக்க ஏன் ஒரு நீதிபதியை அனுப்பக் கூடாது என்று நான் கேட்கிறேன்? கனம் இராஜாஜி அவர்கள் இதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழர்களின் உரிமைகளை விட்டுவிடக் கூடாது.
ஏன் இந்த ஆந்திர மாகாணப் பிரிவினை மசோதா விலேயே, சித்தூர் ஜில்லாவிலுள்ள ஆறு தாலுக்காக்கள் நீங்கலாக இதர சச்சரவு அற்ற பிரதேசங்களைக் கொண்டு ஆந்திர மாகாணம் அமைக்கப்படுமென அறிவிக்கக்கூடாது என்று தான் நான் கேட்கிறேன்” (சட்டமன்ற விவாதங்கள் பக் 54, 55 நாள் 14.07.1953)
இராஜாஜி ஆந்திரர்களுக்கு சார்பாகவே இம் மசோதாவை தயாரித்திருந்தார் என்பதை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரே சட்டசபையில் இராஜாஜி முன்னிலையிலேயே கண்டித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரிவிணை மசோதாவின் மீது பேசிய பிரகாசம், “வ.ஆ. மாவட்டம், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் கூடவே இராஜாஜியையும் சேர்த்து எடுத்துக் கொள்வோம் ஏனென்றால் இராஜாஜியும் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட தெலுங்கர்தான்” என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் இராஜாஜி, பிரகாசம் ஆங்கிலத்தில் பேசவே இராஜாஜியும் ஆங்கிலத்தில் ““You take me or Hosur”” (நீங்கள் என்னை எடுத்துக் கொள்ளப் போகிறீர்களா அல்லது ஓசூரையா?) என்று கேட்டார். அதற்கு பதிலளித்த பிரகாசம், “ஓசூரையும் எடுத்துக் கொள்வோம். உங்களையும் அழைத்துக் கொள்வோம்” என்றார். (சட்டமன்ற விவாதங்கள் பக். 342, 343 நாள் 16.07.1953)
புதுதில்லியில் நாடாளுமன்றத்தில் ஆந்திர பிரிவினை மசோதாவின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப் பினர் எ°.வி.இராமசாமி, “சென்னை மாகாணத்தில் கடந்த பல ஆண்டுகளாக முதலமைச்சர்களாக இருந்தவர்களில் இரண்டு பேர்தான் தமிழர்கள். ஒருவர் டாக்டர் சுப்பராயன். மற்றொருவர் இராஜாஜி” என்று கூறினார்.
இதற்கு மறுப்பு தெரிவித்த எல்லூரு நாடாளுமன்ற உறுப்பினர் பி.எஸ்.மூர்த்தி, “இராஜாஜி தெலுங்கர் அவரை நீங்கள் உரிமைக் கொண் டாடக்கூடாது” என்றார்.
“அவர் தெலுங்கு மனிதரே தான் அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். நாங்கள் தான் அவரை உங்களிடம் விட்டு வைத்தோம் என்று மீண்டும் கூறினார். சக்ரவர்த்தி என்பது அவரது குடும்பப் பெயர் தான். அதை வைத்து ஏமாற வேண்டாம்” என்றும் கூறினார். (நாடாளுமன்ற விவாதங்கள் பக். 1530 நாள் 22.08.1953)
இராஜாஜி தெலுங்கர்தான் என்பது, சட்டமன்றப் பதிவேட்டிலும், நாடாளுமன்றப் பதிவேட்டிலும் இடம் பெற்றுள்ளது. ம.பொ.சி. தன்னுடைய சுயநல அரசியலுக்காக இராஜாஜியைத் தமிழ்ப் பார்ப்பனர் என்று கூறி தமிழர்களை ஏமாற்றி விட்டார்.
ஆந்திர மசோதாவில் இராஜாஜி ஆந்திரர் களுக்குச் சார்பாகவே அந்த மசோதாவை தயாரித் திருப்பது மேற்கண்ட சட்டமன்ற உரைகளிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம். சென்னை நகர் பிரச்சினையிலும் இராஜாஜி ஆந்திரர்களுக்குச் சார்பாக இருந்தார் என்பதையும் ம.பொ.சி.யின் எனது போராட்டம் நூலே சாட்சியாக உள்ளது.
இராஜாஜியின் ஊசலாட்டம் என்ற தலைப்பில் ம.பொ.சி கூறுவதாவது.
“மாநகராட்சியின் சிறப்புக் கூட்டம் நடைபெற விருக்கும் செய்தியைப் பத்திரிக்கைகளில் பார்த்ததும் மேயரையும் என்னையும் இராஜாஜி தமது இல்லத் திற்கு அழைத்துப் பேசினார்.
‘ஆந்திர அரசுக்குத் தற்காலிகமாகக் கூட சென்னையில் இடம் தரக் கூடாது’ என்ற வாசகத்தைத் தீர்மானத்திலிருந்து நீக்கி விடும்படி மேயரையும் என்னையும் இராஜாஜி கேட்டுக் கொண்டார்” (ம.பொ.சி. எனது போராட்டம் பக் 632) இதற்குப் பொருள் என்ன? ஆந்திரர்களுக்குச் சென்னையில் தற்காலிகத் தலைநகரமாக இருக்க இடம் தர வேண்டும் என்பது தானே.
பிரிந்து செல்லும் ஆந்திர சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களுக்குப் பிரிவு உபச்சார விழா 30.7.53 அன்று பேரவையில் நடைபெற்றது. அப்போது பேசிய பிரகாசம் அவர்கள், “இராஜாஜி ஆந்திராவைச் சேர்ந்தவர் அவரை நாங்கள் அழைத்துக் கொள்வோம்” என்று கூறினார்.
அன்று பேரவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் அ.கோவிந்தசாமி, ஆந்திர உறுப்பினர்களைப் பாராட்டி விட்டு முடிக்கும் தறுவாயில், “கடைசியாக ஒரு வேண்டுகோள்; கனம் பிரகாசம் அவர்கள் பேசும்போது சொன்னார், கனம் இராஜாஜி அவர்களும் ஆந்திராவைச் சேர்ந்தவர் தான் என்றும், அதனால் தன்னுடன் அழைப்பேன் என்றும் சொன்னார்.
அவ்விதம் அழைத்து கனம் இராஜாஜி அந்த நாட்டிற்குப் போய் விட்டால் சந்தோஷமாக இருக்கும். நாட்டில் குழப்பம் இருக்காது என்று சொல்லிக் கொண்டு இத்துடன் முடித்து கொள்கிறேன்” என்றார்.
(ஆதாரம்: சட்டப்பேரவை நடவடிக்கைகள் பக். 1807 நாள் 30.7.1953) அன்று ம.பொ.சி.யும் சட்ட மேலவையில் தான் வீற்றிருந்தார்.
இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் இராஜாஜி தெலுங்குப் பார்ப்பனர் என்பதும் அவருடைய செயல்பாடுகள் ஆந்திரர்களுக்கு ஆதரவாகவே இருந்தது என்பதும் வெளிப்படையான உண்மையாகும். ம.பொ.சி. தன்னுடைய சுயநலத் திற்காக இராஜாஜி தமிழ்ப் பார்ப்பனர் என்ற பொய்யைக் கட்டவிழ்த்தார்.
அதை நம்பிய முனைவர் அருகோ, வழக்குரைஞர் பா.குப்பன், பழ. நெடுமாறன், பெ.மணியரசன், ராஜேந்திர சோழன் உள்ளிட்ட தமிழ்த் தேசியவாதிகள் உண்மையைக் கண்டறியாமல். ம.பொ.சி சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பக் கூறிவருவது தமிழ்த்தேசியம் அடைவதற்கு எந்த வகையிலும் பயன்படாது.
இராஜாஜி சட்டமன்றத்திற்கு வெளியிலும் வடக் கெல்லைப் போராட்டத்திற்கு ஆதரவாக இல்லை என்பதை ம.பொ.சியின் எனது போராட்டம் நூலே சாட்சி. “முதலமைச்சர் இராஜாஜியைச் சந்தித்துப் பேசி, சித்தூர் மாவட்டத்தைத் தகராறுக்கிடமான பிரதேசம் என்றறிவிக்குமாறு பிரதமர் நேருவிடம் தமக்குள்ள செல்வாக்கை பயன்படுத்துமாறு மீண்டும் ஒரு முறை அவரை வற்புறுத்திக் கேட்க விரும்பினேன். அதன்படி 26.6.53 இல் முதல்வர் இராஜாஜியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்......”
“இப்பிரச்சினையில் தமக்குள்ள சங்கடத்தை மற்றொரு முறையும் அவர் எனக்கு விளக்கினார். தமது அமைச்சரவையில் சரிபாதிப்பேர் ஆந்திரராயிருப் பதாலும், சட்டமன்றக் காங்கிரசு கட்சிக் குள்ளேயும் சரி பாதிப்பேர் தமிழரல்லாதாராக இருப்பதாலும் ஆந்திரர் நிலைக்கு எதிராக தமிழர் மட்டுமே நடத்தும் எல்லைக் கிளர்ச்சிக்கு ஆதரவாக முதல்வர் என்ற முறையில் தாம் எதையும் செய்ய இயலாமல் இருப்பதை எனக்கு உணர்த்தினார்”.
(ம.பொ.சி. எனது போராட்டம் பக் 659) இது இராஜாஜியின் ஆந்திரர்களுக்குச் சார்பான போக்கேயாகும்.
(தொடரும்)