கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

டெங்கு, காலராவைப் போல் சனாதனம் ஒரு நோய். அது ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். கடந்த 2023, செப்டம்பரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், உதயநிதி ஸ்டாலின் பேசிய இந்த கருத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சங்கிகளும் பார்ப்பனர்களும் கொந்தளித்தார்கள். பல்வேறு மாநிலங்களில் உதயநிதி மீது வழக்குகளைத் தொடர்ந்தார்கள். ஒரு பார்ப்பன சாமியார் அவரது தலைக்கு விலை வைத்தார். உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்தார்கள். ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் சாபமிட்டார். அவரது கட்சியினர் கோயில் வாசலில் உதயநிதி படத்தை மிதியடியாகப் போட்டு காலால் மிதித்தனர்.

உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், ஒரு அமைச்சரே சனாதனத்தை எதிர்க்கலாமா? கருத்துச் சுதந்திரத்தை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு நீதிபதி வெளிப்படையாகவே கருத்து தெரிவித்தார். விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றம் உதயநிதி ஸ்டாலினுக்கு தாக்கீது அனுப்பியது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் உறுதியாக நின்றார். மிரட்டலுக்குப் பணியவில்லை. மன்னிப்புக் கேட்க முடியாது என்று மறுத்து விட்டார்.

கடந்த 2025, ஜனவரி 25ஆம் தேதி இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வேதா எம்.திருவேதி மற்றும் பிரசன்னா பி வாலே இந்த ரிட் மனுக்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்களை நோக்கி கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த ரிட் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

சனாதன எதிர்ப்பு என்பதே கிரிமினல் குற்றம் என்றும், உதயநிதி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், மதச் சுதந்திரத்துக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள சட்டப் பிரிவு 25-க்கு எதிரானது என்றும் மனுதாரர்கள் கோரினார்கள். அதுமட்டுமல்லாமல் மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் குற்றவாளிகள் என்றும், மாநாட்டை நடத்திய அமைப்புக்கு அந்நிய நாட்டு தீவிரவாதிகளிடம் இருந்து நிதி வந்துள்ளதா என்று சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரான பேச்சு அல்ல, இதை நீதிமன்றம் விசாரிக்க தயாராக இல்லை என்று நீதிபதிகள் அறிவித்ததை தொடர்ந்து மனுதாரர்கள் தங்கள் மனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளனர். நீதிபதிகளின் கோபத்தை உணர்ந்து மனுதாரர்கள் தங்கள் மனுவைத் திரும்பப் பெற்றதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. இந்த வழக்கில் ஒன்றிய அரசின் சார்பாக மூத்த வழக்கறிஞர்களே உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வாதிட்டார்கள் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும். உச்ச நீதிமன்றம் தற்போது இந்த அமர்வில் சட்ட விரோதம் கிடையாது என்று கூறினாலும் கடந்த 2024 மார்ச் மாதம் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது சட்ட விரோதப் பேச்சு என்று நீதிபதி கூறினார்.

சனாதன தர்மத்தை நியாயப்படுத்தும் வகையில் தனது கருத்துகளைப் பதிவு செய்தார். அதைத் தொடர்ந்து நீதிமன்ற வரலாற்றில் இல்லாத அதிசயம் ஒன்றும் நடந்தது. நீதிபதியின் கருத்துக்கள் கடும் கண்டனத்திற்கு உள்ளானதால், இணையத்தில் வெளியான தீர்ப்பு நகலை (மார்ச் 09.2024) நீதிபதி தானாகவே திருத்திக் கொண்டார். தீர்ப்பு நகலை திருத்த வேண்டும் என்று சொன்னால் மீண்டும் நீதிமன்றம் வழியாகவே திருத்த வேண்டும் என்ற சட்ட வழிமுறையை அப்பட்டமாக மீறினார் நீதிபதி அனிதா சுமந்த்.

சனாதனம் என்றால் அது வர்ணாசிரம தர்மம்தான் என்று வேத மத குருவாகப் போற்றப்படும் காஞ்சி சங்கராச்சாரி சந்திரசேகர சரஸ்வதியே எழுத்து மூலமாகப் பதிவு செய்திருப்பதையும் நாம் சுட்டிக் காட்டியாக வேண்டும். நாடு முழுவதும் வழக்குகளைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினை மிரட்டி திமுகவுக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என்று கனவு கண்ட பார்ப்பனிய சக்திகளுக்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சரியான பதிலடியைத் தந்திருக்கிறது. இந்த சலசலப்புகளுக்கு அஞ்சாமல் கொள்கை உறுதியுடன் நின்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறோம்.

- விடுதலை இராசேந்திரன்