பல நேரங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் காவல்துறையினர் தளைப்படுத்தி தம்முன்னால் நிறுத்தும் அனைவரையும் காவலில் வைக்க ஆணை யிடும எந்திரம் போல் செயல்படுகிறார்கள். தனக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை யும், அதில் சொல்லப்பட்டுள்ள தண்டனைச் சட்ட விதிகளும், காவல்துறை அதிகாரியின் தளைப்படுத்தல் குறிப்புகளும் ஒன்றுக்கொன்று ஒத்திசைந்து போகிறதா என்றுகூடப் பார்க்காமல் காவலில்வைக்கும் இயந்திரம் போல் தம்முன் நிறுத்தப்பட்டவரை நீதிமன்ற காவ லுக்கு அனுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் கள்.
நமது சுவரொட்டி வழக்கிலும் அதுதான் நடந் துள்ளது.
“20 தமிழர் இனப்படுகொலை !
தமிழ்த்தேசியமே தற்காப்பு
கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர்
தமிழர் உரிமைகள் பறிக்கின்றனர்.
தமிழர்களைத் தாக்கி அழிக்கின்றனர் - ஏன் ?
இந்தியாவை நம்பியதால் அனாதை ஆனோம்.
திராவிடத்தை ஏற்றதால் ஏமாளி ஆனோம்.
தமிழ்த் தேசியமே தற்காப்பு ஆயுதம்”
என்ற வாசகங்கள் அடங்கிய தமிழ்த்தேசிய பேரியக் கத்தின் சுவரொட்டிக்காகவே இந்த வழக்கு.
இந்தச் சுவரொட்டியைத் தயாரித்து ஒட்டச் சொன்னவர் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், ஒட்டியவர் தமிழ்த் தேசியப் பேரியக்க திருச்சி மாநகரச் செயலாளர் மூ.த.கவித்துவன் என்று திருச்சி கன்டோண்மென்ட் காவல் நிலையத்தினர் முதல் தகவல் அறிக்கை அணியம் செய்து தோழர் கவித் துவனை 23.4.2015 அன்று பிற்பகல் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
சுவரொட்டிச் சொற்கள் பல்வேறு இனங்களுக்கு இடையே பகையை மூட்டிவிடுகிறது என்பதால் இந்தி யத் தண்டனைச் சட்டப் பிரிவு 153Aபடி தண்டனைக் குரியக் குற்றம் என்றும், பொது இடங்களில் சுவ ரொட்டி ஒட்டி பொது இடத்தை அசிங்கப் படுத்தி விட்டதால் 3 TNO PPD Act குற்றச்செயல் என்றும், முதல்தகவல் அறிக்கை கூறியது.
இக்குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்முன்னால் நிறுத்தப்பட்ட தோழர் கவித்துவனை நீதிமன்றக் காவ லில் வைத்து சிறைக்கு அனுப்புவது சரியா, இல்லை முதல் தகவல் அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட வாசகத்திற்கும், முதல் தகவல் அறிக்கையில் சொல்லப் பட்ட தண்டனைச் சட்ட பிரிவுக்கும் முதல் நிலை பொருத்தமாவது இருக்கிறதா, என்றுகூட பார்க்காமல் முதல் தகவல் அறிக்கையை ஏற்றுக் கொண்டு வழக் கைப் பதிவு செய்து தோழர் கவித்துவனை சிறைக்கு அனுப்பினார்.
முதல் தகவல் அறிக்கையானது வழக்குப் பதிவு செய்யத் தகுதியா னதா என்று பார்க்காமல் நடுவர் மன்ற நீதிபதிகள் சிறைப்படுத்தும் இயந்திரங்களாக (ரிமான்டிங் மிசின்) செயல்படக்கூடாது என பல்வேறு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கண்டித்திருக்கின்றன.
எடுத்துக்காட்டாக,அல் மோகன் தாஸ் - எதிர் - மேற்கு வங்க அரசாங்கம் என்ற வழக்கில் 1968 அக்டோபர் 25-ல் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கீழ்வருமாறு கூறு கிறது.
“விசாரணை மேற்கொள்ளும் ஒரு நடுவர்மன்ற நீதிபதி தனக்கு அளிக்கப்படும் அறிக்கையைப் பதிவு செய்துகொள்ளும் இயந்திர மாக (ரிக்கார்டிங் மிசின்) செயல் படு வதற்காக அமர்த்தப்படவில்லை” என்று கூறுகிறது.
அதே போல் ஏ.பி.ராகவன்-- எதிர் - எம்.எச். அப்பாஸ் என்ற வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் இன்னும் தெளிவாக இதனைக் கூறுகிறது.
“ஒரு நீதிமன்ற நடுவர் வெறும் அஞ்சல் அலுவலகம் போல் (போஸ்ட் ஆபீஸ்) செயல்படக் கூடாது என்பதில் எந்த ஐயமும் இல்லை. தனக்கு முன்னால் வைக் கப்பட்டுள்ள வழக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றத்துக்கு அனுப்புவ தற்கு தகுதியானதா என முடிவு செய்த பிறகே அவ்வழக்கை பதிவு செய்யவேண்டும்” என்கிறது. (1978, 1 SCR, 287)
ஆனால், பல குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதிகளுக்கு தனக்கு இப்படி ஓர் அதிகாரம் இருப்பதே தெரியுமா என்பது தெரியவில்லை.
இச்சுவரொட்டி ஒட்டப்பட்டு நான்கு நாட்களுக்கு பிறகே இவ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. முதல் தகவல் அறிக்கைப்படி இச் சுவரொட்டி ஒட்டியதால் திருச்சி யில் பொது இடம் அசிங்கப் பட்டுவிட்டது என்று யாரும் புகார் சொல்லவில்லை. ஏனெனில் சுவ ரொட்டி ஒட்டியதால் பொது இடம் அசிங்கப்பட்டுவிட்டது என ஒருவர் சொல்லி அதன் மீது வழக்கு பதிவதாக இருந்தால் காவல் நிலை யத்திற்கு வேறு எந்த வேலையும் செய்ய முடியாது.
திருச்சியில் மட்டுமல்ல, மிகச் சிறிய நகரங்களில் கூட திரும்பிய பக்கமெல்லாம் சுவரொட்டி கள் தான். அவற்றுள் ஆபாச சுவரொட் டிகள், அருவருப்பான புகழ்பாடும் சுவரொட்டிகள் போன்றவை ஏரா ளம்.
பிணை மனுவில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தோழர் பானு மதி திருச்சி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கூறியது போல் சுவரொட்டி ஒட்டியதால் நகரம் அசிங்கப்பட்டுவிட்டது என வழக்கு தொடுத்து சிறைப்படுத்தவதாக இருந்தால் தமிழ்நாட்டில் சிறைச் சாலைகளே போதாது.
பொதுமனிதருக்கு கூட எளி தில் புரியும் இந்த உண்மை. திருச்சி குற்றவியல் நீதிமன்ற நடுவருக்கு தெரியாமல் போனது வியப்பளிக் கிறது.
சுவரொட்டி வாசகங்கள் இ.த.ச. பிரிவு 153 A -ன் கீழ் வருமா என்ற முதல் நிலை ஆய்வைக்கூட நீதி மன்ற நடுவர் செய்ததாகத் தெரிய வில்லை. எந்திர கதியில் வழக்கைப் பதிவு செய்து தன்முன் நிறுத்தப் பட்ட தோழர் கவித்துவனை சிறைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
நியாயமற்றமுறையில், தேவையே இல்லாமல் 11 நாட்கள் திருச்சி நடுவண் சிறையில் இருந்து விட்டு, உயர் நீதிமன்றத்தில் பிணை பெற்று கடந்த 4.5.2015 அன்று தோழர் கவித்துவன் விடுதலை யானார்.
இவ்வழக்கு அப்பட்டமான சனநாயக உரிமைப் பறிப்பு - தமிழின உரிமை மறுப்பு, மட்டுமின்றி சட் டத்திற்கே புறம்பானது என்பதால் முதல் குற்றம் சாட்டப்பட்டவரான தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலை வர் தோழர் பெ.ம. முன்பிணை வாங்க வில்லை. கைதுக்கு அணிய மாக இருந்தார். அதே நிலை இப் போதும் தொடர்கிறது.
முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள இ.த.ச.பிரிவு 153 A இங்கு முகாமையாக விவாதிக்கப் படுகிறது.
இந்திய அரசமைப்புச்சட்ட உறுப்பு 19 (1)(a) அனைத்துக் குடி மக்களுக்கும் கருத்துரிமையை உறுதி செய்கிறது. அதே நேரத்தில் 19(2) இக்கருத்துரிமைக்கு நியாயமான வரம்புகளையும் விதிக்கிறது.
இந்திய தண்டனைச் சட்ட விதிகளில் சில இக்கருத்துரிமையில் குறிக்கிடும்போது அல்லது இ.த.ச. படியான வழக்குகள் இக்கருத்துரி மையில் குறுக்கிடும்போது அது 19(2)ன் படி நியாயமான வரம்பு தானா என்பதை நீதிமன்றங்கள் முடிவுசெய்கின்றன.
அந்த வகையில் இ.த.ச பிரிவு 153 A அண்மைக்காலமாக கடும் திறனாய்வுக்கு உட்பட்டு வருகிறது. ஏனெனில் பல்வேறு மாநில அரசு களும் அவற்றின் காவல் துறையின ரும் பல அறிஞர்கள் அல்லது தலை வர்களின் உரையையோ, நூல் களையோ, அறிக்கைகளையோ இச் சட்டப்பிரிவின் கீழ் குற்றமாக வழக்கு பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.
உலகப் புகழ்பெற்ற ஓவியர் எம்.எப். உசேன், மீது அவரது ஓவி யத்திற்காக இப்பிரிவின் கீழ் வழக்கு மேல் வழக்கு தொடுக்கப்பட்டு ஆரிய இந்துத்துவ அச்சுறுத்தலும் சேர்ந்துக்கொண்டு அவர் இந்தி யாவை விட்டே வெளியேறி வெளி நாட்டில் தஞ்சம் புகுந்ததை அனை வரும் அறிவர்.
எந்தக்கருத்தையும் சமூக நல்லி ணக்கத்திற்கு எதிரானது என வகைப்படுத்தி, தண்டனைக்குரிய குற்றமாக வரையறுக்கும் வகையில் 153 A உருவாக்கப்பட்டுள்ளது. அது கூறுவதாவது,
‘153 A : மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக் களுக்கு இடையே பகைமையை தூண்டுவது மற்றும் நல்லிணக்கப் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கும் செயலில் ஈடுபடுவது.
யாரொருவர்,
(a) மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது வகுப்பு அல்லது வேறு எந்த அடிப் படையிலாயினும் பேசப்பட்ட அல்லது எழுதப்பட்ட சொற்கள் வாயிலாகவோ, அல்லது குறியீடுகள் வாயிலாகவோ, அல்லது கண்ணுறக் கூடிய குறிப்புகள் வழியாகவோ அல்லது வேறுவகையிலோ, பல் வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையிலோ அல்லது சாதிகளுக்கிடையிலோ, அல்லது சமூகங்களுக்கிடையிலோ, பகைமை எண்ணங்களையோ இணக்க குலைவையோ, வெறுப் பையோ அல்லது கசப்பையோ உரு வாக்கினாலோ அல்லது உருவாக்க முனைந்தாலோ
(b) அல்லது பல்வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையேயோ, அல்லது சாதிகளுக்கிடையையோ, அல்லது சமூகங்களுக்கிடையேயோ, இணக் கத்தை பாதுகாப்பதற்கு புறம் பான செயலில் ஈடுபட்டாலோ, அவரது செயல் பொது அமைத்திக்கு ஊறு விளைவித்தாலோ, அல்லது ஊறு விளைவிக்கும் வாய்ப்பு இருந் தாலோ,
அவர் மூன்றாண்டு சிறை அல் லது அபராதம் அல்லது இரண் டும் சேர்த்து தண்டனை வழங்கப்படு வார்”
இப்பிரிவின் வாசகத்தை பார்த் தாலே எந்தச் செயலையும் தண்ட னைக்குரிய குற்றமாக வரையறுத்து விட முடியும் என்பது புலனாகும். இது ஆட்சியாளர்களுக்கும் காவல் துறைக்கும் மிக விரிவான கேள்வி முறையற்ற அதிகாரங்கள் வழங்கு வது தெளிவாகும்.
153 A ன் கீழ் தொடுக்கப்படும் வழக்குகளில் பெரும்பாலானவை தள்ளுபடி ஆவதற்கான காரணமும் இதன் வரையறுப்பிலேயே இருக்கி றது. ஆயினும் மிக நீண்டகாலம் நடக்கும் இந்த வழக்குளால் கால இழப்புக்கும் பொருள் இழப்புக்கும், மனஉளைச்சலுக்கும் ஆளாவோர் ஏராளம்.
இச்சட்டப்பிரிவு உண்மையில் அரசமைப்புச் சட்டத்திற்கே எதிரா னது என்பது இப்பிரிவின் வாசகங் களிலிருந்தும், அதன்படி தொடுக்கப்பட்ட வழக்குளிலிருந்துமே தெளிவாகும்.
கருத்துரிமைக்கு எதிரான தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின் 66 (A) பிரிவை நீக்கி உச்ச நீதி மன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பு இ.த.ச. 153 A வுக்கும் பொருந் தக்கூடியதே ஆகும். 2015 மார்ச் 24 அன்று சலமேஸ்வர் மற்றும் ரோகின்டன் நாரிமன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு தகவல் தொழில் நுட்பச் சட்டபிரிவு 66 A இந்திய அரசமைப்பு சட்டத்தின் உறுப்பு 19 (1) (a) வழங்கும் கருத்துரிமைக்கு எதிரானது, நியாயமற்ற வரம்பு விதிக்ககூடியது எனக் கூறி 66கி பிரிவை நீக்கியது.
தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66 A ‘பிறர்மீது அருவருப் பான அச்சுறுத்தக்கூடிய, ஆபத்து விளைவிக்ககூடிய, இழிவுப் படுத்தக் கூடிய, மனதை காயப்படுத்தக்கூடிய, தொந்தரவு தரக்கூடிய, பகைமை யைப் பரப்பக்கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய, இனவாதத் தன்மை யுடைய, பல்வேறு மொழி இனங் களுக்கிடையில் பகைமையைத் தூண்டக்கூடிய அல்லது தீமை பயக் கக்கூடிய அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய, அல்லது வேறு வகையில் எதிர்க்கப் பட வேண்டிய மின்னணு தகவல் பரிமாற்றங்கள் தண்டனைக்குரிய குற்றங்கள்” என வரையறுக்கிறது.
இவ்வாசகங்கள் பெரிதும் இ.த.ச. 153 A உடன் ஒத்து இருப்பதைப் புரிந்துகொள்ளலாம்.
ஒரே வேறுபாடு த.தொ.ச. 66 A மின்னணு தகவல் பரிமாற்றங்களை குறிக்கிறது. இ.த.ச 153 A அனைத்து வகை தகவல் பரிமாற்றங்களையும் குறிக்கிறது.
த.தொ.த.ச. பிரிவு 66 A காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரத்தை வழங்கி கருத்துரிமையை பறிக்கக் கூடியதாக விளங்குகிறது என்ற உச்ச நீதிமன்றத்தின் முடிவு இ.த.ச பிரிவு 153Aக்கும் பொருந்த கூடி யதே ஆகும்.
எனவே, இந்திய அரசு இந்தியத் தண்டனைச்சட்டத்திலிருந்து 153 A பிரிவை நீக்கி சட்டத்திருத்தம் பிறப்பிக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து விசாணை நடத்தி இப்பிரிவு 153A ஐ நீக்க வேண்டும்.
சாதிகளுக்கிடையிலோ, சமூகங் களுக்கிடையிலோ பகைமையை ஏற்படுத்தக்கூடிய எழுத்துகளோ பேச்சுகளோ வராதா? அப்படி நிகழ்ந்தால் அவற்றை தண்டிப்ப தற்கு சட்டம் வேண்டாமா என்ற கேள்வி எழலாம்.
இவ்வகை குற்றச்செயல்களை விசாரித்து தண்டனை வழங்க பல்வேறு பிரிவுகள் இருக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(2) இவ்வகை குற்றச்செயல் களுக்கு தண்டனை வழங்கக் கூடியதாக, இன்னும் சொல்லப் போனால், ஒரு வகையில் காவல் துறைக்கு விரிவான அதிகாரம் வழங்கக்கூடியதாக விளங்குகிறது. அப்பிரிவு வருமாறு
”505(2), வகுப்புகளுக்கிடையே பகைமையை, வெறுப்பை அல்லது கசப்பை உருவாக்கக்கூடிய அல்லது வளர்க்கக்கூடிய அறிக்கைகள் -
யாரொருவர் மதம், இனம், பிறப்பிடம், வாழிடம், மொழி, சாதி அல்லது சமூகம் அல்லது வேறு அடிப்படையில் பல்வேறு மத, இன, மொழி அல்லது பிரதேச குழுக்களுக்கிடையையோ அல்லது சாதிகளுக்குகிடையிலோ அல்லது வகுப்புகளுக்கிடையிலோ பகை மையை அல்லது வெறுப்பை அல்லது கசப்பை ஏற்படுத்தும் நோக்கோடு அறிக்கைகள் அல்லது சுற்றறிக்கைகள் அல்லது உரைகள் போன்றவற்றை உருவாக்கி வெளி யிட்டால் அல்லது வதந்தியைப் பரப்பினால் அல்லது அச்சுறுத்தும் செய்தியைப் பரப்பினால் அவர் மூன்றாண்டு சிறைவாசம் அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக பெற தக்கவர் ஆவார்.
விதிவிலக்கு
மேற்சொன்ன குற்றச்செயலில் ஈடுபடும் நோக்கமின்றி நல்லெண் ணத்தின் அடிப்படையில் உரு வாக்கி வெளியிடப்படும் அறிக்கை கள் அல்லது உரைகள் அல்லது சுற்றறிக்கைகள் அல்லது வதந்திகள் இப்பிரிவின் படி வரையறுக்கப்படும் குற்றச்செயல் ஆகாது”
இப்பிரிவானது, 153A-ல் கூறப் பட்டுள்ள அனைத்து வாசகங்களை யும் அப்படியே கொண்டிருந்தாலும், அதில் கூறப்பட்டுள்ள விதிவிலக்கு காவல் துறையின் கட்டற்ற, ஒரு தலைச்சார்பான அதிகாரத்திற்கு ஓரளவாவது வரம்புகட்டுவதாக அமைந்துள்ளது.
மேலும் 153Aன் படி தொடுக்கப் பட்ட வழக்குகளின் மீது வழங்கப் பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்பிரிவின் கீழ் வரையறுக்கப்படும் குற்றங்கள் தற்செயலானதாக அமையாமல் உள்நோக்கத்தோடு செய்யப்பட்டதாக மெய்ப்பிக்கப்பட்டால் தான் குற்றச்சாட்டு மெய்பிக்கப்பட்டதாக பொருள் கொள்ள வேண்டும். உள் நோக்கம் இல்லாமல் நடக்கும் இப்பிரிவில் வரையறுக்கப்பட்ட செயல்கள் தண்டனைக்குரிய குற்ற மாகாது என தெளிவுபடுத்தியுள் ளன. (பிலால் அகமது கலூ- எதிர்-ஆந்திரப்பிரதேச அரசு- 6.8.1997. மற்றும் மன்சார் சையீது கான்-- எதிர் - மராட்டிய மாநில அரசு 5.4. 2007 தீர்ப்புகள்).
உள்நோக்கத்தோடு செய்யப் படாத சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் எந்த செயலும் 153Aன் கீழ் வராது என்று ஆனபிறகு இ.த.ச.பிரிவு 505(2) இவ்வகை குற்றச் செயல்களுக்கு போதுமானது என்பது தெளிவாகும்.
எனவே, இந்தியத் தண்டனைச் சட்ட புத்தகத்திலிருந்து பிரிவு 153A உடனடியாக கிழித்தெறியப் பட வேண்டிய ஒன்றாகும்.
இது ஒருபுறம் இருக்க, நமது சுவரொட்டி வாசகங்கள் 153A ன் கீழ் வருமா என்பதை அடுத்து பார்க்கலாம்.
மேலே எடுத்துக்காட்டப்பட்ட பிலால் அகமது கலூ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். ஆனந்த், மற்றும் கே.ட்டி. தாமஸ், ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த தீலீப்பு கவனிக்கத்தக்கது.
பிலால் அகமது கலூ என்ற காசுமீரி இளைஞர் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டு அவர் மீது தடா உள்ளிட்ட பல்வேறு பிரிவு களில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அவற்றுள் 153A குறித்து இத்தீர்ப்பு முன்வைக்கும் விவாதம் கவனிக்கத் தக்கது.
கலூ தடைசெய்யப்பட்ட அல் ஜிகாத் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். ஐதராபாத்தில் பல்வேறு முஸ்லீம் இளைஞர்களைச் சந்தித்து காசுமீரில் இந்திய ராணுவம் காசு மீரி முஸ்லிம் இளைஞர்களுக்கு எதி ராக பல்வேறு அடடூழியங்கள் செய் தது என பரப்புரை மேற் கொண் டார் என்பது அவர் மீதான குற்றச் சாட்டு. காசுமீரி முஸ்லீம்களுக்கு எதிராக இந்திய இராணுவம் அட்டூழியங்கள் செய்ததாக அவர் செய்த பரப்புரையே 153A ன் கீழ் குற்றமாக முன்வைக்கப்பட்டது.
இது குறித்து தீர்ப்புரைத்த உச்சநீதி மன்றம் ‘ஒரு சமூகத்தின் அல்லது ஒரு குழுவின் உணர்ச்சி யைத் தூண்டுவது மட்டும் 153Aன் படி குற்றமாகாது. ஏதாவது இன் னொரு சமூகம் அல்லது பிரிவுக்கு எதிராக பகையைத் தூண்டும் வாசகம் இருந்தால்தான் 153A செயல்படலாம்” என்று கூறி கலூ மீதான 153A குற்றச்சாட்டைத் தள்ளுபடி செய்தது.
இதை விட மேலே காட்டப் பட்ட மான்சார் சைபீத்கான் வழக் கின் தீர்ப்பு இன்னும் தெளிவானது.
“சிவாஜி, இஸ்லாமிய இந்தியா வில் இந்து அரசன்” என்ற தலைப் பில் பேராசரியர் ஜேம்ஸ் லைன் எழுதிய நூலை ஆக்ஸ்போர்ட் பல் கலை கழக அச்சகம், அதன் தலைமை நிர்வாகி மன்சார் சையது கான் என்பவர் வழியாக வெளி யிட்டது. இந்நூலின் வாசகங்கள் மராட்டியர்களை இழிவுபடுத்தி புண்படுத்திவிட்டது என்பது தான் வழக்கு.
ஒரு சமூகம் அல்லது அந்த சமூகத்தின் தலைவன் இன்னொரு சமூகத்திற்கு எதிராக சில செயல்கள் செய்ததாக வரலாற்று ஆய்வு என்ற அடிப்படையில் ஒருவர் எழு தினால் அது அச்சமூகத்திற்கு எதி ராக பகைமை பரப்பியதாக ஆகாது என்று இத்தீர்ப்பு தெளிவுபடுத்தியது.
அதுமட்டுமின்றி பகவதி சரன் சுக்ளா வழக்கை மேற்கோள் காட்டி இத்தீர்ப்பு கூறுவது கவனம் கொள்ளதக்கது. ‘வெளியிடப்படும் சொற்களின் விளைவுகளை மதிப் பிடும்போது மனவலிமை உள்ள, உறுதியான மற்றும் நெஞ்சுரம் உள்ள மனிதரின் மனதை அச் சொற்கள் எப்படி பாதித்தது என் பதை வைத்து மதிப்பிட வேண் டுமே அன்றி பலவீனமாக மற்றும் ஊசலாடும் மனதை உடை யவர் நிலையிலிருந்து ஆய்வு செய்யக் கூடாது. பலவீனமான மனிதர்கள் எல்லா எதிர்க் கருத்துகளிலும் அபாயம் இருப்பதாக கருதிக் கொள் வார்கள். அவர்களது மனநிலையை அளவு கோலாகக் கொண்டு குற்றத் தின் தன்மையை மதிப்பிடக்கூடாது.” என்று கூறுகிறது.
இதன் வெளிச்சத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சுவரொட்டி வாசகங்களை ஆய்வு செய்யலாம்.
இச்சுவரொட்டி, கன்னடர், மலையாளி, தெலுங்கர், சிங்களர் ஆகிய தேசிய இனங்களை சேர்ந்த வர்கள் தமிழர் உரிமையைப் பறிக் கின்றனர், தமிழர்களைத் தாக்கி அழிக்கின்றனர் என்ற வர லாற்றுத் தகவல்களைக் கூறுகிறது. நடப்பு நிகழ்வுகளையும் கூறுகிறது. இச் சொற்களுக்கான விளக்கங்களை தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒவ்வொரு நிகழ்வின் ஊடாக ஆதாரத் தோடு எடுத்துக்காட்டிப் பரப்புரை செய்துவருகிறது.
இன்றைய நிலையில் பெரும் பாலான தமிழ்நாட்டு மக்கள் இக் கூற்றையும்,மதிப்பீட்டையும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளனர்.
ஒரு சிலர் இக்கருத்தில் வேறு படக்கூடும். கர்நாடக அரசு, கேரள அரசு, ஆந்திர அரசு, சிங்கள அரசு ஆகியவைதான் தமிழருக்கெதிராக செயல்படுகின்றனவே தவிர அவ் வினத்தார் அவ்வாறு செயல்பட வில்லை எனக் கருதிக் கொண்டிருக்கலாம். அது உண்மை நிலையை புரிந்துக் கொண்டதாகாது என்ற போதிலும் அவ்வாறு கருதிக் கொள்வதற்கு, அதனை வெளிப் படுத்துவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு.
அது வரலாற்றைப் பற்றிய, நிகழ்வுகள் குறித்த இன்னொரு பார்வை.
சிவாஜி குறித்த நூலில் சிவாஜி யின் ஆட்சியில் நடைப் பெற்றதாக அந்நூலாசிரியர் சொல்லவது அவ ரது வரலாற்று பார்வைதானே தவிர,இனங்களுக்கிடையே பகைமை மூட்டியதாக ஆகாது என உச்ச நீதிமன்றம் கூறிய மதிப்பீடு நமது சுவரொட்டி வாசகத்திற்கும் பொருந்தக்கூடியதே.
ஏனெனில் இன்னின்ன தேசிய இனங்களெல்லாம் தமிழருக்குப் பகையாக நடந்துக்கொள்கின்றன. எனவே அவர்களையெல்லாம் திருப்பித் தாக்குங்கள் அல்லது அம் மாநிலத்தின் மீது தாக்குதல் நடத் துங்கள் என்று இச்சுவ ரொட்டி வாசகம் கூறவில்லை. நடந்த நிகழ்வு களைப்பற்றிய வரலாற்று மதிப் பீடே அது. மன்சார் சையீது கான் வழக்குத் தீர்ப்பு வெளிச்சத்தில் நோக்கினால் சுவரொட்டியின் மேற்கண்ட வாசகத்திற்கு 153A பொருந்தாது என்பது தெளிவாகும்.
பிலால் அகமது கலூ வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்புரைத்தது போல் ஐதராபாத் முஸ்லீம் இளை ஞர்களிடம் கலூ இந்திய இராணு வத்தின் அட்டுழியங்களைப்பற்றி பரப்புரை செய்துவிட்டு கூறியது இந்தியா முஸ்லீம்களுக்கு பகை என்பதாகும். இது அவரது மதிப் பீடே தவிர இம்மதிப்பீட்டை பரப்புவதாலேயே சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் குலையும் என எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என அத்தீர்ப்பு உறுதிபட கூறியிருக்கிறது.
அதே போன்றதுதான் பேரியக்க சுவரொட்டி வாசகம்.
அடுத்தடுத்து அண்டை அயல் இனத்தாரால் தமிழர்கள் பாதிப்புக் குள்ளாவதை எடுத்துக்கூறி இத னைத் தடுக்க அல்லது தட்டிக் கேட்க இந்திய அரசு வரவில்லை. எனவே இந்தியாவை நம்பியதால் அனாதையானோம் எனக் கூறு கிறது. அதேபோல், கொடுமையான இழப்புகளை தமிழினம் சந்தித்த போதும் முதன்மை திராவிடக் கட்சிகளான அ.இ.அ.தி.மு.க, தி.மு.க. ஆகியவை வேடிக்கை பார்த்தன. அவர்களது திராவிடம் என்ற கோட்பாடும் தமிழர்களின் தற்காப் புக்கு உதவாமல் ஏமாற்றி விட்டது. எனவே திராவிடத்தை ஏற்றதால் ஏமாளியானோம் எனக்கூறுகிறது. இந்த நிலையில் தமிழ்த் தேசியமேத் தற்காப்பு ஆயுதம் என்ற மாற்றுக் கருத்தியலை முன்வைக்கிறது.
இது இந்தியத்தைப் பற்றிய, திராவிடத்தைப் பற்றிய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மதிப்பீடு. தமிழர்கள் உரிமை பெறுவதற்காக பேரியக்கம் முன்வைக்கும் மாற்று கருத்தியல். இதுவும் எந்த இனப் பகைமையையும் ஊட்டிவிட வில்லை. மாறாக பாதிக்கப்பட்ட வனின் கதறலாக, பாதிக்கப்பட்ட வன் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு கருத்தியலை முன்வைப்ப தாக மட்டுமே உள்ளது.
இது 153Aன் படி இனங்களுக் கிடையே பகைமை மூட்டியதாக குற்றம்சாட்டவே முடியாது.
அரியானா மாநில அரசு - எதிர் - சௌத்ரி பஜன்லால் வழக்கை மேற்கோள் காட்டி மன்சார் சையீது கான் வழக்கில் உச்சநீதி மன்றம் சொல்வது போல் முதல் தகவல் அறிக்கை 153A ன் படியான குற்றங்கள் எதையும் தெளிவுபட எடுத்துக்காட்டாத நிலையில் அந்த முதல் தகவல் அறிக்கையின் மீது புலன் விசாரணையோ, சாட்சியங் களை பதிவு செய்வதோ தேவையற் றது. அந்த முதல் தகவல் அறிக் கையை விசாரணைக்கு தகுதியற் றது என நீக்கம் செய்துவிடலாம்.
இத்தீர்ப்புகளை விட கோபால் கோட்சே - எதிர் - இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் உச்சநீதி மன் றம் கூறிய தீர்ப்பு இன்னும் விரி வானது.
“காந்தி படுகொலையும் நானும்” என்ற கோபால் கோட்சேயின் நூல் பற்றிய வழக்கு அது. இந்த நூல் முஸ்லீம்களுக்கு எதிராகப் பகை மையைஊட்டுவதாகவும், காந்தியை இழிவுபடுத்தி, காந்தி கொலையை நியாயப்படுத்தி ஒட்டுமொத்த இந்திய மக்களை மனம் புண் படுத்திவிட்டதாகவும் முடிவு செய்து தில்லி பிரதேச மாநில அரசு நூலை 153A ன்படி தடை செய்தது.
இவ்வழக்கில் சந்திரசூட், மோடி, மற்றும் பி. தேசாய் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற ஆயம் 6.8.1969-ல் வழங்கிய தீர்ப்பு 153A பிரிவை ஆய்வு செய்கிற எல்லோரும் படிக்க வேண்டிய தீர்ப்புரையாகும்.
சவர்க்காரை மேற்கோள் காட்டி, அக்கூற்றுக்கு ஆதரவு அளித்து கோபால் கோட்சே “முஸ்லீம்கள் இந்தியாவுக்குப் பகை யானவர்கள், சுயமரியாதையுள்ள இந்துக்கள் முஸ்லீம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று அந்நூலில் பல இடங்களில் கூறுவ தாக அத்தீர்ப்புரையே சொல்கிறது. ஆயினும் அது பாகிஸ்தான் பிரிவி னையை ஒட்டி விவாதிக்கப் படுகிற செய்தியே தவிர எந்தக் குறிப்பிட்ட முஸ்லீம்களுக்கு எதிராகவும், ஆயு தம் தூக்கச் சொல்லவில்லை என்று கூறி அந்த வாசகங்கள் 153A ன் படி வரமுடியாதவை என்று அத்தீர்ப் புரை உறுதிபடக் கூறு கிறது.
இதுபோல கோட்சேயின் நூலில் பல இடங்களில் இடம் பெற்றுள்ள அதிர்ச்சி தரும் வாசகங் கைளைக் கூட அது ஒன்றும், மதப் பூசலையோ, இனப்பகையையோ உண்டாக்கிவிடவில்லை என கூறி 153Aன் படியான குற்றச்செயல்கள் அல்ல என வரையறுத்து அந் நூலின் மீதான தடையை நீக்கியது. அதுமட்டுமின்றி நூலாசிரியருக் கும், பதிப்பகத்தாருக்கும் ஒரு தொகையை இழப்பீடாக வழங்கவும் அரசுக்கு ஆணையிட்டது.
இவற்றையெல்லாம் ஆய்வு செய்தால் தமிழ்த் தேசியப் பேரி யக்கம் வெளியிட்ட சுவரொட்டி 153Aன் படி குற்றமாகாது என்பது தெளிவாக விளங்கும்.
எடுத்த எடுப்பிலேயே குற்றவி யல் நடுவர் இந்த முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுத்து குற்றச் சாட்டிலிருந்து தோழர் பெ.ம, மற்றும் தோழர் கவித்துவனை விடுவித்திருக்க வேண்டும்.
இ.த.ச.பிரிவு 153A அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.
சுவரொட்டி வழக்கு 153க்கு பொருந்தாதது.