‘இந்துக்களே ஒன்றுபடுங்கள்’ என்ற பா.ஜ.க.-வின் பெரும்பான்மைவாதம் வெறும் வாக்கு அரசியலுக்கான உத்தி என்பதை வருணாசிரமவாதிகள் மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். “பார்ப்பனர்களே ஒன்றுபடுங்கள், பார்ப்பனர்களே உங்கள் மேலாதிக்கத்தை விட்டுவிடாதீர்கள்” என்பதுதான் அவர்களின் உண்மையான முழக்கம். அந்த முழக்கத்தைக் கர்நாடாகாவிற்கு சென்று எதிரொலித்திருக்கிறார் காஞ்சி காமகோடி பீடத்தின் விஜயேந்திர சரஸ்வதி.
சனவரி 19-ஆம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற ‘அகில கர்நாடகா பிராமண மகாசபா’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியிருக்கும் இவர், “சனாதன தர்மத்தைப் பரப்புவதில் முக்கியப் பங்காற்றுவது பார்ப்பனர்களே. இந்திய விடுதலைக்குப் பிறகு வேத தர்மத்தைப் பரப்ப பார்ப்பனர்கள் நெருக்கடியை எதிர்கொள்கிறார்கள். வைதீக மதம் நிலையாக இருக்கவும், பாரதத்தின் ஆன்மீக மற்றும் கலாசார பெருமைகளைப் பாதுகாக்கவும் பார்ப்பனியத்தின் இருப்பு அவசியம். நிர்வாக மட்டத்தில் பார்ப்பனர்களை அதீத எண்ணிக்கையில் இடம்பெற வேண்டும். அப்போதுதான் சனதான தர்மத்தைப் பரப்ப முடியும். பார்ப்பன சமூகம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.
அவரது பேச்சில் ஒரு இடத்தில் கூட, சாதி ஏற்றத்தாழ்வுகளைக் களைந்து இந்துக்கள் ஒன்றுபட வேண்டும் என்றோ, அனைத்து இந்துக்களின் நலன்கள் குறித்தோ குறிப்பிடவில்லை. பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் மேம்பட்டால் போதும், பார்ப்பனர்கள் அதிகார மையத்தை நிரப்பினால் போதும், பார்ப்பனர்களின் வயிறு நிரம்பினால் போதும் என்று, அவருடைய கவலையெல்லாம் பார்ப்பனர்களைப் பற்றித்தான் இருந்தது. டெங்கு, கொசு, மலேரியாவை போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டுமென்று உதயநிதி பேசியபோது, சனாதன தர்மம் என்பது இந்துக்களின் வாழ்வியல் முறை, அதை ஒழிப்போம் என்று சொல்வதா? என சங்கிகள் கூச்சலிட்டனர். ஆனால் இப்போது சனாதன தர்மமும், பார்ப்பனியமும் வேறு வேறல்ல என்பதை, விஜயேந்திர சரஸ்வதி தெள்ளத்தெளிவாக புரிய வைத்து விட்டார்.
வேத மதத்தை ஏன் பாதுகாக்க வேண்டுமென்று விஜயேந்திர சரஸ்வதி துடிக்கிறார்? “அவனவன் வருணாசிரமங்களுக்குத் தக்கதாக தரும சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கிற நித்திய கருமங்களை நாள்தோறும் சோம்பல் இல்லாமல் செய்ய வேண்டும். அவைகளைச் செய்பவனே மேலான கதியை அடைகிறான்” என்கிறது மனு சாஸ்திரம். அப்படியானால் வேதங்களும் தரும சாஸ்திரங்களுக்கும் எல்லோருக்கும் சொல்லியிருக்கிற அந்த நித்திய கருமங்கள் என்ன? ஓதுதல், ஓதுவித்தல் பணியை பிராமணர்கள் செய்ய வேண்டும், சத்திரியர்கள் போர் புரிய வேண்டும், வைசியர்கள் வணிகம் செய்ய வேண்டும். மேலே இருக்கும் மூன்று வர்ணத்தாருக்கும் அடிமை வேலைகள் செய்வது சூத்திரர்களின் கடமை என்பதுதான் வேதங்கள் விதித்திருக்கும் கட்டளை.
இன்றைய நவீன உலகில் கல்வியும், அறிவியல் முறையிலான வேலைவாய்ப்புகளும் இன்னாருக்குத்தான் இன்ன பணி என்ற சமூக கெடுபிடிகளைத் தகர்த்து விட்டது. ஓதுதலும், ஓதுவித்தலும் மட்டும்தான் பார்ப்பனர்கள் பணி, அதைத்தவிர வேறு எந்த வேலையும் செய்யக் கூடாது என்றால் அதை பார்ப்பன சமூகமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. அவர்களும் கடல் கடந்து பல வேலைகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். சில பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் தொழிலில் கூட ஈடுபடுகிறார்கள். தனியார் மென்பொருள் நிறுவனங்களில் உயர் பதவிகளை நிரப்பியிருக்கிறார்கள்.
அறிவுசார்ந்த, அறிவியல் சார்ந்த வேறு வேலைகளுக்குச் செல்ல இயலாத பார்ப்பனர்களின் நலனுக்காக ஆலயங்களை அவர்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, வேறு எவரும் புகுந்துவிடாத வண்ணம் ஆகமங்களை ஏற்பாடு செய்துகொண்டனர். அது ஒருபக்கம் இருந்தாலும், வேதங்கள் விதித்த ஜாதிக்கொரு கடமை என்ற கட்டளைகளை இனி பார்ப்பனர்களே முழுமையாகப் பின்பற்ற இயலாது என்றபோதிலும், சடங்கு- சம்பிரதாயங்களின் ஊடாக ஜாதிய அமைப்பு முறையை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். சடங்கு- சம்பிரதாயங்களையும் ஒழித்து விட்டால், ஜாதி அமைப்பு உடைந்துவிடும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில்தான், வேத கலாச்சாரத்தைப் பாதுகாக்க வேண்டும், ஆன்மீகத்தைப் பாதுகாக்க வேண்டும் அதற்காக ஒன்றுபடுங்கள் பார்ப்பனர்களே என முழங்கியிருக்கிறார் விஜயேந்திர சரஸ்வதி.
ஆனால் பார்ப்பனர்களிடத்தில் ஒற்றுமை இல்லாமல் அச்சமூகம் பெரும் ஒடுக்குமுறைக்கு உள்ளாவதைப் போலவும், அதிகார மையங்களில் போதிய பிரநிதித்துவம் பெறாத விளிம்பு நிலை சமூகம் போலவும் பொதுப்புத்தியில் பதிய வைக்கிற விஜயேந்திர சரஸ்வதியின் பேச்சு ஆபத்தானது. ஏற்கெனவே அனைத்து அதிகார மையங்களையும் பார்ப்பனர்களே ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள்.
குடியரசுத் தலைவர் செயலகத்தின் 49 பதவிகளில் 39 பேர் பார்ப்பனர்கள். ஒன்றிய அமைச்சரவைச் செயலாளர்கள் 20 பேரில் 17 பேர் பார்ப்பனர்கள். பிரதமர் அலுவலகத்தின் 35 உயரிய பதவிகளில் 31 பேர் பார்ப்பனர்கள். ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்கள் 27 பேரில் 25 பேர் பார்ப்பனர்கள். வெளிநாட்டுக்கான தூதர்கள் 140 பேரும் பார்ப்பனர்கள் மட்டுமே. உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 23 பேர் பார்ப்பனர்கள். நாடு முழுவதும் உள்ள அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்ப்பனர்கள். ஒன்றிய அரசின் அனைத்து அமைச்சகங்களிலும் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்கள் பார்ப்பனர்கள்.
ஜாதி அமைப்பை கட்டிக் காப்பதுதான் பார்ப்பனர்கள் இத்தகைய மேலாதிக்கத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. அதற்காகத்தான் இந்த கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டுமென்று துடிக்கிறார் விஜயேந்திர சரஸ்வதி என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். வருணாசிரம தர்மம் சொல்லும் ஜாதிய வாழ்வியலை விட்டொழித்து, சமத்துவ வாழ்வியலை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் பார்ப்பனிய மேலாதிக்கம் தகரும். சிந்திப்பீர்.
- விடுதலை இராசேந்திரன்