24.12.2024 அன்று கோவையில் நடைபெற்ற புரட்சியாளர்கள் அம்பேத்கர் - பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தோழர் இனியவன் ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..

இந்திய அரசியல் களத்தில் ஜாதி குறித்தான விவாதங்கள் அண்ணல் அம்பேத்கருக்கு முன்பாகவே வெகுவாக தொடங்கி விட்டது. 1917இல் மாண்டேகு - செம்ஸ்போர்ட் குழு உருவாக்கப்பட்டது. முதல் உலகப்போர் முடிவில் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசு அதிகாரத்துவத்தில் இந்தியர்களுக்கு குறைந்தபட்ச பிரதிநிதித்துவமாவது வழங்கப்பட்ட வேண்டும் என்கிற அடிப்படையில் உருவாக்கப்பட்ட இக்குழுவினை பல்வேறு தரப்பினர் சென்று சந்தித்து தங்கள் கருத்தை முன் வைத்தனர். அதில் மதராஸ் மாகாணத்தின் ‘பஞ்சமர் கல்வி அபிவிருத்தி அபிமான சங்கம்’, ‘மதராஸ் ஆதி திராவிட சங்கம்’, வங்காள மாகாணத்திலிருந்து குரு சந்த் தாக்கூர் உருவாக்கிய அமைப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த அமைப்புகள் “சமூகத்தில் நீடித்து வரும் ஜாதி அமைப்பு முறையை ஒழிக்காமல் உயர் ஜாதி இந்துக்கள் கையில் அளிக்கப்படும் எவ்விதமான அதிகார பகிர்வு அல்லது அதிகார மாற்றம் மிகவும் அபாயகரமானது” என எதிர்ப்பைப் பதிவு செய்தது. அந்த அளவிற்கு சமூகத்தில் ஜாதியின் தாக்கம் அனைத்து நிலைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிகழ்விற்கு பின்னரே காங்கிரஸ் கட்சி வர்ண-ஜாதி முறைக்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கியது. ஆனாலும் கூட தீண்டத்தகாதரிடம் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள காங்கிரஸ் கட்சி எள்ளவும் தயாராக இல்லை.

மேற்கண்ட சமூக அரசியல் சூழலை இணைத்து தான் அம்பேத்கரின் அரசியல் வருகையை யும், அவர் வலியுறுத்திய கருத்துக்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் ஜாதிகள் அம்பேத்காரின் ஆய்வு

1916 இல் அண்ணல் அம்பேத்கர் எழுதிய இந்தியாவில் ஜாதிகள் என்கிற நூல் இந்தியாவின் பூர்வகுடிகள், வர்ண அமைப்புமுறை, ஜாதி உருவாக்கம் ஆகியவற்றை ஆதாரபூர்வமாக விளக்கத்துடன் அகமண முறை திருமணங்கள் ஜாதியைப் பாதுகாத்து வருவதையும், பெண்களை அடிமைகளாக வைத்திட வழிவகை செய்யும் ஆணாதிக்க சமூகத்தின் வழிவகை தான் ஜாதி அமைப்பு முறை எனவும் அறுதியிட்டு கூறியுள்ளார். பெண்ணடிமை நீடிக்க வர்ணாசிரம மதம், ஜாதி அமைப்பு அதன் பின்னணியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சமூக அமைப்பு முறை ஆகியவையே முதன்மை காரணியாக உள்ளன என இந்தியாவில் இதற்கு முன்பாக இவ்வளவு வெளிப்படையாக எழுதியவர் எவரும் இல்லை. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் குடும்ப ஒடுக்குமுறை, சமூக ஒடுக்குமுறை ஆகியவற்றின் பின்னால் நிற்கும் வர்ணாசிரம - பார்ப்பனவாத குயுக்தி ஆகியவற்றை முன்வைத்து ஜாதி மறுப்புத் திருமணம் மூலம்தான் குறைந்த பட்ச பெண்ணுரிமையைப் பெற முடியும் என்ற அம்பேத்காரின் வாதம் இன்றளவும் அப்படியே பொருந்திப் போகிறது.

கம்யூனிஸ்ட்களின் பார்வையில் தோழர் எங்கெல்சின் “குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலில் பெண்கள் பிரச்சனைக் குறித்த திட்டவட்டமான ஆய்வினைக் காண முடியும். தாய் உரிமையின் இடத்தைத் தந்தை உரிமை எடுத்துக் கொண்டதில் தொடங்கியே பெண் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பதைப் எங்கெல்ஸ் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

“செல்வம் பெருகப் பெருக ஒரு பக்கம் குடும்பத்தில் பெண்ணைவிட ஆணுக்கு அதிக முக்கியத்துவத்தை அளித்தது. மறுபக்கம் இந்த முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி ஏற்கனவே இருந்த வாரிசுரிமை முறையை மாற்றி தன் குழந்தைகளுக்கு வாரிசுரிமை என்ற சாதகமான இடம் ஆணுக்கு கிடைக்குமாறு மாற்றியது...இவ்வாறாக தாய் உரிமை வழியிலான குலச் சார்பும், வாரிசுரிமையும் ஒழிக்கப்பட்டு தந்தை உரிமை வழியாக ஆண்குலச் சார்பும், வாரிசுரிமையும் நிலைநாட்டப்பட்டன. தாய் உரிமை தூக்கியெறியப்பட்டதே உலகெங்கிலும் பெண்ணினம் சந்தித்த மாபெரும் தோல்வியாகும். ஆண் வீட்டின் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டான்; பெண் கீழ்நிலைக்கு ள்ளபட்டு வேலைக்காரியாக உருமாற்றப்பட்டு ஆணின் காம இச்சையை பூர்த்தி செய்யும் அடிமையாக, வெறும் மறுஉற்பத்தி செய்யும் ஒரு கருவியாக மாற்றப்பட்டாள். பெண்ணின் நிலையானது சொத்திற்கும் அவளுக்குமான உறவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது, உற்பத்திச் சாதனங்களின் மீதான உரிமை ஆகியவற்றின் அடிப்படையில் பெண்ணின் நிலை தீர்மானிக்கப்படுகிறது”. எங்கெல்ஸ் கூறியுள்ளபடியே வரலாற்றின் வழியே பெண்கள் மீதான சுரண்டலை, அடக்குமுறையை நிலைநிறுத்திட உலகம் முழுவதும் பல்வேறு சமூகங்கள் பல வழிகளை கையாண்டுள்ளன என்பதை புரிந்து கொண்ட நாம் இந்தியாவை பொறுத்தவரை வர்ணாசிரம - ஜாதி அமைப்பு முறை பெண்களை அடிமையாக்கும் முதன்மை கருவியாக செயல்படுவதை விளக்கி அண்ணல் அம்பேத்கர் முன்வைத்த ஆய்வினை ஒப்பீடு செய்து பார்ப்பதே முறையான கம்யூனிஸ்ட் பார்வை ஆகும். அவ்வகையில் பெண்ணுரிமை வென்றெடுக்கும் போராட்டத்தில் அண்ணலின் கருத்துகள் ஆக்கப்பூர்வமானயே.

1919இல் தன் படிப்பை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய அண்ணல் அம்பேத்கார் இந்தியாவில் நிலவும் ஜாதி அமைப்பு முறையின் சமூக ஆதிக்கம், உயர் ஜாதியினரின் அரசியல் அதிகாரம், பார்பனியத்தின் உண்மை தன்மை, அவற்றை பாதுகாக்க புனையப்பட்ட வேதங்கள் ஆகியவற்றை தனது எழுத்துகள் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். இதனால் அதுவரை வேத, புராண, இதிகாச கடவுள் கதைகள், அதன் அடிப்படையிலான மதம் மற்றும் ஜாதி படிநிலைகள், சனாதானம், பார்ப்பனியம் மீது கட்டப்பட்டிருந்த புனித பிம்பங்கள் வெகுவாக உடையத் தொடங்கின. வெகுஜன மக்களிடையே அம்பேத்கரின் எழுத்துகள் சென்றடைய சற்று கடினமாக இருந்த போதிலும் சமூக, அரசியல் தளத்தில் இருந்த தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் முற்போக்கு பிரிவினரிடையே ஓர் கருத்தியல் புரிதலை உருவாக்க தொடங்கியது. அவர் இயற்கை எய்தும் வரை இப்பணியினை தொய்வுறாது செய்து வந்தார். ஏனென்றால் இந்திய வரலாற்றில் பல்வேறு படையெடுப்புகள், ஆட்சியாளர்கள் மாற்றம், அரச மதம் மாற்றம், காலனி ஆதிக்கம், முதலாளித்துவ தொழில் வளர்ச்சி என பல்வேறு புற சூழல் மாற்றங்கள் நிகழ்ந்த போதும் அக சூழலில் வெகுவான மாற்றங்கள் கேள்விக்குறியாகவே இருந்தது. உழைக்கும் மக்களின் நிலை மாறாத அளவில் ஜாதிய கட்டுமானம் அவர்களை பெரும் இருட்டில் சிக்க வைத்திருந்தது. அரசியல் பொருளாதார மாற்றம் சமூக மாற்றத்திற்கு வித்திடும் என்கிற விதியை கேலி செய்திடும் வகையில் இந்தியாவில் எப்போதும் மனுவாதம் ஆதிக்க சக்தியாகவே கோலோச்சியது. அதை கருத்தில் கொண்டு தன் அந்த அம்பேத்கர் மனித குல விரோதியான மனு வாதத்தை உடைத்தெரியும் வேலையை அறிவு தளத்திலும், செயற்களத்திலும் மேற்கொண்டார்.

அதே 1919-20 காலகட்டத்தில் தான் இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாகத்தற்கான நாற்றங்கால்கள் வேர்விடத் தொடங்கின. 1917 ரஷ்யாவில் புரட்சி நடைபெற்ற பின்னர்தான் அதன் உந்துததால் மார்க்சியம், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை பல்வேறு நாடுகளில் விரைவாக வேர் விடத்துவங்கியது. 1921இல் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தான் முதன் முறையாக கம்யூனிஸ்ட் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன என்கிற போதிலும் 1922இல் இல் காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் தான் அந்த கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த கோரிக்கையின் முக்கிய அம்சம் “பூரண சுதந்திரம்”, அனைவரும் சமம், சுரண்டல் அற்ற அரசு அமைப்பு அமைய வேண்டும் என்பதே ஆகும். கயா மாநாட்டில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தோழர் சிங்காரவேலர் பேசியதே இந்தியாவில் பொதுவெளியில் பொதுவுடைமை கருத்தியலின் முதல் குரலாகும். ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த முழக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் தொடர்ச்சியாக மதம், ஜாதி அமைப்பு ஆகியவற்றை பாதுகாக்கும் அமைப்பாக காங்கிரஸின் செயல்பாடு இருந்த காரணத்தால் காங்கிரஸ் கட்சியிலிருந்த ஜாதிய மனோபாவத்தைக் கண்டித்து தோழர் சிங்காரவேலர் 1925ஆம் ஆண்டு வெளியேறுகிறார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது சிங்காரவேலர் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் (1925க்கு பிறகுதான் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் முழுமையாக உருவாகிறது) செயல்பாட்டாளராக காங்கிரஸ் கட்சிக்குள் பயணித்த நிலையிலும் ஆரம்ப கட்ட கம்யூனிஸ்ட் அமைப்பின் ஆலோசனையின் அடிப்படையிலேயே ஜாதி அமைப்பு முறை மீதான தனது எதிர்ப்பு பதிவு செய்திருக்க முடியும். எனவே 1920-25 கால கட்டத்தில் ஜாதி ஒழிப்பு என்கிற கருத்தாக்கம் ஆரம்பகால கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் இருந்த காரணத்தால் தான் தோழர் சிங்காரவேலர் அதனை வலுவாக வலியுறுத்தியுள்ளார். மேலும், அன்றைய மதராஸ் மாகாணத்தில் நடைபெற்று வந்த நீதிக்கட்சியின் ஆட்சி, சமூக வளர்ச்சி மற்றும் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தின் தாக்கம் ஆகியவை தோழர் சிங்காரவேலரின் கருத்தியலில் பெரும் விளைவை உண்டாக்கியதன் சூழலில் தான் காங்கிரசில் இருந்து அவர் வெளியேறும் நடவடிக்கை நடந்திருக்கும் என வரலாறு தெரிந்த எவரும் புரிந்து கொள்வார்கள்.

மகத் - செளதார் குளம் உரிமை போராட்டம்

1927இல் தான் அண்ணல் அம்பேத்கர் சமூக, அரசியல் கிளர்ச்சிகளில் நேரடியாக கால் பதிக்கிறார். தாழ்த்தப்பட்டோர் மகத் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமையை உரிமையை நிலைநாட்டிட நடைபெற்ற மாநாடு மற்றும் போராட்டமே அண்ணல் அம்பேத்கார் நேரடியாகப் பங்கேற்ற முதல் மக்கள் திரள் போராட்டம் ஆகும். 1923, 1926ஆம் ஆண்டுகளில் S.K. போலே கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில் மகாராஷ்டிராவில் தாழ்த்தப்பட்டோருக்கு பல்வேறு உரிமைகளை பம்பாய் மாகாண அரசு வழங்கியது. அதனை ஒட்டி மகத் நகர்மன்ற சௌதார் குளத்தைப் பயன்படுத்தும் உரிமையைத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் வழங்கியது. இதனைக் கொண்டாடும் விதமாக 19,20 மார்ச் 1927 இல் மகத் நகரில் மாநாடு நடைபெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணல் கலந்து கொண்டார். அந்த மாநாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 10,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இந்து மதத்தை சார்ந்த முக்கிய தலைவர்கள் பலர் அந்நிகழ்வில் பங்கேற்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளை வென்றெடுக்க அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அம்பேத்கர் முன்வைத்த அழைப்பை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். அப்போது திடீரென எடுக்கப்பட்ட முடிவின் படி மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் அருகில் இருந்த சௌதார் குளத்தில் சென்று நீர் அருந்த ஊர்வலமாக சென்றனர். அமைதியாக சென்ற அனைவரும் ஏற்கனவே அரசு அறிவித்திருந்த ஆணையின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் சௌதார் குளத்தில் நீர் எடுக்கும் உரிமையை நிலைநாட்டிய பிறகு மாநாட்டு பந்தலுக்கு வந்து சேர்ந்தார்கள். ஆனால், இதற்கிடையே மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் அருகே உள்ள பீரேஸ்வரர் கோயிலுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாக வதந்தி பரவியது. அதனால் ஆத்திரமடைந்த ஜாதி இந்துக்கள் கையில் ஆயுதங்களுடன் மாநாட்டு பந்தலுக்கு திரண்டு வந்து கண்ணீர் பட்ட அனைவரையும் கடுமையாக தாக்கினார்கள். காவல்துறையால் நிலைமையை கட்டுப்படுத்த இயலாமல் போனது. இரண்டு மணிநேர கலவரத்திற்கு பிறகு அமைதித் திரும்பியது. மாநாட்டில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொண்டு இருந்த வேளையில் தங்களை தாக்கிய ஜாதி இந்துக்களை நாம் மீண்டும் தாக்கலாம் என மாநாட்டில் பங்கேற்றவர்கள் முன்வைத்த கோரிக்கையை அண்ணல் அம்பேத்கர் முற்றாக மறுத்து விட்டார். அப்போதைக்கு அந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தது.

அதன்பிறகு தாழ்த்தப்பட்டோர் பயன் படுத்தியதால் குளம் தீட்டாகிவிட்டதாகக் கூறி ஜாதி இந்துக்கள் 108 குடங்களில் கோமியம், மாட்டு சாணி ஆகியவற்றை குளத்திற்கு ஊற்றி குளத்தைப் பயன்படுத்த முடியாத அளவிற்கு முற்றிலுமாக மாசுபடுத்தினர். ஜாதி இந்துக்களுக்கு ஆதரவாக நாட்டின் பல பகுதிகளில் கருத்துக்கள் எழுந்ததை அன்றைய நாளிதழ் தொடர்ச்சியாக வெளியிட்டனர். ஆனால் தாழ்த்தப்பட்டோர் தரப்பின் நியாயத்தை எவரும் வெளியிடவில்லை. ஜாதி இந்துக்களின் நெருக்கடியால் மகத் மாவட்ட நிர்வாகம் 1926ஆம் ஆண்டில் வெளியிட்ட தாழ்த்தப்பட்டோர் உரிமைக்கான ஆணையை 1927, ஆகஸ்ட் 4ஆம் தேதி நேரில் திரும்பப் பெற்றுக் கொண்டது.

(தொடரும்...)

இனியவன்