பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பி வருகிறார். பெரியார் குறித்து அவர் வைக்கும் விமர்சனங்களுக்கு ஆதாரம் கேட்டால், அவரின் சங்கி நண்பர்களான அண்ணாமலையும், ஹெச்.ராஜாவும், தமிழிசை செளந்தரராஜனும், துக்ளக் குருமூர்த்தி போன்ற ஆர்.எஸ்.எஸ் பார்ப்பனர்களும் ஆதாரத்தைத் தருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை சீமானும் ஆதாரத்தைத் தரவில்லை, அவருடைய சங்கி நண்பர்களும் ஆதாரத்தைத் தரவில்லை. சீமானின் இத்தகைய அவதூறுப் பேச்சு பெரியாரிய உணர்வாளர்கள் மத்தியிலும், பொதுமக்களிடத்திலும் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய அவதூறுப் பேச்சுக்களை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று பல்வேறு தரப்பில் இருந்தும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.ஆனால் சீமானோ மீண்டும் மீண்டும் சொன்ன பொய்யையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் சனவரி 22-ஆம் தேதி பனையூரில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிடப்போவதாக ‘பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு’ அறிவித்திருந்தது. சீமானின் அருவருப்புப் பேச்சுகளால் ஆத்திரமடைந்த பெரியாரியத் தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதிலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து தலைநகர் சென்னை நோக்கித் திரண்டனர். அமைப்புசாரா பெரியாரியப் பற்றாளர்களும், பொதுமக்களும் சீமானுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டுமென்று உணர்வோடு சென்னையில் குவிந்தனர்.
காவல்துறையின் கணிப்புகளை விஞ்சும் வண்ணம் திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17, தமிழ்ப்புலிகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி, தமிழக ஜனநாயக கட்சி, காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுக்க பனையூருக்கு வந்தனர். சீமான் வீட்டுக்குப் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை, சற்று தொலைவுக்கு முன்பே காவல்துறை தடுத்துவிட்டது. ஆனால் பெரும் எண்ணிக்கையில் திரண்டவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறியது.
எல்லோரையும் கைது செய்து எத்தனை மண்டபங்களில் தடுப்புக்காவலில் வைப்பது என்றே தெரியாமல் திக்குமுக்காடினர். எல்லோரையும் கைது செய்து முடிக்கவே நண்பகலுக்கு மேலாகி விட்டது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையே சுமார் மூவாயிரமாக இருந்ததால், திடீரென அவர்களுக்கான மதிய உணவைத் தயார் செய்து கொடுக்கவே காவல்துறை தடுமாறியது.
கூடாரம் கலைகிறது!
ஆனால் பெரியார் குறித்து அவதூறான விமர்சனங்களை வைக்கும் சீமான் கட்சியின் கூடாரம் வெகு விரைவாக கலைந்து கொண்டிருக்கிறது. அன்றாடச் செய்திகளில் விளையாட்டு செய்திகள், வானிலை செய்திகள் இடம் பெறுவது போல நாம் தமிழர் கட்சியில் இருந்து இன்று விலகியவர்கள் பட்டியல் என ஊடகங்களில் தினம்தோறும் வந்து கொண்டிருக்கிறது. பெரியார் குறித்து பொய்யான விமர்சனங்களை சீமான் வைத்த பின்னர், அந்த கூடாரம் ஒட்டுமொத்தமாகக் கலைந்து கொண்டிருக்கிறது.
குறிப்பாக சீமானின் இந்த பேச்சைக் கண்டித்து அக்கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன், சேலம் மாநகர் மாவட்டக் கொள்கைப் பரப்புச் செயலாளர் மா.பா.அழகரசன், சேலம் மாநகர் மாவட்ட வணிகர் பாசறை இணைச் செயலாளர் வசந்தகுமார், சேலம் மேற்குத் தொகுதிப் பொறுப்பாளர் பாஸ்கரன், ஓமலூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.
மேலும், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில், “திராவிடத்தையும் பெரியாரையும் ஒழிப்பதுதான் எனது நோக்கம் என்று சீமான் பேசியிருப்பது அவருடைய சொந்த கருத்தே ஒழிய, நாம் தமிழரின் ஒட்டு மொத்த கருத்தல்ல. ஆரியம்தான் தமிழனின் முதல் பகை, சீமானின் கருத்து ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., சங் பரிவார் அமைப்புகளுக்கு துணை போகுமே ஒழிய ஒருபோதும் தமிழ் தேசியம் வெல்ல உதவாது” என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விரட்டியடிக்கும் பொதுமக்கள்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிக்க சென்ற இடங்களில், பொதுமக்களே அவர்களை விரட்டி அடித்துள்ளனர். பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்துவிட்டு, ஓட்டுக்கேட்க வராதீர்கள் என்று விரட்டியிருக்கிறார்கள். இப்படி குறித்த பெரியார் அவதூறுப் பேச்சுக்களால் பேச்சுக்களால், சீமானின் கட்சி நாளுக்கு நாள் தேய்பிறையாகிக் கொண்டிருக்கிறது. ஆனால் பெரியார் கருத்துக்களோ இன்னும் இன்னும் வீரியமாக பரவிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த சென்னை புத்தகக் காட்சியில் கூட பெரியார், திராவிட இயக்கம் சார்ந்த நூல்களே அதிகம் விற்பனையாகி இருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேடு செய்தி வெளியிட்டது. 120-க்கும் மேற்பட்ட அரங்குகளில் பெரியார் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரியார், திராவிட இயக்கம் சார்ந்த நூல்களை மட்டுமே விற்பனை செய்த அரங்குகளின் எண்ணிக்கை பத்தைத் தாண்டும்.
பெரியாரை முட்டி முட்டி மோதி எதிரிகள் வீழ்கிறார்கள். பெரியார் பட்டை தீட்டப்பட்ட வைரமாக நாளுக்கு நாள் மிளிர்கிறார். இதுவரை ஆரிய சனாதனக் கூட்டம் மட்டுமே செய்துவந்த எதிர்ப்புப் பணியை, இப்போது அதே வீரியத்துடன் செய்ய சீமானும், மணியரசனும் கிடைத்திருக்கிறார்கள். இனி இரண்டு மடங்காக பெரியார் கொள்கைகள் மக்களை சென்றடையும். பெரியாரை இன்னும் தீவிரமாக அவர்கள் விமர்சிக்கட்டும். அந்த விமர்சனங்களின் ஊடாக பெரியார் கொள்கைகள் திக்கெட்டும் பரவும்.
வீட்டுக்குள் பதுங்கிய சீமான்!
ஆர்ப்பாட்டம் நடைபெறும் வரை காவல்துறை பாதுகாப்போடு சீமான் வீட்டுக்குள் பதுங்கிக் கொண்டிருந்தார். ஆர்ப்பாட்டக்காரர்களைக் காவல்துறை கைது செய்து முடித்தவுடன், வெளியே வந்து ஊடகங்களுக்கு வீராவேசமாக பேட்டி அளித்த அவர், ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏன் வீட்டை நெருங்கவில்லை என்று கேள்வி எழுப்பினார். “காவல்துறை பாதுகாப்பு எனக்கு வேண்டாம், ஆர்ப்பாட்டக்காரர்களை அனுமதியுங்கள்” என முன்பே சொல்ல சீமானுக்கு தைரியம் இல்லாமல் போனது ஏன் என அந்த பேட்டியைப் பார்த்து பொதுமக்களே கேள்வி எழுப்புகின்றனர்.
மீண்டும் மீண்டும் பெரியார் குறித்து சீமான் வைக்கும் விமர்சனங்களால் பெரியாரின் புகழ் மென்மேலும் பரவிக் கொண்டிருக்கிறது. எதிரிகள்தான் தனக்கு விளம்பரமே என வாழ்ந்த காலத்திலேயே கூறியவர் பெரியார். இப்போது மறைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் அந்த கூற்று நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. சீமானின் விமர்சனங்களால் பெரியார் தமிழ் குறித்தும், பெண்கள் குறித்தும் உண்மையில் என்ன கூறினார் என்று தேடித்தேடி இளைஞர்கள் படிக்கிற ஒரு சூழல் உருவாகியிருக்கிறது. இதனால் இதுவரை சென்று சேராத தரப்பினரிடமும் பெரியாரின் சுயமரியாதை, சமூக நீதி, பெண்ணிய உரிமை சார்ந்த சிந்தனைகள் வேகமாக சென்றடைந்து கொண்டிருக்கின்றன.
பெருந்திரளாகப் பங்கேற்ற கழகம்
இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், புதுச்சேரி மாநிலத் தலைவர் லோகு அய்யப்பன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி, தென்சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன், வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி, தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் இராவணன், சென்னை மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் அருண், சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நங்கவள்ளி கிருஷ்ணன், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் ரவிபாரதி, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பெரியார் சாக்ரடீஸ், கடலூர் சிவா, பெங்களூரு சித்தார்த்தன், திண்டுக்கல் மாக்சிம் கார்கி உட்பட சென்னை, திருச்சி, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
நீலாங்கரை பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி சீமான் வீடு அருகில் உள்ள ரிலையன்ஸ் மார்க்கெட் வரை கழகத் தோழர்கள் பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். கழகத் தோழர்கள் கையில் ஏந்தி வந்த பதாகைகளும், விண்ணதிர எழுப்பிய முழக்கங்களும் தனிக்கவனம் ஈர்த்தன. சீமான் உருவ பொம்மையை எரித்தும் கழகத் தோழர்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.
- பெ.மு. செய்தியாளர்