பெங்களுருவில் விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைக்கத் தமிழக அரசுக்குச் சொந்தமான பாறையைக் கொண்டு செல்லத் தடை விதிக்கக் கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசிக்கு அருகிலுள்ள கொரக் கோட்டை கிராமத்திலிருந்து மிகப் பெரும் குன்றுப்பாறையை வெட்டி யெடுத்து, கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால், பெங்களூருவின் ஈஜிபுராவிலுள்ள கோதண்ட இராமசுவாமி கோவிலில், ஏறத்தாழ 300 டன் எடை கொண்ட விசுவரூப மகா விஷ்ணு சிலை அமைப் பதற்கு ஒரு அறக்கட்டளைக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்தது கடும் கண்டனத்திற்கு உரியது.

இவ்வளவு பிரமாண்டமான சிலையை அமைப்பதற்குத் தேவையான ஒற்றைக் கல் இந்தியாவில் எங்கும் கிடைக்கவில்லை எனவும், இச்சிலையை நிறுவத் திட்டமிட்ட பெங்களூருவிலுள்ள கோதண்ட இராமசாமி கோவில் அறக்கட்டளை, அரசினை அணுகியது எனவும் இவர்களின் வேண்டுகோளை ஏற்று தொலைதூரச் செயற்கைக் கோளின் உதவியால், தேவையான கல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருப்பதை அரசு கண்டுபிடித்து, அத்தனியார் அறக்கட்டளைக்குத் தெரிவித்தது எனவும், 2014 ஆம் ஆண்டிலிருந்தே பாறையை வெட்டிச் சிலையமைக்கும் பணிகள் தொடங்கி விட்டன எனவும் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

108 அடி உயரம், 11 முகங்கள், 22 கைகள் கொண்ட இச்சிலையை உருவாக்குவதற்கு முன், 64 அடி உயரமும் 24 அடி அகலமும் கொண்ட பெருமாளின் முகம் மட்டும் முதல் கட்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதை 240 டயர்கள் கொண்ட மாபெரும் வாகனத்தில் வைத்து எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இப்பெரும் பாறையைத் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பெங்களூரு வுக்குக் கொண்டு செல்ல மும்பையைச் சார்ந்த ரேஷம்சிங் குழுமத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.

இப்பெரும் கல்லை எடுத்துச் செல்லும் பொழுது, அதன் எடையைத் தாங்க முடியாமல் டயர்கள் வெடித்துள்ளன. மேலும் அவ்வண்டி சேற்றில் புதைந்து நகர முடியாமல் திணறியுள்ளது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சிலைக்கான பெரும் கல்லை எடுத்துச் செல்வதற்கு வழியில் இடை யூறாக உள்ள ஏழை எளியவர்களின் குடிசைகள் பிய்த்தெறியப் பட்டுள்ளன; கடைகள் இடித்துத் தள்ளப்பட் டுள்ளன. விழுப்புரம் மாவட்டம், மயிலம் வட்டம், வெள்ளிமேடு பேட்டையைச் சேர்ந்த கருப்பையா கவுண்டர் மகன் குபேரன் என்பவரது இரண்டு மாடிக் கட்டடம், சிலைக் கான கல்லைக் கொண்டு செல்லும் பொழுது இடித்துத் தரை மட்ட மாக்கப்பட்டுள்ளது. இதற்கு உரிய இழப்பீடு தருவதாக வாக்களித்து விட்டு, இடித்த பிறகு பேசிய தொகையைக் காட்டிலும் பல இலட்ச ரூபாய் குறைவாகக் கொடுத்து விட்டு, வீட்டு உரிமையாளரை அலைக் கழித்துக் கொண்டுள்ளனர். இதே போல ஏழை எளியவர்களின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளன. சிலை கொண்டு செல்லப்படும் வழியெல்லாம் இன்னும் எத்தனை இடர்பாடுகளைப் பொது மக்கள் சந்திக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை.

பொதுமக்களுக்குப் பெரும் நாசத்தை விளைவிக்கக் கூடிய சட்ட விரோதமான இந்த அராஜகத்தை, அந்த ஒப்பந்தத் குழுமத்தின் முகவர் களே முன் நின்று செய்கின்றனர். வருவாய்த் துறையினரோ, காவல் துறையினரோ இவற்றைக் கண்டு கொள்ளாமல் உள்ளனர். சிலையை எடுத்துச் செல்வதற்காக வெள்ளி மேடுப் பேட்டை பகுதியில், சாலை விரிவாக்கமும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், அந்தப் பாறையில் பெருமாள் முகம் செதுக்கப்பட்டுள்ளதால், அதைக் காட்டி நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான ரூபாய் ஒப்பந்தக்காரர் களால் மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதற்காக யார் மீதும் இதுவரை எவ்விதச் சட்ட நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. மேலும் இக்கல்லை எடுத்துச் செல்வதை எதிர்த்து அப்பகுதி மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

ஒவ்வொரு கட்டத்திலும் இவ்வளவு சட்ட மீறல்கள் இருந்தும், சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப் படாமல் இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே, இந்தப் பிரச்னையில், மக்கள் சிவில் உரிமைக் கழகம் கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது.

  1. தமிழக அரசு, பொதுச் சொத்தான குன்றுப்பாறையை, ஒரு அறக் கட்டளைக்கு எந்த அடிப்படை யில் வழங்கியது என்பதை தெளிவு படுத்துவதுடன், அது குறித்த ஆவணங்களையும் வெளியிட வேண்டும்.
  2. சிலையை கொண்டு செல்ல சுரங்கம் மற்றும் கனிமம், TANGEDCO, காவல்துறை, மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ் சாலை போன்ற துறைகள் எந்த அடிப்படையில் அனுமதி வழங்கின என்பதையும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
  3. இதுவரை சேதப்படுத்தப்பட்ட வீடுகள், கடைகள் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு உரிய இழப்பீட்டினை கோதண்டராம சுவாமி அறக்கட்டளையிடமிருந்து தமிழக அரசு பெற்றுத் தர வேண்டும்.
  4. தமிழ் நாட்டிற்குச் சொந்தமான இந்தப் பெரும் பாறைக் கனிமத்தை, மக்களின் விருப்பத்திற்கு மாறாகக் கர்நாடகத்திலுள்ள ஒரு அறக் கட்டளைக்குக் கொண்டு செல்லக் கூடாது.
  5. அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பற்ற தன்மையைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, பெரும்பான்மை மதத்திற்கு அனைத்துச் சலுகைகளையும் வழங்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் கணகுறிஞ்சி, மாநிலப் பொதுச் செயலாளர் க. சரவணன் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Pin It