periyar 380இத்தலைப்புக் கொண்ட முதலாவது வியாசத்தில் கடவுளைப் பற்றி அதாவது கடவுள் என்கின்ற உணர்ச்சி மக்களுக்கு எப்போது எப்படி உண்டாயிற்று என்பதைப்பற்றியும், அவ்வுணர்ச்சி மக்களுக்கு எதுவரையில் இருக்க முடியும் என்பதைப் பற்றியும் சுருக்கமாகச் சிறிது எழுதி இருந்தோம்.

அதாவது மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாக குறிப்பிட்டு இருந்தோம்.

இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம். கம்பியில்லாத் தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது என்கின்ற சையன்ஸ் உணர்ச்சியும் நமக்குத் தெரியாமல் இருக்குமானால் நாம் இன்னமும் அதை “ஒரு தெய்வீக சக்தி” என்றும் பழைய காலத்து ரிஷிகள் பேசிக் கொண்டிருந்ததாய் சொல்லப்படும் “ஞான திருஷ்டி சம்பாஷணை” என்றுமே சொல்லித் தீருவோம்.

ஆதலால் மக்களுக்கு அறிவும் ஆராய்ச்சியும் வளர வளர கடவுள் உணர்ச்சியின் அளவு குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அதுபோலவே அறிவும் ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும். இப்போதும் பகுத்தறிவு குறைந்த மக்களிடமே தான் அநேகமாக தொட்டதற்கெல்லாம் கடவுளும், அவர்தம் செயல்களும் தாண்டவமாடுவதைப் பார்க்கின்றோம். அவர்கள் மேலேயே “கடவுள் வருவதை”க்கூடப் பார்க்கின்றோம்.

காட்டுமிராண்டிப் பக்குவமுடையவர்களிடமே அநேகமாக கடவுளைப் பற்றிய கதைகள் என்பவைகளும், புராணங்கள் என்பவைகளும் மதிப்புப் பெற்று இருப்பதையும் பார்க்கின்றோம்.

கொஞ்ச காலத்திற்கு முன் அக்கதைகளை அப்படியே அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் கூட இப்போது அப்படியே நம்புவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத் தன்மையை மறைத்துக் கொண்டு சையன்சின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு கஷ்டப் படுகின்றார்கள்.

இதிலிருந்து என்ன ஏற்படுகின்றதென்றால், மக்கள் வரவர இப்போது சையன்ஸுக்கு பொருத்தமில்லாததை ஏற்க மறுக்கக்கூடிய நிலைமைக்கு வந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது விளங்குகின்றது. மழையை வரச் செய்வதும், செத்தவனை மறுபடியும் பிழைக்கச் செய்வதும், பேச்சுகளையும், நாட்டியங்களையும் யந்திரங்களில் பிடித்துக் காட்டுவதும் போன்ற காரியங்கள் மனிதனால் செய்யக்கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட பிறகு மிக்க பாமர ஜனங்களுக்குக்கூட இவையெல்லாம் கடவுள் செயல் என்கின்ற குருட்டு நம்பிக்கை மறைந்து வருவதில் ஆச்சரியமொன்றுமில்லை.

எனவே ஒரு காலத்தில் அறிவு வளர்ச்சியும் ஆராய்ச்சிக் கவலையும் இல்லாதபோது ஏற்பட்ட கடவுள் சம்பந்தமான எண்ணங்கள் இனியும் இருந்துதான் தீர வேண்டுமா என்றால், எப்படியும் அது ஒரு அளவுக்காவது இருந்துதான் தீரும் என்றே சொல்லுவோம்.

ஏனெனில், மனிதன்தான் எல்லாம் அறிந்தவன் என்கின்ற ஆணவத்தை உடையவனாதலால் தன் புத்திக்கு எட்டாததைத் தனக்குத் தெரியவில்லை என்று கண்ணியமாய் ஒப்புக் கொள்ள சுலபத்தில் சம்மதிக்க இஷ்டப்படமாட்டானாகையால், அங்கு அதாவது தனக்கு அறிவு கட்டையாயப் போனபோது அவனுக்கு கடவுள் நம்பிக்கையும் கடவுள் செயலும் வந்துதான் தீரும். இதை மாற்றுவது சுலபமான காரியமல்ல.

பூரண அறிவு வளர்ச்சி பெற்றால்தான் முடியும். அன்றியும் சிலர் உண்மை அறிந்திருந்தாலும் சுயநலமோ, மூடப்பிடிவாதமோ காரணமாக தங்களுக்கே புரியாதவற்றைப் பேசி பாமர மக்களை மயக்கிக் கொண்டும் இருப்பார்கள். ஏனெனில் மக்களுக்கு கடவுள் நம்பிக்கை இருப்பதாலேயே அவர்கள் பிழைக்கக் கூடியவர்களாய் இருப்பதால்தான். எது எப்படி இருந்த போதிலும் உலகத்தில் கடவுள் சம்பந்தமான குருட்டு நம்பிக்கைக்கு இருந்த மதிப்பு குறைந்து விட்டதால் கடவுள் உணர்ச்சியும் எப்படியும் மக்களுக்கு வரவர குறைந்து கொண்டு தான் போகும் என்பதில் சந்தேகமில்லை.

அதற்காக வருத்தப் படுவதிலோ, யார் மீதாவது குற்றம் சொல்லுவதிலோ பயனில்லை ஆனால், அவ்வித குருட்டு நம்பிக்கையும் மூடப்பிடிவாதமும் ஒழிந்த காலத்தில் தான் உலகத்தில் ஒழுக்கமும் சமத்துவமும் நிலைபெறும் என்பது மாத்திரம் உறுதி.

மதம்

மதம் என்னும் விஷயமும் ஆராயத் தகுந்ததேயாகும். மனித வர்க்கம் விலங்குகளைப்போல் தனித்தனியே காடுகளில் வாசஞ்செய்து வந்த நிலைமை மாறி குடிசைக்கட்டிக் கூடிக் குலவி வாழ ஆரம்பித்தபோதே அவற்றிற்கு சில கொள்கைகள் தேவையாகிவிட்டது. எப்படியெனில், எப்படி தனியே இருக்கும் மக்கள் ஏதாவது ஒரு பொது நன்மையை உத்தேசித்து தங்களுக்கென்று ஒரு சங்கத்தை நிறுவினால் உடனே அதற்குக் கொள்கைகள் நிர்ணயிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிடுகின்றதோ அதேபோல் மனிதர்களின் கூட்டு வாழ்க் கைக்கு கொள்கைகளை நிர்ணயிக்க வேண்டியதாகி விட்டது. அக்கொள்கைகள் தான் இப்போது மதம் எனப்படுவதாக இருக்கிறது.

அம்மாதிரியான கொள்கை நிர்ணயங்களை மீறக் கூடாது என்பதற்கு நிபந்தனைகள் ஏற்படுத்தி அந்நிபந்தனைகளை மீறி நடப்பவர்களைத் தண்டிக்க முடியாத நிலையிலோ, அல்லது தண்டிக்க வேண்டாம் என்று தோன்றிய சமயத்திலோ, அல்லது சிலரின் சுயநலத்திற்காகவோ, வேறு விதத்தில் ஏமாற்றிப் பிழைப்பதற்காகவோ வேண்டி அக்கொள்கைகளைக் கடவுள் என்பதுடன் சம்பந்தப்படுவதனால்தான் மக்கள் ஏமாறுவார்கள் என்கின்ற எண்ணம் கொண்டு அவற்றைக் “கடவுள் உண்டாக்கினார்” என்றும் அவற்றிற்கு மீறி நடந்தால் “கடவுள் தண்டிப்பார்” என்றும் சொல்ல வேண்டியதாய் விட்டது. (இந்த இடம்தான் முதன்முதலாக மனிதன் தவறு செய்த இடமாகும்.) ஆனால் இக்கொள்கைகள் நிர்ணயம் செய்யப்பட்டது எப்படி? எந்த ஆதாரங்களைக் கொண்டு? என்று பார்ப்போமேயானால், அது அந்தக் காலத்திய நிலைமை, சீதோஷ்ண ஸ்திதி, மக்களின் அறிவு நிலை, அதாவது பாமர மக்களின் அறிவீனம், சிலரின் சூழ்ச்சித் திறம் முதலாகிய நிலையில் அதாவது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்பச் செய்யப்பட்டவைகள் என்றே சொல்ல வேண்டும்.

மேலும் ஒரு குறிப்பிட்ட கொள்கை பிற்கால தேச வர்த்தமானத்திற்கோ சிலரின் சுயநலத்திற்கோ, ஏற்றதாயில்லாவிட்டால் யாராவது அறிஞர் அல்லது தந்திரக்காரர் அதைமாற்ற நினைக்கும்போது பாமர மக்கள் மூடநம்பிக்கையின் பலனாய் தங்கள் பிடிவாதங்காட்டி மாற்ற சம்மதிக்காத காலத்தில் பிரிந்து போய் புதிய கொள்கைகள் வகுத்து அதாவது முன்னையதை திருத்தியோ, அல்லது சில மாற்றியோ, அல்லது சில புதியதுகளைச் சேர்த்தோ செய்ய நேரிடும்போது அது ஒரு புதிய மதமாக ஏற்பட்டு விடுகின்றதும் உண்டு. இதனால் பாமர மக்கள் அதாவது குருட்டுப் பிடிவாதமுள்ளவர்கள் “என் மதம் பெரிது” “உன் மதம் சிறிது” என்கின்ற மத சண்டைக்கு ஆளாகிவிடவும் நேரிட்டு விடுகின்றது.

இந்தச் சண்டையில்லாமல் திருத்தப்பாடு செய்யலாமா என்று நினைத்த பெரியவர்கள் கொள்கைகளை மாற்றாமல் பழைய கொள்கை களுக்கே புதிய வியாக்கியானங்களைச் செய்து திருப்தி செய்ய முயற்சித்தும் இருக்கின்றார்கள். ஆனாலும் அம்முயற்சிகளின் பலனும் முடிவில் உட்சமயங்களாகவும் சார்புச் சமயமாகவும் மாறிற்றேயொழிய கொள்கை களின் முக்கியங்களை அறிய முடியாமலேயே போய்விட்டது. இப்படியே தான் மதங்கள் வெகுகாலமாய் மாறிமாறியும் திரிந்து திரிந்தும் பெருகிக் கொண்டும் வந்ததனாலேயே மதங்களின் உண்மைத் தத்துவமும் அவசியமும் அறிவதற்கில்லாமற் போனதோடு அதை ஒரு சடங்காகவே கொள்ள வேண்டியதாகியும் விட்டது.

இன்றைய தினம் எந்த மதக்காரனையாவது கண்டு உன் மதமென்ன? அதன் தத்துவமென்ன? என்றால் சில சடங்கையும் குறிகளையும் மாத்திரம் தான் சொல்லுவானே ஒழிய அதன் உண்மைத் தத்துவம், அதாவது எந்தக் கருத்தைக் கொண்டு ஆதியில் மதத்தை உண்டாக்கினார்களோ அந்தக் கருத்து சற்றும் அறிந்திருக்க மாட்டான். அதோடு அதற்கு நேர் விரோதமாக அறியாமையும் ஒழுக்கயீனங்களும் ஏற்பட்டுவிட்டது. அன்றியும் சிலர் இவற்றைத் தங்கள் சுயநலத்திற்கு உப யோகப்படுத்திக் கொள்ளவும் கருவியாய்விட்டது. சிறப்பாக இப்போதைய முக்கிய மதங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் பாமர மக்களை ஏமாற்றி கொடுமைப்படுத்தி பணம் பறித்து புரோகிதக் கூட்டமும் அரசாங்கமும் செல்வந்தனும் பிழைக்க மார்க்கங்களாக இருக்கின்றனவே யன்றி பொதுவாக மனித வர்க்கத்திற்கு எவ்வித பலனும் இல்லாமற் போய்விட்டது.

மற்றும் மதத்தினால் ஏற்பட்டுவரும் கெடுதிகள் என்ன என்று பார்ப்போமானால் முதலாவது மதம் மனிதனின் அறிவையே அடியோடு கெடுத்து விடுகின்றது. எப்படியெனில், ஒவ்வொரு மதக்காரனும் தனது மதப்படி ஒரு கடவுள் உண்டு என்று நினைப்பதோடு தனது மதத்தையும் கடவுள் உண்டாக்கினார் என்று நம்புவதாகக் காணப்பட்டாலும் மற்றொரு மதக்காரனும் அப்படித்தானே சொல்லுகிறான். ஆதலால் அவர்களுக்கு வேறு மதத்தையும் நமக்கு வேறு மதத்தையும் கடவுள் செய்திருப்பார் என்று சிறிதாவது யோசிக்கவோ, அல்லது நம் மதத்தை வையும்படியோ அன்றி ஏற்காதபடியோ அவர் மற்றொரு மதத்தை உண்டாக்கி இருப்பாரா? அப்படி யானால் இது ஒன்றுக்கொன்று முரண்பாடல்லவா? என்று எவருமே நினைப்பதில்லை எவருமே என்றால் மத ஆச்சாரியார்கள், மத அபிமானிகள் என்பவர்கள். முதலாக எவருமே கருதுவதில்லை.

இந்த ஒரு காரணத்தாலேயே மதம் மக்களின் அறிவை எவ்வளவு தூரம் கெடுத்திருக்கின்றது என்பது விளங்கும் இரண்டாவது, மனிதர்களின் ஒற்றுமைக்குப் பதிலாக மனிதனை மனிதன் பிரித்துக்காட்டவே மதம் உதவுகின்றது. மூன்றாவது, மதமானது மனிதனை வேடத்திலேயே திருப்தி யடையச் செய்கின்றதேயொழிய ஒழுக்கத்தில் சிறிதும் கவலை செலுத்த நிர்ப்பந்திப்பதில்லை.

நான்காவது, எந்த மதத்திலும் பகுத்தறிவிற்குச் சிறிதும் இடமில்லை. ஏனென்றால், எவ்வளவு நல்ல மதமானாலும் முதலில் ஏதாவ தொன்றையாவது நமது புத்திக்கும் அறிவிற்கும் கண்ணுக்கும் படாததைக் குருட்டுத்தனமாய் நம்பித் தானாக வேண்டுமென்று சொல்லாமலிருப்பதில்லை. அப்படியானால் அம்முறையில் ஒன்றை நம்பிவிட்டு அதேபோன்ற மற்றொன்றை நம்பாமலிருப்பதற்குக் காரணமும் இல்லை.

ஐந்தாவது மதமானது கடவுளுக்கும் நமக்குமிடையில் தரகர்களை உண்டாக்கி, அத் தரகர்களின் நடவடிக்கையையும், வார்த்தையையும் அது எவ்வளவு அசம்பா விதமானாலும் நமது சொந்த அறிவைவிட, பிரத்தியட்ச அனுபவத் தைவிட மேலானதாக நினைக்கச் செய்கின்றது. அன்றியும் மதமானது பணம் செலவு செய்யும் அளவுக்கு மோட்சமும் பாவ மன்னிப்பும் இருப்பதாகவும், எவ்வித அக்கிரமங்களுக்கும் வணக்கத்தின் மூலம் மன்னிப்பு இருப்பதாகவும் நம்பச் செய்வதால் மனிதனை அக்கிரமம் செய்யவும், செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கவும் தூண்டுகின்றது. சோம்பேறிப் பிழைப்புக்குத் தாராளமாய் மதம் இடம் கொடுக்கின்றது. மக்களைக் கோழைகளாக்குகின்றது. மதத்தினால் இவ்வளவு அநீதிகள் ஏற்பட்டும் உலக சம்பவங்களின் உண்மைக் காரண காரியங்கள் உணருவதற்கில்லாமல் நிர்பந்தமாய் மக்கள் மதத்தினால் தடுக்கப்படுகின்றார்கள். இவ்வளவும் தவிர ஒருவனுடைய உழைப்பில் மற்றும் ஒருவனை சாப்பிடச் செய்கின்றது.

நிற்க, உண்மைச் சைவன் என்பவன் ஒருவன் எவ்வளவு அயோக்கியனானாலும் ஒரு துளி சாம்பல் அவன் மேலே பட்டு விட்டால் உடனே அவனுடைய சகல பாபமும் தீர்ந்து நேரே “கைலயங்கிரிக்கு”ப் போய்விடலாம் என்கின்றான். சுருக்கமாகச் சொன்னால் வக்கீல் தொழில் செய்பவனும் பொய்ப்புராணப் பிரசங்கம் செய்பவனும் விபூதி பூசிக் கொள்ளுகிற காரணத்தாலேயே தன்னை ஒரு சைவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். பிறரும் அப்படியே எண்ண வேண்டுமென்று ஆசைப்படுகின்றான் என்றால் சைவனின் யோக்கியத்திற்கும் சைவ சமயத்தின் பெருமைக்கும் வேறு சாட்சியம் தேவையா?

அது போலவே ஒரு உண்மை வைணவன் என்பவனும் ஒரு தடவை ராமா என்று சொல்லிவிட்டடால் சகல பாபமும் தீர்ந்துவிட்டது என்கின்றான். ராமனை விட உலகில் வேறு தெய்வமில்லை என்கின்றான். அதுபோலவே ஒரு உண்மைக் கிறிஸ்தவன் என்கிறவனும் ஏசுவை அடைந்தால் சகல பாபமும் தீர்ந்துவிடும் என்கின்றான். அன்றியும் ஏசுவின் மூலம் அல்லாமல் பாவமன்னிப்பு என்பது கிடையவே கிடையாதென்கின்றான்.

அதுபோலவே ஒரு முகம்மதியனும் குரான் வாக்கெல்லாம் கடவுள் வாக்கு, அது எந்த தேசத்திற்கும் எந்தக் காலத்திற்கும் பொருந்தியது, அதில் உள்ள ஒரு சிறு கேடாவது மாறினால் இஸ்லாம் மதமே போய்விட்டது என்கின்றான். இப்படியே ஒவ்வொரு மதத்திற்கு ஒவ்வொரு பெருமையும் அதுவேதான் உண்மையான மதம், முறையே-கடவுள் அவதாரம், கடவுள் குமாரன், கடவுள் தூதன் ஆகியவர்களால் ஏற்பட்டது என்றும் சொல்லுகின்றார்கள். மற்றது பின் வியாசத்தில்.

(குடி அரசு - தலையங்கம் - 11.08.1929)

Pin It