“உன்னைப் பார்த்தால் என் வயிற்றில் தான் அடித்துக் கொள்ள வேண்டும்! அதற்கு இந்த இரண்டு கைகள் போதாது! பத்துக் கைகள் இருந்தால் தான் தேவலாம் போலிருக்கு!”- என்று சில தாய்மார்கள் கோபத்தினாலும் வெறுப்பினாலும் பேசுவதைக் கேட்டிருப்பீர்களல்லவா?
தர்மபுரம் ஆதினம் ஸ்ரீலஸ்ரீ குருமகா சன்னிதானமவர்களால், தர்மபுரத்தில் ஏராளமான பொருட் செலவில் நூதனமாக நிர்மாணம் செய்யப் பட்டிருக்கின்ற திருக்கோவிலில், ஸ்ரீவித்யாமேரு பிரஸ்தார நாற்பத்து முக்கோண யந்திரப் பிரதிஷ்டையுடன், அஷ்டதச புஜ மகாலட்சுமி துர்க்கா தேவியின் நூதனப் பிரதிஷ்டையும், தேவிக்கு அவர்த்த அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகமும் இன்று (ஜனவரி 26) வெகு சிறப்பாக நடத்துவிக்கப்பட்டன.” - என்கிறது, “சுதேசமித்திரன்” பத்திரிகைச் செய்தி; வெறும் செய்தி மட்டுமல்ல! 18 கர ஸ்ரீ மகாலட்சுமி துர்க்கா தேவியின் படமும் பெரிதாக வெளிவந்திருக்கிறது. தமிழில் மட்டும் இந்த அற்புதமான சங்கதி வெளிவந்தால் போதுமா? அணுக்குண்டும், காமெட் விமானமும் செய்கின்ற மேல் நாட்டாரும் கண்டு நடுங்க வேண்டுமல்லவா? அதற்காக “ஹிந்து” பத்திரிகையும் இந்தப் படத்தை வெளியிட்டிருக்கிறது! அய்சனோவர், சர்ச்சில், ஸ்டாலின், மாசேதுங், மென்சீஸ், மலான், டிட்டோ, மூசா, தெக், நாஸிமுதீன் - ஆகிய யார் இந்தப் படத்தைப் பார்த்திருந்தாலும் நடுங்கிப் போயிருப்பார்கள்!
மூக்கிலும், காதிலும், கழுத்திலும் நகைகள் அணிந்த அழகான பெண்! ஆனால் கைகள் மட்டும் பதினெட்டு! வெறும் கைகளா? அல்லவே அல்ல! இதோ, படியுங்கள்!
- பரசு, கெதை, வில், வஜ்ரம், அம்பு, தண்டம், கத்தி, கேடயம், சங்கு, சூலம், பாசம், சக்கரம் - ஆகிய பயங்கரமான கருவிகள்!
- பாரத புத்திரர்களே! தமிழ்ப் பெருமக்களே! உங்கள் கதியை நினைத்தால், நீங்கள் வேலை தேடி வெளிநாடு சென்று அவதிப்படுவதை நினைத்தால், சத்தான உணவோ, பசியாற உணவோ கிடைக்காத உங்கள் நிலையை நினைத்தால், குடும்பத்துக்கு ஒரு வீடு கூட இல்லாத உங்கள் கதியை நினைத்தால், அதே நேரத்தில் நீங்கள் சோம்பேறிகளாகவும், சுகவாசிகளாகவும், கலா ரசிகர்களாகவும், பயங்கொள்ளிகளாகவும், விதியை நம்பிய வீணர்களாகவும் - இருந்து வருவதை நினைத்தால், என் வயிற்றில் அடித்துக் கொள்வதற்கு இரு கைகள் போதாது! 18 கைகள் இருந்தால் தான் தேவலாம் போலிருக்கிறது! -
- என்று வயிற்றெரிச்சல் தாங்கமாட்டாமல் 18 கைகளுடன் பிறந்திருக் கிறாள், இந்தத் துர்க்காதேவி! அதாவது இவளைப் பிறப்பித்த (உண்டாக்கிய) தொழிலாளி இத்தனை கைகளை வேண்டுமென்றே ஒட்ட வைத்திருக்கிறான்! பொல்லாத கிண்டற்காரன்!
அது சரி! வில், கத்தி, சக்கரம், சூலம் - ஆகிய பலாத்காரக் கருவிகளை யெல்லாம் துர்க்கா தேவி ஏன் வைத்திருக்கிறாள்? - என்று கேட்பீர்கள்!
நமது ஆரியக் கடவுள்களுக்கெல்லாம் கோட்ஸே கொள்கையில் தான் அதிக நம்பிக்கை! ஏசுநாதரைப் போல், சாக்ரட்டீசைப் போல், காந்தியைப் போல் - அமைதியான உயிர்த்தியாகத்தில் நம் கடவுள்களுக்கு நம்பிக்கையே கிடையாது!
ஏ! ஏழைகளே! உங்கள் ஏழ்மையைப் போக்கிக் கொள்ளும் வழி உங்களுக்குத் தெரியாவிட்டால் இந்தச் சூலத்தினால் குத்தி விடுவேன்!
ஏ! முதலாளிகளே! ஏ! ஜாதி வெறியர்களே! ஏ! மத வெறியர்களே! உங்கள் திமிரை அடக்குவதற்காகத் தான் இந்தச் சக்கரத்தை வைத்திருக்கிறேன்! - என்று மிரட்டுவதற்காகவே அபாயகரமான இந்தக் கருவிகள்!
“தென்னாட்டில் வேறு எங்குமே யில்லாத” இந்த அதிசயமான புதுக் கடவுளை வெளிப்படுத்திய சந்நிதானத்தின் பொதுஜன சேவையை, சேவை!
சாயிபாபா! மெய்வழி ஆண்டகை! ரமணரிஷி! அரவிந்தர்! இந்த மாதிரிப் புதிய சித்தர் அவதாரக் கம்பெனியாரால் சாதிக்க முடியாத காரியங்களை யெல்லாம் இனி, இந்தப் புதிய கடவுள் தான் (துர்க்கை) சாதித்தாக வேண்டும்! ஓம்! அஷ்ட தசபுஜ துர்க்காதேவி! ஓம்!! ஓம்!! ஓம்!!!
- குத்தூசி குருசாமி (2-2-1953)
நன்றி: வாலாசா வல்லவன்