“விவசாயம் இல்லாமல் எப்படி நாடு வாழ முடியாதோ, அப்படி வேதம் இல்லாமலும் வாழ முடியாது” என்று சொல்லியிருக்கிறார் ஆடிட்டர் குருமூத்தி! விவசாயத்திற்கு இப்படி ஓர் அவமானம் நேர்ந்திருக்கிறது.

நம் நாட்டில் ஒரு ஆறு மாதங்களுக்கு வேதம் ஓதுதலை நிறுத்தி வைப்போம். பிறகு ஒரு ஆறு மாதங்கள் விவசாயத்தை நிறுத்தி வைப்போம். எது இல்லையென்றால் நாடு வாழ முடியாது என்று அப்போது தெரிந்துவிடும்!

ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களைத்தான் அவர் குறிப்பிடுகின்றார். இவற்றை அனைவரும் படிக்க வேண்டும் என்கிறார். இவை அனைத்தும் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு உரியவை. நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானவை அல்ல. அது மட்டுமின்றி, இந்து மதம் என்று சொல்லப்படும் மதத்திற்குள்ளாகவே ஒடுக்கப்பட்ட மக்களும், பெண்களும் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று அவர்களே கூறுகின்றனர். (வசிஷ்ட தர்ம சாஸ்திரம் ஜ்ஸ்வீவீ, 12 - மனுஸ்மிருதி வீஸ், 99)..

வேதங்கள் என்பவை இசை வடிவிலான துதிப் பாடல்களும், சில சூக்தங்களும் (மந்திரங்கள் மாதிரி) அடங்கிய தொகுப்புகள்.(சம்ஹிதைகள்).. அன்றாட வாழ்வில் தங்களுக்குத் தேவையான கால்நடை, செல்வம், ஆடைகள், உணவு, மழை, சந்ததி, உடல்நலம் எல்லாம் வேண்டும் என்று இந்திரன், சோமன், அக்கினி ஆகியோரிடம் அவர்கள் வேண்டிக் கொள்ளும் பாடல்கள் அவை. எடுத்துக்காட்டாக, “சோமா, பாலையும், பார்லியையும் உண்பதால் எங்கள் உடல் பருமனாகட்டும்“ (ரிக் 1-187) என்பன போன்ற வேண்டுதல்கள் அவற்றில் உள்ளன. அவர்கள் உடல் ஏற்கனவே பருமனாகத்தான் உள்ளது. மேலும் பருமனாகவில்லை என்றால் நாடு வாழாதோ என்னவோ தெரியவில்லை. குருமூர்த்தியிடம்தான் கேட்க வேண்டும்.

சென்னை, கிண்டியில், ஓம் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் மேற்கண்டவாறு பேசியுள்ள குருமூர்த்தி, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்களின் அறிக்கை ஒன்றுக்கு எதிரான தன் கருத்தையும் கூறியுள்ளார்.

விவேகானந்தர் ரதம் என்ற ஒன்றை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் கொண்டு செல்ல சங் பரிவாரங்கள் முடிவெடுத்திருப்பதை தி.க. தலைவர் எதிர்த்துள்ளார். அதற்கு குருமூர்த்தி ஒரு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அரசு பள்ளிகள் என்பவை அனைத்து மக்களின் வரிப் பணத்தைக் கொண்டு  நடத்தப்படுபவை. அங்கே எப்படி ஒரு குறிப்பிட்ட மதக் கருத்துகளைத் திணிக்கலாம்? இந்த நியாயமான கேள்வியைக் கூட காவிப் படையால் ஏற்க இயலவில்லை. இப்போது இந்த ரதம் அனுமதிக்கப்படுமானால், பிறகு பிற மதங்களின் ரதங்களும், கருத்துகளும் பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் இல்லையா? எல்லா ரதங்களையும் உள்ளே அனுமதித்துவிட்டுப் பாடங்களை வெளியேற்றிவிட வேண்டியதுதான்!

குருமூர்த்திகளின் குதர்க்கம் கூடிக்கொண்டே போகிறது!

Pin It