உத்தரப் பிரதேசத்தில் இந்திக்கு அடுத்து உருது பேசும் மக்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் பாடத்திட்டங்கள், அரசுத்துறைகளில் இருந்து உருது வார்த்தைகளை தேடித்தேடி நீக்குகிறது அம்மாநில பாஜக அரசு. இதே தூய்மைவாதத்தை போஜ்புரியில் எதிர்பார்த்தால் அது தேசத்துரோகம் ஆகிவிடும்! பள்ளிகளில் உருதுவில் இறை வணக்கம் செய்ய அனுமதி மறுக்கிறார்கள். உருது ஆசிரியர்கள் பணி நியமனங்களை அலசி ஆராய்ந்து,அவர்களின் கோப்புகளில் எங்கேனும் சிறு பிழை இருக்காதா என தேடித்தேடி பணி நீக்கம் செய்கின்றனர்.

குஜராத்தில் அம்மாநில மொழியான குஜராத்திக்கே பரிதாப இடம்தான் மிஞ்சியிருக்கிறது. அதனால்தான் 2023-24 நிதியாண்டில் 1-8ஆம் வகுப்பு வரை குஜராத்தியை கட்டாயமாக்கும் தீர்மானம் அம்மாநில சட்டப் பேரவையில் கொண்டு வரப்பட்டது. மூன்றாவது மொழியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மற்ற மொழிகளை கற்பிக்கலாம் என பெயரளவில் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஒரு மாநிலத்தில் கூட விருப்பப்பாடமாக தென்மாநில மொழியை மாணவர்கள் தேர்ந்தெடுத்ததாகவோ அல்லது ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவோ தகவல் இல்லை. ஏன், பல வட இந்திய மாநிலங்களில் ஆங்கில ஆசிரியர்கள் நியமனமே அரை குறையாகத்தான் உள்ளது.

மாறாக, இந்தியைத் திணித்த வட இந்திய மாநிலங்களில் மாநில அல்லது உள்ளூர் மொழிகளின் நிலையை கவலைக்கிடமாக்கியதுதான் நடந்திருக்கிறது. இப்போது இந்தி மட்டுமே அங்கும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்ட பிறகு, அடுத்து சங் பரிவார்களின் இலக்கான சமஸ்கிருதத்தை நோக்கி வேகமாக நகரத் தொடங்கிவிட்டார்கள். ராஜஸ்தானில் உருதுவை நீக்கிவிட்டு மூன்றாவது மொழியாக சமஸ்கிருதத்தை திணிக்க அம்மாநில பள்ளிக் கல்வித் துறை சமீபத்தில் முன்மொழிவு வழங்கியிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் ஏற்கெனவே பல தொடக்கப் பள்ளிகளில் சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாக்கப்பட்டு விட்டது. உத்தராகண்டில் இரண்டாவது அலுவல் மொழியே சமஸ்கிருதம்தான்.

இந்தியா முழுவதும் சமஸ்கிருதம் படிக்கத் தெரிந்தவர்கள் 24,821 பேர்தான் என்கிறது புள்ளிவிவரம். ஆனால் மத்தியப் பிரதேசத்தில் நெடுஞ்சாலை வழிகாட்டிப் பலகைகள் சமஸ்கிருதத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன. இமாச்சல்,கர்நாடகா,குஜராத்,பீகார் மாநிலங்களில் பள்ளி - கல்லூரிகளில் சமஸ்கிருத விழாக்கள், கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. மகாராஷ்டிராவில் சமஸ்கிருத வெளியீடுகள், கருத்தரங்குகள், மாநாடுகள் அதிகரிக்கத் தொடங்கி விட்டன. டெல்லியில் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள உதவித் தொகை தரப்படுகிறது. இப்படி இந்தியில் ஊறிப்போன மாநிலங்கள் எல்லாம் அடுத்து, சமஸ்கிருதத்தை ஊறுகாய் போல தொடத் தொடங்கி விட்டன. இன்னும் நாற்பது, ஐம்பது ஆண்டுகளில் அங்கே இந்திக்கு அடுத்த மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டுமென்பது அவர்களின் இலக்கு. அதேவேளையில், இன்னும் இந்தியைத் திணிக்க முடியாத சில தென்மாநிலங்களுக்காகத்தான் மும்மொழி, மும்மொழி என்று முக்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கும் திணித்து விட்டால் அடுத்து சமஸ்கிருதத்தை எட்டிப்பார்க்க வைப்பார்கள். அதன்பிறகு ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற முழக்கத்தை கையிலெடுத்து விடுவார்கள். அதற்கு இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம்! ஆனால் அதை நோக்கியதுதான் அவர்களின் நகர்வு

- பிரகாசு