ஒரு நாட்டின் அனைத்து மக்களின் பன்முக மேம்பாட்டுக்கு முதன்மையான இடுபொருள் கல்வி தான். உலகில் இதை உணர்ந்த நாடுகள் அவரவர் நாட்டு மக்கள் அனைவருக்கும் வேறுபாடு, பாகுபாடின்றி கல்வி அளித்து மேம்பட்டு விளங்குகின்றன. ஆனால் இந்திய ஒன்றிய அரசு (சட்டமன்றம், நிருவாகம், நீதித்துறை, ஊடகங்கள்) ஒன்றியக் கூட்டமைப்பாக மாறாத காலத்தில் தன்னுரிமை பெற்ற பல நாடுகளாக, தேசங்களாக இருந்த காலத்திலிருந்தே இன்று வரை இனிவரும் எவ்வளவு காலங்களுக்கும் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், போலித் தகுதி திறமை என்ற பெயரால், விலை விதிப்பு என வெகுமக்களாக உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எவ்வகையிலேனும் கல்வியை மறுப்பதற்குத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருவதின் நீட்சியைத்தான் தற்பொழுது அறிவிக்கப் பட்டுள்ள இந்திய ஒன்றியத் தேசியக் கல்விக் கொள்கை 2020 உறுதிப்படுத்துவதாக உள்ளது.
இக்கல்விக் கொள்கையை வகுத்திட அமைத்த குழுவின் தலைவர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர் களும் உயர்சிறப்புக் கல்வி பெற்றவர்களாகவும் மிக உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களாகவும் இருந்துவிட்டதினால் அவர்கள் நிலைக்கேற்ப தற்போது உயர்சிறப்புக் கல்வி நிலையங்கள் அனைத்திலும் நாட்டில் 10 விழுக்காடாக உள்ள மேல்தட்டு மக்கள் 80 விழுக்காடு
அளவுக்கு இடங்களைப் பிடித்து முற்றுரிமை பெற்ற நிலையை தக்க வைத்துக் கொள்ளும் வகையிலும் அவற்றின் தரத்தை உயர்த்துவதிலும்தான் சிறப்புக் கவனம் செலுத்தி உயர் கல்விக்கான கொள்கையை வகுத்துள்ளதாகத்தான் கருத முடிகின்றது.
ஒடுக்கப்பட்ட 90 விழுக்காட்டு மக்களின் கல்வி நலனைக் கருத்திற் கொண்டு உயர் கல்வியின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கக் (உண்மையில் உயர் கல்வி நிறுவனங்களைத் தனியார் வணிக நிறுவனங்களாக மாற்றிடும் நோக்குடன் முற்றும் தனியார் மயப்படுத்துவதற்குத்தான் திட்டமிடப்பட்டுள்ளது) கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே இக்கல்விக் கொள்கை உயர்நிலைக் கல்வியை வளர்ப்பதற்கும், தரம் உயர்த்துவதற்குமாக வகுத்தெடுக்கப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு வரவேண்டியுள்ளது.
இக்குழுவில் சமூக மேம்பாட்டை, குறிப்பாக ஒடுக் கப்பட்ட மக்களின் மேம்பாட்டை முன்னிறுத்திட விழையும் சமூகவியல் பார்வை கொண்ட கல்வியாளர்களையோ இன்னும் குறிப்பாகப் பள்ளிக் கல்வி ஒடுக்கப்பட்ட மக்களை உள்ளிட்ட அனைத்து மக்களுக்குமானது என அதன் மேம்பாட்டை முதன்மைப்படுத்திட விழையும் சமூகக் கல்வியாளர்களையோ இடம்பெறச் செய்யவில்லை.
இது காலமும் இருந்து வந்த ஒன்றிய அரசுகளின் குறிப்பாகப் பார்ப்பன சனாதனக் கோட்பாட்டைக் கொள்கையாகக் கொண்ட இந்துத்துவ ராட்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் அடிவருடியான தற்போதைய பாரதிய சனதாக் கட்சியின் இந்திய ஒன்றிய அரசு வெகுமக்களுக்கான அடிப்படைப் பள்ளிக் கல்வியை மறுப்பது என்ற நோக்கத்தில் வகுத்தெடுக்கப்பட்ட கல்விக் கொள்கை எனத்தான் கொள்ள முடியும்.
உண்மையில் நாட்டிலுள்ள மக்களின் கீழே காணும் சமூக, பொருளாதார, கல்வி நிலைகளை முற்றிலும் கருத்தில் கொள்ளாமல்தான் இத்தேசியக் கல்வி கொள்கை உள்ளது.
* பணிப்பாதுகாப்பு, சம்பள விகிதம், இவை சார்ந்த உரிமை பெற்றுள்ள அமைப்புசார் பணியாளர்கள் நாட்டிலுள்ள மொத்தப் பணியாளர்களுள் வெறும் 4 விழுக்காடு அளவுதான்.
* பணிப்பாதுகாப்பு, சம்பள விகிதம், இவைசார் உரிமைகள் ஏதுமின்றி அன்றாடம் சம்பளக்காரர் களாக நாள்தோறும் வேலை உறுதியில்லா நிலை யிலும், இவர்களின் சம்பளம் நாளும் மாறும் தன்மையிலான அமைப்புச்சாரா பணியாளர்கள் 95 விழுக்காட்டு அளவுக்கு மேலும் உள்ளனர்,
* இவர்கள் நாள் கூலி ரூ.30, 35 என நூறுக்கு மிகாமல் திங்களுக்கு ரூ.1000, 2000, 3000 எனப் பெற்று பல்லாயிரக்கணக்கான மருத்துவ மனைகளில் கல்விக்கூடங்களில் அலுவலக வளாகங் களில், பெரிய சிறிய வணிக வளாகங்களில், பெரிய சிறிய உணவகங்களில், ஊர்களின் சாலைகள், தெருக்களில் துப்புரவுத் தொழிலாளர்களாகவும், ஊர்ப்புறங்களில் உழவுத் தொழில் சிறு சிறு பணி களில், நெசவுத் தொழில் பணிகளில் வேலையாள்களாகவும், பல்லாயிரம் உணவுக்கூடங்களில் எடுப்பு வேலை செய்பவர்களாகவும் அரசு வரை யறை செய்துள்ள வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள 40-50 கோடி மக்களாக உள்ளனர்.
* இவர்களிலும் மேலாக கொடுமையான வறுமை யின் பிடியில் வாடி வதங்கும் 12-15 கோடி மக்களும் உள்ளனர்.
* இவர்களுடன் வணிக நிறுவனங்கள், மருத்துவ மனைகள், பள்ளிகள், சிறு சிறு தொழில் நிறு வனங்கள் என இவற்றில் கடைநிலையில் எழுத் தர்களாக, உதவியாளர்களாக நாளும் வயிறு கழுவுமளவுக்கு மட்டுமே ரூ.5000 அளவில் திங்கள் சம்பளம் பெற்று வருபவர்களாக 20-25 கோடி மக்கள் உள்ளனர்.
* பல்லாயிரக்கணக்கான தனியார் பள்ளிகளில் ரூ.10000-க்குள் திங்கள் சம்பளம் வாங்குபவர்களாக சில கோடி மக்கள் உள்ளனர்.
* இவ்வாறாக நாட்டில் 90-95 கோடி மக்களின் பிழைப்பு நாள்களை நகர்த்துவதாக உள்ளது.
இவ்வாறெல்லாம் நாட்டின் அவலச் சூழல் இருக்கும் நிலையில் சில பொருளியலாளர்கள், பேரறிவுக் கல்வி சார் வல்லுநர்கள், கொஞ்சம்கூட மனச் சான்றின்றி கூச்ச நாச்சமின்றி ஏற்கெனவே கல்வி கடைச்சரக்காய் வணிகப் பொருளாய் பெரிய அளவில் மாறிக்கொண்டும் கல்வி அளிப்பது அரசின் பொறுப்பல்ல எனப் பெருமள வுக்குத் தனியாருக்கே தாரை வார்த்துவிடப்பட்டுள்ள சூழலில் இன்னும் கல்வியை ஏன் இலாபம் ஈட்டும் தொழிலாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்று கூடக் கருத்துரைக்கின்றது போல் கல்விக் கொள்கையும் கயமைத் தனம் கொண்டதாய் உள்ளது நாட்டிற்குத் தலைகுனிவு.
இந்தக் கொள்கை ஆவணம் கல்வி குறித்து பள்ளிக் கல்வி, உயர்கல்வி, ஆசிரியர் பங்கு எனப் பல்வேறு தலைப்புகளில் உள்ளது. ஒவ்வொரு தலைப்பின் பொருளையும் விரிவான ஆய்வுக்குட்படுத்த இயலாது என்பதால் பள்ளிக் கல்வி குறித்தும் ஆசிரியர்கள் பற்றிய பகுதிகளை மட்டும் குறித்து விவாதிப்போம்.
இக்கல்விக் கொள்கை ஒன்றிய அரசின் 1986 ஆண்டைய புதிய கல்விக் கொள்கைக்குப்பின் 34 ஆண்டுகள் கழித்து வெளியிடப்படுகிறது. இவ்வளவு நீண்ட நெடிய காலத்தில் பொத்தாம் பொதுவாக வெறும் தரம் என்ற சொல்லுக்குள் அடக்க முற்படும் இவ் ஆவணம் பள்ளிக் கல்வி எவ்வாறெல்லாம் மாற்றத்திற்குள்ளாகியுள்ளது; வளர்ச்சியோ மேம்பாடோ எந்த அளவுக்குப் பெற்றுள்ளது; இதற்கான அடிப்படைக் கட்டமைப்பு களான கட்டடங்கள், கற்றலுக்கான துணைக் கருவிகள், கல்விக் கூடத்தின் சுற்றுச்சூழல் அடிப்படை வசதிகள் பற்றிக் குறைந்தது நாடு முழுமைக்கும் மாநில வாரியாகவும் ஆண்டுதோறும் இல்லாவிட்டாலும் ஐந்து ஆண்டுகால இடைவெளியில் ஆன விவரங்களைத் தந்திருக்கவேண்டும்.
மேலும் 5ஆம் வகுப்பு வரையி லான மாணவச் சிறார்களின் சேர்க்கை அளவு, அவர் களுக்கான போதிய வகுப்பறைகள், ஆசிரியர் மாணவர் விகிதம், ஆசிரியர்களே இல்லாத பள்ளிகள், ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளின் எண்ணிக்கை, பள்ளிகள் ஊர்ப்புற சமூகப் பொருளாதாரச் சூழல், பள்ளிக்கல்வி அளிப்பதில் அரசின் ஒட்டுமொத்த பங்களிப்பு அளவு, தனியாரின் பங்களிப்பு அளவு என்பவையெல்லாம் குறித்த நெடிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். இதுபோன்ற அடிப்படை அள்ளித்தெளித்த கோலமாய் அவசர அவசரமாகக் கல்வி கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.
அந்த ஆய்வின் அடிப்படையில் மேற்சொன்ன பொருள்கள் குறித்தெல்லாம் முதல் நிலை புள்ளி விவரங்களைத் (Primary Data) தர முற்படாமல் போனது பெரும் பிழை. உண்மை நிலையை நாட்டுக் குத் தருவதிலிருந்து ஒன்றிய அரசு தனது பொறுப்பைப் புறந்தள்ளிவிட்டுள்ளது.
போகட்டும் குறைந்தது இப்பொருள் கள் குறித்து இரண்டாம் நிலை விவரங்களை (Secondary Data) நாட்டிலுள்ள கல்வி இயக்ககங்களிலிருந் தாவது பெற்று முழுமையான நுண்ணிய புள்ளி விவரங்களை (Micro Data) யெல்லாம் கொடுக்கத் தவறி விட்ட போதிலும் இந்த அரசு குறைந்தளவு பருண்மையான (Macro Level Data) புள்ளிவிவரங்களையாவது கொள்கை அறிக்கையில் கொடுத்திருக்க வேண்டும்.
உண்மையில் அதன் அடிப்படையில்தான் தீர்வுகளை யும் முடிவுகளையும் முன்மொழிந்து முதன்மையான வற்றைத் தெரிவு செய்து நடைமுறைப்படுத்துவது பற்றி விவாதித்திருக்க வேண்டும். இவை எதன் அடிப்படை யிலுமின்றி, மனம் போனபடி செழிப்பான இந்திய ஒன்றிய 22 மொழிகளிலுமின்றி (இந்தி தவிர்த்து) சொல்லலங்காரத்துடன் ஆங்கிலத்தில் மட்டும் தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டாட்சியாக (Federal) இயக்குவதாகச் சொல்லப்படும் இந்த ஒன்றிய அரசின் சிந்தை நேர்மையானதா என்று அய்யுற வைக்கின்றது. மேலும் கல்விக் கொள்கை என்ற பெயரில் வரலாற்றுக் காலமெல்லாம் வெகு மக்களுக்குக் கல்வி மறுப்பைக் கோட்பாடாகக் கொண்டி ருந்த பார்ப்பன, சனாதன இந்துத்துவத்தை ஒன்றிய அரசு உள்நோக்கமாகக் கொண்டுள்ளதோ என்ற எண்ணமும் தோன்றுகிறது.
நாட்டின் கல்வித் தரத்தை உயர்த்துவது என்பது தான் இக்கல்விக் கொள்கையின் நோக்கம் என்று சொல்லப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் கல்வித் தரத்தின் அளவு கணக்கிடப்பட்டுள்ளது என்றால் அது 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்பு மாணவர்களின் கணக்குப் பாடத்திறன், வாசிக்கும் திறன் கீழ்நிலையில் உள்ளது என்பதுதான் எனத் தெரிகின்றது.
இதில் மாணவர்கள் கற்றல் திறன் மட்டும் கணக்கில் கொள்ளப்பட்டு கற்பித்தல் திறன் கருத்தில் கொள்ளப்படாதது அடிப்படை அறிவுக்குப் பொருந்திய ஆய்வுக் கண்ணோட்டமா என்ற அய்யம் எழாமலில்லை. மேலும் மாணவர் கற்றல் திறனுக்கு அடிப்படையாக அமைவது அவரின் இயல்பான அறிவுத் திறன், பள்ளிச் சூழல், கல்விச் சூழல், வகுப்பறைச் சூழல், கல்வித் துணைக் கருவிகள் பயன்படுத்துதல் என்பனவன்றி மிகவும் முதன்மையானதாகக் கொள்ளப்பட வேண்டியது கற்பித்தல் திறன்.
இதில் ஆசிரியர் திறன் என்று மட்டும் சுருக்கிப் பார்த்திட முனைவது அறிவுடைமையாகாது. ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மேம்பட அவர்களுக்கு எவ்வாறான கால இடை வெளியில் தொடர் பயிற்சி அளிக்கப்பட்டு வந்துள்ளது என்பதுதான் மிக மிக முதன்மையானது. இதுவன்றி ஆசிரியர்களின் நலன்கள் பேணப்பட்டு கற்பித்தல் திறன் உணர்வு மேலோங்க வழிகாணப்பட்டதா?
மேற்சொன்ன காரணங்கள் மட்டுமல்ல, ஒரு மாணவனின் கற்றல் திறனுக்கு உடன் பயிலும் மாண வர்களின் கற்றல் திறன், அவர்களது குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், கல்விச் சூழல், அவர்கள் வாழும் பகுதியின் பொருளாதார, கல்விச் சூழல், அவர்கள் சார்ந்த சமூகத்தின் கல்வி, பொருளாதார நிலை, அவர்கள் வாழும் ஊர்களின் பொருளாதார கல்வி நிலை போன்றவையெல்லாம் கூடத்தான் காரணங்கள் என்பதைக் கல்வியியல், சமூகவியலாளர்கள் உணர்த்துவர்.
இப்பொதுப் புரிதலையெல்லாம் கருத்திலும் கவனத்திலும் எடுத்துக் கொள்ளாததுடன் பொத்தாம் பொதுவாக மாணவர்களின் கற்றல் திறனைக் கணக்கிட அவர்களின் கணிதப் படிப்பு, பிற பாடப் படிப்பு அறிவு மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு அவர்களின் போதா மைக்கு அவர்கள் கற்றல் திறன் குறைபாடு மட்டுமே என்ற முடிவுக்கு வந்துள்ளது ஆய்ந்த அறிவின்பாற் பட்டதல்ல.
இதனினும் கொடுமை என்னவெனில் பள்ளி மாணவர்களின் கற்றல் திறனின் போதாமைக்கு அவர்களை மட்டுமே முழுப் பொறுப்புள்ளவர்களாக்கி அதற்கான தீர்வாக அவர்களுக்குத் தேர்வு நடத்தி அவர்களைப் பாடம் படிக்கத் தூண்டலாமென்ற முடிவுக்கு வந்துள்ளது என்பது முறையானதா? மேலும் பாடத் திட்டத்தின் தரத்தை உயர்த்தலாம் என முன்மொழிவது முறையானதா? இல்லை, இல்லவே இல்லை. இது முற்றிலும் அடிமுதல் முடிவரை பெறுந் தவறானது.
அதிலும் 3ஆம், 5ஆம், 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாடு தழுவிய பொதுத் தேர்வு நடத்திட வேண்டுமென்று இக்கல்விக் கொள்கை கூறுவது மாணவர்களை அச்சுறுத்தி அவர்களைக் கல்வியி லிருந்து அப்புறப்படுத்துவதற்குத்தான் அடிகோலும். இந்திய ஒன்றிய அனைத்து மாநிலத் தேசங்களின் பள்ளிக் கல்வி உயர்கல்வி என எந்நிலையிலுமுள்ள எவ் அகவையினரும் தேர்வு என்றாலே அச்சம் என்ற சிந்தை உள்ளவர்களாகவே இருக்கின்றனர் என்பது தான் அடிப்படை உண்மை.
என்வரையில் தன் போற்றி என்ற தன்மையிலின்றி நான் உணர்ந்ததைப் பகிர்வது பிழையாக அமையாது என்று நினைக்கிறேன். 1963ஆம் ஆண்டில் 8ஆம் வகுப்பில் முதல் மாணவனாக ஆண்டு இறுதித் தேர்வு முடிவுற்ற நிலையில் என் நண்பர் ஒருவரிடம் நான் 9ஆம் வகுப்புக்குத் தேர்ச்சி பெறுவேனா என அச்சத்துடன் கேட்க, அவர் நகைத்துவிட்டு நீங்கள் எப்படி தேர்ச்சி பெறாமல் இருக்க முடியும் என எனக்கு நம்பிக்கையூட்டினார்.
மாணவக் காலத்தில் குறிப்பாகப் பள்ளி இளமைக் காலத்தில் தேர்வில் தோல்வியடைந் தால் குறிப்பாக ஊர்ப்புற மாணவர்கள் துவண்டுவிடும் சிந்தை உடையவர்களாகத்தான் இருப்பர். தோல்வி யெனில் மாணவரே இனிமேல் படிப்பு ஏன் என் றெண்ணம் கொண்டவராக, குடும்பம், உற்றார், உறவினர், சமூகம் அவர் படிப்பு தொடர்வதைக் கேள்விக்குள்ளாக்குவர் என படிப்பை இடையில் நிறுத்திட முனை வார். இதுதான் இங்குள்ள மாணவர்களின் பொதுச் சிந்தை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இந்த ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பிலிருந்து இடைநின்றுவிட்டுப் போகட்டும் என்ற கெடு உள்நோக்கம் கொண்டு கல்விக் கொள்கை வரையப்பட்டதா?
எனவே முதலில் தொடக்கப் பள்ளிக் காலத்தில் தேர்வுதான் திறனைக் கணிக்கும் ஓர் அளவுகோல் என்பதே பெரும் பிழையான காரணி. அதைக்காட்டி லும் அதற்கு மாணவரை மட்டுமே காரணியாக்க முற்படுவது பிறழ் சிந்தை கொண்டவர் மட்டும்தான் அவ்வாறு எண்ண முடியும். அவ்வாறெனில் 3, 5, 8ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு என்பதை அறவே கைவிட வேண்டும் என்பது அறிவுடைமை.
இக்கல்விக் கொள்கை 50 விழுக்காடு அளவிற்காவது மாணவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் கல்வியை 2025-க்குள் அளித்திட வேண்டுமென இலக்கே குறித் துள்ளது. பள்ளிக் கல்விக் காலத்தில் மாணவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் கல்வி அளித்தல் என்பதில் நேர்மையான நோக்கம் உள்ளதாகத் தெரியவில்லை.
ஒடுக்கப்பட்ட சமூகம்சார் மாணவர்கள் அண்மைக் காலத்தில்தான் சில தலைமுறைகள்தான் படிப்பு வளையத்திற்குள் வந்துள்ளனர். இன்னும் கணிசமான மாணவர்கள் இந்தப் படிப்பு வளையத்திற்குள் இன்னும் வரவே இல்லை என்பதுதான் உண்மை நிலை. இந்நிலையில் அந்த மாணவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் கல்வி அளிப்பது என்பது அவர்களைக் கல்விச் சூழலில் தொடர்ந்து இருக்கவிடாமல் இடையில் தடையிடுவது போல் தெரிகின்றது.
இந்த இடைத் தடையைக் கடந்து அவர்கள் மீண்டும் கல்விச் சூழலுக்குள் வருவதற்குத் தயங்கும் மனநிலை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. உண்மையில் அது அவர்களை முறையான கல்விச் சூழலிலிருந்தே விலக்கிடும் மனநிலைக்கே தள்ளிவிடக்கூடும். எனவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு வாழ்க்கைத் தொழில் படிப்பு அளிக்க முற்படுவது என்பது முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.
மேலும் மாணவர் கற்றல் திறனுக்கு அடிப்படையான வற்றை முன்பத்தியில் சொன்ன பட்டியலில் ஆசிரியரின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதுதான் முதன்மையான உடனடியாகச் செயற்படுத்தத்தக்கது. மற்றவை எல்லாம் காலப்போக்கில் அரசுகள் உண்மையில் மக்கள் பற்றுள்ளதாக, அக்கறையுள்ளதாகத் தொடர்ந்து நிலைத்து செயற்த்திட்டங்கள் மேற்கொண்டால் பொதுச் சமூக மேம்பாட்டையும். அதற்கெல்லாம் பார்ப்பனிய, சனாதன சிறுமைக்குள் சிக்கித் தவிக்கும்சிந்தை கொண்ட இந்திய ஒன்றிய அரசுகளுக்கும் மாநிலத் தேச அரசுகளுக்கும் ஒரு கடப்பாட்டுணர்வு எக்காலத்தில் ஏற்படும் என்பதே மிகப்பெரும் வினா? எனவே அவற் றைக் காலம் நேர்செய்யும் என்று விட்டுவிடுவோம்.
ஆனால் பள்ளி மாணவர் கல்வித் திறன் மேம்பட தீர்வுகளாவன :
* அனைத்து வகுப்பு ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பாட ஆசிரியர் அமர்த்தப்பட வேண்டும். ஆசிரியரில்லா பிரிவு இருக்கக்கூடாது.
* ஒவ்வொரு வகுப்புப் பிரிவும் கற்றலுக்கான அனைத் துக் கருவிகளையும் கட்டடம், கரும்பலகை, எழுது பொருள், நல்லிருக்கைகள் இருக்க வேண்டும்.
(இவையெல்லாம் நாடெங்கிலுமுள்ள பள்ளிகளி லுள்ள பெரும் குறைகள் என அவ்வப்போது வெளி வரும் ஆய்வுகள் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் இத்தேசியக் கல்விக் கொள்கை அறிக்கை முன்பே சொன்னது போல் நடப்பில் இருக்கும் குறை பாடுகளைத் திறந்த மனதுடன் வெளிப்படுத்தி, அதற் கான காலவரையிலான தீர்வுகளையும் சொல்லி யிருக்க வேண்டும்).
* மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்கள், எழுதுவதற் கான ஏடுகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
* ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அளவிட முற் படுவது முறையற்றது. அவர்களுக்குக் காலமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறையான பயிற்சி அளித்து கற்பித்தல் திறனை மேம்படச் செய்ய வேண்டும். அவர்களையும் தேர்வு என்ற நிலைக்குத் தள்ளுவது தற்கொலைக்கு ஒத்த தாகும் என அரசு உணர வேண்டும். எனவே அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
* மாணவர்களிடையே குழு கற்றல் முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.
* ஆசிரியர் மாணவர் விகிதம் கல்விக் கொள்கை சொல்லும் 1:30 என்பதன்றி 1:25 என்ற அளவி லாவதுதான் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆசிரியரின் மாணவர் மீதான தனிக்கவனம் சிறப்பாக இருக்கும்.
* ஆசிரியர்களிடையேயும் கற்பித்தல் குறித்த குழு விவாதத்துடன் கூடிய பயிற்சி வகுப்புகள் நடத்தப் பட வேண்டும்.
இந்தத் தேசியக் கல்விக் கொள்கை இன்னும் 10 ஆண்டுகளில் 100 விழுக்காடு மக்களையும் படிப்பறிவு பெற்றவர்களாக மாற்றும் என்கிறது. இது ஒரு வெற்றுப் பேச்சுத்தான். ஏனெனில் இந்த இலக்கை எட்ட மேற் கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் - இனி ஆண்டு தோறும் பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டு அளவு எவ்வளவு என்றோ, அதற்கேற்ப எவ்வெவ்வகையிலெல்லாம் நிதி ஆதாரம் திரட்டப்படும் என்றோ, எவ்வெவ்வகையிலெல்லாம் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது போன்றவை பற்றியோ விவரங்கள் விரிவாகப் பேசப்படவில்லை.
எனவே இது முற்றிலும் பொய்யுரை. ஆனால் இன்னும் 10 ஆண்டுகள் கால வரை என்கிறது கல்விக் கொள்கை. ஆனால் அரச மைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 1950-லிருந்து 1960-க்குள் 10 ஆண்டுகளுள் 14 அகவைக்குள்ளோர் அனைவருக்கும் கட்டாய இலவயக் கல்வி அளிக்கப்பட அரசு ஆவன செய்யும் என அரசமைப்புச் சட்டப் பிரிவு 45 இலக்குக் குறிப்பிட்டது.
விடுதலை பெற்று இந்திய ஒன்றியம் 73 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வெறும் 75 விழுக்காட்டு மக்களுக்கே படிப்பறிவைத் தந்துள்ளது. ஆனால் இலக்கு ஆண்டு 1950-லிருந்து பத்து ஆண்டு கள்தான். இதற்கு இந்திய ஒன்றிய அரசு (சட்டமன்றம், நிருவாகம், நீதித்துறை) வெட்கித் தலைகுனிய வேண்டும். ஆனால் இதற்கென எவ்வித ஆக்கப்பூர்வமான திட்டத் தையும் வகுத்திட வழிகோலாமல் இன்னும் 10 ஆண்டு கள் நீட்டித்து இலக்கை எட்டும் என கல்விக் கொள்கை சொல்வது நகைப்புக்குறியதாகத்தான் உள்ளது.
மேற்சொன்ன பிரிவு 45 வழிகாட்டு நெறிகள் பகுதியில் உள்ளது. இதை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைப் பகுதிக்குள் சேர்க்கிறோம் என்று இந்த இந்திய ஒன்றிய அரசுகள் (சட்டமன்றம், நிருவாகம், நீதித்துறை) 2010-இல் அரசமைப்புச் சட்டம் 1986-இல் திருத்தம் செய்து பிரிவு 21அ-ஐ சேர்த்தது. ஒன்றிய அரசின் அனைத்து அலகுகளும், நான்காம் அலகான ஊடகங்களும் முதலில் இருந்த அரசமைப்புச் சட்ட 45ஆம் பிரிவில் சொல்லப்பட்டிருந்த 1960 வரையி லான பத்தாண்டுக் காலவரையறையை அப்படியே மறைத்து விட்டதற்குத் துணைபோய்விட்டன என்பதை மனச்சான்றுள்ள சமூகமாக இருப்பின் அமைதியாக இருந்திருக்காது.
இருப்பினும் மக்கள் நலத்தின் உண்மை யான பற்றுக்கொண்ட அமைப்புகள் இந்த இருட்டடிப்பை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து அரசமைப்புச் சட்டத்தில் அது திருத்தப்பட்டதிற்கு முன்பு இருந்த அரசமைப்புச் சட்ட 45ஆம் பிரிவை அப்படியே அனைத்து அரசமைப்புச் சட்ட நூல்களில் அடிக்குறிப்பாகச் சேர்க்கப்பட ஆவன வெல்லாம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இந்திய ஒன்றிய அரசுகளால் படிப்பறிவு 1960-க்குள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டியதைக் கொடுக்காமல் வஞ்சித்து வருகின்றனர் என்ற பதிவு இடம்பெறும்.
இக்கல்விக் கொள்கை தாய்மொழிவழிக் கல்வியை 5ஆம் வகுப்பு வரையிலும் வாய்ப்பிருப்பின் 8ஆம் வகுப்பு வரையிலும் அளித்திடுவது பற்றிச் சொல்லிச் செல்வதைச் சுட்டி ஒன்றிய பா.ச.க அரசும் பார்ப்பன, சனாதனக் கட்சிக் கூட்டம் வெற்றுப் பெருமை பேசி கொண்டு வருகிறது. உண்மையில் தாய்மொழிக் கல்வியை கட்டாயமாக்கும் வகையில் இதில் ஏதும் கூறப்படவில்லை. ஆனால் உண்மையில் வெறும் தழுக்காக வாய்ப்பிருப்பின் அவ்வப்பகுதி மொழிகளி லேயே / தாய்மொழியிலேயே பள்ளிக் கல்வி வழங்க லாம் என்றுதான் இக்கல்விக் கொள்கை குறிப்பிடுகிறது.
மேலும் இக்கல்விக் கொள்கை நாடு முழுவதற்கும் மும்மொழிக் கொள்கையை முன்னெடுக்கிறது. இங்கு இவ்வரசின் உள்வஞ்சக நோக்கம் இந்தியை இந்தி மொழி பேசா மக்களுள்ள மாநிலத் தேசங்களில் வலுக்கட்டாயமாகத் திணிக்கத் திட்டமிட்டுச் செயல்படு கின்றது. அதாவது நாட்டிலுள்ள அனைத்துப் பள்ளி மாணவர்களும் தாய்மொழி, ஆங்கிலம் இரண்டையும் தவிர மூன்றாம் மொழி ஒன்றையும் கற்றுக்கொள்ள வேண்டுமென்கிறது.
அந்த மூன்றாம் மொழி மாணவர் கள் விருப்பத்திற்கேற்ப இந்திய ஒன்றியத்திலுள்ள 9ஆம் அட்டவணையிலுள்ள எந்த மொழியாகவும் இருக்கலாம் என்கிறது. காட்டாக தமிழ்நாட்டிலுள்ள ஒரு மாநிலப் பள்ளி மாணவர்கள் மூன்றாம் மொழியாக வங்கமொழி அல்லது மராட்டிய மொழி என வெவ்வே றான மொழி ஏதாவது ஒன்றை விரும்பினால் அம்மொழிப் பாடங்களுக்கெல்லாம் தனித்தனியே அம்மொழி ஆசிரியர் களை நியமனம் செய்யுமா அந்த மாநில அரசுகள்? முடியவே முடியாது.
ஆனால் விருப்ப மொழி என்ற பெயரில் இந்தி மட்டுமே என மறைமுகமாக இந்தி மொழியை அம்மொழி பேசாத மக்கள் மேல் வலுக்கட் டாயமாகத் திணிக்க முற்படுகிறது இந்தக் கல்விக் கொள்கை. ஆனால் அதே நேரத்தில் மத்திய தேசம், உத்திர தேசம், அரியானா போன்ற மாநிலங்களில் இந்திதான் வட்டாரத் தாய்மொழி. அந்த மாநிலப் பள்ளி மாணவர்கள் இந்தியுடன் ஆங்கிலம் படிப்பார்கள். அவர்களுக்கு மூன்றாம் மொழியாகத் தமிழையோ, வங்க மொழியையோ என வேறெந்த இந்திய ஒன்றிய மொழி ஏதும் கற்பிக்கப்படுவதில்லை.
ஆங்கிலேயன் ஆட்சிக் காலத்தில் நிருவாக வசதிக்காய் பல்வேறு மொழி பேசும் தேசங்கள் இந்திய ஒன்றியம் என்று அமைக்கப்பட்டது. ஒரு மாநிலத் தேசத்தில் அம்மக்கள் தாய்மொழியின்றி வேறு மொழிகள் அவர்கள்மேல் திணிக்கப்படமாட்டாது என்ற உறுதிமொழி தரப்பட்டது. நாடு விடுதலை அடைந்த பின்னும் நேரு அந்த நிலை நீடிக்க உறுதி செய்து ஆணையிட்டார். ஆனால் இந்திய ஒன்றிய அரசமைப்புச் சட்டம் இந்தி மொழி வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து நாட்டின் அலுவல் மொழியா கவும் ஆக்கிவிட்டது. இதில் கூடப் பிற மொழியினர் மீது இந்தித் திணிப்பு ஏன் வரவேண்டும். எனவே இக்கல்விக் கொள்கை விருப்பப்பட்ட மாநிலம் மும்மொழிக் கொள் கையை ஏற்கலாம் என்று திருத்தப்பட வேண்டும்.
இவையெல்லாமின்றி இக்கல்விக் கொள்கை என்ன காரணத்தினால், என்ன தேவைக்கு, என்ன நன்மைக்கு சமற்கிருத மொழி பற்றிப் பல இடங்களில் பேசுகிறது. ஆனால் ஒன்றிய அரசமைப்புச் சட்ட 9ஆம் அட்டவணையிலுள்ள வேறு 20 மொழிகள் பற்றிப் பேசவில்லை. உண்மையில் சமற்கிருத மொழியின் நிலை என்ன?
உலக மொழிகளுள் தொன்மொழிகள், செம்மொழி களான தமிழ், சீனம், இலத்தீன், கிரேக்கத்தைப் போன்று சமற்கிருத மொழியும் தொல் மொழி, செம்மொழி என்றெல்லாம் சொல்லப்பட்டு, இந்திய ஒன்றிய அரசும் அறிவித்தும் விட்டது; இருந்துவிட்டுப் போகட்டும். அதன் இலக்கிய, இலக்கண வளம், உலகில் பல நாடுகளில் போற்றப்பட்டு பல பல்கலைக்கழகங்களிலும் இம்மொழி கற்பிக்கப்பட்டு வருவதாகவும் பெருமை பேசப்பட்டு வருகிறது.
ஆனால் இம்மொழி இறைமொழி யென்றும், பார்ப்பனர்களில் ஒரு ஓதுவார்க் கூட்டம் மட்டும் இம்மொழிப் பாக்களை மனனம் செய்து கற்கவும், இறைவனின் வழிபாட்டு மொழியாகச் சொல்ல வும் என்றுதான் அறியப்படுகிறது. அதுமட்டுமல்ல, பார்ப்பனர்கள் தவிர்த்த எவரும் எங்கும் இம்மொழியைப் படிப்பதற்காகக் கேட்கவும், பார்க்கவும், திரும்பச் சொல்லவும் முற்படுவது பெரும் குற்றமாகக் கருதப்பட்டு, மீறுபவர் கள் கொடுந்தண்டனைக்கும் உள்ளாக்கப்படுவர் என ஈராயிரம் ஆண்டுகளாக இந்த சமற்கிருத வேதம் படிப்பு ஏனையோர் அனைவருக்கும் மறுக்கப்பட் டுள்ளது.
ஆனால் உலகில் இந்திய ஒன்றியம் பிற வெளி நாடுகளில் உள்ள பார்ப்பனர்கள் உள்ளிட்ட வேறெந்த நாட்டினருக்கும் சமற்கிருதம், தாய்மொழி என்ற அடிப்படைத் தகுதியே அற்ற மொழி என்றுதான் நம்பப் பட்டு வருகின்றது. இருப்பினும் எவரோ அதைத்தன் தாய்மொழி என்று சொல்லிக் கொண்டாலும் சரி, வெறும் பத்தாயிரம் இருபதாயிரம் பேர் மட்டும் பேசும் மொழி என இந்திய ஒன்றிய மக்கள் தொகைக் கணக் கெடுப்பு புள்ளிவிவரங்களிலிருந்து காணலாம்.
ஆனால் தாய்நாடற்ற, தமக்கெனத் தாய்மொழி யற்ற இந்திய ஒன்றியத்திலுள்ள வெறும் 4-5 விழுக்காடு அளவிலுள்ள பார்ப்பனச் சனாதனக் கூட்டம் ஒன்றிய அரசு ஆட்சியைப் பிடித்துக் கொண்டு நாட்டிலுள்ள 137 கோடி மக்களுக்கும் மேலானவர்கள் யாவருக்கும் தெரியாத, புரியாத சமற்கிருத மொழி எண்ணை நாட்டின் பணத்தாள்களில் பதித்துவிடச் செய்துள்ளனரே, ஏன்? எதற்கு, யாருக்காக? புரியவே இல்லை.
வேறென்ன; இந்தக் கூட்டத்தின் மொழிவெறி என்று சொல்வதன்றி வேறென்னவென்று சொல்லமுடியும். எதிர்வினை ஏதுமில்லாதே நட்புக்கு வந்துவிட்டதே. ஆனால் உலகில் பத்துக்கோடி அளவில் உள்ள மக்களின் தாய்மொழியாம் தமிழ்ச் செம்மொழியின் உண்மையான இலக்கிய, இலக்கணச் சிறப்பையும் வேர்ச் சொற்கள் பல ஆயிரங்கள் கொண்டு உலகி லுள்ள பிற மொழிகளையெல்லாம் மிஞ்சி நிற்கின்ற தமிழ் மொழியின் மேன்மையைப் பற்றிச் சொன்னால் விவரித்தால் இங்குள்ள பார்ப்பனர் கூட்டம் மொழி வெறி என்று வெற்றுக் கூச்சல் போலத் தொடங்கி விடுகிறது. அடிவருடிகள் சிலர் இதற்குத் துணை போகின் றனர் என்பதுதான் விளங்கா வியப்பாயிருக்கின்றது.
ஆனால் தேசியக் கல்விக் கொள்கை வரைவில் சமற்கிருத மொழியின் சிறப்பு விதந்து குறிப்பிடப்படுவ துடன் சமற்கிருத மொழி என்ற சொற்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செத்த இந்தச் செம்மொழிக்கு ஒன்றியத்தில் பலப்பல பல்கலைக்கழகங்கள், பலப்பல ஆயிரங் கோடிகள் பன்னெடுங்காலமாக ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டு வருகிறது.
சரி, ஆட்சி அதிகாரங்கள் இந்தப் பார்ப்பனக் கூட்டத்தின் கையில் குவிக்கப்பட்டு விட்டது. சமற்கிருதம் செம்மொழிதான்; ஆனால் அந்தச் செத்த மொழியை உயிருடன் வைத்திட முனைவது சரிதான். ஆனால் அது மக்கள் மொழியாக அதன் 2000 ஆண்டு வரலாற்றில் இருந்திடக்கூடாது என இந்தப் பார்ப்பனக் கூட்டம் திட்டமிட்டுச் செயல்பட்டுவிட்டு இப்போது இம் மொழி உலா வரவேண்டுமென்ற வெற்று வேட்கையில் காலமெல்லாம் மக்கள் மொழியாம் தமிழ்ச் செம்மொழி யையும் பிற உயிருள்ள மக்கள் மொழிகளான அரச மைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள 22 மொழிகளையும் செழிப்பான மொழிகளாக வளர்த்திட போதுமான நிதி ஒதுக்கீடு செய்திட மறுத்து இந்திய ஒன்றிய அரசுகள் வஞ்சகம் செய்துவிட்டு சமற்கிருதத்திற்கு பலப் பல நூறு கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து செலவழித்து வீணடித்து வருவது பார்ப்பனர் உள்ளிட்ட 137 கோடி ஒன்றிய மக்களுக்கும் இழைக்கும் வன்கொடுமைச் செயலாகும்.
இந்தச் சங்கிகள் இந்த மொழி வளர்ச்சிக் கென்று செலவிட்டு மக்கள் நலன் சார்ந்த என்ன பயன் பெற்றனர் என்பது பெரும் வினா? சமற்கிருதப் பல்கலைக் கழகங்கள் பலவற்றை அமைத்துக் கொண்டே வந்து நாட்டிலுள்ள சிறு கூட்டம் பல ஆயிரம் கோடி நிதியைக் கொள்ளையிட்டுக் கொழுத்து வருகின்றனர் என்பதன்றி வேறென்னவாக இருக்கமுடியும்.
ஒன்றை இந்தக் கூட்டம் புரிந்து கொள்ள வேண்டும். உலக மக்கள் மொழியாகக் கருதப்படும் ஆங்கிலத்தை ஆங்கிலேயர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி மொழியாகவும் கல்வியில் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் கொண்டிருந்தும் நாடு விடுதலை அடைந்தும் இன்னும் தொடருகின்ற போதிலும் ஒன்றி யத்தில் 10 விழுக்காட்டுக்குள்ளான மக்களுக்கான மொழி யாகத்தான் மாறியுள்ளது என்பதுதான் உண்மை.
ஆனால் சென்ற 2000 ஆண்டுக்கும் மேலான எந்தக் காலத்திலும் மக்கள் மொழியாக இல்லாதவாறு சமற்கிருத மொழியைப் பார்த்துக் கொண்ட இந்தப் பார்ப்பனக் கூட்டம் சில காலமாகக் கல்வியில் பாடமொழியாக ஆக்கி மக்கள் வாழ்க்கைக்கு ஒவ்வாத, எவ்விதத்திலும் பயனில்லாத இந்த மொழியைத் தேசியக் கல்விக் கொள்கையில் உயர்த்திப் பிடிப்பதில் ஏதோ உள் நோக்கம் இருப்பதாகத் தெளிவாகத் தெரிவதுடன் பிற இந்திய மொழிகள் புறக்கணிக்கப்படுவது கண்கூடு.
73 ஆண்டைய விடுதலை பெற்ற இந்திய ஒன்றியத்தில் நாட்டுக்கே உயிரான தேசியக் கல்விக் கொள்கையாக இருக்க வேண்டிய வரைவை ஆங்கிலம், இந்தி தவிர்த்த மாநிலத் தேசங்களின் எந்த மொழி யிலும் மக்களுக்குத்தர முன்வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டுவிட்டது, இந்த ஒன்றிய அரசின் கயமைத் தனத்தைத்தான் காட்டுகின்றது. இதுபோன்று நாடு தழுவிய கொள்கை ஆவணங்கள், சட்டங்கள் யாவும் வெளியிடப்படும் போது அட்டவணையிலுள்ள 22 மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்படும் வகையில் ஒவ்வொரு மொழிக்குமான மொழிபெயர்ப்புக்குழு உடனடியாக அமைக்கப்பட ஆவன செய்யாத கையா லாகாத அரசு ஒன்றிய மக்கள் அனைவருக்குமான அரசாக எப்படி இருக்க முடியும்? உண்மையில் மக்களுக்கு எதிரான அரசு என்றுதான் சொல்ல முடியும்.
137 கோடி அளவுக்கு மிகப்பெரும் மக்கள் தொகை கொண்ட இந்திய ஒன்றியம் பல்வேறு இன, மொழி, பண்பாடுகளைக் கொண்ட வெவ்வேறு வகைப்பட்ட மக்களைக் கொண்டதாகும். இந்த ஒன்றியத்தின் பெருமை இதன் பன்முகத் தன்மைதான் உலகே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இந்த இந்திய ஒன்றியமும் அய்க்கிய அரசுகள் (United Kingdom - UK), கனடா (Canada), அய்ரோப்பிய ஒன்றியம், சுபெயின் (Spain), சுவிட்சர் லாந்து போன்ற பல நாட்டு மக்கள் பல்வேறு மொழி யைத் தாய்மொழியாகக் கொண்டு அவரவர் தாய் மொழி பாதுகாக்கப்பட்டு இணைத்த ஒரே நாடாக இணக்கமாக இருந்து வருகின்றன.
இவையெல்லாவற்றையும்விட பலதரப்பட்ட எதிர்மறைத் தன்மையிலான வெவ்வேறு பண்பாடுகளைப் பின்பற்றி தத்தம் மொழி யையும் இன நலங்களையும் பாதுகாத்து காப்பாற்றிக் கொண்டு வரவேண்டும் என மக்கள் ஒன்றிணைத்து இந்திய ஒன்றிய நாடாக உள்ளனர். இதற்கு எதிராக ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே வரி, ஒரே பண்பாடு கொண்டதாக இந்திய ஒன்றியம் மாற்றப்படுவதற்கு முனையும் பார்ப்பன, சனாதன இந்துத்துவ இந்து ராட்டிரிய சுயம் சேவக்கின் அடிவருடியாக உள்ள பாரதிய சனதாக் கட்சி அரசு அடிப்படையில் ஒன்றை மறந்துதான் செயல்படுகிறது.
வெவ்வேறான மொழிகளையும் பண்பாட்டையும் கொண்ட மக்களின் ஒற்றுமை என்பது வேறு, ஓர்மைப் படுத்துவது என்பது முற்றிலும் ஒற்றுமைக்கு எதிரானது. ஒற்றுமை பேணப்பட வேண்டும்; காப்பாற்றப்பட வேண்டுமென்பது முதன்மை. இதை மனதில் கொண்டு தேசியக் கல்விக் கொள்கை அனைத்துத் தேசிய இன, மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்களின் அவரவர் சிறப்புத் தன்மை பாதுகாக்கப்படுவதுடனான கல்விக் கொள்கையாக மாற்றியமைக்கப்பட வேண்டும்.
அதற்கான தீர்வுகள் :
* அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கேற்ற கல்விக் கொள்கையை வகுத்தெடுத்துக் கொள்ளும் வகை யில் அரசமைப்புச் சட்ட ஒத்திசைவுப் பட்டியலி லிருந்து கல்வி நீக்கப்பட்டு மாநிலப் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
* எந்த வடிவத்திலும் எந்த மொழியும் பிற மொழி மக்கள் மீது திணிக்கப்படாதவாறு ஒன்றிய அரசு இருமொழிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
* சமற்கிருதம், இந்தி மொழிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்று அனைத்து இந்திய மொழி களுக்கும் அம்மொழி பேசும் மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் அம்மொழிகள் வளர்ச்சி பெற, மேம்பட ஏதுவாக ஒன்றிய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
* அனைத்து மாநிலங்களும் தாய்மொழிக் கல்வியை மட்டும் பின்பற்றப்பட வேண்டுமென கட்டாயப் படுத்த வேண்டும்.
* குறிப்பாக உயர்கல்விக்கே பெருமளவு கல்வி நிதி ஒதுக்கப்படுவது எவ்வகையிலும் அடித்தட்டு ஒடுக் கப்பட்ட மக்களின் அடிப்படைக் கல்வி உரிமை பறிக்கப்படுவதாக அமைகிறது. கல்வி என்பது அனைத்து மக்களுக்குமானது என்ற உணர்வுடன் பெரும் அளவிலான நிதியைத் தொடக்க, நடுநிலைக் கல்விக்கு ஒதுக்கீடு செய்திட வேண்டும்.
* இளம் பள்ளிப்பருவ மாணவர்கள் தேர்வு என்ற மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு 3, 5, 8ஆம் வகுப்பு களுக்காகத் திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்வுகள் கைவிடப்பட வேண்டும்.
* இது பள்ளிக் கல்வித் தரம் உயருவதற்கானதல்ல என்பதால் தொடக்கக் கல்விச் சூழலை மேம் படுத்தியும், ஆசிரியர்கள் கற்பித்தல் திறனையும் மேம்படுத்த வேண்டும்.
* பள்ளிப் படிப்புக் காலத்தில் வாழ்க்கைத் தொழில் கல்வி அளிக்கப்படும் என்று நல்லெண்ணம் கொண்டதுபோல் பசப்பு, பாசாங்கு மொழியில் பேசும் இக்கல்விக் கொள்கை உண்மையில் வெகு மக்களான ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் மாணவர்களைப் படிப்பிலிருந்து விலக்கி, படிப்பை அவர்களுக்கு மறுப்பதற்கான கெடு உள்நோக்கம் கொண்டது. எனவே வாழ்க்கைத் தொழில்கல்வி என்ற கருத்தியல் கல்விக் கொள்கையிலிருந்து அறவே அகற்றப்பட வேண்டும்.
- இரா. பச்சமலை