சண்டிகர் மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறுவதை ஏற்றுக் கொள்ளாத பாஜக, தேர்தல் அதிகாரியாக பாஜகவைச் சேர்ந்தவரை நியமித்து தேர்தலை நடத்த வைத்தது. ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால், பாஜக தோல்வி தேர்தலுக்கு முன்பே உறுதியானது. ஆனாலும், தேர்தல் அதிகாரி பாஜகவின் கவுன்சிலர் என்பதால் 8 வாக்குகள் செல்லாது என்று அறிவித்து பாஜக வெற்றி பெற்றதாக அறிவித்தார்.

கண்காணிப்பு கேமிராவில் தேர்தல் அதிகாரி அனில் மாஷி வாக்குச்சீட்டுக்களை திருத்துவது அப்பட்டமாக பதிவானது. உச்சநீதிமன்றம் இதைக் கடுமையாக கண்டித்ததுடன், அரிதினும் அரிதான வழக்குகளில் பயன்படுத்தக்கூடிய விதி 142-யைப் பயன்படுத்தி ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது. சண்டிகர் மேயர் தேர்தலில் உச்சநீதிமன்றம் வழங்கிய நீதியை 2016 ஆம் ஆண்டிலிருந்து பல மாநிலங்களில் பாஜக செய்த ஆட்சி கவிழ்ப்புகளுக்கும் வழங்கியிருந்தால், பாஜக ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். தற்போது 12 மாநிலங்களில் நேரடியாகவும், 5 மாநிலங்களில் கூட்டணியுடனும் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுவரை பாஜகவுடன் கூட்டணி வைத்த 9 மாநில கட்சிகள் பலவீனம் அடைந்துள்ளன. அதாவது பாஜக அவற்றை உடைத்துள்ளது என்றும் கூறலாம். இந்த கட்சிகள் பலவீனம் அடைவதன் மூலம் அதன் வாக்குகளை பெறுவதும் பாஜகதான்.

அருணாச்சலப் பிரதேசம் – 2016 :

அருணாச்சல பிரதேசத்தில் மொத்த தொகுதி 60. 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக வெற்றி பெற்றது வெறும் 11 தொகுதி. காங்கிரசின் நபம் தூகி முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏ கலிகோ புல்லை பாஜக வளைத்து கலகம் செய்ய வைத்தது. கலிகோ புல் 21 எம்எல்ஏ-க்களுடன் வெளியேறி பாஜக உதவியுடன் முதலமைச்சரும் ஆனார். ஆனால், உச்சநீதிமன்றம் தலையிட்டு நபம் தூகியையே முதல்வராக அறிவித்தது. இறுதியில் கலிகோ புல்லை பாஜக கைவிட்டது. பிப்ரவரி மாதம் பதவியேற்றுக் கொண்ட கலிகோ புல் ஆகஸ்ட் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன்பின்னும் பாஜக அடங்கவில்லை. காங்கிரசில் முதலமைச்சராக இருந்த பீமா காண்டு 40 எம்எல்ஏ-க்களுடன் காங்கிரசில் இருந்து விலகி அருணாச்சல மக்கள் கட்சியில் இணைந்தார். பிறகு முழுவதுமாக பாஜகவிற்கு சென்று 2019 தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தற்போது பாஜக முதலமைச்சராக தொடர்ந்து வருகிறார்.

மணிப்பூர் - 2017 :

மணிப்பூரில்உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளைக் கைப்பற்றியது காங்கிரஸ். பாஜக 21 இடங்களைத்தான் பெற்றது. ஆனால், ஆளுநர் அதிக இடங்களைப் பெற்ற காங்கிரஸை அழைக்காமல், பாஜகவை அழைத்து ஆட்சி அமைக்க கோரினார். நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜனசக்தி மற்றும் சுயேட்சையின் ஆதரவுடன் பாஜக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. பிறகு காங்கிரஸ் கட்சியில் இருந்து ஷியாம்குமார் சிங்கை பாஜக இழுத்தது. பாஜக சார்பில் பிரேன் சிங் முதல்வரானார். அதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து ஏழு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் காங்கிரசில் இருந்து பாஜகவிற்கு தாவினர். இந்நிலையில் 2022-ஆம் ஆண்டு மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அமோக வெற்றிபெற்ற பாஜக தனிப்பெரும்பான்மையுடன் தற்போது ஆட்சியில் உள்ளது.

கோவா – 2017 :

கோவா தேர்தலில் 40 தொகுதிகளில் 17 தொகுதிகளை காங்கிரஸ் வென்றது. பாஜக வெறும் 13 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், காங்கிரசில் இருந்து 12 எம்எல்ஏ-க்களை பாஜக தன் பக்கம் இழுத்து ஆட்சி அமைத்தது.

மேகாலயா – 2018 :

மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இங்கு தேசிய மக்கள் கட்சி 19 இடங்களிலும் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. தேசிய மக்கள் கட்சியை கைக்குள் வைத்துக் கொண்டு பாஜக ஆட்சியைப் பிடித்தது.

சிக்கிம் – 2019 :

மொத்தமுள்ள 32 இடங்களில் 17 தொகுதிகளை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களில் சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வெற்றி பெற்றன. பாஜக ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை. ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத பாஜக, சிக்கிம் ஜனநாயக முன்னணியில் இருந்து 10 எம்எல்ஏ-க்களை தன் பக்கம் இழுத்தது. அதன் பின் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் கூட்டணி அமைத்து பாஜக அங்கு முதன் முதலாக ஆட்சியை பிடித்தது. தற்போது சிக்கிம் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 12 ஆக உள்ளது. 2019 ஆம் ஆண்டு தேர்தலில் ஒரு தொகுதியைக் கூட வெற்றி பெற முடியாத பாஜகவிற்கு தற்போது 12 எம்எல்ஏ-க்கள் உள்ளனர்.

கர்நாடகா – 2019 :

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 104 இடங்களை பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் 78 இடங்களையும், மதசார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் ஆளுநர் உடனடியாக பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி தோல்வியடைந்த பின்தான் எடியூரப்பா பதவி விலகினார். பிறகு, காங்கிரஸ், மஜத கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால், ஒரே ஆண்டில் காங்கிரசில் இருந்து 13 எம்எல்ஏ-க்களையும், மஜதவில் இருந்து 3 எம்எல்ஏ-க்களையும் இழுத்து, பாஜக ஆட்சி அமைத்தது.

மத்தியப் பிரதேசம் – 2020 :

2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 114 இடங்களை வென்ற காங்கிரஸ், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 121 எம்எல்ஏ-க்களுடன் கமல்நாத் தலைமையில் ஆட்சி அமைத்தது. ஆனால், 109 இடங்களை மட்டுமே வென்ற பாஜக காங்கிரசில் இருந்து ஜோதிராதித்திய சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏ-க்களை இழுத்து ஆட்சி அமைத்தது.

பாண்டிச்சேரி – 2021 :

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வென்று கூட்டணி அமைத்து 4 ஆண்டுகள் 9 மாதம் ஆட்சி நடைபெற்றது. தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு காங்கிரசின் இரண்டு அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏ-க்களை பாஜக வெளியில் இழுத்து ஆட்சியை கவிழ்த்தது. தற்போது பாஜகவிற்கு அங்கு 6 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸிற்கு 2 எம்எல்ஏ-க்கள் மட்டுமே உள்ளனர்.

மகாராஷ்டிரா – 2022 :

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து போட்டியிட்டன. அதில் பாஜக 105 இடங்களை கைப்பற்றியது. அதனால் பாஜக முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரேவுக்கு விட்டுத் தர மனமில்லாமல் இருந்தது. கூட்டணியில் இருந்து வெளியேறிய உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தார். சிவசேனா 56, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரஸ் 44 என 154 இடங்கள் கிடைத்தன. ஆனாலும், பாஜகவின் பட்னாவிஸை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைத்தார். 4 நாட்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. பிறகு மகா விகாஸ் அகாதி கூட்டணி 2 ஆண்டுகள் 213 நாட்கள் ஆட்சி செய்தது. பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக, சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏ-க்களை பாஜக பக்கம் இழுத்தது.

உத்தவ் தாக்கரே பதவி விலகினார். அதன்பின் கடந்த 2023 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸின் அஜித் பவாரையும் இழுத்தது பாஜக. உத்தவ் தாக்கரே அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அப்போதைய ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றது சிவசேனா. இதற்கு 2023 ஆம் ஆண்டு மே மாதம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் மற்றும் சபாநாயகரின் செயலைக் கண்டித்தது. ஆனால் சிவசேனாவின் சின்னம் மற்றும் கொடியைப் பயன்படுத்த உத்தவ் தாக்கரேவுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரைப் பயன்படுத்த சரத் பவாருக்கும் தேர்தல் ஆணையம் தடை வழங்கி உள்ளது.

பீகார் - 2017, 2024 :

பீகாரில் நிதிஷ் குமார் கட்சி மாறி மாறி ஆட்சி அமைப்பது புதியது அல்ல. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரான நிதிஷ் குமார், 2017 ஆம் ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார்.

2019ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரான நிதிஷ் குமார், 2022 ஆம் ஆண்டு கூட்டணியில் இருந்து வெளியேறி, “இறந்தாலும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டேன்” என்று கூறினார்.

இந்தியா கூட்டணியை உருவாக்குவதிலும் முன்னிலை வகித்தார். இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தள கூட்டணியை விட்டு விலகி மீண்டும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It