பிரிட்டிஷ் ஆட்சி - காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் - அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

modi adani2017 பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைக்கு நாடாளுமன்றத்தில் ஏற்பு வாங்கப்பட்டபோது, கடைசி நேரத்தில் 40 திருத்தங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார்கள். இந்த திருத்தங்களை மாநிலங்களவைக்கே கொண்டு செல்லவில்லை. நிதி தொடர்பான மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் மட்டுமே போதுமானது என்ற சட்டம் தந்துள்ள வாய்ப்பை இப்படி குறுக்கு வழியில் முறைகேடாகப் பயன்படுத்தியிருக்கிறது மோடி ஆட்சி.

இந்த திருத்தங்களில் ஒன்று - வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எல்லை மீறிய அதிகாரங்களாகும். நடுவண் ஆட்சி, அரசியல் எதிரிகளை ஒழிப்பதற்குப் பயன்படுத்தும் வலிமையான அதிகார அமைப்புகளில் ஒன்று வருமான வரித் துறை. புதிய திருத்தத்தின்படி, இனி வருமான வரித் துறை அதிகாரிகள், தேவையான ஆதாரங்கள், தடயங்கள் இல்லாமல், சந்தேகத்தின் அடிப்படையிலேயே சோதனையிடவும், சொத்துகளைப் பறிமுதல் செய்யவும் உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. சோதனையிடப் படுவதற்கான காரணங்களை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பார்ப்பன அதிகார மய்யமாக திகழும் வருமானவரித் துறையை ‘ஒரு இராணுவ சர்வாதிகாரி’ போல செயல்படுவதற்கான அதிகார அமைப்பாக்கி விட்டார்கள். அந்த அதிகாரம்தான் இப்போது எதிர்கட்சிகளை அச்சுறுத்தப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘சகாரா’, ‘ஆதித்யா பிர்லா’ குடும்பங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனைகளில் மோடிக்கு நன்கொடை தந்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, அந்த ஆதாரங்கள் வருமான வரித்துறையின் பதிவேடுகளிலேயே இடம் பெற்றிருந்ததை சுட்டிக்காட்டி நடவடிக்கைக் கோரி உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆதாரங்களோடு வழக்கு தொடர்ந்தார். மோடி மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததற்காகவே, வருமான வரித் துறை அதிகாரியாக இருந்த கே.பி. சவுத்திரி என்பவருக்கு, இலஞ்ச ஒழிப்புத் துறைத் தலைவர் என்ற உயர்ந்த பதவி பரிசாக அளிக்கப்பட்டதையும் பிரசாந்த் பூஷன் சுட்டிக் காட்டியிருந்தார்.

மற்றொரு முக்கிய திருத்தமும் கொண்டு வரப்பட்டது. கார்ப்பரேட் கம்பெனிகள் இனி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கு உச்சவரம்பு எதுவும் கிடையாது என்பதே இந்த புதிய திருத்தம். தற்போதுள்ள சட்டத்தின்படி ஒரு கார்ப்பரேட் நிறுவனம் தனது நிகர இலாபத்தில் 7.5. சதவீத அளவில் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க முடியும். அது மட்டுமின்றி வழங்கப்பட்ட தொகை, வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் அறிவித்தாக வேண்டும். இப்போது வரம்பு நீக்கப்பட்டதோடு வழங்கிய கட்சிகளின் பெயர்களையும் வெளியிடத் தேவை இல்லை என்கிறது புதிய திருத்தம். ஏற்கெனவே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வந்துவிட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களோ பார்ப்பன அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றன. அதை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறது மோடி ஆட்சி. ஸ்டேட் வங்கி மூலம் பத்திரங்கள் வழியாக நன்கொடை  வழங்கலாம் எனும் இத்திட்டத்தின் கீழ்  வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிலதிபர்கள் - 1000 கோடி மதிப்பிலான பத்திரத்தை பா.ஜ.க.வுக்கு வழங்கி யிருப்பது ஆர்.டி.அய். மூலம் வெளி வந்திருக்கிறது. இலஞ்சத்துக்கு கதவு திறந்துவிடும் பா.ஜ.க.வுக்கு அரசியல் ஊழல்களைப் பற்றிப் பேச என்ன தார்மீக உரிமை இருக்கிறது என்று கேட்கிறோம்.

மற்றொரு திருத்தம் - தீர்ப்பாயங்களை முடக்கி இருப்பதாகும். இந்தத் தீர்ப்பாயங்கள் நீதித் துறைக்குரிய அதிகாரங்களுடன் செயல் படக்கூடிய அமைப்புகள். அரசின் தலையீடுகளுக்கு இதில் இடமில்லை. நீதிமன்ற ஆணைப்படி உருவாக்கப்பட்ட தீர்ப்பாயங்களும் உண்டு. தீர்ப்பாயங்களுக்கு தலைவர்கள், உறுப்பினர்கள், அரசு நிர்வாக அமைப்புகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று உச்சநீதிமன்றம் 2014இல் திட்டவட்டமாக கூறியிருக்கிறது. ஆட்சியாளர்களையே சம்மன் செய்து விசாரிக்கும் உரிமை கொண்டவை. இப்போது தேவையில்லை என்று ஆட்சியாளர் விரும்புகிற தீர்ப்பாயங்களை கலைக்கவும், சில தீர்ப்பாயங்களின் தனித்துவமான உரிமைகளைப் பறித்து, வேறு சிலவற்றுடன் இணைக்கவும் சட்டத்தைத் திருத்தி இருக்கிறார்கள்.

வரி, அரசு வாங்கும் கடன், அரசு செலவினங்கள், கடன் பத்திரங்கள் போன்ற அம்சங்கள் மட்டுமே நிதி மசோதாவின் கீழ் வரக்கூடியவை. மோடி ஆட்சி, வருமான வரித் துறை, கார்ப்பரேட் கம்பெனிகள் சட்டம், தீர்ப்பாயங்கள் போன்றவற்றையும் நிதி மசோதாவுடன் இணைத்து மாநிலங்களவை விவாதத்துக்கு உட்படுத்தாமல் 40 திருத்தங்களை செய்திருப்பது மிகப் பெரும் ஜனநாயகப் படுகொலை.

2021 நவம்பரில் நாடாளுமன்றம் கூட இருக்கும் இரு வாரங்களுக்கு முன்பு அமுலாக்கத் துறை இயக்குநர், சி.பி.அய். இயக்குநர்களின் பதவிக் காலத்தை 45 ஆண்டுகளாக நீட்டித்து ஒன்றிய ஆட்சி அவசர சட்டம் பிரகடனம் செய்தது. குறிப்பாக சஞ்சய் கிரண் மிஸ்ராவுக்கு பதவி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் செப்டம்பரில் உத்ததர விட்ட பிறகும் அவர் பதவி ஓய்வு பெறும் நிலையில் அவருக்கு அனைத்து அதிகாரத்துடன் பதவிக் கால வரம்பை நீட்டித்துள்ளது ஒன்றிய ஆட்சி.

மாநிலங்களின் உரிமைகளை பறிப்பது மட்டுமின்றி, மாநிலங்களின் அவையையும் முடக்கி விட்டார்கள். ஒற்றை ஆட்சி ஒற்றை கலாச்சாரம் எனும் இந்துத்துவா ஆயுதத்தை மக்களுக்கு எதிராக கூர் தீட்டி வருகிறது மோடி ஆட்சி.

சிந்தனையாளர்கள் மீது அடக்குமுறைகள்:

புனேயில் உள்ள பீமா கொரேகான் என்னுமிடத்தில் பேஷ்வா அரசுப் படைகளை ஆங்கிலேயப் படை களுடன் தலித் படைவீரர்கள் வீழ்த்திய நினைவுச் சின்னம் ஒன்று உள்ளது. நூறாண்டுகளுக்கு முன் 1917 டிச 31 அன்று அண்ணல் அம்பேத்கர் அஞ்சலி செய்த நினைவுச் சின்னம் அது. சென்ற 2017 டிசம்பர் 31 அன்று தலித்கள் மற்றும் பொதுமைச் சிந்தனை உடையவர்கள் அங்கு கூடி ‘எட்கார் பரிஷத்’ எனும் நிகழ்ச்சியை நடத்தினர். பேஷ்வா அரசை எதிர்த்து தலித் படை ஒன்று வெற்றி பெற்றதைக் கொண் டாடிய இந்த நிகழ்வில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்தனர்.

இந்த வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததில் மாவோயிஸ்டுகளின் பங்கு இருந்ததாகச் சொல்லி சென்ற ஜூன் 2018இல் சுரேந்திரா காட்லிங், சுதிர் தவாலே, பேராசிரியை ஷோமாசென், மகேஷ் ராவ்த், ரோனா வில்சன் முதலான தலித் மற்றும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களை மகாராஷ்டிர அரசு கைது செய்தது. அவர்கள் இன்று ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்’ (UAPA) கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் கைதைக் கண்டித்த செயல்பாட்டாளர்களான வழக்குரைஞரும் பி.யூ.சி.எல் அமைப்பின் தேசியத் தலைவருமான சுதா பரத்வாஜ், எழுத்தாளரும் மனித உரிமைப் போராளியுமான கௌதம் நவ்லக்கா, தலித் அறிவுஜீவியும் எழுத்தாளருமான ஆனந்த் டெல்டும்டே, செயல்பாட்டாளர் சூசன் ஆப்ரஹாம், ஜார்கன்டில் பழங்குடி மக்கள் மத்தியில் வேலை செய்யும் திருச்சியைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டான் சாமி, ஆந்திரக் கவிஞர் வரவர ராவ், வழக்குரைஞர் அருண் ஃப்ரெய்ரா ஆகியோரது வீடுகள் ஆக. 28, 2018 அன்று சோதனை இடப்பட்டது. இவர்களில் சிலரும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முதலானோர் கொடும் தடுப்புக் காவல் சட்டங்களில் கைது செய்யப்படுவதை உலகளவில் அறிவுஜீவிகள் கண்டித்தனர்.

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லக்கா, வெர்னான் கோன்சால்வ்ஸ், அருண் ஃப்ரெய்ரா, வரவரராவ் ஆகிய ஐவர் மீதும் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் தகர்த்து அவர்களை உடன் விடுதலை செய்யச் சொல்லி உலக அளவில் புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ரொமிலா தாபர் மற்றும் பொருளியல் வல்லுனர் பேரா பிரபாதப் பட்நாயக், மூத்த பொருளியல் அறிஞர் தேவகி ஜெயின், காமன்வெல்த் மனித உரிமை அமைப்பின் மூத்த ஆலோசகர் மாஜா தாருவாலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவை சென்ற செப்டம்பர் 2018இல் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்தது. அது மட்டுமல்ல மகாராஷ்டிர காவல்துறை இதை விசாரணை செய்தால் இவ்வழக்கில் நீதி கிடைக்காது என்பதால் ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க வேண்டும் என்கிற இவ் அறிஞர்களின் கோரிக்கையையும் அது தூக்கி எறிந்தது.

வேளாண் சட்டங்கள்: மாநில உரிமைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவசாய உரிமைகளை ஒன்றிய அரசு பறித்து 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்றியது. விவசாயிகள் ஓராண்டு காலம் டெல்லியில் போராடினார்கள். 750 பேர் பலியானார்கள். இறுதியாக விவசாயிகளில் ஒரு பிரிவினருக்கு சட்டத்தின் நன்மையை புரிய வைக்க முடியவில்லை என்று கூறி, 2021 நவம்பதில் குருநானக் பிறந்த நாளில் பிரதமர் மோடி சட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார்.

நீட் திணிப்பு: கல்வி உரிமையை மாநிலங்களிடமிருந்து பறித்து, பா.ஜ.க. ஆட்சி கொண்டு வந்த ‘நீட்’ தேர்வு நாடு முழுதும் ஒரே தேர்வுக்கு வழிவகுத்து தமிழகத்தில் கட்டி எழுப்பப்பட்ட சமூகநீதியைத் தகர்த்து விட்டது. 31.1.2019இல் தமிழக சட்டசபையில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டது பா.ஜ.க. ஆட்சி. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான குறைந்தபட்ச இடங்களை உறுதி செய்து, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கோரும் சட்டத்துக்கும் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்திய ஆளுநர், தமிழக அரசு அரசாணை வெளியிட்ட பிறகு வேறு வழியின்றி ஒப்புதல் தந்தார். மாநில கல்வி உரிமையை தனதாக்கிக் கொண்டது ஒன்றிய ஆட்சி.

ஜி.எஸ்.டி. : மாநிலங்களின் வரிவிதிப்பு உரிமையைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி வருவாய் முறையை அமுல்படுத்தி மாநிலங்களுக்கு தருவதாக உறுதியளித்த இழப்பீடு தொகையையும் தர மறுக்கிறது நடுவண் ஆட்சி.

ஜம்மு-காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களுக்கு அரசியல் சட்டம் உறுதி செய்த 370ஆவது பிரிவின் கீழ் உறுதி செய்த தனி சிறப்புரிமைகளைப் பறித்து மாநில உரிமையை கூட தர மறுத்து விட்டார்கள். இராணுவத்தின் பிடியில் அங்கே ஆட்சி நடக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை : நாடு முழுதும் ஒரே கல்வி கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்தையும் இந்தியையும் திணிப்பதோடு 5ஆம் வகுப்பு, 3ஆம் வகுப்பு, 8ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளில் தேர்வுகளை வைத்து மாணவர்களை கல்வி அமைப்பிலிருந்து வடிகட்டி வெளியேற்றி, குலக் கல்விக்கு வழி வகுக்கும் ஒரு கல்வித் திட்டத்தைத் திணித்து விட்டார்கள்.

குடியுரிமை சட்டம் : குடியுரிமை சட்டத்திலும் மத அடையாளத்தைத் திணித்து ‘குடிமக்கள்’ மதச் சார்பற்றவர்கள் என்ற நிலையை மாற்றி மதத்தின் அடையாளத்தைத் திணித்து பாகுபடுத்தி விட்டது. 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றே நாட்களில் மக்களவை, மாநிலங்களவை ஒப்புதலோடு குடியரசுத் தலைவரின் அனுமதி பெற்று சட்டமாக்கி விட்டார்கள். அதாவது 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவுக்குள் அடைக்கலம் தேடி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம் அல்லாத 6 மாதப் பிரிவினருக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்படும் என்று சட்டம் கூறுகிறது. குடியுரிமைக்கு மதத்தை ஒரு அடையாளமாக்கும் மனித விரோத சட்டம் இது.

ஆரியர் வருகைக்கு முன்பே தமிழர் நாகரிகம் இங்கே இருந்ததற்கான ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவுகளை வெளியிட மறுத்து கீழடி போன்ற இடங்களில் நடக்கும் ஆய்வுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.  - இப்படி நீண்ட பட்டியலிட முடியும்!

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் சுயாட்சி பேசினார்கள்; காங்கிரசும் அதைப் பேசியது; பிறகு சுதந்திர இந்தியாவில் அரசியல் சட்டத்தில் சுயாட்சி கொள்கைகளை கை கழுவினார்கள். காங்கிரஸ் ஆட்சியில் தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கப் பட்டது என்றால் பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாடு தமிழர்கள் அடையாளமே ஒழிக்கப்படும் முயற்சிகள் சட்டங்களாக அதிகாரங்களுடன் படை எடுத்து வருகின்றன. ஒற்றை இந்தியா என்ற பெயரில் உருவாகி வரும் பார்ப்பனிய இராமராஜ்யத்துக்குள் தமிழ்நாடு மூழ்கிவிடுமா? இல்லை உரிமைகளுக்கான போராட்டங்கள் வழியாக தமிழர்கள் தங்கள் உரிமைகளை, அடையாளங்களை மீட்டெடுப்பார்களா என்ற கேள்வி தமிழர்கள் முன் நிற்கிறது.              

(நிறைவு)

- விடுதலை இராசேந்திரன்

Pin It