இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத அளவு மக்களின் ஒருங்கிணைந்த போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் தெருக்களில் கூடி, அரங்குகளில் கூடி, மைதானங்களில் கூடி, குடியுரிமை சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் என்.ஆர்.சி. சட்டங்களை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய ஒரு சூழல் நம்மைப் போன்ற ஜனநாயக நாடுகளில் உள்ள ஒரு சிறப்பம்சமாகும். அதனுடைய தொடர்ச்சியாக மக்களின் கோரிக்கையை செவிசாய்த்து, ஆளும் அதிகார மையம் ஆலோசனை செய்து, முறையான முடிவுகளை எடுக்க வேண்டும். அதற்காகத்தான் கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் போன்றவைகள் உள்ளன. இதை, நம்முடைய நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களும் அங்கீகரிக்கின்றன.
அத்தகைய உரிமைகளைப் பறிப்பதில் அரசும், ஆட்சியாளர்களும் எந்தவொரு தன்னிச்சையான முடிவுகளும் எடுக்க முடியாது என்பதே நியதியாகும். குறிப்பாக, இதுபோன்ற உரிமைகளை நசுக்குவதற்காக 144 தடை உத்தரவைப் பிறப்பிப்பது, இண்டர்நெட் சேவைகளை முடக்குவது, மக்கள் கூடுவதைத் தடுப்பது போன்றவைகள், அரசுக்கு எதிரான மாற்றுக் கருத்தை பொறுத்துக் கொள்ள முடியாத இயலாமையைத்தான் காட்டுகிறது. மக்களின் குரலை விவாதிக்க முடியாத, கருத்தில் கொள்ள முடியாத ஒன்றையே வெளிப்படுத்திக் காட்டுகிறது என்பதை அரசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒரு அரசுக்கு எதிரான பெரும் மக்கள் திரள் போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடக்கிறது என்பதே ஆளும் அரசின் பலவீனமான சூழலையே காட்டுகிறது. ஆனால், அரசு இதில் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்காமல், போராட்டம் நடத்தும், கூட்டங்கள் நடத்தும், ஊர்வலம் நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள் மீதே குற்றம் சாட்டுகிறது, அடக்குமுறைகளைப் பிரயோகிக்கிறது.
பேச்சுரிமை, கருத்துரிமை மற்றும் எழுத்துரிமை வழங்கப்படாத நாடுகள் எத்தனையோ உள்ளன. ஆனால், இந்தியாவில் அது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் அரசியல் சாசன சட்டம் பிரிவு 19ம் அதைத்தான் வலியுறுத்திப் பேசுகிறது. ஓர் அரசு எடுக்கும் முடிவுகளை விமர்சிக்கவும், கருத்து தெரிவிக்கவும், கூட்டங்கள் நடத்தி பிரச்சாரம் செய்யவும் அரசியலைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ளது. அதனால் தான் இந்தியா என்பது ஜனநாயக நாடாகத் திகழ்கிறது. அதைப் பறிக்கும் நடவடிக்கையை எந்தவொரு அரசும் செய்யக் கூடாது.
எந்தவொரு நாடும் அரசியல் சாசன உரிமைகளை எழுத்தளவில் மட்டும் வைத்துக் கொள்ளக் கூடாது. அதை நடைமுறை செயல்பாடுகளிலும் காட்ட முயற்சிக்க வேண்டும். குறிப்பாக, நமது இந்திய அரசியலமைப்பின் பின்னணியில் காலனியத்துவ எதிர்ப்புப் போராட்டம். ஆம்! பிரிட்டீஷாருக்கு எதிராக நம்முடைய முன்னோர்கள் நடத்திய போராட்டத்தின் வழிமுறை மிகவும் பிரபலமாகும். அதில், ஒத்துழையாமை இயக்கம் உள்ளது, பொதுக்கூட்டப் பிரச்சாரம் உள்ளது, ஊர்வலப் பிரச்சாரம் உள்ளது. இப்படி எல்லா வகையான பிரச்சாரமும், போராட்ட வழிமுறைகளும் அடங்கி உள்ளன.
அதேபோன்று தான் இப்போதும் மக்கள் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சட்டத்தை எதிர்த்து அமைதியான முறையில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் போராட்டத்திற்கு செவிமடுப்பது அரசின் கடமையாகும். ஆனால், இந்த அரசு மக்களை முடக்குவதிலேயே குறியாக இருக்கிறது. அது போராட்டக்காரர்களின் தீவிரத்தை அதிகப்படுத்துகிறது என்பது தான் உண்மை.
எனவே, மத்திய அரசு மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தை மதிக்க வேண்டும். அவர்களுக்கு ஜனநாயகம் வழங்கியுள்ள வழிமுறைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கைகைளையும், உரிமைகளையும் பரிசீலனைக்கு உட்படுத்தி, நாட்டின் ஸ்திரத் தன்மையை கருத்தில் கொண்டு, விரைவில் தீர்வு காண வேண்டும். அது, ஓர் ஆரோக்கியமான ஜனநாயக அரசுக்கு உகந்ததாக இருக்கும்.
- நெல்லை சலீம்