கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி இழப்பை சரி செய்வதற்காக தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு புதுமையான திட்டம் தான் இல்லம் தேடி கல்வித் திட்டம்.

கடந்த ஓராண்டு காலமாக இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மாநில திட்டக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது, இந்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் அளித்திருக்கிறார். அதில் இத்திட்டம் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னார்வலர்கள், 362 தலைமையாசிரியர்கள், 362 ஆசிரியர்கள், 724 பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில் கூறியிருக்கிற சில முக்கிய பரிந்துரைகள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் எளிய கற்றல் முறைகள் மாணவர்களுடன் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டிருக்கிறது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிற இந்த அறிக்கை மாணவர்களின் கற்றல் இழப்பை சரி செய்வதற்கான பாலமாக செயல்பட்டு இருக்கிறது என்று கூறியிருப்பதோடு முக்கியமான ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறது. இதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதுதான் அந்த அறிக்கை இல்லம் தேடி கல்வித் திட்டத்தை ஒரு சமூகமாக இயக்கமாக மாற்ற வேண்டும் என்று சொன்னால் அதை கல்வியை ஒரு பண்பாடு நிகழ்வாக வாழ்வியல் நிகழ்வாக மாற்றி மக்கள் பண்பாடு வாழ்வியலோடு கல்வியை இணைக்க வேண்டும், அதற்காக பாட நூல்களை உருவாக்க வேண்டும். பாடநூல்களில் நமது நாட்டில் கல்விக்காகப் போராடிய தலைவர்களின் வரலாறு ஜாதி எதற்கு தமிழர்களின் கொள்கைக்கு எதிரானது என்ற கொள்கைகள் மதத்திற்கு மாறாக மனிதத்தை உயர்த்தி பிடிப்பது சமூகநீதியை நாம் எப்படி போராடிப் பெற்றோம் என்று வரலாறுகளைக் கூறுவது இவைகள் எல்லாம் கட்டாயம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தவாதிகள் தங்களுடைய மாநிலங்களில் வலதுசாரி கருத்துக்களை இந்த ராஷ்டிர கருத்துக்களை பாடத்திட்டங்களில் சேர்த்துக் கொண்டிருக்கிற போது கல்வி வளர்ச்சிக்கு இந்தியாவிற்கே வழிகாட்ட கூடிய நம்முடைய தமிழ்நாடு பாடத்திட்டங்களில் இதை சேர்ப்பதன் மூலமாகத்தான் இதை சமூக இயக்கமாக மாற்றுவதற்கான ஒரு அடித்தளத்தை நாம் உருவாக்க முடியும்.

சரஸ்வதி பூஜையை நாம் கொண்டாடிக் கொண்டிருந் தோம் காலம் முழுவதும்; ஆனால் கைநாட்டுப் பேர்வழி களைத் தான் தயார் செய்து வைத்திருந்தோம். சரஸ்வதி பூஜைக்கு மாற்றாக சமத்துவ கல்வி விழாக்களை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அதற்கான விழாக்கள் போட்டிகள் பண்பாடுகள் இவைகளை நிகழ்த்தி நம்முடைய பண்பாடு என்பதே சமூக நீதி, கல்வி பண்பாடு. அதுவே தமிழர்களின் சுயமரியாதைக்கான அடையாளம் என்ற கருத்தை நோக்கி தமிழ் சமூகத்தை வளர்த்தெடுப்பது என்பதுதான் இதை சமூக இயக்கமாக மாற்ற வேண்டும் என்பதற்கான அடித்தளமாக அமையும் என்பதே.

1953ஆம் ஆண்டும் இதே போல் இல்லம் தேடி கல்வி ஒன்று வந்தது, அது ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த இல்லம் தேடிய கல்வி. அந்தக் கல்வி என்ன சொன்னது என்று சொன்னால் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரை நேரம் பள்ளியில் படித்துவிட்டு அரைநேரம் இல்லத் திற்கு சென்று அவரவர் அப்பன் செய்யும் குலத்தொழிலை செய்ய வேண்டும் என்று கூறியது, அதை காமராசர் தகர்த் தெறித்து அனைவருக்கும் ஆன கல்விக்கு அடித்தளமிட்டார்.

திராவிட இயக்கம் கல்வியை மேலும் மேலும் வளர்த்தெடுத்து இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு மாநிலமாக தமிழ் நாட்டை வளர்த்திருக்கிறது. ஆச்சாரியார் கொண்டு வந்த இல்லம் தேடி கல்விக்கு நேர் முரணாக அனைவருக்கும் கல்வி என்ற இல்லம் தேடிக் கல்வித் திட்டம் இப்போது அறிமுகப்படுத்தி இருக்கிறது. கல்வி என்பதுதான் ஒரு சமூகத்தின் சுயமரியாதையை, சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் அதிகாரத்தை, சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் சமத்துவத்தை, பெண்ணுரிமையை உறுதிப்படுத்துகிற ஒரு அடிப்படையான கண்ணோட்டம் அதை நோக்கி நாம் நகர்வோம் அதற்கான திட்டக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று அரசு இத்திட்டத்தை தொடர வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It