அரசுப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு மாணவர்கள் சமூகநீதி பாடல் பாட வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு ஆணையை பிறப்பித்திருக்கிறார். உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒரு முடிவாகும். பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வகுப்புரிமை போராட்ட வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு இவைகளையும் சேர்த்தால் இளம் தலைமுறைக்கு வரலாறுகளை எடுத்துச்சொல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது நமது உறுதியான கருத்து.

உத்தரப் பிரதேசத்தில் மாணவர் வருகைப் பதிவேட்டை ஆசிரியர் பதிவு செய்யும்போது, அங்குள்ள பல பள்ளிகளில் மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறுவதாக சில படங்கள் முகநூலில் வந்து கொண்டிருக்கின்றன. இது உத்தரப் பிரதேசத்தின் நிலை. தமிழ்நாட்டில் கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்றை அறிமுகப்படுத்தினார். நீராருங் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் இப்போது, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடக்கப் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. அதற்கு முன்பு அவரவர் விரும்புகின்ற கடவுள்களின் பாடல்கள்தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வந்தன. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்த பெருமை கலைஞருக்கு உண்டு.

பிறகு, காஞ்சிபுரம் சங்கராச்சாரி, சமஸ்கிருத நூல் வெளியீட்டு விழா ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒளிபரப்பியபோது எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தார். அது பெரும் பிரச்னையாக மாறியது. அப்போது சங்கராச்சாரி தியான நிலையில் இருந்ததால் எழுந்து நிற்கவில்லை என்று சப்பைக் கட்டு கட்டினார்கள். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கட்டாயமாக அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும், இது தமிழ்நாட்டினுடைய வாழ்த்துப் பாடல் என்று திட்டவட்டமாக ஒரு அறிக்கை வெளியிட்டதற்குப் பிறகு இப்போது தமிழ்த்தாய் வாழ்த்து எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சமூக நீதிக் குரல் கேட்கிறது, வடநாட்டில் ஜெய்ஸ்ரீராம் குரல் கேட்கிறது. இதுதான் இந்துத்துவா மாநிலங்களுக்கும் மதச்சார்பின்மையை பின்பற்றுகிற திராவிட மாடல் அரசுக்கும் உள்ள வேற்றுமை. சிந்திப்போம்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It