நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் ஜாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அதனை கைவிட மாட்டார்கள் நிலவுக்கே சென்றாலும் ஜாதியை தூக்கிச் செல்வார்கள். தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களின் ஜாதிப் பெயர்களை எப்போது நீக்குவீர்கள் என்ற கேள்வியை எழுப்பி அரசின் பதிலுக்காகக் காத்திருக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சர்க்கரவர்தியின் வார்த்தைகள் இவை.
தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிப்பதற்கு சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சர்க்கரவர்த்தி அமர்வில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணையின்போது தமிழ்நாட்டில் உள்ள பள்ளி கல்லூரி நிறுவனங்களின் பெயர்களுக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவது குறித்த அரசின் முடிவை கேட்டு சொல்ல வேண்டும் என அரசு தலைமை வழக்கறிஞருக்கு 20.02.2025 அன்று உத்தரவிட்டிருந்தார். ஒரு வாரம் கழித்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பதில் சொல்ல வேண்டுய அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராகவில்லை, பதிலாக துணை வழக்கறிஞர் ஆஜராகி ஒரு வாரம் அவகாசம் கேட்டார். ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் கமிட்டி அமைத்து அறிக்கையைப் பெற்றப்பிறகும் கல்வி நிறுவனங்களின் பெயரில் உள்ள ஜாதிப் பெயரை நீக்குவது தொடர்பாக முடிவெடுக்க அரசு சார்பில் ஒரு வாரம் அவகாசம் கேட்பது ஆச்சர்யமாக உள்ளது என்றார் நீதிபதி.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சி இந்தியாவின் பல வளர்ச்சிக் குறியீடுகளில் முதலிடத்தில் இருக்கிறது . குறிப்பாக பள்ளி கல்லூரி மாணவர்களின் வளர்ச்சியில் தனிக்கவனம் செலுத்தி செய்து வரும் சாதனைகள் போற்றுதலுக்குரியவை. என்றபோதும் இந்தியாவின் சாபக்கேடான ஜாதி உணர்வு பள்ளி கல்லூரிகளை விட்டு வைக்கவில்லை.அது ஜாதியைப் பாதுகாக்கும் பெற்றோர்கள் ஆசிரியர்களிடம் மட்டும் இல்லாமல் மாணவர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
2023 ஆகஸ்ட் 9 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரியைச் சேர்ந்த மாணவர் சின்னதுரையும் அவரது சகோதரியும் சக வகுப்பு மாணவர்களால் வீடு புகுந்து வெட்டப்பட்டார்கள். மாணவர்களின் இந்த தாக்குதலுக்குப் பின்னால் அவர்களின் மனங்களில் ஆழப்படுத்தப்பட்ட ஜாதி வெறியே முக்கிய காரணமாக இருந்தது . இந்த விவகாரத்தை அணுகும் விதமாக பள்ளி கல்லூரிகளில் தொடரும் ஜாதி உணர்வை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் ஒன்றை அமைத்து அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்.
நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையிலான குழு 28 ஜூன் 2024 அன்று தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்தது. 650 பக்கங்கள் கொண்டு 14 அத்தியாயங்களுடன் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கல்வி நிறுவனர்களில் ஜாதியை ஒழிக்க 20 உடனடித் தேவைகளை பரிந்துரை செய்தது. அதில் குறிப்பாக, கல்வி நிறுவனங்களில் இருக்கும் ஜாதி பெயர்களை நீக்க வேண்டும். மாணவர்கள் எந்த ஒதுக்கீட்டில் சேர்ந்தார்கள் என்ற விவரத்தை பதிவேடுகளில் இருந்து நீக்குதல், பள்ளிகளில் மாணவர்களால் சாதியை குறிக்கும் வகையில் உள்ள வண்ண கயிறுக் கட்டுதல், மோதிரங்கள், நெற்றியில் பொட்டு வைத்தல், சைக்கிள்களில் பெயிண்ட் அடித்தல் ஆகியவற்றைத் தடை செய்தல் போன்றவை முக்கியமானவை.
கள்ளர், ஆதிதிராவிடர் பள்ளிகள் போன்ற பெயர்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என பெயர் மாற்ற வேண்டும். தனியார் பள்ளிகள் அவ்வாறான ஜாதிப்பெயர்களை கொண்டிருப்பின் அதனையும் நீக்கச் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசு பெற்றுக் கொண்டு 8 மாதங்கள் கடந்துவிட்டது. இந்த நிலையில்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழ்நாட்டு கல்வி நிறுவனங்களில் உள்ள ஜாதிப்பெயர்களை எப்போது நீக்குவீர்கள் என்று கேள்வியை கேட்டிருக்கிறார். ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கமிட்டி அளித்த அறிக்கையைப் பெற்றும் அவகாசம் கேட்பது ஏன் என்ற கேள்வியையும் கேட்டுள்ளார்.
இந்தியாவில் முற்போக்கு சீர்திருத்த வளர்ச்சியில் தமிழ்நாட்டுக்கான தனித்த அடையாளம் தந்தை பெரியாரில் பெரும்பான்மை பெற்றுள்ளது என்னும் அளவிற்கு அவரின் பங்களிப்பு உள்ளது. அவர் செய்த எத்தனையோ சாதனைகளில் பெயருக்குப் பின்னால் இருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்குவது என்பதும் ஒன்று. ஜாதி பெயர் என்பது அதிகாரத்தின் அடையாளமாக பல வடிவங்களிலும் இருந்ததால் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லும் தலைவர்கள் கூட அதை தூக்கிச் சுமக்கவே செய்தார்கள். ஒரு சீர்திருத்தவாதியாக மட்டுமே இல்லாத பெரியார் புரட்சியாளராக இருந்து தான் நடத்தி வந்த குடியரசு இதழில் 18.12.1927 வரை ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் எனக் குறிப்பிட்டு வந்ததை மாற்றி 25-12-1927 “குடிஅரசு”முதல் ஆசிரியர் ஈ.வெ.ராமசாமி என்று மட்டும் எழுதி ‘நாயக்கர்’ என்பதை நீக்கினார்.
தந்தை பெரியார் அவர்களால் 1925 - இல் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு சௌந்தரபாண்டிய நாடார் தலைமையில் செங்கல்பட்டில் 1929 - இல் கூடியது. அம்மாநாட்டில் 18.02.1929 அன்று நிறைவேற்றப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த தீர்மானங்களில் " ஜாதிப் பட்டமும், ஜாதிக் குறிகளும் " ஒழிக்கப்பட வேண்டும் என்பதும் ஒன்று. அதனை முன்மொழிந்த திரு.இராமச்சந்திர சேர்வை தன்னுடைய ஜாதிப் பெயரை மேடையிலேயே துறந்ததுடன் மாநாட்டின் தலைவரான திரு.சௌந்தர பாண்டிய நாடார் அவர்களும் நாடார் பட்டத்தை துறப்பார் என்று அறிவித்தார். ஜாதி பெயர்களை நீக்கச் சொன்ன தீர்மானத்துக்கு எதிரான குரல்களும் அந்த மாநாட்டிலேயே ஒலித்தன. என்றபோதும் இன்று இந்தியாவில் தனித்து தெரியும் தமிழர்களின் அடையாளங்களுக்குள் ஒன்றாக பெயருக்குப் பின்னால் ஜாதி பட்டம் போடாமல் இருப்பதும் ஒன்றாகி இருக்கிறதென்றால் அந்த அளவுக்கான வெற்றியை தந்தை பெரியார் இயக்கமாக்கி சாதித்தார்.
தந்தை பெரியாரின் தொலைநோக்கு சிந்தனைகளை தொடர்ச்சியாய் வந்த அண்ணா, கலைஞர் தங்களின் ஆட்சியில் சட்டங்களாகவும், திட்டங்களாகவும் மாற்றினார்கள். கூடுதல் வாய்ப்பாக ஜாதி ஒழிப்பு கிளர்ச்சியின் தொடக்கமான வைக்கம் நூற்றாண்டும் தொடர்ச்சியான சுயமரியாதை இயக்க நூற்றாண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் வந்திருக்கிறது.
இதை மனதில் வைத்து கடந்த காலங்களின் சமூக சீர்திருத்த சாதனைகளை நினைவு கூறிய நீதிபதி "கை ரிக்ஷாவை ஒழித்தது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் அரசு ஒரு முடிவு எடுத்தால் நாளைய வரலாறு அதனை நினைவு கொள்ளும் என்கிறார்" . சமூகநீதிக்கான இடவொதுக்கீடு, இந்துசமய அறநிலையத் துறை என்று எந்த சட்டங்களை அரசுகள் நிறைவேற்றினாலும் நீதிமன்றத்தில் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் பழமைவாத பார்ப்பனிய ஜாதிப்பாச நீதிபதிகள் அதற்கு முட்டுக்கட்டை போடுவார்கள். இங்கே ஒரு நீதிபதியே அந்த வாய்ப்பை வழங்கும்போது சமூக நீதி அரசு அதனை பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும்.
பெயர்களுக்குப்பின்னால் ஜாதியை போட்டுக் கொள்வது அறிவுடைமையாகாது என்ற சிந்தனையை பெரும்பான்மை மக்களை ஏற்றுக் கொள்ளச் செய்த சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டில் பள்ளி கல்லூரிகளின் பெயருக்குப் பின்னால் உள்ள ஜாதிப் பெயர்களை ஒழிக்க வேண்டியது தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க நூற்றாண்டுக்கு திராவிட மாடல் அரசு செய்யப் போகும் வெகுமதியாகும்.
- மழவை.தமிழமுதன்