(வழக்கு விசாரணை முடிந்துவிட்டது; எந்த நாளிலும் தீர்ப்பு அளிக்கப்படலாம். சுகதேவ் தனக்கு ‘நாடு கடத்தல் தண்டனை’ கிடைக்குமென எதிர்பார்க்கிறான். மேலும் 20 வருடங்கள் சிறையில் கழிக்க அவனுக்கு இசைவில்லை. குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கப்பட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாய் அவன் பகத்சிங்கிற்குக் கடிதம் மூலம் அறிவிக்கிறான். விடுதலை அல்லது மரணம் இதுவே அவன் நிலைப்பாடு. இடையில் வேறு கருத்திற்கு இடமில்லை. ஆனால் சுகதேவின் முடிவை அறிந்து, பகத்சிங் கொண்ட அக எதிரியக்கம் வலுவானது. செயலாற்றுதல், துன்புறுதல், போராட்ட நோக்கங்களுக்காக வாழ்தல் - இவையே பகத் சிங்கின் நிலைப்பாடாக இருந்தது. அவர் “கஷ்டங் களிலிருந்து தப்பித்தல் கோழைச் செயல்” என்றார். இந்தக் கடிதம் ஒரு கொள்கைத் தியாகி கொண்டுள்ள திடச்சித்தத்தை நாமறிய வாய்ப்பளிக்கும் மேலுமொரு சாளரமாகத் திகழ்கிறது.)

அன்புச் சகோதரனே,

நான் உன் கடிதத்தில் ஆழ்ந்து அதைப் பல முறை படித்துவிட்டேன். தற்போது ஏற்பட்டுள்ள ‘சூழ்நிலை மாற்றங்கள்’ நம் இருவரையும் வெவ்வேறு விதமாய்ப் பாதித்துள்ளதை நான் உணர்கிறேன். வெளியில் எவையெல்லாம் உன் வெறுப்புக்கு ஆளானதோ அவை இப்போது உனக்கு ‘அவசிய மாகி’ விட்டன. இதைப் போலவே எவற்றிற்கெல்லாம் என் பலத்த ஆதரவை அளித்து வந்தேனோ அவை யெல்லாம் இனி எனக்கு எவ்விதத் தனிச் சிறப்பையும் தரப்போவதில்லை.

உதாரணம் சொல்வதானால், முன்னர் நான் சுயநேசிப்பில் நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் இப்போது அந்த உணர்வு எந்த நிலையிலும் என் இதயத்திலோ சிந்தனையிலோ இடங்கொள்ளாமல் முடிவெய்திவிட்டது. வெளியிலிருந்தபோது நீயும் அதைக் கடுமையாய் எதிர்க்கவே செய்தாய். இன்றோ உன் கருத்துக்களில் முனைப்பான பல மாறுதல்கள் நிகழ்ந்து மூலத் தத்துவத்தின் தீவிரம் குறைந்து போய் அவை சுருங்கிய உன் சுயநேசிப்பின் மீதே குவிந்துள்ளன.

மனித உயிர் வாழ்விற்கு சுயநேசம் பிரதான பங்காற்றுவதை அனுபவித்து வருகிறாய். அந்த அனுபவம் குறித்த சந்தோசத்தை நீ கண்டிருக்கிறாய். அப்போதும் ஒருநாள் தற்கொலை பற்றி உன்னிடம் நான் விவாதித்ததை நீ ஞாபகப்படுத்திக் கொள்ளலாம் ஆனால் நீ என் கருத்தை கோபங்கொண்டு எதிர்த்தாய். விவாதம் நடந்த அந்த நேரமும் இடமும் இப்போது என் நினைவில் ஒளிர்கின்றன. ஒரு மாலைப் பொழுதில், ‘சகன்சகி குதியா’-வில் நாம் தற்கொலை பற்றி விவாதித்தோம்.

“தற்கொலை கோழைத்தனமான செயல்; எப்போதும் சரியென்று ஏற்க முடியாது; இவ் வகைச் செயல்கள் அச்சம் தரக்கூடியவை; கொடிதிலும் கொடியவை’ என்றாய். ஆனால் அன்று பேசிய வற்றிற்கு எதிர்முரணான நிலையில் நீயிருப்பதையே இப்போது நான் காண்கிறேன். ‘நெருக்கடி மிக்க சூழமைவில் தற்கொலையே சரியான முடிவு’ என்பதோடன்றி ‘அது தவிர்க்க முடியாதது; கட்டாயத் தேவையுங்கூட’ என்றெல்லாம் சொல்லும் அவல நிலைக்கு வந்துவிட்டாய்.

மாறாக, ‘தற்கொலை கடுங்கொடிய குற்றம்’ என்று நீ முன்பு கொண்டிருந்த கருத்தே இன்றும் என் கருத்தாக உள்ளது. ஆம்; முழுமையான கோழைத்தனத்தின் செயலே தற்கொலை; இது வீரஞ்செறிந்த புரட்சியாளர்களுக்கு இசைவான தல்ல; வேறு யாரை அணுகிக் கேட்டாலும்கூட தற்கொலைக்கு எந்த ஒரு தனிமனிதனும் நியாயம் கற்பிக்க மாட்டான்.

நாட்டுக்குத் தனியனாய் உழைத்தல் எப்படிப் பட்ட சிரமங்களையெல்லாம் ஏற்கவேண்டிய பணி என்பதை அறியத் தவறியதாய் நீ கூறுகிறாய். உன்னைப் போன்றோர் இப்படிச் சொல்வது உண்மையில் திகைப்பூட்டவே செய்கிறது. ஏனென்றால் பணியாற்றுவதன் வாயிலாய்த் துன்பங்களையும் தியாகங்களையும் ஏற்றல் என்கிற நவ்ஜவான் பாரத் சபாவின் உயரிய லட்சியத்தை நாம் எவ்வளவு கனவுகளுடன் நேசித்தோம்! உன்னால் இயன்ற அளவிற்குப் பங்காற்றினாய் என்பதை நான் நம்புகிறேன். அதன் பொருட்டுத் துன்புற வேண்டிய நேரமே இது. கொடுந்துன்பங்களை ஏற்பதன் மூலம் அனைத்து மக்களையும் நம் இலக்கை நோக்கி வழிநடத்த வேண்டிய தருணமும் இதுவே.

செய்யப்போகும் செயலில் தன்னை ஒப்புவித்த பின்னரே ஒருவன் அச்செயலில் ஈடுபட வேண்டும். அவ்விதமே பாராளுமன்றச் சபையில் நாம் குண்டு வீசினோம். அதன்பின் வரும் விளைவுகள் அனைத் தையும் சகித்து ஏற்க வேண்டிய நேரமிது. இரக்கத் திற்காய்க் கெஞ்சி தண்டனையைத் தவிர்க்க நாம் முயன்றிருந்தால் நமது செயல் ‘மெத்த சரியெனப் புகழப்பட்டிருக்கும் என்றா நினைக்கிறாய்? இல்லை; அவ்வாறு நிகழ்ந்திருப்பின் நம் குறிக்கோள்களுக்கு முற்றிலும் எதிரான விளைவுகளே மக்களிடையே எழுந்திருக்கும். ஆனால் இன்று நம் பெரும் முயற்சி முழு நிறைவான வெற்றியை எய்தியிருக்கிறது.

சிறையிலிருக்கும் வேளையில் நமது கட்சி சார்ந்த அரசியல் கைதிகள் அனைவரும் கடைப் பிடிக்கும் விதிமுறைகள் துயரஞ்செறிந்தவை. எனினும் கட்சி விதிகளைப் பின்பற்றும் நிலை உறுதிப்பாட்டில் மேலும் மேலும் வலிமை சேர்ப் போம். நாம் நம்புவதைப் போலவே வெகு சீக்கிரமே நாம் சாகப்போகிறோம் என்பதை வெளிப்படை யாகவே உனக்குச் சொல்லிக் கொள்கிறேன். நமக்குக் கட்டாய உணவூட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப் படுவதை எதிர்த்தாலும் சரி; எப்போதும் உணவை மறந்திருந்தாலும் சரி; நாம் எந்த நேரத்திலும் சாகத் தயாராக இருக்கவேண்டும்.

நாம் தற்கொலை செய்துகொள்ள நிர்ப்பந்திக்கப் படுகிறோம் என்றா சொல்கிறாய்? இல்லை; ஒரு உயர்ந்த உன்னத லட்சியத்திற்காக விருப்பத்தோடு வருந்திச் செயலாற்றி அதில் தன் வாழ்வையே தியாகம் செய்பவனின் மரணத்தைத் தற்கொலை யென்று சொல்லவே முடியாது. ‘யதிந்திர தாஸின்’ சாவில் நாம் பொறாமை கொண்டிருக்கிறோம். அவரின் மரணம் ஒரு தற்கொலை என்றா நீ சொல் வாய்? இறுதி முத்தாய்ப்பாய்ச் சொல்வதெனில், “துயரங்கள் நமக்குச் சலிப்பூட்டும் இன்சுவைக் கனிகளே”.

நாடு முழுவதும் ஒரு மாபெரும் இயக்கம் தொடங்கப்பட்டிருக்கிறது. நமது லட்சியப் பணியில் நாம் வாகை சூடியிருக்கிறோம். போராட்டங்களில் நேரும் மரணம் ‘இலட்சிய மரணமே’. ஆகவே, மரணத்தால் புகழ் எய்துவோம் என்று நம்புகிற நம் தோழர்கள் அனைவருமே தூக்கிலிடும் ஆணை பிறப்பிக்கப்படுகிற நாளுக்காகப் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இவ்விதம் நிகழும் மரணமே அழகானதாகும். ஆனால் சில கஷ்டங்களிலிருந்து நீங்க வேண்டி தற்கொலையில் வாழ்வைச் சட்டென்று முடித்துக் கொள்ளுதல் பயங்கொள்ளிச் செயலே ஆகும். துன்பத் துயரங்களும், இடையூறும் இடைஞ்சல் களுமே ஒரு முழுநிறைவான மனிதனை உருவாக்கும் என்பதனை உனக்குச் சொல்ல விரும்புகிறேன். நீயோ, நானோ அல்லது நம்மில் யாருமே இதுவரை எவ்விதத் துன்பங்களையும் அனுபவிக்கவில்லை. நமது துயர வாழ்வு இப்போதுதான் ஆரம்பித் திருக்கிறது.

ருஷ்ய இலக்கியத்தில் பிரதிபலிக்கும் வாழ்வின் யதார்த்தம் பற்றி நாம் பலமுறை பேசிக் கொண்டதை மீண்டும் நினைவில் கொள். அந்த யதார்த்தத்தின் கொடூரம் நமது சொந்த வாழ்வில் எங்குமே நிலவ வில்லை. ருஷ்யக் கதைகளில் நிலவும் சோகச் சூழமைவு களைப் படித்துப் பாராட்டினோம். ஆனால் அவற்றுள் பொதிந்துள்ள மெய்க்கருத்தை நாம் உணரவில்லை. அக்கதாப்பாத்திரங்களின் உணர்வெழுச்சியையும், அவற்றின் பிரமாண்டத் தன்மைகளையும் நாம் புகழ்ந்தோம். ஆனால் அதற்கான காரணங்களைத் தேட சிறிதும் தன்மைகளையும் நாம் முயலவில்லை; அவர்கள் சகல கஷ்டங்களையும் அனுபவித்தார்கள். அவற்றைச் சகித்து ஏற்பதில் காட்டிய மனத்துணிவு அவர்களின் ஆற்றலைச் செறிவுபடுத்தி அவர்களைச் சக்தி மிக்கவர்களாக்கியது. இந்த அம்சங்களைக் கதாபாத்திர சிருஷ்டிப்பின் பிரமாண்டத் தன்மை களுக்கும் ருஷ்ய இலக்கியச் சிறப்பிற்கும் காரணங் களாயிருந்தன. அவற்றைப் படிக்கும் போது இவ்வாறே நான் உணர்ந்தேன்.

எவ்வித இயல்பான அனுபவபூர்வமான அடிப் படையில் இயங்காமல், பகுத்தறிவிற்கு ஒவ்வாத பண்புகளை நம் வாழ்வு உள் ஈர்க்கும் போது, நாம் இரக்கத்திற்கும், கேலிக்கும் உரியவர்களாகிறோம்.

புரட்சியாளர்களாய் வாழ்வதில் கர்வம் கொண்டுள்ள நம் போன்றவர்கள் எல்லாவித கஷ்ட நிஷ்டூரங்களையும், கவலைகளையும், வேதனைகளையும். சித்ரவதைகளையும் மகிழ்ந்து ஏற்க எப் போதும் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக் கொள்வதாலேயே நம்மை நாம் புரட்சி வீரர்களென்று அழைத்துக் கொள்கிறோம்.

சிறையில் மட்டுமே ஒருவனுக்குக் குற்றம் மற்றும் பாவம் பற்றியதான சமூகக் கண்ணோட்டங்களைப் புத்தகங்களாலும், அனுபவரீதியிலும் படித்தறியப் பெரிதும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அப்படி சில இலக்கியங்களை நான் படித்தேன். இது மாதிரியான சுயப்படிப்பின் சிறப்பம்சம் அப்படிப்பில் அவனையே வருத்திக் கொள்வதில் அடங்கியுள்ளது.

ஜாராட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு, அரசியற் கைதிகளுக்கு மிகுந்த துன்பங்களைத் தந்த ருஷ்யச் சிறைகளின் குரூரச் சூழல்சிறையில் கிளர்ச்சி நிகழக் காரணமானது என்பதை நீ அறிவாய். இது பற்றி பிரக்ஞையுள்ளவர்களும், சிறைக் கொடுமைகளை அனுபவிப்பவர்களும் தேவையான அளவிற்கு இந்தியாவில் இல்லையா என்ன? கிளர்ச்சியை யாராவது செய்வார்கள் அல்லது அதைச் செய்ய வேறு பலர் இருக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லுதல் ஏற்றதாய் இராது. ஆனால் இவ்வாறாய் தான் நேர்மையற்ற. வெறுக்கத்தக்க முறையில் மனிதர்கள் தமது புரட்சிகரப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைத்து, நிலவும் சமூக அமைப்பிற்கு எதிரான அவர்களின் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இத்தகைய வழக்கமுறைகளை மீறிக் காரியமாற்ற வேண்டும். அதே சமயம் நேர்மையை, ஒழுங்கை மனங்கொள்ள வேண்டும். ஏனெனில் தேவையற்ற, ஒழுங்கில்லாத முயற்சிகள் எதற்கும் பயனற்றவைகளாகவே முடியும். சிறப்பாக நடத்தப்பெறும் கிளர்ச்சிகள் புரட்சியின் நடைமுறைச் செயற்பாட்டை நிச்சயம் சுருக்கும்.

எல்லா இயக்கச் செயற்பாடுகளின் மீதும் பற்றின்றி உனக்குள்ளேயே ஒடுங்கிப் போனதற்காய் நீ அளித்த காரணங்களை என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அறிவற்ற அல்லது தகவல் சரிவரப் பெறாத நமது நண்பர்கள் சிலருக்கு உன் நடத்தை முற்றிலும் அந்நியமான, புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. (புரிவுணர்வுக்கு வெகுதூரம் அப்பாற்பட்ட ஒருவனாய் நீ இருப்பதால் உன் நடத்தை பற்றி எக்கருத்தும் கொள்ள முடிய வில்லையென அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.)

உண்மையில் உனது சிறை வாழ்க்கை மிகக் கீழ்மையானதெனில், நீ ஏன் கிளர்ச்சி செய்யும் முயற்சிகளில் ஈடுபடவில்லை? ஒரு வேளை, அவ் வாறான போராட்டம் ஒரு வீண் முயற்சியே என்று சொல்ல முனைவாய். அப்படிச் சொல்வதானால் உனது வாதம் இயக்க நடவடிக்கைகளில் பங்கு கொள்வதைத் தவிர்க்க எண்ணும் பலவீனர்களின் பாதுகாப்புக் கவசமே ஆகும். எனது பதில் இது தான். இப்போது சிறையின் வெளியில் இருப்போர் புரட்சி இயக்கங்களில் ‘சிக்கி’க் கொள்வதிலிருந்து தப்பித்துச் செல்வதில் பெரும் ஆர்வம் கொண்டு இருப்பதை நாங்கள் கேள்விப்படுகிறோம். இதையே இந்த நேரத்தில் உன்னிடமிருந்தும் நான் கேள்விப் படவா? பரந்து விரிந்த நமது குறிக்கோள் களுடனும் லட்சியங்களுடனும் ஒப்பிடுவதானால், சிறு எண்ணிக்கையிலிருக்கும் நம் கட்சியினரைக் கொண்டு எதைச் சாதிக்க முடியும்? ஒன்றாய்ச் சேர்ந்து நமது வேலையைச் செய்து முடித்தது மாபெரும் தவறென்று இதிலிருந்து நாம் யூகிக் கலாமா? கூடாது; இது போன்ற யூகங்கள் தவறானவையே. அவ்வாறு நினைப்பது ஒருவனின் மனப்பலவீனத்தைக் காட்டுவதே ஆகும்.

மேலும், நீ “ஒருவன் வருடம் நெடிய சிறை வாசத்தை அனுபவித்த பிறகும் அவன் அதே கொள்கைப்பற்றோடு இருப்பான் என்று எதிர் பார்க்க முடியாது; ஏனெனில் இக்கொடிய சிறை வாழ்க்கை அவனது எல்லாக் கருத்துருவங்களையும் நசித்தழித்து விடுகிறது” என்று எழுதுகிறாய். இப்போது உன்னை ஒன்று கேட்க விரும்புகிறேன். சிறைக்கு வெளியில் நிலவும் சூழல் நமது எண்ணங் களுக்குச் சிறிதளவாவது சாதகமாக உள்ளதா? இல்லையென்று ஆன பின்பும் நமது தோல்வி களின் பொருட்டு லட்சியப் பணியிலிருந்து விலகி யிருக்க நம்மால் இயலுமா? “போராட்டக் களத்தில் நாம் அடியெடுத்து வைக்கவே இல்லை; எவ்விதப் புரட்சிகரச் செயலும் நிறைவேற்றப்பட்டிருக்க வில்லை” என்று மறைபொருளாய்க் கூறவா விழை கிறாய்? அதுவே உன் வாதமெனில், நீ தவறிழைக் கிறாய். அது தான் உண்மை என்றாலுங்கூட சூழ்நிலையை ஓரளவாவது மாற்றியமைக்கும் பணியில் நாமும் உதவியாய் இருந்ததை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம். எனினும், இக்காலத்தின் தேவைக்குரிய விளைபயன்தான் நாம். கம்யூனிசத்தின் தந்தை என்று புகழப்படும் மார்க்ஸ் உண்மையில் அத்தத்துவத்தை அவரே படைத்துருவாக்கவில்லை.

ஐரோப்பாவின் தொழிற் புரட்சியே அதுபோன்ற கம்யூனிஸ்ட்டுகளைத் தோற்றுவித்தது. மார்க்ஸ் அவர்களில் ஒருவரே. மார்க்சும் அவரது காலத்தின் சக்கரங்களை முடுக்கிவிடும் கருவியாகச் செயல் பட்டுக் கணிசமான பங்கைச் செலுத்தினார் என்பதும் உண்மை. நான், ஏன் நீயுங்கூட, இந்த நாட்டில் பிறக்கும் போதே சோசலிச, கம்யூனிசக் கருத்துக் களோடு பிறக்கவில்லை. காலமும், சூழ்நிலை மாற்றங்களும் நம்மில் ஏற்படுத்தும் தொடர் பாதிப்புகளின் விளைவாய்த்தான் அக்கருத்துக்கள் நம்மைப் பற்றுகின்றன. குறிப்பிட்ட அளவிற்கு அக்கருத்துக்களைப் பரவச் செய்ததில் நமது பங்கும் சிறிது உண்டு. பெருஞ்சிரமத்துக்குரிய நம் வேலைகளை ஏற்கனவே மேற்கொண்டு செயலாற்றினோம் என்ற போதிலும் அவற்றை மேலும் தொடர்ந்து உயரிய நிலைக்கு இட்டுச் செல்ல வேண்டும். கடுந்தொல்லை களிலிருந்து தப்பிப்பதற்காகச் செய்யப்படும் நமது தற்கொலைகள் நிச்சயம் மக்களை முன்னோக்கி வழி நடத்தாது. வேறுவிதமாகச் சொல்வதானால் ‘நம் தற்கொலை’ முற்றிலும் எதிர்விளைவுகளையே எழுப்பும்.

ஏமாற்றங்களும், துயர்மிக்க நெருக்கடிகளுக்கும், சித்ரவதைகளுக்கும் நம்மை ஆட்படுத்தும் சிறை விதிகளின் கொடூரப் பரிசோதனைச் சூழலிலும் உறுதி குலையாமல் தொடர்ந்து நாம் செயலாற்றி வந்தோம். செயல்புரியும் வேளைகளில் பலவித சிக்கல் சிரமங்களுக்கு இலக்காகவும் நம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டோம். பெரும் புரட்சி யாளர்களாய்த் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொண்ட பலர் நம்மைவிட்டு நீங்கியோடி விட்டனர். விதிகளின் கொடிய தீவிரப்பரிசோதனைக்கு நாம் உள்ளாகவில்லையா? பிறகு, கிளர்ச்சி நடவடிக் கைகளை விடாது மேற்கொண்டிருப்பதற்காக வேறு தர்க்க காரணங்கள் என்ன?

இந்த வெளிப்படையான நாம் நடத்தும் விவாதம் நமது கருத்துக்களுக்கு வலிமை சேர்க்காத, என்ன? மேலும், தமக்கு அளிக்கப்பட்ட குற்றத் தீர்ப்புகளால் சிறைகளில் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து, சிறை மீண்டு வெளிவந்த பின்னும் தொடர்ந்து செயலாற்றி வரும் புரட்சியாளர்கள் பலர் நமது முன்னுதாரணங்களாய் இல்லையா, என்ன? உன்னைப் போன்றே ‘பாகுனின்’ வாதிட்டு இருந்தால் வெகு தொடக்கத்திலேயே அவர் தற் கொலையில் வாழ்வை முடித்துக் கொண்டிருந் திருப்பார். சிறையிலேயே வாழ்ந்த போதிலும் கடமைகளாற்றிய எண்ணற்ற புரட்சியாளர்கள் இன்று ருஷ்ய அரசாங்கப் பதவிகளில் வீற்றிருப் பதை நீ காணலாம். மனிதன் அவனது நம்பிக்கை களை இறுகப் பற்றிப் பிடித்திருக்க, கடும் முயற்சி கொண்டிருக்க வேண்டும். எதிர்காலத்தில் ‘என்ன காத்திருக்கிறது’, என்பதை யாராலும் சொல்ல முடியாது.

உனக்கு நினைவிருக்கிறதா? நமது வெடி குண்டுத் தொழிற்சாலைகளில் எப்போதும் செறிவான, துரித செயல்விளைவுள்ள ‘விஷமருந்தை’ வைத்துக் கொள்வது பற்றி நாம் விவாதித்தோம். அப்போது கூட நீ ‘கூடவே கூடாதென்று’ கோபாவேசத் தோடு எதிர்த்தாய். அன்று நீ நம்பிக்கை கொள்ள வில்லை. அப்படி என்ன நேர்ந்துவிட்டது இப் போது? கடுங்கஷ்டங்கள் செறிந்த சூழலை இன்னும் நாம் எதிர்கொள்ளாததை எண்ணும்போது நான் உனக்கெதிரான திடீர் உணர்வெழுச்சியைக் கொள்கிறேன். தற்கொலைக்கு அனுமதி தரும் உன் மனப்பான்மையைக் கூட நீ வெறுக்கிறாய். அன்போடு என்னை மன்னிப்பாயானால், ஒன்றை இங்கே சொல்கிறேன். நீ சிறைப்பிடிக்கப்பட்ட நேரத்திலேயே தற்கொலையில் நம்பிக்கை வைத்து இறந்திருப்பா யானால், அச்செய்கை நம் புரட்சிக்குரிய நோக்கங் களுக்குத் துணைபுரிந்திருக்கும். ஆனால் இந்த நேரத்தில் தற்கொலை பற்றி நினைப்பதே நம் நோக்கங்களைச் சிதைக்கக்கூடிய முயற்சியாகத் தான் இருக்கும்.

உன் கவனத்திற்கு, மேலுமொன்றைக் கொண்டு வர விரும்புகிறேன். கடவுள், நரகம், சொர்க்கம், தண்டனை, நல்வினைப்பயன்கள் இவற்றையெல்லாம் நாம் நம்புவதில்லை. அதாவது கடவுள் பற்றுடைய மானுட வாழ்வில் நம்பிக்கை கொண்டிருக்க வில்லை. அதனால் வாழ்வையும் மரணத்தையும் பொருள்முதல்வாதப் பார்வை கொண்டே நாம் நோக்கவேண்டும். அடையாளம் கண்டுணரும் பொருட்டு டில்லியிலிருந்து நானிங்கு அழைத்து வரப்பட்டபோது, சில புலனாய்வுத்துறை அதிகாரிகள் எனது தந்தை முன்னிலையில் விசாரணை நடத்தி னார்கள். ரகசியங்களை வெளியிட்டு நான் என் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கா விட்டால் மூர்க்கமான தெய்வத் தண்டனைக்கு ஆளாக நேரிடும் என்று அவர்கள் சொன்னார்கள் அப்படி இறக்க நேருதல் தற்கொலைக்கு ஒப்பானதே என்றும் அவர்கள் வாதாடினார்கள். ஆனால் நம்பிக்கைகளோடும் லட்சியங்களோடும் வாழும் என்னைப் போன்ற மனிதன் வீணாய் மரணம் பற்றிய நினைப்பை மனங்கொள்ளவே மாட்டான். நம் வாழ்வின் மகோன்னத மதிப்புகளை எய்த நாம் விரும்ப வேண்டும். மனிதகுல மேன்மைக்காக எவ்வளவு இயலுமோ அவ்வளவு உழைக்கவேண்டும். குறிப்பாக என் போன்றோரது வாழ்வில் கவலை களுக்கும் வருத்தத்திற்கும் இடமேயில்லை. தற்கொலை புரிகிற எண்ணமும் இல்லை. இதையே தான் உன்னிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.

என்னைப் பற்றி நான் நினைப்பவற்றையெல்லாம் இங்கே சொல்ல அனுமதிப்பாய் என்றே நம்புகிறேன். என் வரையில், ஐயத்திற்கிடமின்றி நானே தண்டனை அதிகம் பெற்றவனாய் இருக்கிறேன். அரசின் நடு நிலைத்தன்மையையோ அல்லது அரசியல் குற்ற மன்னிப்பையோ நான் சிறிதும் எதிர்பார்த்திருக்க வில்லை. அதற்கு இடமிருந்தாலுங்கூட அது எல் லோருக்கும் அளிக்கப்பட மாட்டாது. மற்றவர்கள் மன்னிக்கப்படலாம்; ஆனால் நாமல்ல; அரசியல் குற்ற மன்னிப்பானது நிச்சயம் சிரமந்தரும்; பல்வேறு நிபந்தனைகளோடு தீவிரமான ஒடுக்குமுறையையே ஏவும். நமக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாது. அது நடக்கப்போவதுமில்லை. இருந்த போதிலும், பரந்துபட்ட நோக்குடன் நாம் அனைவரும் முழு மொத்தமாக விடுதலை செய்யப்படுவதையே நான் விரும்புகிறேன்.

புரட்சி இயக்கம் அதன் உச்ச கட்டத்தை அடையும் வேளையில் நாம் தூக்கி லிடப்பட வேண்டும் என்றும் விழைகிறேன். எந்த நேரத்திலும், நமது வழக்கைத் தடங்கலாய் உணராத மாசற்ற பெருமைக்குரிய ஒரு சமரச உடன்பாடு ஏற்படுவதில் ஆர்வங்கொண்டிருக்கிறேன். நாட்டின் விதி தீர்மானிக்கப்படும் வேளையில் தனிமனிதர்களின் விதி மறக்கப்படவே வேண்டும். புரட்சியாளர் களான நாம், கடந்த கால கசப்பான அனுபவங்கள் மீது எச்சரிக்கை கொண்டிருக்கிறோம்.

ஆகவே, நமது ஆட்சியாளர்களின் மனப்பான்மையில், குறிப்பாக ஆங்கிலேயரிடம் ஏதாயினும் திடீர் மாற்றம் நிகழுமென்று நாம் நம்பவில்லை. புரட்சியால் தவிர அதுபோன்ற ஆச்சர்யப்படத்தக்க மாற்றம் நிகழ்வது சாத்தியமில்லை. கடுமையாய்ச் செயலாற்றுதல், கஷ்டங்களைச் சகித்தல், தியாகங்கள் இவற்றைத் தளராமல் தொடர்ந்து மேற்கொள்வதன் வாயிலாகவே புரட்சியைச் சாதிக்க முடியும். அதன் வெற்றியும் எய்தப்பெறும்.

என் வரையில், துணைநல வாய்ப்புகளையும், எல்லோருக்குமான அரசியல் குற்ற மன்னிப்பையும் - அவற்றின் பலன் நிரந்தரமாக இருக்கும் பட்சத்தில் - மகிழ்ந்து வரவேற்க முடியும். ஆனால் தூக்கிலிடப்பட்டு நாம் சாவதன் மூலம் சில ஆழ்ந்த பாதிப்புகள் நம் நாட்டு மக்களின் நெஞ்சங்களில் நிலைபெறும். இவ்வளவுதான்; வேறொன்றும் சொல்வதற்கில்லை.

“Selected writings of shahed Bhagatsingh

Edited with on Introduction by Shiv verma.

தமிழில் : சமந்தா

Pin It