சந்திராயன் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி. சிவசக்திக்கும் இந்த சந்திராயன் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. சந்திராயன் என்ற அறிவியலை உருவாக்கி அதற்காக உழைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள் இப்படி சிவசக்தி என்று பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற ஒரு கேள்வி அடிப்படையில் இருக்கிறது.

மத நம்பிக்கையற்றவர்கள், பிற மதத்தவர் என பலரும் இந்த விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றி உள்ளனர். நிலவில் சந்திராயன் இறங்கிய இடத்திற்கு ஏதோ நிலவில் உள்ள தாசில்தார் அலுவலகம் மோடியின் ஆட்சிக்கு அந்த இடத்தை பட்டா போட்டு கொடுத்துவிட்டதை போல சொந்தம் கொண்டாடி அதற்கு பெயர் சுட்டுவது என்ற எல்லைக்கு போய்விட்டார்.

அறிவியலும் மூடநம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் இன்றைக்கு அறிவியல் விடை கண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் பல புதிர்கள் கண்டுபிடிக்கப்படாத போது, கடவுள்களால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டவை அனைத்திற்கும் இன்றைக்கு அறிவியல் அதற்கான விடைகளை தந்து சாதனைப் படைத்துவருகிறது. இந்திய அரசியல் சட்டம் ஒரு குடிமகனின் கடமை என்பதாக அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. இதைப்பற்றி எல்லாம் மோடிக்கு கவலை இல்லை. சந்திர கிரகணம் என்று வந்துவிட்டால் அதனுடைய அறிவியல் அடிப்படைகளை மறுத்துவிட்டு சந்திரனை பாம்பு விழுங்கிக் கொண்டிருக்கிறது, அதனால் தான் இருளடைந்து விட்டது என்று கூறி சந்திர கிரகணம் முடிவடைகின்ற வரை அதற்காக காத்திருந்து, முடிந்த பிறகு தீட்டு கழிப்பதற்கு புனித நீராடுகிற பழக்கம் இன்றைக்கும் ஒரு மூடநம்பிக்கையாக மக்கள் மத்தியில் பரப்பப்பட்டு வருகிறது.

பெண்களை கவர்ந்துவிடலாம் என்ற நோக்கத்தில், மூன்று பெண் விஞ்ஞானிகளின் சக்தியில் இந்த சாதனை நிகழ்ந்திருக்கிறது என்றும், நமது பாரதப் பெண்கள் விண்வெளிக்கே சவால் விடுகிறார்கள் என்றும் புகழாரம் சூட்டுகிறார் மோடி.

பெண்கள் விண்வெளிக்கு சவால் விட்டாலும் சபரிமலை கோயிலுக்குள் நீதிமன்றமே கூறினாலும் அனுமதிக்க முடியாது என்று கூறுவது தான் இவரது பாஜக. குடியரசு தலைவராக ஒரு பழங்குடி இனத்தைச் சார்ந்த பெண்ணை நியமித்து விட்டோம் என்று கூறுகிற இதே மோடி, புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவுக்கு அழைக்காமல் அவமானப்படுத்தியவர் தான். அங்கே நடக்கும் வேத பார்ப்பனிய சடங்குகளில் ஒரு பெண் அதுவும் பழங்குடியினப் பெண் பங்கேற்க அவர்கள் பேசும் சனாதனம் அனுமதிக்கவில்லை. ராஷ்ட்ரிய சுயம் சேவக்காக ஒரு பெண் அனுமத்திக்கபடுவது இல்லை. இன்றுவரை ஆர்.எஸ்.எஸ் பேரணியில் சீருடையுடன் ஒரு பெண்ணையும் பார்க்க முடியவில்லை. பல்லாயிரம் கோடி பணத்தில் இவர்கள் கட்டிவரும் ராமன் கோயிலில் பெண்களை அர்ச்சகர்களாக நியமிப்பார்களாக? இவர்தான் பாரதப் பெண்களின் சக்தியைப் பேசுகிறார்.

சிவபெருமான் தலையிலேயே நிலவு இருக்கிறது. அதன் காரணமாக நிலவுக்கு சிவசக்தி என்று பெயர் சூட்டிவிட்டார் போலும். நாளைக்கு நிலவிலேயே ராமன் கோயில் கட்டப்போகிறோம், நிலவிலே ஒரு இராமராஜ்ஜியத்தை உருவாக்கப் போகிறோம் இது இந்துக்களுக்கு சொந்தமானது என்று, எப்படி இந்தியாவை பாரதமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்களோ, இந்திய அரசியலமைப்பு குற்றச் சட்டப் பிரிவுகளுக்கு பாரதம் என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்களோ அதுபோல நிலவுக்கும் மதச்சாயம் பூசினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு பிரதமர் இப்படி தரம் தாழ்ந்த வேலையில் ஈடுபடுகிறார் என்பதை உலக நாடுகள் கைகொட்டி சிரிக்கும். அறிவியலுக்கு எதிரான மோடியின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It