சமீபத்தில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஸ்கிராம்ஜெட் இன்ஜினை உருவாக்கி சாதனை படைத்து இருக்கின்றார்கள்!. இதன் மூலம் இந்தத் தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி வந்த அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியா போன்ற வல்லரசு நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த வெற்றியை நாடே கொண்டாடுகின்றது. இந்த வெற்றியால் சாமானிய மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகின்றது என தெரியாத பலரும், அரசு எதைச் செய்தாலும் அதற்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் இருந்து இதற்கு வரவேற்பை வாரி வழங்குகின்றனர். இந்திய மக்களின் வரிப்பணத்தில் ஆயிரக்கணக்கான கோடிகள் ஒதுக்கப்பட்டு, அதன் மூலம் உருவாக்கப்படும் இது போன்ற கண்டுபிடிப்புகள், அதற்காக வரி கட்டிய சாமானிய மக்களுக்கு எந்த அளவிற்குப் பயன் உள்ளதாக உள்ளது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. 

manual scanvenging 600கண்டுபிடிப்புகள் யாவும் மக்களுக்காகத்தான் என்ற தவறான எண்ணம் நம்மில் பெரும்பாலான நபர்களுக்கு உள்ளது. அப்படி எல்லாம் அது ஒருபோதும் இருந்தது கிடையாது. இந்தியாவை பொருத்தவரை இஸ்ரோவின் பல கண்டுபிடிப்புகள் இந்தியாவின் வல்லரசு பசியைத் தீர்ப்பதற்கும், அண்டைய நாடுகளை அச்சுறுத்தவுமே நிகழ்த்தப்பட்டிருக்கின்றது. பொதுவாகவே இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்வது என்ற அடிப்படையில் இருந்தே தொடங்குகின்றது. ஒரு சமூகத்துக்கு என்ன தேவை, ஒரு சமூகம் தன்னுடைய இழிநிலையில் இருந்து வெளியேற என்ன மாதிரியான கண்டுபிடிப்புகள் செய்யப்பட வேண்டும் என்ற எந்த பிரக்ஞையும் இவர்களிடம் இல்லை. இந்திய மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகுதியை ஏப்பம்விட்டு இயங்கிக் கொண்டு இருக்கும்  ஐஐடி, ஐஐஎம் போன்றவை பார்ப்பன ஆதிக்க சாதிகளின் கோட்டையாக இருப்பதால், அங்கு படித்த முடித்து வெளிவரும் அனைவரும் பெரும்பாலும் அமெரிக்காவுக்குச் சேவை செய்வதையும், ஐரோப்பாவுக்குச் சேவை செய்வதையுமே மையமாக கொண்டு சிந்திக்கின்றார்கள். அவர்கள் ஒருபோதும் தன்னுடைய இந்திய சமூகத்தில் இருக்கும் இழிநிலையைப் பற்றி நினைத்துகூட பார்த்திருக்க மாட்டார்கள்.

   இந்தியா முழுவதும் ஏறக்குறைய 15 லட்சம் துப்புரவு தொழிலாளர்கள் கையால் மலம் அள்ளும் பணியைச் செய்துவருகின்றனர். இவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைக் குறிப்பாக அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள். உலகில் வேறு எங்கும் இப்படி ஒரு இழிநிலையை நம்மால் பார்க்கமுடியாது. ஒரே சமூகத்தை சேர்ந்த இத்தனை லட்சம் மக்களை அவர்களின் சாதியைக் காரணம் காட்டி மலம் அள்ளவிட்ட ஒரே நாடு இந்தியாதான். இத்தனை லட்சம் மக்கள் மலம் அள்ளுகின்றார்களே, இவர்களின் இழிநிலையை போக்க ஏதாவது செய்யவேண்டும் என ஆட்சியாளர்களோ இல்லை அவர்களை அண்டிப் பிழைக்கும் இந்திய விஞ்ஞானிகளோ சிந்தித்ததாக ஒருபோதும் தெரியவில்லை. அவர்களைப் பொருத்தவரை இவர்கள் இதே தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எண்ணம்.

  இத்தனை இலட்சம் மக்கள் கையால் மலம் அள்ளுகின்றார்களே என்ற எந்த அவமான உணர்ச்சியும் இந்திய சாதிய இந்துக்களை ஆட்கொண்டது கிடையாது. அதைப் பற்றிய எந்த சிந்தனையையும் அற்ற கேடுகெட்ட பிண்டங்களாகவே அவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். 2012 ஆம் ஆண்டு கழிவுகளை இயந்திரங்களைக் கொண்டுதான் அகற்ற வேண்டும் என மத்திய அரசு உத்திரவிட்டது. ஆனால் இன்றுவரையிலும் இந்த நிலையில் மாற்றம் வரவில்லை. பாதாள சாக்கடையில் இறங்கி விஷவாயு தாக்கி உயிரிழப்பவர்கள், இன்னும் அது சம்மந்தமான பணிகளில் ஈடுபட்டு நோய்வாய்பட்டு இறப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் ஆண்டுக்கு 22000பேர். ஆனால் கருணையற்ற இந்தச் சமூகம் அதை ஒரு பொருட்டாக கூட எடுத்துக் கொண்டாதாக தெரியவில்லை.

  தமிழகத்தில் கழிவுநீர் தொட்டிகள், குழாய்களுக்குள் இறங்கி அடைப்புகளைச் சரி செய்யும் போது விஷவாயு தாக்கி 200 பேர் இறந்துள்ளனர். இவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என ‘மாற்றத்துக்கான இந்தியா’ என்ற அமைப்பின் தலைவரான நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் உயிர் இழந்த குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க 2014 ஆம் ஆண்டே உத்திரவிட்டிருந்தனர். இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதி மன்றத்தால் கடந்த மே மாதமே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.  இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு விஷவாயு தாக்கி இறந்த தொழிலாளர்களில் 41 பேரின் முகவரியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று வெட்கமே இல்லாமல் கூறியுள்ளது. இதுதான் மலம் அள்ளும் தொழிலாளர்கள் மீது தமிழக அரசுக்கு மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்திய ஆளும் வர்க்கத்துக்கும் உள்ள அருவருக்கத்தக்க பார்வை.

 200 பேருக்கு தலா பத்து லட்சம் என்றால் 20 கோடி ரூபாய்தான் வரும். அரசைப் பொருத்தவரை அது ஒன்றும் பெரிய தொகை இல்லைதான். ஆனால் அதை கொடுப்பதற்குத் தான் ‘அம்மாவுக்கு’ மனமில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்து உச்ச நீதிமன்றம் வரை போய் வழக்கை தோற்கடிக்க  நினைக்கும் அளவுக்கு அந்த மக்கள் என்ன பாவம் செய்தார்கள், உங்களுடைய நாத்தம் பிடித்த மலத்தை அள்ளப் போய் தங்கள் உயிரைவிட்டதைத் தவிர. தாழ்த்தப்பட்ட மக்கள் மீது எவ்வளவு வஞ்சம் நிறைந்த மனம் இருந்ததிருக்குமேயானால் தமிழக அரசு இப்படி ஒரு காரியத்தை செய்திருக்கும். எப்படி குஜராத்தில் செத்த மாட்டை தூக்க மாட்டோம் என  அங்குள்ள தலித்துகள் போர்க்கொடி தூக்கினார்களோ அதே போல மலத்தை அள்ள மாட்டோம் என இங்குள்ள தலித்துகளும் போர்க்கொடி தூக்க வேண்டும். தூக்குவதுடன் மட்டும் அல்ல அவர்கள் இந்த இழிதொழிலில் இருந்து தங்களை முற்று முழுவதுமாக விடுவித்துக் கொள்ள வேண்டும். செத்த மாட்டை தூக்குவதற்கும், பேண்ட மலத்தை அள்ளுவதற்கும் மட்டுமே தாழ்த்தப்பட்ட மக்களைப் பயன்படுத்திக் கொள்ளும் சுரணையற்ற சாதி இந்துக்களின் கொட்டம் அப்போதுதான் அடங்கும்.

  மலம் அள்ளுவதற்கு எந்தக் கருவிகளையும் வழங்காமல் இந்த அரசு திட்டமிட்டே அவர்களைக் கொல்கின்றது. தூய்மை இந்தியா, டிஜிட்டல் இந்தியா என என்னதான் மோடி பிதற்றிக் கொண்டு இருந்தாலும் துப்புறவுத் தொழிலாளர்கள் விடயத்தில் இன்னும் இது கருமம் பிடித்த வெட்கம் கெட்ட இந்தியாவாகவே உள்ளது.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியன் ரயில்வேயே இதற்கு ஒரு சிறந்த உதாரணம். “நாடு முழுவதும் , நாளொன்றுக்கு 19 ஆயிரம் ரயில்கள் இந்தியா முழுவதும் இயக்கப்படுகின்றது. இதில் பயணிகள் ரயில்களின் எண்ணிக்கை மட்டும் 12 ஆயிரம் ஆகும். அதில் உள்ள 59,279 பெட்டிகளின் கழிப்பிடங்களில் இருந்து கழிவுகள் தினசரி இருப்புப்பாதைகளில் வந்து விழுகின்றன. இவற்றில் 505 பெட்டிகளில் இருந்து மட்டுமே கழிவுகள் விழுவது கிடையாது. இவை மட்டும் உயிரி கழிப்பிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன” (தவிர்க்கப்பட்டவர்கள்: பாஷாசிங்). மற்ற அனைத்து பெட்டிகளிலும் இருந்து விழும் மனித கழிவுகளை மனிதர்கள் தான் அள்ளுகின்றார்கள். இதுதான் மோடியின் தூய்மை இந்தியாவின் சந்தி சிரிக்கும் லட்சணம்.

 இந்திய அரசு நினைத்தால் இதை நிச்சயம் முற்றிலுமாக என்றோ ஒழித்திருக்க முடியும். ஆனால் இந்த இழி நிலை தொடர வேண்டும் என்பதுதான் இந்திய அரசைக் கைப்பற்றி வைத்திருக்கும் பார்ப்பன பனியா சக்திகளின் ஒரே எண்ணம். அவர்களைப் பொருத்தவரை மனிதக்கழிவுகளை மனிதர்கள் அள்ளுவது என்பது தங்களுடைய பார்ப்பன ஆதிக்கத்தின் பெருமையைப் பறைசாற்றும் ஒரு குறியீடு. தங்களைச் சாதிய அடுக்கின் உச்சத்தில் எப்போதுமே வைத்திருக்க அவர்கள் கடைபிடிக்கும் சாதிய ஏகாதிபத்தியம். இந்த ஸ்கிராம்ஜெட் இன்ஜின் என்பது அப்துல் கலாமின் கனவு திட்டம் என்று சொல்கின்றார்கள். இது தான் இந்திய விஞ்ஞானிகளின் இழி சிந்தனை.  இங்கே எல்லா விஞ்ஞானிகளும் தங்களுடைய கண்டுபிடிப்புகளை ஆளும் வர்க்கத்துச் சேவை செய்வது என்ற முன்முடிவோடுதான் திட்டமிடுகின்றார்கள்; இல்லை தங்களை பொருளாதார நிலையில் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற  ரீதியில் திட்டமிடுகின்றார்கள்.  இவர்கள் யாரும் இந்தியாவில் மலம் அள்ளித்தான் தங்கள் வாழக்கையை வாழ வேண்டும் என நிர்பந்திக்கப்பட்ட லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை அதில் இருந்து மீட்டெடுக்க தங்களுடைய விஞ்ஞான அறிவினை பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் தங்களுடைய கண்டுபிடிப்புகளைத் திட்டமிடுவது கிடையாது.

 அமைப்பு ரீதியாக பெரிய அளவில் இந்த மக்கள் ஒன்று திரட்டப்படாததே இன்று அவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு ஒரு முக்கிய காரணமாகும். மிகக்குறைவான கூலியில் மிகக் கொடூரமாக சுரண்டப்படும் இந்தத் துப்புறவு பணியாளர்கள் தங்களுக்கான அந்தக் குறைவான கூலியைப் பெறுவதற்காக கூட போராட வேண்டி உள்ளது. கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தில் அந்த மக்கள் மிகக் கொடூரமாக அரசு அலுவலர்களாலும், பொது சமூகத்தாலும் சுரண்டப்படுகின்றார்கள். இந்த மக்கள் அமைப்பு ரீதியாக ஒன்றுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அரசு பெரும்பாலும் இவர்களை ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கின்றது. இதனால் இவர்களுக்கு எந்தச் சட்டப் பாதுகாப்பும் கிடைக்காமல் போய்விடுகின்றது.

  அனைத்து அம்பேத்கரிய, பெரியாரிய, மார்க்சிய அமைப்புகளும் இந்தப் பிரச்சினையைத் தீவிரமாக கையில் எடுத்துப் போராட வேண்டும். அப்போதுதான் இந்த இழி நிலையை நம்மால் ஒழிக்க முடியும். இதை செய்யாமல் போனால் சாதி ஒழிப்பை பற்றிய நமது சிந்தனைகள் எல்லாம் கறை படிந்ததாகவே வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

- செ.கார்கி

Pin It