1) வைக்கத்தில் சூத்திர வகுப்புப் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுத்ததாக 15.6.1924 சுதேசமித்திரன் ஏட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது. கோவில் மதில்களுக்கு வெளியே உள்ள பொதுச் சாலைகளில் தீண்டப்படாதார் நடக்கக் கூடாது என்பதும், சாதி இந்துக்கள் என்கிற சூத்திரர் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்பதும் இந்து மத ஆசாரம். இதையும் மீறினார் ஈ.வெ.ரா. நாகம்மை. இந்நிகழ்ச்சி பற்றிய பின்வரும் செய்தி இதை எண்பிக்கிறது. கொச்சி, ஜூன் 20 - வைக்கத்தில் கிளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. வைக்கம் கோயிலுக்கு உள்ளே சாதி இந்துப் பெண்களான திருமதி நாயக்கரும், மற்றுமுள்ள பெண்களும் நுழையக் கூடாது என தேவசம் போர்டு தடை செய்திருந்தது. அதையும் மீறி அவர்கள் நுழைந்து விட்டார்கள். இது பற்றி தேவஸ்வம்போர்டு ஊழியர் ஒருவர் நேரில் சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வந்து, அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் திருமதி நாயக்கர் கோவிலுக்குள் நுழைந்தது கடுமையான குற்றம் (Grievous Error) என்றும், சாதி இந்துக்கள் கோயிலுக்குள் நுழைய இன்னும் அனுமதிக்கப்படாத நிலையில் சாதி இந்துவான அவர் அப்படிச் செய்தது அடாதது என்றும் கூறி கண்டித்து விட்டுச் சென்றார் (The Hindu 21.6.1924)

aanaimuthu book on vaikkom agitation2) அடுத்து, பிரஸ்தாப ரஸ்தாவில் தடுக்கப்பட்ட ஹிந்து சமூகத்தினர் பெரும்பாலும் தொண்டர்களாக இருக்கிறார்கள். தடுக்கப்பட்ட மேலண்டை வாசலில் ஸ்ரீமதிகளான கல்யாணியம்மாள், பார்வதியம்மாள், கரும்பியம்மாள், கருத்த குஞ்சம்மாள், ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரின் பந்துக்களான லட்சுமியம்மாள், மாரக்காயம்மாள் இவர்கள் நின்று சத்தியாகிரகம் செய்தது கல்மனதையும் கரையச் செய்ய வல்லது. மதுரை ஸ்ரீமான் நாராயண ஐயர் இங்கு அரிய வேலை செய்து கொண்டிருக்கிறார். ஸ்ரீமான்களான கோவிந்த சாணாரும் ராமசாமி நாயக்கரும் குடும்பம் சகிதம் தாமதித்து வருகிறார்கள் என்று விருதுநகர் ஸ்ரீமான் க. பெ. சங்கரலிங்க நாடார் எழுதுகிறார். (சுதேசமித்திரன் 25.7.1924. பக்கம் 8) என்ற செய்தியும் தோழர் வே.ஆ. அவர்களின் இந்நூலில் மட்டுமே காணக் கிடக்கும் செய்திகளாகும்.

மேலும் பெண் தொண்டர்கள் சாலையில் அமர்ந்து தேசிய கீதம் பாடிக் கொண்டும், இராட்டையில் நூற்றுக் கொண்டும் நிதி திரட்டினர் என்று கூறும் செய்திகளோடு, நாகம்மையார் கைதான செய்தியையும் இந்நூல் மட்டுமே பதிவு செய்துள்ளது.

3) ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர் மனைவி மற்ற ஸ்த்ரீகளோடு பிரச்சார வேலையும் பண வசூலும் செய்து வருகிறார். சாது எம்.பி. நாயரின் மனைவியும் அவருடன் வேலை செய்கிறார். பாடிக் கொண்டும் ராட்டினம் சுற்றிக் கொண்டும் இந்த இரண்டு தொண்டர்களும் போக்குவரத்துக்கு தடையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு ஐந்து ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டனர். அபராதம் கொடுக்க மறுத்து கோர்ட் கலையும்வரை காவலில் இருந்தார். விசாரணைக்கு முந்தி எட்டு தினங்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டிருந்தார். .... (சுதேசமித்திரன் 5.8.1924) இந்த செய்தியும் குறிப்பாக நாகம்மையார் எட்டு நாட்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த செய்தியையும் இந்நூல் மட்டுமே கூறுகிறது. இந்நூலின் மூன்றாவது உட்தலைப்பாய் உள்ள கேரளத்தில் நிலவிய அன்றைய சமுதாய நிலை என்ற பகுதியின் இறுதிப் பகுதியில் உள்ள ..... அந்த நான்கு பக்கப் பெரும்பாட்டைகளில் நுழைவதற்குத் தடை போட்டு நான்கு பக்கங்களிலும் சுமார் 400 அடி, 450 அடி, 600 அடி, 1100 அடி தூரங்களில் தீண்டப்படாதவர்கள் இங்கே பிரவேசிக்கக் கூடாது என்று தனித்தனி அறிவிப்பு பலகைகளை அப்போது வைத்திருந்தனர். அன்று அந்த இடத்தை ஒட்டி உண்டியல் உண்டு. தீண்டப்படாதர் அந்த உண்டியலில் காணிக்கை போடலாம். அந்த எல்லைக்கு வெளியே நின்று வைக்கத்தப்பனை சேவிக்கலாம். மேல் சாதி இந்துக்களை வணங்க வேண்டும்; வணங்கலாம். இந்தத் தடைகளை உடைக்க வேண்டும் இதுவே வைக்கம் கிளர்ச்சியின் குறிக்கோள் என்பவையும் கூட புதிய செய்திகள்தான்.

புதிய செய்திகளைக் கூறுகிறது என்பது மட்டுமே நாம் கூற வந்த செய்தி அல்ல; இவ்வாறான செய்திகளை ஆவணக் காப்பகங்களில் இருந்து தேடி எடுத்து, நேரடியாய் களத்துக்கே போய் பார்வையிட்டு செய்திகளைச் சேகரித்து முழு செய்திகளையும் பதிய வேண்டும் என்ற ஆர்வமே பெரிதும் கருதிப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இதுவே இந்நூல் ஆசிரியரின் தனித்துவ பண்புமாகும்.

இவ்வளவு பெரிய போராட்டத்தை, இதில் பெரியாரின் பெரும்பங்கை, அதிலும் அந்தப் போராட்டத்தில் இரண்டு முறை சிறைப்பட்டவரும், கடுங்காவல் தண்டனையின் காரணமாக கைதி உடையும் கால் விலங்கோடும் வேலைகளும் கொடுத்து கடுங்காவல் தண்டனை பெற்றவரும், அந்த வைக்கம் வெற்றி விழாவில் கலந்து கொண்டவருள் கேரளத்தவர் அல்லாதவர் அவர் மட்டுமே என்கிற சிறப்புகளைக் கொண்டவரான பெரியாரின் பங்களிப்பையே மறுதலித்து 100 ஆண்டு வரலாறு கொண்ட போராட்டத்தை இன்றளவும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிற கேவலமான போக்கினைக் கடைபிடிக்கிற கயவர்களுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகளை வழங்க நமக்கு கிடைத்திருக்கிற அரிய ஆயுதங்களில் இதுவும் ஒன்றாகும்.

29.11.1925 அன்று, அதாவது பெரியார் காஞ்சிபுரம் காங்கிரசு மாகாண மாநாட்டில் தான் தொடர்ந்து மாநாடுதோறும் வலியுறுத்தி வந்த வகுப்புரிமைத் தீர்மானம், முதல்நாள் தமிழர் மாநாடு கூடி தீர்மானித்திருந்தும், தேவைக்கு மேலான உறுப்பினர்களால் கையெழுத்திட்டு முன்மொழிந்தும், விவாதத்துக்குக் கூட எடுத்துக் கொள்ளவில்லையே என்ற பெரும் மனக்குமுறலோடு அம்மாநாட்டை விட்டு வெளியேறிய (23.11.1925) ஒரு வாரத்துக்குள், வைக்கம் சத்தியாகிரக ஆசிரமத்தின் செயலாளர் கேளப்பன் ஏற்பாட்டில் வைக்கத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டம் பெரியார் தலைமையில்தான் நடைபெற்றது.

போராட்டக் குழுவில் முன்னணி வகித்தவர்கள் ஒருவரான மன்னத்து பத்மநாபன் அவ்விழாவில் பேசுகையில் தமிழ் பிராமணர்களே பிரச்சனைக்கு காரணம்’ என்று குறிப்பிட்டு பேசியுள்ளார்.

அவர் மேலும் பேசுகையில், 20 மாத சத்யாகிரகத்தில் பல ஆயிரம் வருஷங்களாய் ஏற்பட்ட கொடுமைகள் அழிந்து போய்விட்டன. திருவாங்கூர் இராஜ்யத்தில் உள்ள நாயர்கள் எல்லாம் சத்தியாகிரகத்துக்கு அனுகூலமாய் இருந்தார்கள். மலையாள நம்பூதிரிகள் அறியாதனத்தினாலும் குருட்டு நம்பிக்கையாலும் சத்தியாகிரகத்தை எதிர்த்து நின்ற போதிலும் அவர்களால் அவ்வளவு கெடுதிகள் ஏற்படவில்லை. ஆனால் தமிழ்நாட்டு பிராமணர்கள் தங்களுடைய சோம்பேறி மடத்துச் சாப்பாடு போய்விடுமே என்று பயந்து கொண்டு வேண்டுமென்றே பல அக்கிரமங்களையும் கொடுமைகளையும் சத்தியாகிரகத்துக்கு செய்து வந்தார்கள். வெட்டிச் சோற்றைத் தின்பதற்காக இங்கு வந்திருக்கும் ஊட்டுப்புரை தமிழ்ப்பிராமணர்கள்தான் கொடுமை செய்கிறார்கள். அந்த தமிழ்ப் பிராமணர்களைக் கேரளத்தை விட்டு தமிழ்நாட்டிற்கு ஓட்டி விட்டால் திருவாங்கூர் இராஜ்யத்தில் ஒரு கலகமும் இருக்காது என்று பேசினார் மன்னத்து பத்மநாபன். (வைக்கம் போராட்டம் - பழ.அதியமான். பக்.297).

அவர் குறிப்பிட்ட ஊட்டுப்புரை சோம்பேறித் தமிழ்ப் பிராமணர்களும், அவர்களது சூத்திர அடிவருடிகளும் இந்த ஆண்டிலாவது, வைக்கம் போராட்டத்தைப் பற்றி வெளிவரும் நூல்களை, அவற்றின் செய்திகளைப் படித்து தெளிந்து கொள்ளட்டும் என்பதே நமது விருப்பம்.

- திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் முன்னுரையில் இருந்து

நூல் குறிப்பு :

பெரியாரும் நூற்றாண்டு காணும் வைக்கம் கிளர்ச்சியும்

வெளியீடு : மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி

விலை : ரூ.80/-

தொடர்பு எண் : 86681 09047

Pin It