தலையில் அடிபட்டு, நினைவு தப்பி ‘கோமா’ நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு, மந்திரங்களை ஓதி சிகிச்சை அளிக்கும் விபரீத வேலையில், மத்திய பாஜக அரசின் தலைமையிலான நாட்டின் உயர் மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு (The IndianCouncil of Medical Research - ICMR) ஈடுபட்டுள்ளது. இந்த விபரீதத் திட்டத்திற்கு ஆராய்ச்சி என்ற பெயரில், ஓராண்டு, ஈராண்டு அல்ல, கடந்த 3 ஆண்டுகளாக, மாதம் ரூ. 28 ஆயிரம் விகிதம் நிதி ஒதுக்கீடும் வழங்கியுள்ளது. அதுவும் ஏதோ ஒரு மருத்துவமனையில் அல்ல, நாட்டின் புகழ்பெற்ற தில்லி ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில்தான் இந்த அவலம் அரங்கேற்றப்பட்டு உள்ளது.

ரிக் வேதத்தில் இடம்பெற்ற ‘மகாமிரித்யுன்ஜயா’ என்ற மந்திரத்தை ஓதுவதன் மூலம், நோயாளியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுத்த முடியும் என்று, டாக்டர் அசோக் குமார் என்பவர் கூறியுள்ளார். இதற்காக ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை உருவாக்கி, ஐசிஎம்ஆர் அமைப்பிடம் விண்ணப்பமும் அளித்துள்ளார்.

முதலில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இதற்காக விண்ணப்பித்தபோது, இது அறிவியலுக்குப் புறம்பானது என்று, திட்ட முன்வரைவு நிராகரிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், ஐசிஎம்ஆர் அமைப்பிற்கு விண்ணப்பித்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனை மூலம் நினைத்ததைச் சாதித்துக் கொண்டுள்ளார் டாக்டர் அசோக் குமார். அவருக்கு ஐசிஎம்ஆர் அமைப்பு கடந்த 3 ஆண்டுகளாக மாதத்தோறும் ரூ. 28 ஆயிரம் நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

Pin It