சர்ச்சைகள் அடிக்கடி உருவாகும் இடம் சிதம்பரம் நடராஜர் கோயில். தேவாரம் திருவாசகம் ஏடுகளைப் பூட்டிவைத்துக் கொண்டு தர மறுத்தார்கள், நந்தனாருக்கு கோயிலுக்குள் நுழையத் தடை போட்டார்கள், ஆறுமுகசாமியை தேவாரம் பாட விடாமல் தடுத்தார்கள். இப்படி தொடர் சர்ச்சைகளில் சிக்கி வந்த தில்லையம்பதி இப்போது, ‘திருமுறைகளைப் பாடத் தடை’ என்ற புதுச் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறது.

சிதம்பரம் நடராஜர் கோயிலின் மேலக்கோபுர வாசல். இந்த வழியாக கோயிலுக்குள் நுழையும் இடம் அருகே தான் திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப் படுகிறது. இவ்விடத்தில், தீட்சிதர்கள் அனுமதியுடன் தினமும் திருமுறை ஓதும் நிகழ்ச்சி கடந்த 2014 ஜனவரி 12இல் தொடங்கியது. தில்லை திருமுறை மன்றத்தால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது தினமும் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்று வந்தது. இந்த நிகழ்வில், திருமுறை ஒரு பதிகம் கூறி அதற்கான விளக்கமும் சொல்லப்படும். அப்படி இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளில் 9 திருமுறைகள் ஓதி முடிந்து, பத்தாவது திருமுறையில் திருமந்திரத்தில் நான்காம் மந்திரம் வரை முடிவடைந்துள்ளது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து இங்கே திருமுறைகள் ஓதும் நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது.

இதையடுத்து, நடராஜர் கோயிலுக்குள் திருமுறைகளைப் பாட தீட்சிதர்கள் தினமும் 5,000 ரூபாய் கேட்கிறார்கள் என்றும், பணம் தராததால் தொடர்ந்து திருமுறைகளைப் பாட தடைவிதித்து விட்டார்கள்.

இதுகுறித்து பேசிய தில்லை திருமுறை மன்றத்தின் தலைவர் முருகையன், “திருமுறைகள் ஓதும் நிகழ்ச்சியை நடத்த நடராஜர் கோயில் நிர்வாகத் துக்கு 150 ரூபாய், திருமுறை ஓதுவாருக்கு 200 ரூபாய், திருமுறை விளக்க உரை அளிப்பவர்களுக்கு 200 ரூபாய், நடராஜர் கோயில் பூஜை ஆச்சாரியாருக்கு 100 ரூபாய், இவற்றோடு இதர செலவுகளையும் சேர்த்து தினமும் 1,000 ரூபாய் செலவானது. திருமுறை மீது பக்தி கொண்ட அன்பர்களின் நன்கொடைகளைக் கொண்டு இதைச் சமாளித்தோம்.

இந்நிலையில், திருமுறை ஓதும் நிகழ்ச்சியை நடத்த தினமும் 5,000 ரூபாய் வேண்டும் என தீட்சிதர்கள் தரப்பில் திடீரெனக் கேட்டனர். எங்களால் அவ்வளவு பெரிய தொகையைத் தருவது சாத்தியமில்லை என்று சொன்னதும், நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கவில்லை. அதனால், நிகழ்ச்சி பாதியிலேயே தடைபட்டு நிற்கிறது. பணம் இல்லாமல், வழக்கம் போல மீண்டும் நிகழ்ச்சியை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். அவர்கள் அனுமதிக்காத பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருமுறை சிவனடியார்கள் மற்றும் பக்தர்களைத் திரட்டி சிதம்பரத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.

இது குறித்து நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் சபாவைச் சேர்ந்த வெங்கடேச தீட்சிதரிடம் கேட்டபோது - ‘‘திருமுறை விளக் கம் ஓதுதல் நிகழ்ச்சியை ஒரு வருட காலத்துக்கு மட்டுமே நடத்த அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து மூன்று ஆண்டு களுக்கும் மேலாக அந்த நிகழ்ச்சி எந்தத் தடையும் இல்லாமல் நடைபெற்று வந்தது.

அதேசமயம், கோயிலின் உள்ளே மைக்செட் வைத்து ஒலிபெருக்கி மூலம் நிகழ்ச்சியை நடத்துவதால் பக்தர்களுக்கும் கோயிலின் மற்ற நிகழ்வுகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டு வந்தன. இதைத் தவிர்ப்பதற்காக, மைக்செட் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளுங்கள் என்று எங்கள் தரப்பிலிருந்து திருமுறை மன்றத்தாருக்குச் சொல்லப்பட்டது. இதை வேறு மாதிரியாகத் திரித்துவிட்டார்கள் என்கிறார்.

Pin It