அதானியின் பங்குச் சந்தை மோசடி குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையைத் தொடர்ந்து பாஜக அரசுக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படவில்லை. பிரதமர் மோடி அதானி குறித்து வாய் திறக்கவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து விசாரணை நடத்த ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று சீலிடப்பட்ட கவர் ஒன்றில் வல்லுனர்களின் பெயரை ஒன்றிய அரசுத் தரப்பு அளித்தது. ஆனால் அதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் தற்போது ஒரு வல்லுனர் குழுவை நியமித்திருக்கிறது.

இந்தக் குழுவின் விசாரணை நேர்மையாக நடைபெற்று உண்மை வெளிவர வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறோம். ஆனால் அதற்குள் பல்வேறு தரப்பினரும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் வெளியான தகவல் குறித்து அதானிக்குச் சாதகமான முறையில் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.adani and modi 596அதானியைக் காப்பாற்ற ஊடகங்கள் தொடர்ந்து முயல்கின்றன. பல்வேறு ஆங்கில நாளேடுகளில் நடுப்பக்கக் கட்டுரைகள் அதானியின் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்னும் கருத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் எழுதப்படுகின்றன.

கடந்த எட்டு ஆண்டுகளாக இந்தியாவின் சில முற்போக்கு ஊடகங்களும் இயக்கங்களும் சொல்லாத ஒன்றை ஹிண்டன்பர்க் சொல்லி விடவில்லை. டெல்லியில் இருந்து வெளிவரும் ‘Caravan’ ஆங்கில மாத இதழ், கடந்த எட்டு ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சியில் நடைபெற்ற இது போன்ற முறைகேடுகள் தொடர்பாக அவ்விதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பை “Adani, Ambani and More” என்னும் தலைப்பில் வெளியிட்டது.

ஆய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டிய அளவிற்கு நுட்பமாக நடந்ததன்று இந்த மோசடி. பட்டப்பகலில் பரிவர்த்தனமாக நடைபெற்றவைதான் இவை. ஆனால் பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன அதிகார வர்க்கமும இதுநாள் வரை இந்த மோசடிகளை வெளியிடாது மறைத்து வந்த நிலையில், இன்று உலக அளவில் பெரிய பேசு பொருளாக உருவானதற்குப் பிறகு மோடியையும் அதானியையும் காப்பாற்றும் வேலையில் முழுமூச்சாக இறங்கி இருக்கின்றன.

மோடியும் அதானியும் பார்ப்பனர்களின் ஆதரவு பெற்றவர்களாக இருக்கிறார்கள். மோடி, அதானி வளர்ச்சியில்தான் தங்களுடைய சனாதன தர்மத்தின் வளர்ச்சி இருக்கிறது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.

என் டி டிவியின் பெரும்பான்மையான பங்குகளை அதானி வாங்கி இருக்கிறார். ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து உலகமே செய்தி வெளியிட்ட வேளையில் என் டி டிவியின் கள்ள மௌனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்து இன்று வரையிலும் பேசிக் கொண்டிருக்கும் அனைத்துப் பார்ப்பன ஊடகவியலாளர்களும் தற்போது அதானிக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அன்னா ஹசாரே என்னும் ஒருவர் எங்கு இருக்கிறார் என்றே இப்போது தெரியவில்லை.

ஹிண்டன்பர்க் அறிக்கையின் மூலம் வெளிவந்திருப்பது அதானி ஒருவர் மட்டும்தான். இன்னும் பல பண முதலைகள் பார்ப்பனர்களின் ஆதரவோடு பாதுகாப்பாக இருக்கின்றன. இவர்களின் மோசடிகளைப் பாதுகாத்து, தேர்தல் பத்திரங்களாக பாஜக அறுவடை செய்கிறது. ஆர் எஸ் எஸ்இன் நேரடி மற்றும் மறைமுக நடவடிக்கைகளுக்கு எல்லாம் இந்தப் பண முதலைகள் தீனி போடுகிறார்கள்.

சர்வதேச அளவில் இது குறித்த அழுத்தம் வராமல் இருக்க ஜெய்சங்கர் என்னும் பார்ப்பன அமைச்சர் மூலம் இந்துத்துவ வெளியுறவுக் கொள்கையை கட்டமைக்கிறார்கள். ஜெய்சங்கர் செய்வதெல்லாம் “Hindutva Diplomatic” உடன்படிக்கைகள்தான். இது பார்ப்பனர்கள் சொல்லும் தகுதி, திறமை.

பிபிசியின் ஒரு ஆவணப்படம் பாஜகவின் வளர்ச்சியில் படித்திருக்கும் இரத்தக் கறையை உலகறியச் செய்திருக்கிறது. ஹிண்டன்பர்கின் ஆய்வறிக்கை பாஜகவின் வளர்ச்சியில் படிந்திருக்கும் ஊழல் கறைகளை உலகறியச் செய்திருக்கிறது.

2024இலாவது இந்தியா ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

- உதயகுமார்

Pin It