பொறந்தா பசு மாடா பொறக்கனும்; அதுவும் மத்திய பிரதேசம் எனும் மாநிலத்திலே பொறக்கனும்; அங்கே தான் பசு மாட்டுப் புரட்சியே நடக்குது. பா.ஜ.க. முதலமைச்சர் சவுகான், ‘பசு அமைச்சரவை’ ஒன்றையே உருவாக்கிட்டார். கடந்த ஞாயிற்றுக் கிழமை, பசு அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் கூடி, பசு மேம்பாட்டுக்கான திட்டங்களை விரிவாக ஆராய்ச்சி செய்திருக்கிறது.
அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தை ‘கோசாலை’யில் நடத்துவதற்கு அமைச்சரவை முடிவு செய்துள்ளதாம். அமைச்சரவை வேறு என்ன முடிவுகளை எடுத்தது என்று கேட்கிறீர்களா? இனி அம்மாநிலத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவில் முட்டையை நிறுத்திவிட்டு பசுமாட்டுப் பால் வழங்குவது என்ற முடிவை எடுத்திருக்கிறதாம்!
அத்தனை குழந்தைகளுக்கும் பசும்பால் விநியோகிக்க எங்கே போவது? அய்.ஏ.எஸ். படித்து விட்டு பசு மாடு பராமரிப்புக்கு வந்திருக்கும் அதிகாரிகள் ‘கோமாதா’ சத்தியமாக தலையைப் பிய்த்துக் கொண்டிருப்பார்கள். இதற்கே இந்த நிலை என்றால், முதலமைச்சரின் அடுத்த ஆலோசனையை எப்படி சமாளிக்கப் போகிறார்களோ தெரியவில்லை.
‘பசு சுற்றுலா’ திட்டம் ஒன்றைத் தயாரிக்குமாறு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளாராம். ‘பசு சாணம் - பசு மூத்திரம்’ ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்க திட்டம் தீட்டச் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்ல, பசு மாட்டைக் காப்பாற்றுவதற்காக மக்களிடமிருந்து ஒரு சிறப்பு வரி போடப் போவதாகவும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு செய்தி வெளியிட் டுள்ளது.
பொதுவாக கால்நடைகள் பராமரிப்புத் துறை ஒன்று அமைச்சரவையில் இருக்கும். ஆனால் பிற ‘சூத்திர’ கால்நடைகளை ஒதுக்கி விட்டு ‘பிராமண பசு’வுக்கு மட்டும் தனித் துறை என்ற சாதனைக்காக சவுகானுக்கு ‘பசு நேசன்’ பட்டமே வழங்கலாம்! பசுமாடுகளைத் திரட்டி பாராட்டு விழா கூட நடத்தலாம். பசு மாடுகள் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காது!
இனி மத்திய பிரதேச சட்டமன்றத்தில் ‘பசு’வுக்காக தனி பட்ஜெட் போடுவார்கள். பசு மூத்திரத்துக்கான டெண்டரில் ஊழல் நடந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டலாம். பசு மாட்டு சாணியையே அரசு சரியாக பாதுகாக்கவில்லை; இதோ, அதில் புழுக்கள் நெளிவதைப் பாருங்கள் என்று சாணியைப் பொட்டலம் கட்டி எடுத்து வந்து சட்டசபையில் சவால் விடும் கட்சிகளையும் பார்க்கலாம்.
வாங்கிய பசு மாட்டு தீவனத்தை அதற்குப் போடாமல் சில அதிகாரிகள் எருமை மாட்டுக்கும், நாய் களுக்கும், பட்டினியால் வாடும் இதர விலங்குகளுக்கும் போட்டிருக் கிறார்கள் என்று அரசுக்கு புகார்கள் வந்துள்ளன. ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் இது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் சட்டசபையில் அறிவிப்பு வெளியிடலாம்.
“அப்படியானால் பாதிக்கப்பட்ட மாடுகள் ஆணையம் முன் வந்து சாட்சி கூறுமா?” என்று கேட்கிறார், ஒரு மனித நல ஆர்வலர், இது குறும்பு; மத துவேஷம் என்கிறார், ஒரு ‘பசு நேசர்’.
“ஏற்கனவே பசுவதைத் தடைச் சட்டம் இருக்கிறது. பால் வற்றிப் போன மாடுகளைப் பராமரிக்க ஆள் இல்லை; எலும்பும் தோலுமாக வீதிகளில் அனாதைகளாக அலைந்து கொண்டிருக்கின்றன; இப்போது தனி அமைச்சரவை என்கிறீர்கள்? பசுமாடுகள் சங்கம் வைத்து ஊர்வலம் வந்து கோரிக்கை மனு ஏதேனும் தந்ததா?” என்று கேட்கிறார், ஒரு தொழிற்சங்கத் தலைவர்! இவர்களுக்கு பசுவின் ‘புனிதம்’ என்ன தெரியப் போகிறது?
“பசுவதை கூடாது; அது பாவம்; வேண்டுமானால் பசு பட்டினியால் செத்து தானாக மோட்சம் போகட்டும்; பால் வற்றிப் போனாலும் பசு நமது தெய்வம்; அதை வணங்குவதே நமது தர்மம்” என்கிறார்கள் பசுக் காவலர்கள். பசுவின் புனிதம் பேசும் இந்த காவலர்கள் தான் வேத காலத்தில் அதை யாகத்தில் போட்டு எரித்தார்கள்.
அவாள் எல்லாம் அந்தக் கால ‘கோமாதா தந்தூரி’ சாப்பிட்டவர்கள்தான். எந்தப் பாகம் ருசியாக இருக்கும் என்றெல்லாம் விலாவாரியாக வேதத்தில் எழுதியும் வைத்திருக்கிறார்கள்! புத்தர் யாகங்களை எதிர்த்து மக்களைத் திரட்டிய காலத்தில்தான் இவர்கள் ‘தலப்பா கட்டி’ ஓட்டலுக்குப் போகாமல் ‘ஆரிய பவனு’க்கு வந்தார்கள்!
எனவே ஒவ்வொரு பசுக் காவலரும் பால் வற்றிப் போன நான்கு பசு மாட்டையாவது கட்டாயம் பாதுகாத்து ‘புண்ணியம்’ தேட வேண்டும்; மோட்சம் போகும் பசுக்களை அவர்களே தூக்கிப் போய் அடக்கம் செய்ய வேண்டும் என்ற ஒரு அவசர சட்டம் போட்டால் என்ன?
சவுகான் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதை பரிசீலிப்பாராக!
- கோடங்குடி மாரிமுத்து