அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமன் கோவில் உண்மையிலேயே இராமன் பிறந்த இடம் தான். இராமன் பிறந்த இடத்தில் தான் கோவில் கட்டியிருக்கிறோம். இராமன் தான் அங்கு பட்டாவோடு குடியிருக்கிறான் என்பதை மக்களிடம் நம்ப வைப்பதில் ஒன்றிய ஆட்சி தீவிரமாக இறங்கியிருக்கிறது. இராமர் சிலை மீது ராமநவமி நாளன்று சூரியக் கதிர்கள் விழப் போகிறது என்ற ஒரு செய்தியைப் பரப்பி வருகிறார்கள். அப்படி சூரியக் கதிர்களை விழும்படி செய்வதற்காக செயற்கையான கருவி ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆடிகள் என்று சொல்லப்படுகின்ற லென்சுகளைக் கொண்டு உருவாக்கப்படுகின்ற அந்தக் கருவியை வடிவமைக்கும் முயற்சியில் மத்திய ஆராய்ச்சி நிறுவனமும், மத்திய கட்டிட ஆராய்ச்சி மய்யமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சி கட்டாயப்படுத்தியுள்ளது.
இதற்கான அறிவியல் தகவல்களை அளிப்பதற்காக இந்திய வானியல் நிறுவனமும், அயுக்கா என்ற வானியல் நிறுவனமும் ஈடுபட வேண்டும் என்றும் ஒன்றிய ஆட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. இப்படி சிலைகளின் மீது சூரிய ஒளி விழுவது என்பது கடவுள் சக்தியோ, அபூர்வ சக்தியோ அல்ல. அது ஒரு கட்டிடக்கலை. பல கோவில்கள் இப்படி ஒளி விழும்படி கடந்த காலங்களில் கட்டப்பட்டிருக்கிறது. அதன்படி சூரிய ஒளியும் விழுந்து கொண்டு தான் இருக்கிறது. அதை வைத்து மக்களிடம், கடவுளுக்கு ஒரு சக்தி இருக்கிறது என்று அறிவியலுக்கு எதிரான கருத்துக்களை நம்ப வைக்கிற முயற்சியில் ஆன்மிகவாதிகள் என்று கூறிக் கொள்கிற போலி அறிவியல்வாதிகள் உருவாக்கிக் கொண்டு வருகிறார்கள்.
ஒரு குறிப்பிட நேரத்தில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் சூரிய ஒளி எந்த கோணத்தில் விழும் என்பதை கணக்கில் கொண்டு மேற்கூரையில் துளை செய்தால் சூரிய ஒளி அந்த சிலையின் மீது விழுந்துவிடும். இது தான் அதில் அடங்கியிருக்கும் விஞ்ஞானம். உத்ராயணம், தட்சணாயனம் என்ற சூரிய உதயத்தோடு தொடர்புள்ள நிகழ்ச்சி இது. இதே போல்தான் சபரிமலையிலும் மகர ஜோதி என்ற ஒரு ஜோதி தரிசனம், மோசடியாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. அய்யப்பன் ஜோதியாக தோற்றமளிக்கிறான் என்று பக்தர்கள் கூடி அந்த மகர ஜோதியை வணங்குகிறார்கள். உண்மையில் இரண்டு மலைகளுக்கு இடையே ஏராளமான கற்பூரங்களைப் போட்டு எரித்து அப்படி ஒரு ஜோதியை உருவாக்குகிற முயற்சியில் கேரளாவைச் சேர்ந்த மின்சார வாரியத்தைச் சேர்ந்த ஊழியர்கள் காலம் காலமாக ஈடுபட்டு வருகிறார்கள். இது தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட உண்மை.
அறிவியலை வைத்து மூட நம்பிக்கையையும், கடவுள் நம்பிக்கையையும் பரப்புவது தான் இந்த நாட்டின் ஆன்மிகமாக மாறிப் போய் இருக்கிறது. அதை ஒன்றிய ஆட்சியே செய்து கொண்டிருப்பது என்பது வெட்கக் கேடான ஒன்று.
- விடுதலை இராசேந்திரன்