மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. ஆட்சி மறுத்து விட்டது. சென்னை உயர்நீதிமன்றம் இடஒதுக்கீட்டை வழங்கக் கோரியது. மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம் சென்று இவ்வாண்டு இடஒதுக்கீட்டை நிறுத்தி விட்டார்கள்.

இப்போது பல் மருத்துவ மேல் பட்டப் படிப்பிலும் அகில இந்திய கோட்டாவின் கீழ் மாநிலங்களிடமிருந்து பறிக்கப்படும் இடங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு இல்லை என்று சேர்க்கைக்கான விளக்க ஏட்டில் அறிவித்து விட்டது.

தமிழ்நாட்டில் 16 பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் மேல் பட்டப் படிப்புக்கான இடங்கள் 310. இதில் 155 இடங்களை அகில இந்திய கோட்டாவாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி எடுத்துக் கொண்டு விட்டது.

ஓ.பி.சி. இட ஒதுக்கீட்டின்படி 77 இடங்கள் கிடைத்திருக்க

வேண்டும். இந்த இடஒதுக்கீடு இல்லை என்று இப்போது அறிவித்து விட்டார்கள். 

                              ***

வினா - விடை

• அ.இ.அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி தொடரும் என்று அரசு விழாவில் துணை முதல்வர் அறிவிப்பு. - செய்தி

அதோடு நிறுத்துங்க... கூட்டணிக்கு விதிகளை உருவாக்கி அரசு கெசட்டில் வெளியிட்டு விடாதீங்க!

• ‘ஆன் லைன் ரம்மி’ சூதாட்டம் தடை; அரசு சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல். - செய்தி

ரொம்ப மகிழ்ச்சி. ஆளுநர் நடத்தும் ‘கோப்பு சூதாட்டத்துக்கு’ தடை போட யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்?

• அமீத்ஷா வந்த பிறகு பாருங்கள்; அரசியல் புயல் வீசப் போகிறது. - பா.ஜ.க.வினர் பேச்சு

அரசியல் புயல் எதையும் காணோம்; அசல் புயல் ‘நிவர்’ தான் வீசுகிறது.

• அயோத்தி கோயில் இராமன் சிலை மீது சூரிய ஒளி விழும் வகையில் கட்டப்படும். - பிரதமர் மோடி

சிலைக்கு அருகே ஒரு தொட்டிலையும் கட்டி விடுங்க. இதிலே இராமன் அழுது கொண்டே பிறந்தான் என்று ‘வரலாறு’ எழுதி விடலாம்.

- விடுதலை இராசேந்திரன்

 

Pin It