ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரவர்களை மதுரை பொதுமக்கள் பகிரங்கமாகத் திறந்தவெளியில் பேசுவதற்கில்லாமல் செய்துவிட்டதின் பலனாய், ஒரு கட்டடத்திற்குள் பேச நேரிட்டு அதை ஸ்ரீமான் அய்யங்கார் பொதுமக்கள் நிறைந்த கூட்டமல்லவென்றும், ஆதலின் அங்கு என்ன வேண்டுமானாலும் பேசலாமென்று நினைத்துப் பேசி இருப்பதாகத் தெரிகிறது. அவ் விஷயத்தைப் பொது ஜனங்கள் சரியாய் அறிந்துகொள்ளக்கூடாதவாறும், தந்திரமாய் ஜனங்களை ஏமாற்றத்தக்க மாதிரியாயும், தேசீயப் பத்திரிகையென்ற போர்வையைப் போர்த்துக்கொண்டிருக்கும் சுதேசமித்திரன் என்னும் பிராமணப் பத்திரிகை கீழ்க்கண்டவாறு பிரசுரித்திருக்கிறது.

ஸ்ரீமான் அய்யங்கார் பிரசங்கத்தின் சாராம்சமாவது:- “பெஜவாடாவில் கூடிய சென்ற காங்கிரஸில் எல்லா ஸ்தாபனங்களையும் காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சியினர்...... மகாத்மா காந்தியும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆகவே, எதிரிகளின் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு மோசம் போகாதீர்கள். அவர்கள் நமக்குள் கட்சிகளை உண்டாக்கப் பலவிதங்களிலும் வழி தேடுவார்கள். அதற்கு நீங்கள் கவலைப்படவாவது கவனஞ்செலுத்தவாவது கூடாது” என்று பேசியிருக்கிறார். இவற்றில், முதல் வாக்கியத்தில் நிருபர் ஏதாவது இரண்டொரு வார்த்தைகளை விட்டு விட்டாரோ, அல்லது அங்குள்ள மீதி வாக்கியங்களை பிரசுரித்தால், பின்னர் ருசு செய்யவேண்டிய பொறுப்பு ஸ்ரீமான் அய்யங்காருக்கு ஏற்பட்டுவிடுமே யென்று நினைத்து, அவரைத் தப்புவிக்க மற்ற வார்த்தைகள் விட்டுவிடப் பட்டனவோ, அல்லது ஸ்ரீமான் அய்யங்காரவர்களே அந்த இடத்தில் “பெஜவாடாவில் கூடிய சென்ற காங்கிரஸில் எல்லா ஸ்தாபனங்களையும் காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியினர்” என்று பேசி, பிறகு பொருளில்லாது எதையாவது மெதுவாய்ச் சொல்லி, “மகாத்மா காந்தியும் இதை ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்று பலமாய் சொல்லி இருக்கவேண்டும்.

எப்படி இருந்தாலும், நாம் ஏதோ அங்கு சில வார்த்தைகள் விட்டுப்போனதாகவே நினைத்துக் கொண்டு அங்கு என்ன வார்த்தைகள் இருந்திருக்கலாம் என்று யூகித்துப்பார்த்தால் “காங்கிரஸ் சுயராஜ்யக்கட்சியினர் கைப்பற்றவேண்டும் என்று ஓர் தீர்மானம் நிறைவேறி யிருக்கிறது. இதை மகாத்மா காந்தியும் ஒப்புக்கொண்டிருக்கிறார்” என்றுதான் பேசியிருக்கவேண்டும். அப்படியில்லாமல், வேறு என்ன வார்த்தைகள் அங்கிருந்த போதிலும், “எதிரிகளின் பொய்யான வார்த்தைகளைக் கேட்டு மோசம் போகாதீர்கள்” எனச் சொல்லியிருக்கவேண்டுவதில்லை. அப்படி யானால் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காராவது அல்லது அவரது நண்பர்களாவது பெஜவாடா காங்கிரஸில் எந்தத் தீர்மானத்தில் ‘காங்கிரஸ் சுயராஜ்யக் கட்சியினர் எல்லா ஸ்தாபனங்களையும் கைப்பற்றவேண்டும்’ என்ற தீர்மான மாயிற்று என்கிற விபரத்தை தெரிவிக்க விரும்புகிறோம்.

நம்மைப் பொறுத்த அளவில் நாம் காங்கிரசுக்குச் சென்றிருந்தோம். இதைப்பற்றிய எவ்வித தீர்மானமும் காங்கிரஸில் நிறைவேறவில்லை என்பதைத் தெளிவாய்ச் சொல்லுகிறோம். அப்படியிருக்க பொறுப்புள்ள தலைவர்கள் என்று சொல்லப் படுபவர் இம்மாதிரி நடந்துகொள்வார் களேயானால், பொதுஜனங்கள் எப்படி மோசம் போகாமல் இருக்கமுடியும்? ஆகவே நாமும் ஸ்ரீமான் அய்யங்காரவர்கள் சொல்லிய கடைசி வாக்கியங்களின்படியே தலைவர்களென்று வரும் பிராமண எதிரிகளுடைய பொய்யான வார்த்தைகளைக்கேட்டு மோசம் போய்விடாதீர்கள். அவர்கள் நமக்குள் கட்சிகளைக் கிளப்ப பலவிதத்திலும் வழிதேடுவார்களென்றும், அதற்கு நீங்கள் கவலைப்படவாவது கவனஞ் செலுத்தவாவது கூடாது என்றும் பிராமணரல்லாதார்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 30.08.1925)
Pin It