கொஞ்ச நாளைக்கு முன்பு ‘சுதேசமித்திரன்’ ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து எழுதுகையில்,

“ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் நடந்து கொண்டுவரும் நடவடிக்கையையும் பேசிவரும் பேச்சையும் பார்த்தால் வெகு சீக்கிரத்தில் ஸ்ரீமான் நாயக்கர் சென்னை கவர்னர் வீட்டுக்கு கட்டித் தூக்கிக் கொண்டு போகப்படுவார் என்று தோன்றுகிறது” என்று எழுதி இருந்தது. அதாவது ஸ்ரீமான் நாயக்கர் சர்க்காருக்கு அவ்வளவு தூரம் நல்ல பிள்ளையாய் போய்விட்டதாகவும், சர்க்காருடன் சேர்ந்து விட்டதாகவும், இனி சர்க்காரையே ஆதரிப்பார் என்றும் ஜனங்கள் நினைக்கும்படியாக எழுதியிருந்தது. அது எழுதியதிலிருந்து நாயக்கரும் தனக்கு ஏதாவது சர்க்கார் “சன்மானம்” வரும் என்றே எதிர்பார்த்தார். கடசியாக அவர் பேரில் போடப்பட்டிருந்த இரகசியப் போலீசு கூட எடுபடாமல் இன்னமும் தொடருவதுடன் கலக்ட்டரும் போலீசாரும் கண்ணும் கருத்துமாயிருக்கிறார்கள்.

periyar and maniammai dk cadresஇது எப்படியோ இருக்கட்டும் ஆனால் சதா சர்வ காலம் சர்க்காரை தாக்குவதாக வேஷம் போட்டு பார்ப்பனரல்லாதாரை தாக்குவதாலேயே பார்ப்பனர்களால் தேசீயவீரர் என்று பெயர் பெற்று வயிறு வளர்க்கும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்களை இப்போது சர்க்காரார் கவர்னர் வீட்டுக்கு ஒரே தூக்காக தூக்கிக் கொண்டே போய்விட்டார்கள். அது மாத்திரமல்ல, கவர்னர் பிரபு வீட்டு வாசல் படியை காக்கும்படியும் செய்துவிட்டார்கள். கவர்னர் பிரபு வீடு மாத்திரமல்ல கவர்னர் ஜனரல் பிரபு வாயில் காக்கும்படியும் செய்தாய்விட்டது.

காரணம் என்ன? ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இந்த கவர்னர் பிரபுவின் ஆக்ஷி யோக்கியமானதாக இல்லை. பார்ப்பனர்களின் கைக்குழந்தையாய் இருக்கிறார், இவர் ஆக்ஷியில் நடைபெறாத அக்கிரமமே இல்லை என்றும், நாணையக் குறைவு என்பது இந்த கவர்னர் ஆக்ஷியில் தாண்டவம் ஆடுவதுபோல் வேறு எந்த ஆக்ஷியிலும் இல்லை என்றும் சொல்லி இவரை திருப்பி அழைத்துக் கொள்ள வேண்டும் என்பதாக கோவை மகாநாட்டில் ஒரு பிரேரேபணை பிரேரேபித்ததும், ஸ்ரீமான் சத்தியமூர்த்தி போன்றாரின் உதவியாலல்லாமல் கவர்னர் நிர்வாகம் நடைபெறமுடியாமல் போய்விட்டதால் கவர்னர் பிரபு வீட்டிற்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை மந்திரிமார்களும் சர்.சி.பி.யும் கட்டித்தூக்கிக்கொண்டு போக வேண்டியதாய் ஏற்பட்டுப் போய்விட்டது. பிறகு கவர்னர் பிரபு தன் வீட்டிலிருந்து ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை கவர்னர் ஜனரல் வீட்டுக்கு தூக்கிக்கொண்டு போய் போட வேண்டியதாய் ஏற்பட்டுவிட்டது.

அல்லாமலும் தற்காலம் நமது கவர்னரின் நல்ல நடவடிக்கைக்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி தான் நற்சாக்ஷி பத்திரமளிக்க வேண்டியதாய் விட்டது. அதற்காகவே வைசிராய் பிரபுவின் தரிசனமும் சத்தியமூர்த்திக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டியதாய்விட்டது. ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு வந்த புது வாழ்வே வாழ்வு! இதைக்கண்டு யாரும் பொறாமைப்படாமலும் இருக்க முடியாது. ஆனால்ஒரு விஷயம் :- சர்க்கார் வாசனையே கூடாது என்று வேஷம் போட்ட மைலாப்பூர் கோஷ்டிக்கு, சர்க்கார் சம்மந்தமான விருந்துகளுக்கு கூப்பிட்டாலும் போகக்கூடாது என்று கடும் பத்தியம் வைத்த சுயராஜ்ஜியக் கக்ஷிக்கு யேதோ ஒரு வெள்ளைக்கார சீமாட்டி விருந்துக்கு ஸ்ரீமான் ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் போய்விட்டு வந்ததால் “ஷண்முகம் செட்டியார் பத்தியம் தவறிவிட்டார்” என்று கத்தின சுயராஜ்ஜியக் கக்ஷி தலைவர்களுக்கு, ஆகிய இத்தனைக்கும் ஜீவாதாரமான ஸ்ரீமான் சத்தியமூர்த்தி - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியும் காங்கிரஸ் முட்டுக்கட்டை பிரிவு கக்ஷி உப தலைவரான சத்தியமூர்த்தி - கவர்னர் பிரபுவையும் வைசிராய் பிரபுவையும் பார்க்கப் போனதின் இரகசியம் தான் நமக்கு விளங்கவில்லை.

பார்ப்பனர்கள் தங்கள் காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம் என்பதை மாத்திரம் வாசகர்களுக்கு தெரிவிக்க இதை உபயோகித்து கொண்டோமே அல்லாமல் இதனால் தேசத்திற்கு நன்மையோ தீமையோ இருக்கிறதை காட்டுவதற்கு ஆக அல்ல. அன்றியும் கவர்னர் பிரபு வீட்டு வாசல்படி மிதித்த உடன் ஸ்ரீமான் சத்தியமூர்த்திக்கு பூர்வஞானம் வந்து விட்டதற்கும் ஒரு சிறு உதாரணம் காட்டிவிட்டு இதை முடிக்கிறோம்.

ஆதாவது, நீலகிரிமலையில் கவர்னர் பிரபுவை பார்த்துவிட்டு திரும்பினவுடன், மலையாளக் குடிவார மசோதா விஷயமாய் ஏற்படுத்திய சர்க்கார் கமிட்டியை பகிஷ்கரிக்க வேண்டும் என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கையில், தானும் கூட இருந்து நிறைவேற்றிய மலையாளக் குடிவார மசோதாவை சர்.சி.பி. அய்யர் கவர்னரைக் கொண்டு நிராகரிக்கச் செய்து விட்டாரே என்கிற சொரணை இல்லாமல், “சர் சி.பி. மலையாள ஜன்மிகளுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகிற விஷயத்தில் கவலை எடுத்துக் கொண்டு அக்கமிட்டியை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று சொல்லுவதும், “தக்க மெஜாரிட்டி இருந்தால் மந்திரி வேலைகளை ஒப்புக் கொண்டு இரட்டை ஆக்ஷியை நடத்திப் பார்க்கலாம்” என்று சொல்லுவதும் முதலான எவ்வளவு புதிய ஞானம் உண்டாயிருக்கிறது என்பதை வாசகர்கள் தான் அறிந்து கொள்ள வேண்டும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 07.08.1927)

Pin It