‘தீண்டாமை சட்டப்படி குற்றம்’ என்ற முழக்கங்கள் அரசுகளால் விளம்பரம் செய்யப்படுகின்றன. அந்தத் தீண்டாமை தேனீர்க் கடைகளில், முடிதிருத்தகங்களில், பொதுக் கோயில்களில், சுடுகாட்டில், இன்றும் தலைவிரித்தாடிக் கொண்டிருப்பதை மட்டும், அரசுகள் பார்க்க மறுக்கின்றன. குறிப்பாக, பெரியாரியத்தின் கொள்கைத் தாக்கம் நிறைந்த தமிழ்நாட்டில், இந்த அநீதி உயிர்த் துடிப்புடன் இருப்பது, மிகப் பெரும் அவலம்!

காவல்துறையில் தீண்டாமைக் குற்றங்களுக்காக தனிப்பிரிவுகள் இருக்கின்றன. கிராமங்களில் தீண்டாமையைத் திணிப்போர் மீது கண்டிப்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய இந்தத் துறை, இதில் ‘கண்டும் காணாத’ போக்கை பின்பற்றுவதற்கு என்ன காரணம்? இந்தத் துறையில் உள்ள பல காவல்துறையினரே - சாதிய உணர்வுடன் இருப்பதும், ஆட்சியாளர்களும் இதில் தீவிர கவனம் செலுத்தாமையும் தான்!

‘இரட்டைக் குவளையை’ வைத்துக் கொண்டிருக்கும் தேனீர்க் கடைகளின் பட்டியலை, கிராமம் கிராமமாகச் சென்று பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள்தான் தயாரித்தனர். அதை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்ட பிறகுதான், காவல்துறை, பட்டியலைப் பெற்று நடவடிக்கைகளில் இறங்கியது. அதற்குப் பிறகும், ‘இரட்டைக் குவளை’யை ஒழிக்க மாட்டோம் என்று சட்டத்துக்கு சவால் விடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை, சட்டத்தை அமுல்படுத்தக்கோரும், கழகத்தினரைக் கைது செய்கிறது.

இதன் மூலம் காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்புப் பிரிவு”, ‘தீண்டாமை பாதுகாப்புப் பிரிவாக’ தன்னை வெட்கமின்றி அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தீண்டாமையை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வந்து, இந்தியாவுக்கே, தமிழ்நாடு வழிகாட்டுகிறது என்ற நிலையை உருவாக்குவதுதான் தமிழ்நாட்டில் பெரியார் - அண்ணா வழி ஆட்சி நடக்கிறது என்பதற்கான சரியான அடையாளமாக இருக்க முடியும்.

சேலம் கந்தம்பட்டி திரவுபதி அம்மன் கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவுப் போராட்டம் நடக்க இருந்ததையொட்டி, இப்போது கோயிலை பூட்டி, ‘சீல்’ வைத்துவிட்டார்கள். கோயில் பூட்டப்பட்டுக் கிடக்கும் ஒவ்வொரு நாளும் தீண்டாமையைப் பறைசாற்றும் நாள்தான்! இதற்காக, அரசு வெட்கப்பட வேண்டாமா?

திருவண்ணாமலையில் - தாமரைப்பாக்கம் அக்னீசுவரன் கோயில், பழனி வட்டம் ஆயக்குடியிலுள்ள காளியம்மன் கோயில், விருதுநகர் மாவட்டம் பவாலி கிராமத்திலுள்ள காமாட்சியம்மன் கோயில் ஆகிய கோயில்களில், தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவுப் போராட்டத்தை தமிழ்நாடு மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சி நடத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த மனித உரிமைப் போராட்டங்களை பெரியார் திராவிடர் கழகம் பாராட்டி வரவேற்கிறது!

இது ஏதோ தலித் மக்களுக்கான பிரச்சினையாகக் கருதி பிற இயக்கங்கள் ஒதுங்கி நிற்கக் கூடாது. இது சமூகத்தின் பிரச்சினை. குறிப்பாக தலித் அல்லாத, முற்போக்கு சிந்தனை கொண்ட ஒவ்வொருவருக்கும் இதில் முக்கிய பங்கும், கடமையும் இருக்கிறது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஒரு சில கிராமங்களில் கழகத்தின் போராட்டத்துக்கு எதிராக, ம.தி.மு.க., அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகளைச் சார்ந்தவர்களே சாதி வெறி சக்திகளுடன் கைகோர்த்து நிற்பதையும் நாம் வெட்கத்துடனும் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

தீண்டாமைக்கு எதிராக களம் புகுந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளது. பெரியார் திராவிடர் கழகம், இதற்காக விலை கொடுக்கத் தயாராகவே இருக்கிறது. ஆனால், தீண்டாமைக்கு உள்ளாகும் மக்கள் தரும் புகார்கள் மீது, வழக்குப் பதிவு செய்ய கடும் போராட்டமே நடத்த வேண்டியிருக்கிறது. பெரும்பாலான புகார்கள் பதிவுசெய்யப்படுவதே இல்லை. இதுதான் உண்மை நிலை. திண்டுக்கல் அருகே வாகரையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்களே இந்த கசப்பான அனுபவத்தை சந்தித்தார்கள்.

அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் அரசு நிதியிலிருந்து கட்டப்படும் சுடுகாடுகூட ‘தலித்’ சுடுகாடு - தலித் அல்லாதவர் சுடுகாடு என்று கட்டப்படுகிறது. ஆனைமலை ஒன்றியத்தில் பில்சின்னாம்பாளையம் பஞ்சாயத்தில் இப்படிக் கட்டப்பட்டிருக்கிறது. தீண்டாமைக்கு அரசே இப்படி துணை போகலாமா?

உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஏன் இந்தத் தீண்டாமையை எதிர்க்கவில்லை? தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், ‘தீண்டாமை’ எதிர்ப்பில் உண்மையான ஈடுபாடு இருந்தால், தங்களது தொகுதிக்குள் நடக்கும் இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தியிருக்க மாட்டார்களா? ‘ஜனநாயகம்’ என்ற பெயரில் ‘ஜாதி நாயகம்’ நடப்பதாகத் தானே இதற்கு அர்த்தம்?

தமிழ்நாட்டில் ‘பெரியார் ஆட்சி’யே நடக்கிறது என்று அரசுக்கு பாராட்டு பத்திரங்களை வழங்கிக் கொண்டு ‘தமிழர் தலைவர்’ தகுதி தனக்கு மட்டுமே உரியது என்று உரிமை கோரும் ‘வீரமணியார்கள்’ கண்களுக்கு - இந்த தலித் தமிழர்கள் பிரச்சனை தெரியாமல் போய்விட்டதா? ஆட்சிக்கு அவர்கள் அழுத்தம் தரக் கூடாதா? முதல்வருக்கு பாராட்டுகளைக் குவிப்பதற்கு மட்டும்தான் தெரியுமா?

தீண்டாமை வலியின் கொடுமை பாதிக்கப்பட்டவனுக்கு மட்டுமே புரியும்! தீண்டாமைக்கு எதிராக உறுதியாகக் களத்தில் நிற்கிறவர்கள்தான் - பார்ப்பன ஆதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் தார்மீக உரிமை பெற்றவர்கள்! ‘தீண்டாமையை’ எதிர்த்துப் போராடாமல், பார்ப்பன எதிர்ப்பை மட்டும் பேசுவது மற்றொரு ‘பார்ப்பனிய’மேயாகும். பெரியார் திராவிடர் கழகம் - இந்தப் பார்வையில் தனது போராட்டத்தைத் தொடருகிறது, தொடரும் மனித உரிமைப் போராட்டத்தில் களத்தில் இறங்கியிருக்கும் பெரியார் திராவிடர் கழகம் செயல் வீரர்களை பாராட்டுகிறோம், வாழ்த்துகிறோம்.