kovai ramakrishnan and pappammalதமிழ்நாட்டில் தலித் மக்களின் மீது நடக்கும் வன்கொடுமைகள் செய்தியாகி வெளியே பரவும் ஒவ்வொரு முறையும் இதுதான் பெரியார் மண்ணின் யோக்கியதையா, திராவிட இயக்கம் சாதித்தது இதுதானா என திராவிட இயக்கத்தின் மீதும், பெரியாரின் மீதும் காழ்ப்புணர்வு கொண்டவர்கள் விமர்சனம் என்ற நோக்கில் அவதூறு செய்வதுண்டு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பீகாரில் அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாம்களில் தங்கியுள்ள 5 பார்ப்பனர்கள் தலித் சமையல்காரர் சமைத்த உணவை உண்ண மறுத்துள்ளனர். இது வழக்கமாக 2000 ஆண்டுகளாக நாம் பார்க்கும் காட்சி தான். ஆனால் அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்னவெனில், அந்தப் பார்ப்பனர்களுக்கு மாற்று உணவு வழங்கப் பட்டதோடு மட்டுமின்றி, தனிச் சமையலுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இது போன்ற நிகழ்வுகள் இந்தியாவெங்கும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பதோடு மட்டுமல்லாமல், தலித் மக்களின் மீது சுமத்தப்படும் தீண்டாமைக் கொடுமையோ, வன்கொடுமையோ இந்து சமூகத்திற்குப் புதிதல்ல. சொல்லப் போனால் இந்தத் தீண்டாமையால் தான் இந்து சமூகம் இன்றும் நிலைபெற்றிருக்கிறது. இல்லையெனில் இந்து மதம் என்ற ஒன்று இதுவரை நிலை பெற்றிருக்காது.

கடந்த நூறு ஆண்டுகளில் இந்தத் தீண்டாமைக்கு எதிராக பல நடவடிக்கைகள், போராட்டங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. குறிப்பாக தமிழகத்தில் அந்தப் போராட்டங்களை முன்னின்று நடத்தியது திராவிட இயக்கம்.

1920களில் அன்றைய தமிழ் மாகாண காங்கிரஸ் நிதி உதவியின் கீழ் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் நடத்தப்பட்ட குருகுலத்தில் பார்ப்பன மாணவர்களுக்கு தனிப் பந்தியும், பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு தனிப் பந்தியும் நடைபெற்றது. இதைச் செய்தவர் அந்தப் பள்ளியின் பொறுப்பாளராக இருந்த வ.வே.சு ஐயர். அப்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்த தந்தை பெரியார் அவருடைய நண்பர் வரதராஜூலு நாயுடு போன்றோர் இதைக் கடுமையாக எதிர்த்தனர். தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியே வருவதற்கும் இந்த நிகழ்வு ஒரு முக்கிய காரணமாகும். சொல்லப் போனால் பெரியாரை, திராவிட இயக்கத்தை கட்டமைத்த ஒரு நிகழ்வாக அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது. தமிழகத்தின் ஜாதி ஒழிப்பு வரலாற்றில் இது ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது.

பின்னர் பல ஆண்டுகள் நீடாமங்கலம் என்ற ஊரில் நடந்த அரசியல் மாநாட்டில் ஆதி திராவிடத் தோழர்கள் சிலரை கடுமையாகத் தாக்கி, மொட்டை அடித்து, சாணிப்பால் ஊற்றினர் காங்கிரஸ் பொறுக்கிகள். இதைப் பெரியார் கண்டித்தார். அது பெரும் முக்கியத்துவத்தை பெற்ற நிகழ்வாக மாறியது.

சமகாலத்தில் நெல்லை மாவட்டம் முத்துச்சாமிபுரம் என்ற ஊரில் அமைந்துள்ள ஊராட்சிப் பள்ளியில் சமையல் உதவியாளராக ஒரு பட்டியல் இன பெண்ணைப் பணிக்கு அமர்த்தினார் அம் மாவட்ட ஆட்சியாளர். அந்த உத்தரவை நடைமுறைப்படுத்த அப்பள்ளியின் தாளாளர் மறுத்ததால் அந்தப் பெண் மீண்டும் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரை விசாரித்த ஆட்சியாளர் இந்த பணி நியமன உத்தரவை செயல்படுத்த வீட்டால் அந்தப் பள்ளியை மூட வேண்டியதிருக்கும் என கடுமையாக எச்சரித்து உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியாளர்.

அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்றார் அப்பள்ளியின் தாளாளர். அன்றைய காலகட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சந்துருவிடம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவ்வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு அந்த நியமனம் செல்லும் எனவும், அந்த நியமனத்தை அமல்படுத்த அப்பள்ளியின் தாளாளர் தவறும் பட்சத்தில் அப்பள்ளியை மாவட்ட நிர்வாகமே மேற்கொண்டு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

அதுமட்டுமின்றி, அந்த வழக்கின் தொடர்ச்சியாக, சமையல் அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணி நியமனத்தில் கடைபிடிக்கப் படாமல் இருந்த இட ஒதுக்கீடு முறையையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் சந்துரு. அந்த உத்தரவை பின்பற்றி அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் இப்பணிகளுக்கு பணி நியமனம் செய்யப்படும் போது இட ஒதுக்கீடு கட்டாயம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசு ஆணை உத்தரவிட்டார். இதன் மூலம் கிட்டத்தட்ட 25 ஆயிரம் தலித் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது. 

2018 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்துள்ள கவுண்டம்பாளையத்திள் உள்ள பள்ளியில் பாப்பம்மாள் என்ற தலித் பெண் சமையலராக நியமிக்கப் பட்டதால், அந்த ஊரைச் சார்ந்த உயர்ஜாதி தலித் அல்லாத மக்கள் அந்த நியமனத்தை எதிர்த்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினர். பாப்பம்மாளின் சொந்த ஊரும் கவுண்டம்பாளையம் தான். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக பாப்பம்மாளை சமையல் செய்ய விடாமலும் தடுத்தனர். இதன் தொடர்ச்சியாக அந்த மாவட்ட நிர்வாகம் பாப்பம்மாளை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்தது. இந்தச் செய்தி வெளியே வந்தவுடன் தமிழகமெங்கும் எதிர்க்குரலும் விமர்சனங்களும் போராட்டங்களும் எழும்பின. 

தந்தை பெரியார் திராவிடர் கழகம் உட்பட பல அமைப்புகள் களத்தில் குதித்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியது. கடுமையான எதிர்ப்பின் காரணமாக பணியிட மாற்றம் ரத்து செய்யப்பட்டு, தனது சொந்த ஊரான கவுண்டம்பாளையத்திற்கே திரும்பினார் பாப்பம்மாள்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் தோழர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், மருத்துவர் எழிலன் உட்பட பல தோழர்கள் நேரடியாக பாப்பம்மாள் வீட்டிற்குச் சென்று அவர் சமைத்த உணவை உண்டு பாப்பம்மாளுக்கு ஆதரவாக இருந்தனர்.

தமிழகமெங்கும் கிளம்பிய எதிர்க் குரல்களின் விளைவாக பணியிடம் மாற்றம் ரத்து செய்யப்பட்டதோடு மட்டுமின்றி, பாப்பம்மாளை சமைக்க விடாமல் எதிர்ப்பு தெரிவித்த கிட்டத்தட்ட 80 கிராமவாசிகளின் மீது வழக்கு தொடுத்து, அதில் குறிப்பிட்ட சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டது. 

இந்த சம்பவங்கள் தான் தமிழகத்தை நாம் ஏன் பெரியார் மண் என சொல்கிறோம் என்பதற்கு எடுத்துக்காட்டு.

இந்தியாவெங்கும் தலித் மக்களின் மீது தீண்டாமையும், வன்கொடுமையும் நடப்பது பொது ஒழுக்கமாக இருப்பினும், தமிழகத்தில் நடந்த அதுபோன்ற சம்பவங்கள் தான் தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி அமைத்தன.

மற்ற மாநிலங்களில் தலித் மக்களின் மீது ஏவப்படும் தீண்டாமையும், வன்கொடுமையும் ஒரு சாதாரண செய்தி. ஆனால் தமிழகத்தில் அது பெரும் போராட்டம். தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றக்கூடிய ஒரு பெரு நிகழ்வு.

எனவேதான் சொல்கிறோம் இதுதான் பெரியார் மண் என்று.

- சு.விஜயபாஸ்கர்

Pin It