வற்றாத ஜீவ நதி தங்கள் வாழ்க்கையை வற்ற வைக்கப் போகிறது எனத் தெரியாமல் 150 ரூ தினக்கூலி கேட்டுப் போராடியவர்கள் எல்லாம், தாமிரபரணியை நோக்கி ஓடி, தண்ணீர் குடித்தே செத்துப் போன நாள் இன்று ஜூலை 23.

tamirabharani massacre 1கூடுதலாக இரண்டு இட்லி சாப்பிடுவதற்காக 1988 ம் ஆண்டு போராடிப் பெற்றனர். காலையில் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு கிளம்புவதற்கு 10 நிமிடம் கூடுதலாக வேண்டும் என்பதை 1989ல் போராடிப் பெற்றார்கள். அதுபோலவே தினக்கூலியை 50லிருந்து, 150 ஆக தர வேண்டும் என்று திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் அருகே வந்து போராடினார்கள் மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள்.

வழிநடத்திய தலைவர்கள் சிலரும் தாக்கப்பட, பலர் கொக்கிரகுளம் சாலை மேலப்பாளையம் வழியே, தப்பித்துச் சென்று விட, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் தாமிரபரணித் தண்ணீரில் மூழ்கி இறந்தார்கள். தாகம் தீர்த்த அதே தாமிரபரணிதான் அவர்களின் உயிரையும் தீர்த்தது.

அவர்கள் கல்லெறிந்தார்கள் - பெண் போலிசாரைக் கிண்டலடித்தார்கள் என்று காரணம் சொல்லி, கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி நடத்தினார்கள் என்று அன்றைய திமுக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் கைகளில் கற்களுடனும், சவுக்கு கம்புகளுடனும், இருபுறமும் நின்று கொண்டு தண்ணீருக்குள் மக்களை தள்ளி மூழ்கடித்துக் கொல்லும் அளவுக்கா பொதுமக்களைத் தாக்க வேண்டும்?

திரு நாறும்பூநாதன் அவர்களின் முகநூல் பதிவில் இறந்தவர்களின் பெயர்களைப் பார்த்தேன்.

1. விக்னேஷ் (ஒன்றரை வயதுக் குழந்தை)
2. ரத்தினம்
3. சஞ்சீவி
4.ஷாநவாஸ்
5. குட்டி என்ற குமார்
6.இரத்தினமேரி
7. இன்னாசி மாணிக்கம்
8. ஜான் பூபாலராயன்
9. வேலாயுதம்
10.கெய்சர்
11. ஜெயசீலன்
12.அந்தோணி
13. முருகன்
14. ராஜி
15. ஜோசபின்
16. அப்துல்ரஹ்மான்
17. ஆறுமுகம்.

tamirabharani massacre 2இதில் குமார், சதக்கத்துல்லா அப்பா கல்லூரியில் என்னுடைய நண்பன். அமைதியான அப்பாவிப் பையன். அப்பா இல்லாத பையன். தினமும் சைக்கிளில் தான் கல்லூரிக்கு வருவான். கிண்டலடித்தால் புன்னகைத்து விட்டுச் செல்வானே தவிர கோபப்பட மாட்டான்.

கல்லூரிக் காலத்தை நான் ஞாபகப்படுத்திப் பார்த்தால் அவன் ஞாபகமெல்லாம் எனக்கு வரவே செய்யாது என்னும் அளவுக்குத்தான் வருவதும் போவதும் தெரியாமல் வந்து கொண்டிருந்தவன்.

ஜூலை 23, 1999ம் ஆண்டு மிக்சி ரிப்பேர் ஆனதை சரி செய்வதற்காக ஜங்ஷன் சென்றவன் இன்று வரை வீடு திரும்பவேயில்லை.இரவு வீட்டுக்கு வராதவனை விடிய விடியத் தேடியிருக்கின்றார்கள்.

மறுநாள் மருதூர் அணைப் பக்கத்தில், அழுகியபடி பிணமாய் ஒதுங்கிக் கிடந்திருக்கின்றான். அரசாங்க அதிகாரியாக ஆகியிருக்க வேண்டியவன், அரசாங்க அதிகாரிகளால் பிணமாக எடுத்துச் செல்லப்பட்டு, திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி சாலையில் உள்ள பொன்னாக்குடி ரோஸ்மேரி கல்லூரிப் பக்கம் உள்ள கண்டித்தான்குளத்தில் அநாதையைப் போல அவனை புதைத்து விட்டுத்தான் தகவல் சொல்லியிருக்கின்றார்கள்.

அன்று அவன் சுலோச்சனா பாலத்தைக் கடந்து வரும்பொழுதுதான் அந்தச் சம்பவம் நடந்திருக்கின்றது. பயந்து போய் ஓடினானா, இல்லை கரையில் இறங்கிவிட்டால் பாதுகாப்பாய் இருக்கும் என்று ஓடினானா, இல்லை போலீஸார்கள் இருக்கும் பக்கம் சென்றால் நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தானா? தெரியாது....

ஆனால் நீரில் மூழ்கி இறந்து விட்டான் என்று சொல்லியிருக்கின்றார்கள். கிணற்றில் விழுந்து குளித்த கிராமத்துக்காரனுக்கு நீச்சல் தெரியாதா என்ன?

அந்த வெகுளிப் பையனுக்குத் தெரியவில்லை, ஆற்றைக் கடக்க மட்டுமல்ல, சாலையைக் கடக்கவும் நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்று.

குமாரின் அண்ணன் வசந்த செல்வராஜ் சொல்லியதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் "மறக்கவே நினைக்கிறேன்" பகுதியில் குறிப்பிட்டிருப்பார்.

"நீங்களே சொல்லுங்க... அஞ்சு வயசுல ஆத்துக்குள்ள தள்ளிவிட்டு அவனுக்கு நீச்சல் கத்துக் கொடுத்த எங்க அம்மாகிட்ட போய், 'நம்ம குமாரு ஆத்துக்குள்ள இறங்கி ஓடும்போது நீச்சல் தெரியாம செத்துப் போயிட்டானாம்’னு என்னால சொல்ல முடியுமாப்பா? என் மூஞ்சில காறித் துப்பிராது அம்மா' "

தாமிரபரணியில் மூழ்கிக் கொண்டிருக்கும் அந்த கடைசி நொடியில் அவன் என்ன நினைத்திருப்பான்?

- ரசிகவ் ஞானியார்

Pin It