பெரியார் கருத்துகளை வீரியத்துடன் எடுத்துச் செல்கிறது - பெரியார் திராவிடர் கழகம் என்று வழக்குரைஞர் மோகன் ஈரோடு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த வரும், ஈரோடு மாவட்டக் கழகத் தோழர்கள் மீது தி.மு.க. அரசு தொடர்ந்துள்ள வழக்குகளுக்கு, கழக சார்பில் வாதாடி வருபவருமான வழக்கறிஞர் ப.பா. மோகன் ஆற்றிய உரை:

தோழர்களின் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில், பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கு தடை ஏற்படுத்தியமைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினேன். ஈரோடு டி.எஸ்.பி. நடராஜிடம் நாத்திகர்கள் ஊர்வலம் தொன்று தொட்டு நடக்கும் நடைமுறை என்பதை விளக்கினேன். இந்த மாதிரி ஊர்வலங்கள் ஒரு இயக்கம் சார்ந்தது அல்ல - மனிதனை மனிதனாக நடத்தும் போராட்டத்தின் ஒரு அம்சம்தான் - என்றேன், சிலர் மட்டுமல்ல ஆட்சியாளர்களே செய்ய வேண்டிய - ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையைத்தான் பெரியார் தி.க. தோழர்கள் செய்கிறார்கள் - என்பதை எல்லாம் காவல் அதிகாரிகளிடம் விளக்க வேண்டியிருந்தது.

பெரியார் திராவிடர் கழகம் ஒரு பரிணாம வளர்ச்சியாக உருப்பெற்று வருகிறது. பகுத்தறிவுக் கொள்கைகளை வீரியத்துடன் எடுத்துச் செல்லும் அமைப்பாக, புத்துணர்வூட்டும் அமைப்பாக வளர்ந்து வருவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால், பெரியார் கொள்கைகளை நாம் மேலும் ஆழமாகக் கொண்டு செல்ல வேண்டிய தேவையை ‘சிவாஜி’ திரைப்பட டிக்கெட் கோவையில் 500 ரூபாய்க்கு விற்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட தகவல் உணர்த்துகிறது. ஆளும் தி.மு.க. அரசு - தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்று - அதன் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு, அதன் காவல் அதிகாரிகள் நாத்திகர் விழா - ஊர்வலத்தையே புரிந்து கொள்ளாமல் நாம் விளக்கம் அளித்து புரிய வைக்கும் நிலையை, அனுமதி பெறும் நிலையை சகித்து கொள்ளவே முடியாது.

அரசியல் சாசனம் - சமய சார்பற்ற - சமநீதி - சம வாய்ப்பை மக்களுக்கு வழங்கக் கோருகிற. சட்டம் அனைவருக்கும் சமமாக அமையும் வழியை உறுதிப்படுத்துகிறது. ஆனால், நீதிமன்றம் தான் வகுத்த சட்டத்திற்கு முரணாக நடந்து கொள்கிறது. இந்தியாவில் உள்ள 3 சதவீத ஆதிக்கக் கூட்டம், சமூக-பொருளாதார, கலாச்சாரங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

பொருளாதார மண்டலம் வரத் தொடங்கியிருக்கிறது. 27 சதவீத இட ஒதுக்கீட்டை இந்திய உச்சநீதிமன்றமே கேலி செய்கிறது. இதற்காக ஒன்றல்ல நூறு பெரியார் இன்றும் தேவைப்படுகிறார். அந்த சமூக, கலாச்சாரப் போராட்டத்தில் தொடர்ந்து பெரியார் தி.க. தன்னை ஈடுபடுத்தியாக வேண்டும்.

பெரியார் தனி மனிதரல்ல, ஒரு இயக்கம்! மானமும், அறிவும் பெறப் போராடிய அந்த புரட்சியாளரை - மாபெரும் தலைவரின் சிலையை உடைத்தார்கள். அதனால், நடைபெற்ற நிகழ்வுகளுக்காக தோழர்கள் மீது வழக்குப் போட்டிக்கிறார்கள். ஆதிக்க சக்தியினரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு மாநில தி.மு.க. அரசு இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் போட்டிருக்கிறது.

எந்தக் கூட்டம் நம்மைக் காலங்காலமாக அடக்கி ஆண்டதோ, மதத்தின் பெயரால், மவுடீகத்தின் பெயரால் - அந்தக் கூட்டம் ஜனநாயகம் என்ற போர்வையில் நம்மை அடக்க நினைக்கிறது. ஆட்சி மாற்றத்தால் இவர்கள் மாறப் போவது இல்லை. சமூக அடித்தளத்தை மாற்ற இடதுசாரி - தமிழ் தேசிய சமூக அக்கறையுள்ள சக்திகள் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

ஈரோட்டில் மட்டுமல்ல, தஞ்சையில், பல்லடத்தில், மேட்டூரில், கோவையில் - நடைபெற்று வரும் இதுபோன்ற பகுத்தறிவு ஊர்வலங்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி முழு வீச்சில் நடைபெற வேண்டும் - இவ்வாறு வழக்குரைஞர் ப.பா. மோகன் பேசினார்.

இராம. இளங்கோவன்

பொதுக் கூட்டத்திற்கு, மாவட்டச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமை தாங்கினார். அவரது உரையில் தெரிவித்ததாவது:

“நீண்ட இடைவெளிக்குப் பின்பு பெரியார் மண்ணில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடைபெற்றிருக்கிறது. இப்படிப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியைத் தான் தந்தை பெரியார் 95 ஆண்டுகள் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று பரப்பினார். இதைச் செய்ய விடாமல் காவல் துறை தடுக்கிறது. இந்த மாவட்ட எஸ்.பி. ஒரு தமிழராக இருந்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா? எங்கோ வடநாட்டில் இருந்த பார்ப்பன அதிகாரிகளை இந்த அரசு நியமித்தது தான் இதற்குக் காரணம்.

பெரியார் சிலையை உடைத்ததற்காக, அதற்கான மூல பலத்தை ஆராய்ந்து, வெகுண்டெழுந்தோம். சாதி, மதத்தைக் கட்டவிழ்த்து ஒற்றுமையாக இருந்த தமிழர் கூட்டத்தைப் பிரித்து வேறுபடுத்தியது பார்ப்பனக் கூட்டம். அதற்கு ஆதாரமாக மூட நம்பிக்கையை விதைத்தது. அப்படிப்பட்ட கூட்டம் திட்டமிட்டு, “அர்ச்சுன் சம்பத்” என்ற பிற்படுத்தப்பட்ட தோழரைப் பயன்படுத்தி பெரியார் சிலையை உடைத்துக் குதூகலித்தார்கள்.
ஈரோட்டுக் கண்ணாடி அணிந்த எங்களுக்கு அந்த அம்பை எய்தவன் தெரிந்தான்! ஈரோட்டில் 2 இடங்களிலும் தமிழகத்திலும் பல பகுதிகளில் எதிர்வினைகள் நடந்தன.

தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட 42 பேர் மீதும் வழக்கு. இதில் 7 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம். அதில் 4 பேர் ஈரோடு மாவட்டத் தோழர்கள். எங்களைக் கைது செய்தபோது, மாவட்ட காவல்துறை அதிகாரி உடனடியாக தேசிய பாதுகாப்புச் சட்டத்திற்கு பரிந்துரை செய்தார். அதை அப்படியே மாவட்ட ஆட்சியருக்கு அனுப்புகிறார்.

நாங்கள், டெல்லியில் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ப்பன மாணவர்களின் அட்டகாசம் பொறுக்க முடியாமல் ஈரோட்டில் அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவி எரித்தபோது அன்று பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உதயகுமார் என்பவர் எங்களை கடுமையாகத் திட்டி வாக்குவாதம் செய்தார். எங்களைக் கைது செய்தார்.

அவரே, ஈரோடு சிலை உடைப்புச் சம்பவத்தையொட்டி எங்களைக் கைது செய்த போதும், தரக்குறைவாகப் பேசியதுடன் சிறீரங்கத்தில் பெரியார் சிலையை உடைத்தால் அங்கு போய்ச் செய்வதுதானே - ஈரோட்டில் ஏன் செய்கிறீர்கள் என்றும் பேசினார். பெரியார் சிலை எங்கு உடைக்கப்பட்டாலும், எங்கும் அதற்கு எதிர்வினை நடக்கும். காவல்துறை அதிகாரிகளின் பதவியும், காக்கிச் சட்டையும் பெரியார் போட்ட பிச்சை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

பக்தர்கள் 25 அடி நீள வேலை எடுத்து அலகுக்குத்திக் கொண்டு சாலையையே அடைத்துக் கொண்டு, சாமியாடிக் கொண்டு ஊர்வலம் செல்கிறார்களே அதற்கு அனுமதி பெறுகிறார்களா? ரோட்டுக்கு மேல் ஒரு மைல் நீளப் பந்தல் போடுகிறார்களே யாரிடம் அனுமதி பெறுகிறார்கள்? பக்தி என்ற பெயரில் இவைகளையெல்லாம் அனுமதிக்கும் காவல்துறை - நாத்திகப் பிரச்சாரத்திற்கும், கடவுள் மறுப்புக்கும், சட்ட ரீதியாக சம உரிமையை வழங்க வேண்டும். எங்களை மறுப்பது, தடுப்பது - அரசு ஆணையை, சட்டத்தை மீறுவதாகும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்” என்றார்.

புலி பாண்டியன் (மாவட்ட அமைப்பாளர், சாதி ஒழிப்பு பொதுவுடைமை முன்னணி)

50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் எடுத்த சாதி ஒழிப்புத் திட்டத்தை பெரியார் திராவிடர் கழகம் முன் வைப்பதற்கு மிகுந்த மகிழ்வடைகிறோம். பெரியார் சிலை உடைப்பு எதிர்வினைப் போராட்டத்திற்கு எங்கள் அமைப்புத் தோழர்கள் உட்பட 22பேர் சிறை சென்றனர். மக்கள் திரள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெரியாரியலை முழுமையாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு சாதி ஒழிப்பு பொதுவுடைமை முன்னணி என்றும் துணை நிற்கும்.

மு. மோகன் ராஜ் (மாவட்டச் செயலாளர் - தமிழ் தேசிய விடுதலை இயக்கம்)

எமது இனத்தைக் கேவலப்படுத்தியது இந்துமதம் மட்டுமே. அதனால் தான் அதைத் தாக்குகிறோம். தமிழக மண்ணில் பெரியார் சிலைக்கும், பெரியாரியலுக்கும் சேதம் ஏற்படுத்திய யாரையும் நாங்கள் விடத் தயாராக இல்லை. பெரியார் தி.க.வினர் இந்தப் போராட்டத்திற்கு தமிழ் தேச விடுதலை இயக்கம் துணையாக இருக்கும்.

வி. இளங்கோ (வழக்குரைஞர்)

பெரியார் கொள்கையாளர்கள் பாராட்டை எதிர்பார்த்து எதையும் செய்வதில்லை. நாங்கள் எங்கள் கடமையைத் தான் செய்தோம். சற்று வேகத்தை அதிகப்படுத்தினோம் அவ்வளவு தான் - என்று வழக்குரைஞர் இளங்கோ குறிப்பிட்டார். அவரது உரை :

“பெரியார் சிலை உடைப்பின் எதிர்வினையாக நடந்த நிகழ்வாக பூணூல் அறுத்தது, சிலையை உடைத்தது போன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டு, இதனால் இந்தியாவின் பொது அமைதி, பாதுகாப்பு குலைந்து, இந்தியாவின் பொது ஒழுங்கு பாதிக்கும் வகையில் ஈடுபட்டதாகக் கூறி தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க காவல்துறை பரிந்துரைத்திருக்கிறது. இது முன் கூட்டியே திட்டமிடப்பட்ட காவல்துறையின் செயல்.” கழக ஆட்சிக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் துரைசாமி தோழர்களுக்காக, உயர்நீதி மன்றத்தில் வாதாடி, வெற்றி பெற்றார்.

தேசிய பாதுகாப்புச் சட்டத்திலுள்ள பிரிவு 3-ல் இந்த வழக்கு வருகிறதா என்றால், இந்திய தேசியப் பாதுகாப்புக்கு எதிராக, ராணுவத்திற்கு எதிராக, இந்தியாவைப் பங்கப்படுத்துவதற்கு எதிராகச் செயல்படும்போதுதான் இந்தப் பிரிவின் கீழ் வரும். இந்த சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறை அறிவித்திருக்கிறது. ஆவணங்களை சரிவரப் பார்க்காமல் காவல்துறை அதிகாரி சொல்வதை, அரசு அதிகாரி கேட்பதால் இப்படி நடந்து இறுதியில் உயர்நீதிமன்றம், “மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விழிப்புணர்வு கிடையாது” - என்று கண்டனம் தெரிவிக்கும் நிலை உருவாகியிருக்கிறது.

உயர்நீதி மன்றத்தில், இந்த வழக்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருமா, இதில் குறிப்பிட்டுள்ள செயல்கள் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வருமா? தேசியப் பாதுகாப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்ற மூன்று வாதங்களையும் வைத்தோம். நல்ல தீர்ப்புக் கிடைத்தது.

நியாயமாகப் பார்த்தால் சுப்பிரமணியசாமி மீதும், இராம. கோபாலன் மீதும் தான் தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய வேண்டும். இந்தியாவின் பொருளாதாரத்தையே மாற்றக்கூடிய, சேது சமுத்திரத் திட்டத்தை, இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் அடிக்கடி வழக்குகள் போட்டு தொந்தரவு செய்துவரும் இவர்கள் தான் - தேச விரோதிகள்! இவர்கள் மீதுதான் இந்தச் சட்டம் பாய வேண்டும்!

இல்லாத பாலத்தை வைத்து பிரச்சினை செய்து வரும் இவர்களை விட்டு விட்டு, காட்டுக்குச் சென்ற தனது மனைவியை சந்தேகப்பட்டு தீயில் இறங்கச் சொன்ன அயோக்கிய இராமனின் சிலையை உடைத்ததாக தோழர்கள் மீது வழக்குப் போட்டிருக் கிறார்கள். - இவ்வாறு உரையாற்றினார்.

வழக்குரைஞர் பாவேந்தன் (அமைப்பாளர் தமிழ் தேசிய வழக்குரைஞர் நடுவம்)

“தமிழுக்காக, பெரியாரியலுக்காகப் போராடுபவர்களை தீவிரவாதிகள் என்று கொச்சைப்படுத்துகிறார்கள். இந்தியாவைப் பாதுகாக்க பெரியார் தொண்டர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைப் போடுகிறார்கள். வரலாற்றில் இந்தியா என்ற தேசமே இருந்ததில்லை. நாம் தமிழர்கள்! தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள். பொது மொழி,பொது எல்லையை - தமிழ் தேச எல்லையைக் கொண்டவர்கள். நம் தேசத்தை நாம்தான் பாதுகாக்க வேண்டும். அது நம்மால் மட்டுமே முடியும். நம்தேச இறையாண்மையைத் தீர்மானிக்கும் சக்தியாக நாம் உருவாக வேண்டும்.

முல்லைப் பெரியாறு, பாலாறு, காவிரிப் பிரச்சினைகளில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. நரிமணம் பெட்ரோல், நெய்வேலி நிலக்கரி இவை மூலம் தமிழ்நாடு கொள்ளையடிக்கப்படுகிறது. நமக்கான அரசை நாம் உருவாக்க பெரியார் தேவைப்படுகிறார்.

தோழமை அமைப்பினருக்குப் பாராட்டு!

கழகத் தோழர்களை சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு செய்து போராட்டம் நடத்தி, அதனால் சிறைச் சென்ற தோழமை அமைப்புகளைச் சேர்ந்த மு. மோகன்ராஜ் (தமிழ் தேசிய விடுதலை இயக்கம்), புலி. பாண்டியன் (சாதி ஒழிப்பு பொதுவுடைமை முன்னணி), வெ. இளங்கோ (தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி) மற்றும் வழக்குரைஞர்கள் - வி. இளங்கோவன் (சென்னை), எம். செந்தில் குமார் (சென்னை), ப.பா. மோகன் (பவானி), பாவேந்தன் (ஈரோடு), ஜெ. ஜெயராஜ் (ஈரோடு) - ஆகியோருக்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி, துணைத் தலைவர் கா.சு.வேலுச்சாமி, கழகத் தலைவர் ஆகியோரும் உரையாற்றினர். முன்னதாக “சமர்பா” கலைக்குழுவின் எழுச்சி இன்னிசை நடைபெற்றது. நிறைவாக சதுமுகை பழனிசாமி நன்றி கூறினார்.

தொகுப்பு: தமிழ்த்தேனி