லோகு அய்யப்பன் உள்ளிட்ட 3 தோழர்கள் பொய் வழக்கில் கைது

புதுவையில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக அமைதி வழியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியவர்கள் மீது காங்கிரசார் புகுந்து வன்முறையில் ஈடுபட்டதைத்தொடர்ந்து பெரும் பதட்டம் உருவாகியுள்ளது. புதுவையில் அக்.31 அன்று முருகம்பாக்கம் பகுதியிலுள்ள தமிழ் அமைப்பைச் சார்ந்தவர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை காவல்துறையின் அனுமதியுடன் நடத்தினர். போராட்டம் நடக்க இருப்பதை அறிந்த இளைஞர் காங்கிரசைச் சார்ந்த பாண்டியன் என்ற நபர், உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த விடமாட்டோம் என்று பத்திரிகையில் அறிக்கைவிட்டதோடு, போராட்டம் நடத்தும் இடத்துக்கே வந்து, வன்முறையில் இறங்கினார். போராட்டத்தை ஆதரித்துப் பேசிக் கொண்டிருந்த தமிழ் தேசிய இயக்கத்தைச் சார்ந்த அழகிரியைத் தாக்கினர். காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

செய்தியறிந்த பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள், கழகத் தலைவர் லோகு அய்யப்பன் தலைமையில் சம்பவம் நடந்த இடத் துக்கு விரைந்து அனுமதி பெற்று நிகழும் உண்ணா விரத்தில் கலவரம் செய்வதைக் கண்டித்தனர். விடுதலை சிறுத்தைகள் அமைப்பினரும் ஏராள மாகத் திரண்டனர். காவல்துறை, கழகத் தோழர்கள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் தமிழ் ஈழ ஆதர வாளர்கள் 80 பேரை கைது செய்தது. புதுவையில் காவல் துறையின் முறைகேடுகளை எதிர்த்து, லோகு அய்யப்பன், அம்பலப்படுத்தி வருவதாலும், தேங்காய் திட்டு துறைமுகத் திட்டத்தினால், மீனவர் வாழ்வுரிமை பாதிக்கப்படுவதால், மக்களோடு இணைந்து போராட்டத்தை நடத்தி வருவதாலும், புதுவை காவல்துறை லோகு அய்யப்பனை பழிவாங்கும் சந்தர்ப்பதை எதிர்நோக்கி இருந்தது.

வெங்கடசாமி என்ற காவல்துறை ஆய்வாளர், லோகு அய்யப்பனை தனிப்பட்ட முறையில் இழிவுபடுத்திப் பேசியதைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்க வந்த அனைவரும் கொதித்தெழுந்தனர். கைது செய்யப்பட்ட 80 தோழர்களில் லோகு அய்யப்பன் அழகிரி, ம.தி.மு.க.வைச் சார்ந்த சந்திரசேகர் ஆகியோரை தனிமைப்படுத்தி, பிணையில் வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, ஏனைய தோழர்கள் மீது பிணையில் வரக் கூடிய வழக்குகளைப் பதிவு செய்தனர். இதற்கு தோழர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, தங்களையும் பிணையில் வர முடியாத வழக்குகளில் கைது செய் என்று கூறி, காவல் நிலையத்தை விட்டு வெளியேற மறுத்தனர். இரவு முழுதும் பதட்டம் நீடித்தது. திட்டமிட்டபடி காவல்துறை 3 தோழர்கள் மீது மட்டும், பிணையில் வர முடியாத வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

காங்கிரஸ் கட்சியினரின் இந்த ஆணவம், தமிழின உணர்வாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது. தோழர்கள் லோகு. அய்யப்பன், அழகிரி, சந்திரசேகர் ஆகியோர் புதுவை சிறையில் அடைக்கப்பட்டனர். 77 தோழர்கள் பிணையில் நவம்பர் 3 ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டுள்ளனர். விடுதலையான தோழர்களை வரவேற்க பெரும் கூட்டம் கூடியது.

500க்கும் மேற்பட்ட தோழர்கள் அங்கிருந்து ஊர்வலமாக ஈழத் தமிழர்களுக்கு ஆதர வாகவும், துரோக காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராகவும் முழக்கமிட்டு வந்தனர். பெரியார், அம்பேத்கர், சிங்காரவேலர், சிலைக்கு மாலை அணிவித்தனர். மாவட்ட காவல்துறை அதிகாரியான சிவதாசு என்ற மலையாள அதிகாரி தேங்காய் திட்டு துறைமுகத் திட்டத்துக்கு கழகம் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் கழகத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார் என்று புதுவை கழகத் தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.

Pin It