குண்டுவெடிப்பு என்றாலே, உடனே இசுலாமியர்களை குற்றவாளிகளாக்கிடும் உளவியலை பார்ப்பனர்களும், ஊடகங்களும், சங்பரிவார்களும் கட்டமைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர் என்றே கூறலாம். இதில் உளவுத் துறையின் பங்கையும் குறைத்து மதிப்பிட முடியாது. மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகாவ்ன் எனும் ஊரில் தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நடந்து வருகின்றன.
2006 ஆம் ஆண்டில் இசுலாமியர் வாழும் பகுதிகளிலும், மசூதி கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். உடனே காவல்துறை இசுலாமிய மாணவர் அமைப்பான ‘சிமி’ அமைப்பைச் சார்ந்தவர்களைக் கைது செய்தது. இப்போது, கடந்த செப்.29 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் 6 பேர் இறந்துள்ளனர். 30 பேர் காயமடைந்தனர். ஆனால் இம்முறை குண்டு வைத்தது ‘இந்து’ பயங்கரவாத அமைப்பு என்பதை காவல்துறை கண்டறிந்துள்ளது.
சாத்வீ பூர்ண கேத்னானந்த் சிங் கிரி என்ற இந்து பெண் தீவிரவாதி (வயது 38) கைது செய்யப்பட்டுள்ளார். 18 ஆண்டு காலம் பா.ஜ.க. மாணவர் பிரிவான அகில இந்திய வித்யார்த்தி பரிஷத்திலும் அதைத் தொடர்ந்து விசுவ இந்து பரிஷத்திலும் பொறுப்பில் இருந்த இவர், இரு வருடம் முன்பு கன்னியாஸ்திரி ஆனார்.
மாலே காவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்திலும் மொடாசா எனும் ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்து, 16 வயது சிறுவன் இறந்துள்ளான். 10 பேர் காயமடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கும், இந்த பயங்கரவாத கும்பலான சாத்வி குழுவினரே காரணமாக இருக்கலாம் என்று காவல்துறை கருதுகிறது. இந்த இரண்டு குண்டு வெடிப்புகளிலும் மிகவும் சக்தி வாய்ந்த ‘ஆர்.டி.எக்ஸ்’ வெடி மருந்து பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முன்னாள் ராணுவத்தினர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கிய பயங்கரவாதிகள், இதே சங்பரிவார் கூட்டம் தான். ஆனால், இவர்கள் எல்லாம் ‘தேச பக்தர்களாக’ பார்ப்பனர்களால் மகுடம் சூட்டப்படுகிறார்கள். 2006 இல் மகாராஷ்டிராவில் நாத்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த லட்சுமண் - ராஜ் கொண்டாவார் எனும் பொறியாளர் வீட்டில் குண்டு வெடித்ததில், அவரது மகனும், மற்றொரு ஆர்.எஸ்.எஸ்.காரரும் இறந்ததோடு, காயமடைந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
பிறகு கைது செய்யப்பட்டார். அனைவரும் பல்வேறு ஊர்களைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள். ஆகஸ்டு 2008 இல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருந்தபோது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரண்டு ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் குண்டு வெடித்து இறந்தார்கள். (இத் தகவல்களை ‘குமுதம்’ கட்டுரையில் ஞாநி தொகுத்துத் தந்துள்ளார்)
தமிழ்நாட்டில் தென்காசியில் இந்து முன்னணி அலுவல கத்தில் குண்டு வெடித்தது. பிறகு குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தான் என்று காவல்துறை கண்டுபிடித்தது. முஸ்லீம்கள் மீது பழி போட்டு கலவரத்தை உருவாக்குவதே இதன் நோக்கம். ஈரோடு அருகே உள்ள சதுமுகை எனும் ஊரில் 2002 இல் இந்து முன்னணியினரே இந்து கடவுள் சிலைகளை உடைத்துவிட்டு, பெரியார் திராவிடர் கழகத்தினர் மீது காவல்துறையில் புகார் தந்தனர். விசாரணையில் இந்து முன்னணியைச் சார்ந்த இருவர் தான் இதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
ஆனால், இஸ்லாமிய மாணவர் அமைப்பான ‘சிமி’யை பயங்கரவாத அமைப்பாக பார்ப்பன ஊடகங்களும், சங் பரிவார்களும், உளவு நிறுவனங்களும் சித்தரித்து, பல்வேறு குணடு வெடிப்பு வழக்குகளை ‘சிமி’ அமைப்பின் மீது போட்டு, கைது செய்து, சித்திரவதை செய்து வருகின்றனர். கைது செய்தவர்களை சித்திரவதை செய்து, ஒப்புதல் மூலம் வாங்கி, அதை ஒன்றையே ஆதாரமாக்கி குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படுகின்றன. ‘டெகல்கா’
வார ஏடு (ஆகஸ்ட் 23, 2008) இந்த உண்மைகளை அம்பலப்படுத்தியிருக்கிறது. ‘சிமி’ தடை செய்யப்பட்டு விட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் - விசுவ இந்து பரிஷத் அமைப்புகள் சுதந்திரமாக உலவி வருகின்றன. இவற்றுக்கு தடை போட வேண்டும் என்ற கோரிக்கைகள் கூட முன் வைக்கப்படுவதில்லை.
தாயகத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று சித்தரிக்கும் ஜெயலலிதா உள்ளிட்ட பார்ப்பன சக்திகள், இந்து பயங்கரவாதத்தை மட்டும் எதிர்ப்பதில்லை. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்ட காலத்தில் தமிழ்நாட்டில் அவர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தவர், அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தான்.
எத்தனை காலத்துக்குத்தான் உண்மைகளை மறைக்க முடியும். உண்மைகள் வெளிவரத் தொடங்கி விட்டன. பார்ப்பன பயங்கரவாத சக்திகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். கடவுள் மதத்தின் பெயரால் சமூகத்தைக் கூறு போட்டு, ரத்த ஆறை ஓடவிடும் இந்த பயங்கரவாதிகள் தான் உண்மையான தேச விரோதிகள்.