தனி மனிதனின் வாழ்வு அவன் செயலை மட்டும் பொறுத்ததல்ல. அவன் சார்ந்த சமூகம், பண்பாடு, ஒழுகலாறு, அறம் மற்றும் அதைப் பற்றிய புரிதல், ஆட்சியாளர்கள், அவர்களின் போக்கைப் பொறுத்தது. அதைத் தவிர்த்து, இயற்கையும் சுற்றுச் சூழலும் தனி மனிதன் மற்றும் சமூகத்தின் புற வாழ்வை பாதிக்கிறது. இத்துணைக் காரணிகளையும் எதிர்கொண்டு மனிதன் வாழும் வாழ்வைத்தான் அபத்தமானது என்றான் ‘ஆல்பர்ட் கேம்யூ’. மே 2009 இல் பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் இலங்கை அரசின் ஏகாதிபத்தியப் படையினரால் வன்கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில், அச்செயலுக்கு உறுதுணையாய் நின்ற இந்திய மற்றும் தமிழக அரசியல்வாதிகளுக்கு பணத்திற்காக வாக்களித்தனர் தமிழக மக்கள். பயரங்கரவாதிகளுக்கெதிரான போர் முடிந்தது என அறிவித்தனர் இலங்கை ஆட்சியாளர்கள். உலகிலேயே மிகப் பெரிய மனித அவல மீட்பு உயிர்ச் சேதம் ஏதுமின்றி நடந்தேறியதாகவும் கூறினர் அவர்கள். இறுதிப் போரின்போது நடந்த மனிதப் பேரழிவு குறித்த ஒரு சில ஊடக மற்றும் ஐ.நா. அமைப்புகளின் செய்திகள் ஏளனத்தோடு தட்டிக் கழிக்கப்பட்டன.
இந்திய ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இலங்கை ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக மாறி ‘ஒழிந்தனர் புலிகள்’ என மகிழ்ந்தனர். தமிழனுக்குத் தன்னைவிட்டால் நாதியில்லை எனக் கூறும் கருணாநிதி தன் கலைத் திறமையை மனித சங்கிலி, உண்ணாவிரதம் போன்ற நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தி நினைத்ததை சாதித்தார். போர் முடிந்தது. மனித குலத்தின் எதிரிகள் வீழ்ந்தனர். முட்டாள்தனமாக ஐம்பது வருடம் போராடி, மூன்று லட்சம் பேருக்குமேல் செத்தொழிந்த உங்களுக்கு சுகவாழ்வை இராசபக்சே தருவார். நாங்கள் அதற்கு உதவுகின்றோம் என்றது அன்னை சோனியாவின் தலைமையிலான காங்கிரஸ் கட்சி. இராசபட்சே எங்கள் வீட்டுப் பிள்ளை. நான் சொன்னதைக் கேட்பான் என தன் மகள் பங்கேற்ற குழுவை இலங்கைக்கு அனுப்பி கை குலுக்கினார் கருணாநிதி. இராசபட்சேவும், சோனியாவும் மீண்டும் அரியணை ஏறினர். கருணாநிதி, இதுவரை முடிசூடா தன் மூத்த மகனுக்கு முடிசூட்டி மத்திய ஆட்சியில் பங்கெடுத்தார். வழக்கம்போல் மிகுமறதி நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் ஈழப் பிரச்சினை என்ற ஒன்று இருப்பதையே மறந்து போய் அரசியல் கோமாளிகளின் கேலிக் கூத்தை பார்த்தும், பேசியும், இரசித்தும் வாளாயிருந்தனர்.
என்ன பாவம் செய்தார்களோ ஈழத் தமிழர்கள்? அவர்கள் வாழ்வு கேட்பாரற்று படு அபத்தமாகிப் போனது. அவர்கள் நம்பிய யாருமே அவர்களுக்கு உதவவில்லை. எரிகிற வீட்டில் அடித்தது இலாபம் என்ற போக்கில் ஒரு இனக் குழுவின் அனைத்துமே அனைவராலும் சூறையாடப்பட்டுவிட்டது. இலங்கையின் சுதந்திரம் ஈழத் தமிழர்களின் சுதந்திரத்திற்கு சாவுமணி அடித்ததோடு தொடங்கியது அவர்கள் போராட்டம். பொது நியதியைக் காலில் போட்டு மிதிக்கத் தயங்காத இலங்கை ஆட்சியாளர்கள் திட்டமிட்ட இனஒதுக்கல் கொள்கையை கடைபிடித்ததன் விளைவாகத் தோன்றிய எதிர்வினை நீண்ட நெடிய அமைதிப் பயணத்திற்குப் பின் 1980களில் ஆயுதப் போரட்டமாகப் பரிணமித்தது. அதற்கான நியாயங்களை இன்று குற்றங்காணும் மிகுமதியாளர்கள் யாரும் மறுக்க மாட்டார்கள். சிங்களர்களுடன் இணைந்து வாழ முடியாது என்ற சூழலில் ஒரு தேசத்திற்கான நிலமும், பண்பாடும், மொழியும் கொண்ட தங்களை ஒரு தேசிய இனக் குழுவாகக் கருதி தனி நாடு நோக்கி நகர்ந்தனர். முக்கியப் போராளிகளான விடுதலைப் புலிகள். தீர்க்கமான கொள்கைகள் அற்ற சிறு குழுக்கள் அழித்தொழிக்கப்பட்டு, மக்களின் ஆதரவுடன் போராடிய புலிகளின் அமைப்பு முறையும், அர்ப்பணிப்பும் தமிழர்களுக்கான தாயகத்தை கிட்டத்தட்ட பெற்று தந்தது.
தன் தரப்பு நியாயத்தையே முதன்மையாக்கிச் செயலாற்றியதும், உலகப் புவி அரசியலின் நோக்கையும் போக்கையும் புரிந்து கொள்ளத் தவறியதும் புலிகளின் போராட்டத்தில் சரிவை ஏற்படுத்தியது. போராட்டத்திற்கான அனைத்து நியதிகளும் தம் பக்கம் இருந்தும், அவர்கள் செய்ததாக நம்பப்படும் ஒரு சில செயல்களும், உலக அரங்கில் பயங்கரவாதம் என்ற சொல்லாடலின் வீச்சும் புலிகளுக்கு எதிராக முடிந்து விட்டன. முப்பது ஆண்டுகால தொடர் உரிமைப் போராட்டமும், அதனால் ஏற்பட்ட சொல்லொணா உயிர் மற்றும் உடைமைச் சேதமும், இடம் பெயர்வும், இன்னல்களும் மே 19, 2009-ல் இராசபட்சே அரசின் வெற்றியோடு மறக்கடிக்கப்பட்டன. உலகிலேயே பயங்கரவாதத்திற்கெதிரான மாபெரும் போரில் நான் வென்றதாக மார்தட்டிக் கொண்ட இராசபட்சே ஐ.நா. உட்பட யாரும் கேள்விக் கேட்கக் கூடாது என்று பகிரங்கமாக எக்களித்தார். புவி சார் அரசியல் என்ற பிண்ணாக்கு அவருக்கு கை கொடுத்தது.
போர் முடிந்து இரண்டாண்டுகள் உருண்டோடிவிட்டது. ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருப்பவனை எழுப்பும் குட்டுபோல வந்திருக்கிறது ஐ.நா.வின் இறுதிகட்ட இலங்கைப் போர் குறித்த மூவர் குழு அறிக்கை. உறங்கிக் கொண்டிருந்தவர்கள் தமிழக மக்கள். உறங்குவதைப்போல் நடித்துக் கொண்டிருந்தவர்கள் காங்கிரசின் சோனியாவும், தி.மு.க.வின் கருணாநிதியும்.
உலகில் நியாயமும், அதுகுறித்த விவாதங்களும் செத்துவிடவில்லை என்பதற்குச் சான்று இந்த ஐ.நா. அறிக்கை. செவிமடுத்தால் கேட்டிருக்கும் அவலங்களை செவியடைத்து, வாயடைத்து, கண்ணடைத்து நெருப்புக் கோழிகளைப்போல போலியாய் முகம் புதைத்து தன்னைத் தானே ஏமாற்றி பல்லாயிரக்கணக்கான உயிர்களை ஒரே நேரத்தில் கொன்று குவிக்க வகை செய்த நாம் இயல்பு வாழ்க்கை வாழ்ந்து கெண்டிருந்த வேளையில், உலகின் பல முனைகளில் வாழும் மனித நேய ஆர்வலர்களின் தன் முனைப்பால் உருவாக்கம் பெற்ற இவ்வறிக்கை, இலங்கை இதுவரை போட்டிருந்த போலி முகமூடியைக் கழட்டிப் போட்டதோடு, இரட்டைவேடம் போட்டு ஓட்டுப் பொறுக்கி அரசியலுக்காகப் பொய்ச் சொன்ன காங்கிரசையும், தி.மு.க.வையும் அம்மணமாக்குகிறது. இதுவரை வெளிச்சத்திற்கு வராத முக்கிய உண்மைகளை வெளிக் கொண்டிருப்பதோடு, பிரச்சினையும் மூல காரணங்களை உலகத்திற்கு விளக்கி புலிகளின் இருப்பியலை மறைமுகமாக நியாயப்படுத்தியிருக்கிறது.
1. இலங்கை இனச் சிக்கல் குறித்த ஐ.நா. அளவிலான முதல் அறிக்கை:
உலகில் பொது நியதி என்ற ஒரு புடலங்காயும் இல்லை. எல்லா நியதிகளுமே தொடர்புடையவர்களின் தன்னலத்தை முன்னிறுத்தியே நிர்ணயிக்கப்படுகின்றன. நாகரிக சமூகத்தின் அனைத்து மதிப்பீடுகளையும் காலில் போட்டு மிதித்த இலங்கை ஆட்சியாளர்களின் இன ஒதுக்கல் போக்கு தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி, போராளிகளுக்கு ஆதரவளிக்கத் தூண்டிய ஒரு காலம். சிங்கள ஆட்சியாளர்களின் சூழ்ச்சியால் மூளைச் சலவை செய்யப்பட்ட இந்திய ஆட்சியாளர்கள் போராளிகளை கிள்ளுக்கீரையாய் எண்ணி, தன்னலனை முன்னிறுத்தி கட்டாயப்படுத்தி சமரசம் செய்யத் தலைப்பட்டதன் விளைவே ஈழப் போரளிகளுடனான இந்திய அரசின் உறவில் சிக்கலும் அதைத்தொடர்ந்த இந்திய அமைதிப் படையின் அட்டூழியமும், இந்திய அரசின் செயலில் துருத்திக் கொண்டு நின்றதெல்லாம் தன்னலமும் தான் தோன்றித்தனமும் தான். இந்திய ஆட்சியாளர்கள் வஞ்சக சிங்கள ஆட்சியாளர்களுடன் கைகோர்த்து இனச் சிக்கல் குறித்த மக்களின் கவனத்தை மட்டுமல்ல உலக நாடுகளின் கவனத்தையும் திசை திருப்பினர்.
இந்திய தலையீட்டில் நடந்தேறிய திம்பு பேச்சுவார்த்தை, அதைத் தொடர்ந்த இந்திய - இலங்கை ஒப்பந்தம் எல்லாமே ஈழச் சிக்கலின் ஆதார புள்ளியான தேசிய இன அங்கீகாரம், அதைச் சார்ந்த அடிப்படை சுய நிர்ணய உரிமைகளைப் புறந்தள்ளி சம உரிமை என்ற போலியைச் சுற்றியும், குறிப்பாக இறையாண்மை என்ற தன்னலனைச் சுற்றியும் தகவமைக்கப்ப்டடன. தங்களைக் காப்பாற்றும் தார்மீக உரிமை இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் உண்டு என்று ஈழத்தமிழர்கள் எதிர்பார்த்து நின்றதும், போராளிகளுக்கு தொடக்கத்தில் இந்தியா அளித்த உதவியும், தன்னை விட்டால் இலங்கைத் தமிழர்களுக்கு யாரும் இல்லை என்ற எண்ணமும், இந்திய ஆட்சியாளர்களை தான் சொல்வதை ஏற்றுக்கொள் என்று போராளிகளை மிரட்டி தீர்வுகளை திணிக்கத் தூண்டியது. போராளிகள் எதிரிகளாக்கப்பட்டனர். சிக்கல் அதனை மையத்திலிருந்துவிலகி போராளிக் குழுக்கள் - இந்திய இலங்கை அரசு என்றானது. என் சொல் கேட்காத உன்னைச் சும்மா விட்டேனா பார் என்ற இந்திய அணுகுமுறை இராசீவ் காந்தியின் கொலைக்குப் பின் முழுதும் விடுதலைப் புலிகள் - இந்திய அரசு என்றானது.
ஈழச் சிக்கல் என்றாலே புலிகள் என்றும் புலிகள் என்றாலே பயங்கரவாதிகள் என்றும் ஆனது. படிப்படியாக ஈழத் தமிழர்களுக்குப் பிரச்சினையே புலிகள் என்றும் அவர்களை அழிக்க இலங்கை அரசுக்கு அனைவரும் உதவ வேண்டும் என்ற மாய பிம்பம் கட்டமைக்கப்பட்டது. இவ்வகைக் கட்டமைப்பின் பரிணாம வளர்ச்சி, இந்திய அரசின் உதவியுடன் விடுதலைப்புலிகளை வெற்றிக் கொள்வதில் முடிந்துள்ளது. சிக்கல் முற்றுப் பெற்று இனி எல்லாம் நலமே என இலங்கை கெண்டாடியது. சிக்கல் என்னவென்றே மறந்து போயிருந்த உலக சமுதாயம் இலங்கையைத் தட்டிக் கொடுத்தது. மனித உரிமை மீறல்கள், இறுதிகட்டப் போர்விதி மீறல்கள் குறித்து பேசியவர்களைப் பார்த்து இலங்கையும், இந்தியாவும் காரி உமிழ்ந்தன. ஆரம்பத்தில் முள்வேலி, முகாம்கள் என்றெல்லாம் பேசியவர்கள் ஈழத் தமிழர்களை இராசபட்சேவும், கருணாவும் பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணி மகிழ்ந்து அமைதியாயினர்.
மே 27, 2009 இல் மனித உரிமை மீறல் குறித்த ஐ.நா.வின் தீர்மான முயற்சியை இந்தியாவின் முன்னிலையில் முறியடித்த இலங்கை அரசுக்கு, ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கை பெருந்தலைவலியாய் வரும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அறிக்கையின் முடிவு குறித்து, இன்றைய உலக அரசியற் சூழலிலும், இலங்கை அதைச் சாதுரியமாய் கையாளும் விதத்திலும் விவாதிப்பது வீண்வேலையே. ஆனால், இலங்கையின் இனச் சிக்கலை, ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பிறகு அதன் மையத்தை நோக்கி வழி நடத்துகிறது இவ்வறிக்கை. இலங்கை மற்றும் இந்திய அரசின் இறையாண்மை மற்றும் இராச தந்திரம் என்னும் மூத்திரக் குட்டையில் மூழ்கடிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் போராட்ட நியாயத்தை கரை சேர்த்திருக்கிறது ஐ.நா. அறிக்கை. நயவஞ்சக அரசுகளின் மாறாப் போக்கையும், இருட்டடிப்புகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் இவ்வறிக்கை உலக சமூகம் சிக்கலைப் புரிந்து கொள்ள வழிவகை செய்வதோடு, முடமாக்கப்பட்டிருக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்கு வழிகாட்டும் ஒரு கருவி என நம்பலாம். ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த அத்துமீறல்களை அலசும் அறிக்கையாக இருப்பினும், பொது நோக்கர்கள் போராட்டம் குறித்து கொண்டிருந்த ஐயத்தை நீக்குவதோடு நுனிப்புல் மேயும் அறிவு ஜீவிகளின் மனசாட்சியை உலுக்கி வாயடைக்க வைத்திருக்கின்றது.
2. சிங்களப் பேரினவாதத்தின் இறுமாப்பும், மாறாத் தன்மையும்:
ஐ.நா. அறிக்கையின் முக்கிய அம்சம் அது விவாதித்திருக்கும் தமிழர் நலனில் இலங்கை அரசுக்குள்ள அக்கரையற்றத் தன்மையும், போர் வெற்றியால் அது அடைந்திருக்கும் பேருவகையும், பிற இனத்தவரின் மேல் கொண்ட பரிவின்மை காரணமாகத் தோன்றியதே ஈழப் பிரச்சினை என்று உலக சமூகத்திற்கு ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பிறகு ஐ.நா. அறிக்கை உணர்த்தியிருக்கின்றது. அறிக்கையுள் புதைந்து கிடக்கும் பேருண்மை என்னவென்றால், இலங்கை அரசு என்றைக்குமே மாறவில்லை, மாறாது என்பதாகும். தமிழினத்திற்கெதிரான வெறி சிங்களர்களின் குருதியிலும், புத்தியிலும் இரண்டறக் கலந்து விட்டது என்பதை சில மிகுமதியாளர்களுக்கு விளக்க ஐம்பது ஆண்டுகால தொடர் போராட்டமும், மூன்று லட்சத்திற்கும் மேலான உயிர்களும், ஐ.நா.வும் தேவைப்படுகிறது. வரலாறே வேண்டாம், பொருளாதாரம் மட்டுமே போதும் என உணர்வுகளற்று புலனுக்காகவே வாழும் மாமனிதர்கள் நிறைந்த உலகில் உண்மைக்கும், நியாயத்திற்கும் இடமேது. இலங்கை அரசின் பொறுப்பற்ற தன்மையை ஐ.நா. அறிக்கை கீழ்க்கண்டவாறு விவரிக்கின்றது:
“போர் வெற்றி குறித்த பேருவகையும், அதற்கான வழி குறித்த பெருமிதமும், ஈழத் தமிழர்களின் இருப்பு, அங்கீகாரம் மற்றும் அரசியல் விடுதலைக்கு சாவுமணி அடிப்பதோடு, இராணுவ வெற்றியானது பெருவாரியான அம்மக்களின் அழிவால் பெறப்பட்டது என்ற உண்மையையும் மறைக்கின்றது.
இக்கூற்றின் வீச்சும் உண்மையும் இலங்கை அரசின் செயல்பாடுகளை கவனித்துவரும் பொது நோக்கர்களுக்கு விளங்கும். இன்று வரை இலங்கை ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு மனமுவந்து சமஉரிமை என்ற எதையுமே கொடுக்க முன் வரவில்லை. இந்திய ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை முட்டாள்களாக்க அதிகாரப் பகிர்விற்கு முன் வருவதுபோல நடித்ததன்றி அதைத் தாண்டி ஓர் அலகும் அவர்கள் நகரவில்லை. இன்றும் இலங்கை அரசியல் தமிழர் எதிர்ப்பு என்ற ஒற்றை துருவத்தை நோக்கியே பயணிப்பதாகத் தெரிகிறது. அதற்குச் சான்று, தமிழர்களுக்காகப் பேசும் எதிர்க்கட்சிகள் இல்லா நிலையாகும்.
3. சிங்கள அரசியல்வாதிகளின் உள்ளக்கிடக்கை தமிழின அழிப்பன்றி தமிழர் - சிங்களர் இணக்கமல்ல:
மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசாயின், தற்போது நிலவும் சூழலை வாய்ப்பாகக் கருதி பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட மக்களின் உள்ளங்களை வென்றெடுக்க முயன்றிருக்க வேண்டும். பேரிழப்பை சரிகட்ட ஆறுதல் அளிக்குமளவிற்கான நலப் பணிகளை போர் முடிந்த கையோடு செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், ஆரம்பத்திலிருந்தே உலகத்தை ஏமாற்ற தமிழ் மக்களை உதட்டளவில் சக குடிகளாக கருதும் இலங்கை அரசு அவர்களின் பிணத்தின் மீதும், இரணத்தின் மீதும் ஆனந்தக் கூத்தாடியது. இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், பாதிக்கப்ப்டட மக்களை விலங்கினும் கீழாய் நடத்துவதோடு, ஒட்டுமொத்த தமிழ் மக்களின் உணர்வுகளை இழிவுபடுத்தும் வகையில் ஒற்றைச் சங்கிலிக் கொள்கையை செயல்படுத்த முனைந்துள்ளது. ஐ.நா. அறிக்கை இதைக் குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறது. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் தமிழர்களின் உயிரையும் உடைமைகளையும் பறித்து அவர்களின் எண்ணிக்கையையும், நிலப்பரப்பையும் குறைப்பதை அறிவிக்கப்படாத கொள்கையாகக் கொண்டுள்ள சிங்கள அரசுகளுக்கு அண்மையில் கிடைத்த வாய்ப்பே நடந்து முடிந்த போர். பொது மக்களையும், போராளிகளையும் பிரித்துப் பார்க்கத் தவறி, வேண்டுமென்றே நோயாளிகள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 40 ஆயிரம் பேருக்கு மேல் கொன்ற அரசு எவ்வாறு குடியரசு என்ற வரையறைக்குள் வர முடியும்? தாக்குதல் தவிர்ப்புப் பகுதியிலும், மருத்துவமனைகள் மீதும் போராளிகள் இருக்கின்றார்கள் என்ற சாக்கில் அனைவரையும் குடிமக்களாகக் கருதும் எந்த அரசினால் தாக்குதல் நடத்த முடியும்? மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்தும் அறிவற்ற, அருவறுக்கத்தக்க இலங்கை அரசின் இச்செயலை அங்கீகரிப்பவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது.
4. உண்மையறிய மறுக்கும் இலங்கை அரசும் அதன் சார்பு அமைப்புகளும்:
இலங்கை இனச் சிக்கலில் புதைந்து கிடக்கும் உண்மையும், நியதியும் ஒன்றுதான். சிங்களர்களும், தமிழர்களும் இரு வேறு இனக் குழுக்கள் என்பதும் அவர்களுக்கான நிலப்பரப்பில் இரு குழுக்களில் ஒருவர் மற்றவரை ஒடுக்காமல் இணைந்தோ அல்லது அது இயலாத பட்சத்தில் தனித் தனியாகவோ வாழ வேண்டும் என்பதே அது. இந்த உண்மையையும், நியதியையும் மறுக்கும் சிங்களர்களே குற்றவாளிகள். இதற்கு எதிர்வினையாற்றிய தமிழர்கள் தொடர்ந்து தண்டிக்கப்படுவதுடன் ஆதரவற்று நிற்பதுதான் பேரபத்தம். தமிழர்களுக்கெதிரான திட்டமிட்ட ஒடுக்குமுறையையும், அதனால் பரிணமித்த ஆயுதப் போராட்டத்தையும் ஐ.நா. அறிக்கை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறியுள்ளது. தவறுகள் அனைத்தையும் தம் பக்கம் வைத்துள்ள இலங்கை அரசு அதை சரி செய்ய இன்று வரை முன் வராததை ஐ.நா. ஆராய்ந்து அறிக்கையாக்கியுள்ளது. இனச்சிக்கலில் சூல் கொண்ட போராட்டத்தை பயங்கரவாதத்திற்கெதிரான போராக மாற்றி அண்டை நாடுகளின் உதவிகளுடன் வெற்றிக் கெண்டதன் மூலம் இலங்கை அரசு மாபெரும் பாவத்தையும், தவறையும் செய்துள்ளது. பிரச்சினையை அதன் மையத்திலிருந்து திசை திருப்பியதன் மூலம் சிக்கல் தீராமல் செய்ததோடு எதிர்வரும் காலத்தில் ஒரு இனக் குழு போராட வேண்டிய கட்டாயத்திற்கும், அதனால் ஏற்படப் போகும் அடக்குமுறைக்கும், அழிவிற்கும் இலக்காக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இனப்பிரச்சினை சார்ந்த போர்கள் ஒரு கட்டத்தில் இறுதியடையும்போது, வெற்றிப்பெற்ற அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்து, யார் எல்லை மீறி செயல்பட்டார்களோ அவர்களின் அத்துமீறல்களையும், குற்றங்களையும் கண்டறிந்து, அதனதன் தன்மை மற்றும் அளவிற்கேற்ப தண்டனைகளையும், இழப்பீடுகளையும் பாரபட்சமின்றி வழங்க வகை செய்வது வழக்கம். இவ்வகை உண்மையறியும் குழுக்கள் பன்னாட்டு மனிதநேய மற்றும் மனித உரிமை விதிகளை கணக்கில் கொண்டு போரிட்ட குழுக்களின் செயல்பாடுகளை ஆராயும். இதற்குச் சான்றாக தென்னாப்பிரிக்கா, ஹெயட்டி, சியாரா லியோன் மற்றும் தைமோரில் அமைக்கப்பட்ட குழுக்களையும் அவற்றின் சார்பற்ற செயல்பாட்டினையும் அறிக்கை சுட்டுகிறது.
இவ்வகையில் ஐ.நா.வின் நெருக்குதலில் அமைக்கப்பட்டதே இலங்கை அரசின் படிப்பினை மற்றும் இணக்கக்குழு இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டு, அவர்கள் வழி உண்மையைக் கண்டறிந்து உளவியல் ரீதியாகவும், உடைமைகள் வழியாகவும் அவர்களைத் தேற்றி மீளமர்விற்கு வழிவகை செய்வதே இக்குழுவின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கட்டமைப்பிலும், உறுப்பினர்கள் எண்ணிக்கை மற்றும் பிரதிநிதித்துவத்திலும் பல குளறுபடிகளைக் கொண்ட இக்குழு போருக்குப் பிந்தைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் ஒரு குழுவாகவே செயல்படுவதாக ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது. உண்மையறியும் குழுவிற்கான எந்த வரையறைக்குள்ளும் அடங்காத இந்த கண்துடைப்பு முயற்சி உலக சமுதாயத்தை ஏமாற்றும் கருவியேயாகும். அதைத் தவிர்த்து இலங்கையிலுள்ள நீதிமன்றங்களும், மனித உரிமைக் கழகங்களும் முற்றிலும் அரசின் கைப்பிள்ளையாகச் செயல்படுவதையும் அறிக்கை வெளிக் கொணர்ந்துள்ளது. போருக்கப் பின் நிகழ்ந்திருக்க வேண்டிய எந்த மாற்றமும் நிகழாதது குறித்து அறிக்கை கவலை தெரிவிக்கின்றது.
5. போரிட்ட குழுக்களின் மனித உரிமை மீறல்களும், போர்க் குற்றங்களும்:
நடந்து முடிந்த போர் உலக பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்றே நோக்கர்களின் நெஞ்சில் இலங்கை அரசாலும், உதவிய அண்டை அரசுகளாலும் பதிக்கப்பட்டது. பிற நாடுகளின் கண்மூடித்தனமான ஆதரவும், உதவியும் அதைக் கோரியே பெறப்பட்டது. மாறாக, ஐ.நா.வின் மூவர் குழு அறிக்கை விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்று ஒரு இடத்திலும் குறிப்பிடவில்லை. மேலும் ஒழுக்கமான, கட்டுப்பாடான இயக்கம் என்றெல்லாம் சுட்டுகிறது. இதுதான் உண்மை. விடுதலைப்புலிகளின் எதிரிகளின் மீதான தாக்குதலில் எப்போதுமே ஒரு நியாயம் இருந்திருக்கின்றது. ஈழத் தமிழர்களின் மானமீட்பிற்கான போராட்டத்தில் அவர்கள் எதிர்கொண்டது எல்லாம் முதுகில் குத்தும் நயவஞ்சகங்களையும், காட்டிக் கொடுப்பவர்களையும், துரோகிகளையும், துளியும் இரக்கமற்ற சிங்கள அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தான். தங்கள் பக்க நியாயத்தை அவர்கள் வெகுவாக நம்பியதும், அதற்காக அவர்கள் கடைபிடித்த தனி மனித மற்றும் பொது ஒழுக்கமும், தன்னலமற்ற உயிர்த் தியாகத்திற்கு துணிந்த இயக்கத்தவர்களை அவர்கள் கொண்டிருந்ததும் எதிரிகளின் புல்லுருவிச் செயல்களை புலிகள் பொறுக்கமாட்டாமல் செயல்படத் தூண்டியது. அவர்களின் மிகுலட்சியப்போக்கே அவர்களுக்கு எதிராக மாறிப் போனது. அதுவேதான், நாணயமற்ற இவ்வுலகில் 30 ஆண்டுகாலம் தாக்குப் பிடித்துப் போராடவும் அவர்களுக்கு உதவியது. புலிகளின் இப்பின்னணி, போர் விதி மீறல் குறித்த ஐ.நா. அறிக்கையை நன்கு விளங்கிக் கொள்ள உதவும்.
நார்வே தலையீட்டில் நிகழ்ந்த அமைதிப் பேச்சுவார்த்தை 2006 இல் முறிந்ததில் இருந்து தொடங்கும் இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளை படிப்படியாக விவரிக்கிறது ஐ.நா. அறிக்கை. பயங்கரவாதத்திற்கெதிரான நடவடிக்கை என்ற பீடிகையுடன் தொடங்கப்பட்ட போர், இலங்கை அரசின் போர்க்கால ஒடுக்குமுறைகளான கருத்து மற்றும் பத்திரிகைச் சுதந்திரப் பறிப்புகளுடன் செப்டம்பர் 2008 இல் முக்கிய கட்டத்தை அடைகிறது. அனைத்துலக உதவிக் குழுக்களின் பாதுகாப்பை இலங்கை அரசு நீக்குவதோடு சாதாரண தமிழ் மக்கள் மீதான தாக்குதல் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இலங்கை அரசின் ஒவ்வொரு தாக்குதலையும் புள்ளி விவரங்களுடன் விவரிக்கிறது ஐ.நா. அறிக்கை. தானியங்கு உளவு விமானம் மூலம் இடம் மற்றும் மக்களின் எண்ணிக்கையை துல்லியமாக அறிந்திருந்த இலங்கை ராணுவம், பொது மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு இரக்கமற்று தாக்குதல் நடத்தியதையும், தாக்குதல் தவிர்ப்புப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்த பகுதியில் தாக்குதல் நடத்தி மக்களை கொன்று குவித்ததையும், குறைந்தபட்ச வசதி அல்லது மருத்துவ வசதிகளே இன்றி இயங்கிக் கொண்டிருந்த மருத்துவமனைகள் மீது தொடர்ந்த தாக்குதல் நடவடிக்கைகளையும் அறிக்கை விவரிக்கின்றது. இவ்வாறாக இறுதிகட்ட போர் நடவடிக்கைகளை அறிக்கை விவரிக்கின்றது.
இறுதிகட்ட போர் நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரம் என கணிக்கிறது ஐ.நா. அறிக்கை. போர்ப் பகுதியில் செய்திகளை தமக்கு சாதகமாக திரித்ததன் மூலமும், சிக்கியிருந்தவர்களின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைத்து மதிப்பிட்டு பசி மற்றும் நோய்க்கு மக்களை ஆட்படுத்தியதன் மூலமும், ஐ.நா. மற்றும் பன்னாட்டு உதவிக் குழுக்களை மிரட்டி வெளியேற்றியதன் மூலமும் பொது மக்கள் மீதான தாக்குதலை இலங்கை தீவிரப்படுத்தியதாகவும் அறிக்கை குற்றம் சாட்டுகிறது. விடுதலைப்புலிகளும் தம் பங்கிற்கு மக்களை கட்டாயப்படுத்தி கேடயமாக பயன்படுத்தியதாகவும், தற்கொலை தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றதாகவும் சாடுகிறது அறிக்கை. இருதரப்பினரின் செயல்களும் அறம் மற்றும் அரசியல் சார்ந்த சில கேள்விகளை முன் வைக்கின்றன.
ஐ இலங்கை அரசின் செயல்கள்
பயங்கரவாதத்திற்கெதிரான போரில், எந்த உலக அரசும் தம் குடிமக்களை இலக்காக்கிக் கொன்றதில்லை. அப்படியே நிகழ்ந்தாலும் அது ஒன்றோ, பத்தோ என்று தாக்குதலில் சிக்குண்டு இறந்ததாக இருக்குமே தவிர நெஞ்சு வெடித்துப் போகும் அளவிற்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் என்று இருந்ததில்லை. இலங்கை அரசின் இக்கொடுஞ்செயலும் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையும் நமக்கு உணர்த்துவதென்ன? ஒன்று, இலங்கை அரசு தமிழ் மக்களைத் தம் குடிமக்களாகக் கருதவில்லை. இரண்டாவது, இலங்கை அரசு கூறுவதுபோல இது பயங்கரவாதத்திற்கெதிரான போரே இல்லை. மாறாக, பக்கத்து நாடுகளின் உதவியுடன் சிறுபான்மை தேசிய இனத்தின்மேல் நடத்தப்பட்ட வரலாறு காணாத வன்முறை. இந்தப் போரில் இலங்கை பெற்றது வெற்றியே அல்ல. படுதோல்வியே.
ஒரு இன மக்களை அவர்களின் நிலப்பரப்பிலேயே கொன்று குவித்து, முடமாக்கி, கற்பழித்து, காயப்படுத்தி பின்னர் அடிமையாக்கி ஆள முயல்வதின் பேர்தான் இறையாண்மை என்றால், உண்மையான இறையாண்மையின் வரையறை என்ன? விடுதலைப் புலிகள் கொடும்பாவிகள், அவர்கள் கையில் தமிழ் மக்களை ஒப்படைக்க முடியாது என கங்கணம் கட்டிக் கொண்டு சிங்கள ஆட்சியாளர்களின் பாதம் நக்கிய படுபாவிகள் இவ்வளவு மக்களைக் காவு கொண்ட காடையர்களின் கீழ் அடிமைப்பட்டு வாழ்வதை ஏற்றுக் கொள்கிறார்களா? இத்தனைக்கும் புலிகள் இதுவரை பொது மக்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில்லை. நெருக்கடியான பல தாக்குதல்களில்கூட முடிந்தவரை பொது மக்களைத் தவிர்த்து எதிரிகளையே குறி வைத்துள்ளனர். இக்கூற்றுக்கு எதிர்வினையாற்ற முனைபவர்கள் தயவுசெய்து ஐ.நா. அறிக்கயை படித்துவிட்டு பிறகு எழுதவும்.
6. இலங்கை இனச் சிக்கல்; இறுதிப் போர்; இந்தியா; ‘இந்து’ ராம்:
இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பங்கு மற்றும் தலையீடு குறித்து மாறுபட்ட கருத்துக்கள் நிலவுவதுண்டு. பொது நியதி மற்றும் அது சார்ந்த அணுகுமுறை என்பதைவிடுத்து, தனி நபர், அரசு, அதிகார வர்க்கம், புவி அரசியல், இறையாண்மை என்பவைகள் சார்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு, எதிர்ப்பு, ஆதரவு என மாறி மாறி ஈழப் பிரச்சினை இந்திய அரசால் அணுகப்பட்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் இராசீவ் காந்தியின் தவறான புரிதலாலும், அணுகுமுறையாலும் திசை மாறிய இப்பிரச்சினையை, சோனியா காந்தியின் காங்கிரஸ் தொடங்கிய இடத்திற்கே இட்டுச் சென்று விட்டுவிட்டது. இலங்கைக்குப் பொருளாதார உதவி, இராணுவ உதவி, இராஜதந்திர உதவிகள் என அனைத்தும் வழங்கி இறுதிப் போரை இந்திய மக்களைப் பற்றிக் கவலைப்படாமலேயே வழி நடத்திய நெஞ்சுரம் யாருக்கு வாய்க்கும்? வெட்கக்கேடு. மக்களாட்சி, மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி, சம உரிமை என்றெல்லாம் பேசும் ஒரு நாடு அதன் சுவடுகளே இல்லாத கொடுங்கோலாட்சிக்கு நிழலாக நின்று பெருவாரியான மக்களைக் கொன்று ஒரு தனி நபரின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறது.
ஐ.நா.வின் மனித உரிமை கழகம் வரைச் சென்று இலங்கைக்கெதிரான தீர்மானத்தை தடுத்து நிறுத்தி போருக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழ் மக்களை கொல்லவும், கற்பழிக்கவும், கொள்ளை கொள்ளவும் வழி செய்தது. போருக்குத் துணை புரிந்ததைக் காட்டிலும் மிகப் பெரிய அயோக்கியத்தனம் இதுவாகும். இது ஒன்றே போதும் போரை நடத்தியது இந்தியா என்று உறுதி செய்யவும், நடந்த மற்றும் நடந்து கொண்டிருக்கும் பேரழிவுகளுக்கு இந்தியாவும் உடந்தை என நிரூபிக்கவும். இலங்கையின் இறுதிகட்டப் போர் இரு நாடுகளின் கையாலாகாத்தனத்திற்கும் மக்களாட்சி என்ற போர்வையில் நடந்து கொண்டிருக்கும் பிற இனங்களை அழிக்கும் போக்கிற்கும் எடுத்துக்காட்டாகும். இந்தியாவின் இச்செயல்களையெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்த ஒரு தேசிய பாதுகாப்பு ஆலோசகர். பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரும் எதிர்காலமும் வக்கிரபுத்தியும் பாசிச எண்ணமும் கொண்ட இந்த அயோக்கிய சிகாமணிகளிடம், இதுதான் 6 கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழர்களை உள்ளடக்கிய இந்தியாவின் மகத்தான ஜனநாயகம். இவற்றுக்கெல்லாம் ஒத்துழைக்க ஒரு முதலமைச்சர். பெருமழையாய் மக்கள் மாண்டதும், தூவானமாய் இன்று வரை துன்பப்பட்டுக் கொண்டிருப்பதும் இவருக்கும் தெரிந்திருக்கின்றது. இராசபட்சேவிற்காவது போரை நடத்தவும் மக்களைக் கொல்லவும் அவர் தரப்பு நியாயம் என்று ஒன்றிருக்கிறது. இந்த கொடும்பாவிகளுக்கு என்ன இருக்கின்றது. முண்டங்களே, இறந்த பல்லாயிரக்கணக்கானவர் களின் ஆவியும், பாவமும் உங்களைச் சும்மா விடாது என்று யாரோ புலம்பும் ஓசை காதில் கேட்கிறது.
அடுத்ததாக, இலங்கைக்கான தேசிய ஆங்கில நாளிதழ் நடத்தும் ‘இந்து’ ராம். இவர் இராசபட்சேவின் மனசாட்சி. பாலஸ்தீனமும், லெபனானும் தெரிந்த அளவிற்கு இவருக்கு தமிழகமும், ஈழமும் தெரியாது. இலங்கை நிகழ்வைப் பொருத்தவரை உண்மையைத் தவிர மற்றதையெல்லாம் எழுதினார். இலங்கை அரசிற்கு ஆதரவாக அறிவு ஜீவிகளிடம் கருத்துருவாக்கம் ஏற்படுத்தி இவர் காத்த பத்திரிகை தருமம் இன்று சந்தி சிரிக்க அம்மணக் கூத்தாடுகிறது. சக பத்திரிகையாளன் வசந்தா விக்கிரமசிங்கே கொல்லப்பட்டபோது அமைதிகாத்த ராம், இலங்கை மற்றும் இந்திய அரசின் அனைத்து மனித குல விரோத செயல்களுக்கும் உடந்தையாக இருந்தார். தமிழர்களிடம் பிச்சை பொறுக்கி அவர்கள் முகத்திலேயே காரி துப்பும் இந்த உண்மை மார்க்சிஸ்ட் இன்று ஐ.நா. அறிக்கையை கண்ணுக்குத் தெரியாத குறுஞ்செய்தியாக்கி வெளியிட்டு, சீதைக்கு இராமன் சித்தப்பாவா? இல்லையா என்று தலைப்புச் செய்தியும், தலையங்கமும் எழுதுகிறார்.
தான் தலையங்கம் எழுதினால் இராசபட்சே தமிழர்களுக்கு கேட்பதற்கும் மேலாய் தருவார் என்ற செருக்கு இந்த தருதலைக்கு. (இதற்கும் மேலான நாரிகச் சொல்லாடலைப் பயன்படுத்த இயலாமைக்கு வருந்துகிறேன்.) இவர்களையெல்லாம் தமிழர்கள் நாயைப்போல அடித்து விரட்டும் காலம் வராதா? என ஏங்குபவர்கள் பலர். என்ன தைரியம் இந்த பாழாய்ப்போன இந்தியாவிற்கும், அதனை ஆள்பவர்களுக்கும், சிவசங்கர மேனனுக்கும், இந்து ராமிற்கும் இன்னும் பலருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஈழத் தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் கொல்ல இராசபட்சேவிற்குக்கூட காரணம் இருக்கலாம். ஆனால் எம்மக்களின் ஓட்டைப் பொறுக்கி, எங்களையும் ஆண்டு, எம் மக்களையே கொன்று குவிக்கும் தைரியத்தை உங்களுக்கு யார் கொடுத்தது என கேட்க பெருஞ் சினமும் ஆதங்கமும் வருகிறது.
ஆனால், விஜய்யையும், விஜய்காந்தையும், இரஜினியையும், இராகுலையும் நம்பித் திரளும் இளைஞர்களையும், அன்னை சோனியா என்று வாயாரச் சொன்ன திருமாவளவனையும், காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று கூறும் இராமதாசையும் பார்க்கும்போது, சினம் சோகமாகவும், அவநம்பிக்கையாகவும் மாறி எம்மக்களுக்காகவும், ஈழத் தமிழர்களுக்காகவும் அழத்தான் தோன்றுகிறது.
- ஏ.அழகிய நம்பி (