நேற்றும் இன்றும் ‘தமிழர் எழுச்சி விழா’வை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை நாம் திட்டமிட்டபோது - தோழர் திருப்பூர் அங்ககுமார் சொன்னார், இதை மாநாடு என்று நடத்த வேண்டாம், விழாவாகவே நடத்தலாம் என்று சொன்னார். குத்தூசி குருசாமிக்கு, புலவர் குழந்தைக்கு நூற்றாண்டு விழாவும், ‘குடிஅரசு’ வெளியீட்டு விழாவும் வைத்திருக்கிறோம். எனவே இதை விழா என்று அழைப்போம்; மாநாடு என்ற சொல்லைத் தவிர்ப்போம் என்றார்கள். இதை கோவை மாவட்டம் நடத்துகிறதா அல்லது மாநில மாநாடா என்றெல்லாம் எங்களை திருப்பூர் தோழர்கள் சிந்திக்கவே விடவில்லை, திருப்பூர் நகர தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்துகிறது நிகழ்ச்சி. இதிலே வேறு யாருடைய உதவியும் இல்லை. தோழர் பொள்ளாச்சி பிரகாசு போன்றவர்கள் உதவியிருக்கிறார்கள். ஆக, திருப்பூர் தந்தை பெரியார் திராவிடர் கழகமே பொறுப்பேற்று நடத்திய நிகழ்ச்சி இது.

முதலில் நான் இதை நிறைவுரையாக இல்லாமல் நன்றி உரையாக ஆற்ற விரும்புகிறேன். காரணம், இந்த இரண்டு விழாக்களுமே நன்றி காட்டும் விழாக்கள் தான். ஒன்று, தந்தை பெரியார் கருத்துக்களை, அது கசப்பான கருத்தாக இருந்தாலும், நகைச்சுவையாக தனது எள்ளல் நடையில் எழுதி மக்களிடம் கொண்டு போய் சேர்த்த குத்தூசி குருசாமி அவர்களுக்கு நூற்றாண்டு விழா, மற்றொன்று புலவர் குழந்தையின் நூற்றாண்டு விழா. இந்த விழாக்கள் வழியாக நாம் அவர்களை நினைவூட்டுவதோடு, அப்படிப்பட்ட வாழ்க்கையை நாமும் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, முந்தைய தலைமுறையினரை அழைத்து, அவர்களைப் பற்றி பேச வைத்து, நாம் இரண்டு நாட்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். பெரியாரிடம் உங்களுக்குப் பின்னால் யார் என்று கேட்டபோது, எனது வாரிசு நூல்களும் தத்துவங்களும் என்று சொன்னார். அவர் இறந்து 32 ஆண்டுகள் ஆகிறது.

பெரியார் என்ன சொல்லியிருக்கிறார், என்ன எழுதியிருக்கிறார் என்பதை, நல்லவேளையாக தோழர் ஆனைமுத்து தொகுத்த சிந்தனைகள் தொகுதி இருந்ததால் நாம் கொஞ்சமாவது தெரிந்து வைத்திருக்கிறோம். அது தேர்வு செய்யப்பட்ட கட்டுரைத் தொகுதிகள் தான். முழுமையான தொகுப்பு இல்லை. ஆனால் முழுமையான தொகுப்பு வெளிவர ஏற்கனவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

1983-ல் நமது பேராசிரியர் சக்குபாய் கணவர் நெடுஞ்செழியன் போன்ற பேராசிரியர்கள், நமது மறைந்த புலவர் இமயவரம்பன் வழிகாட்டுதலில், மூன்று கோடை விடுமுறைகளை இதற்காக செலவழித்து, ‘குடிஅரசு’ இதழ்களிலிருந்து தந்தை பெரியார் எழுத்து பேச்சுக்களை ஆயிரக்கணக்கான பக்கங்கள் எழுதி வைத்தார்கள். அவ்வளவையும் கையால் எழுதினார்கள். திராவிடர் கழக சார்பில் வெளியிட்ட 1983, 84, 85, 86-ம் ஆண்டு பெரியார் நாட்குறிப்புகளில் பெரியார் கருத்துக் கருவூலம் தொகுப்புப் பணி நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 83-ல் தொகுத்து வைத்தும் 20 ஆண்டுகளாக ஒன்றும் நடக்கவில்லை. அதைச் சிறிய இயக்கமாக இருந்தாலும், எங்களுடைய சிறிய சக்திகளை ஒன்று திரட்டி செய்து முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் ‘1925-ல்’ பெரியார் எழுதியதையும், பேசியதையும் மட்டும் எங்களால் கொண்டு வர முடிந்தது. இப்போது இரண்டாண்டு கழிந்து விட்டது. ஒவ்வொன்றையும் நாங்கள் அனுபவத்தால் மட்டும் தான் தெரிந்து கொள்கிறோம். இப்போது வெளியிடுவதற்கு பணம் இல்லை.

முதல் தொகுதியைப் பணம் திரட்டி வெளியிட்டு விட்டோம். ஆனால் விற்றதற்குப் பணம் வரவில்லை. எல்லாம் வியாபாரிகளிடம் இருக்கிறது. பாதிகூட வந்து சேரவில்லை. இப்போது முன் வெளியீட்டுத் திட்டம் என்ற ஒன்றை அறிவித்தோம். இத் திட்டத்தின் கீழ் ரூ.150 விலையுள்ள இந்த நூலை ரூ.100-க்குக் கொடுப்போம் என்று அறிவித்தோம். ஏராளமாக நமக்கு காசோலைகள், வரைவோலைகள் வந்தன. தோழர்கள் நேரில் சென்று திரட்டினார்கள். முதல் தொகுதி 1200 படிகள் தான் போட்டோம். இந்த முறை 1200 படிகளுக்கு முன்னதாகவே பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

முதல் தொகுப்பு 1200 படிகள் மட்டுமே போட்டு, விற்க முடியாமல், விற்று விட்டோம் என்று சொல்லிக் கொண்டு, பணம் வந்து சேராத நிலையில், இப்போது 1200 பேர் முன்பதிவே செய்திருக்கிறார்கள். இது 1926-ம் ஆண்டின் முதல் 6 மாதத்துக்குள்ளான பெரியாரின் பேச்சும் - எழுத்தும். இதைத் தொடர்ந்து மேற்கொள்வோம். இதில் நமக்கு உதவுவதற்குப் பலர் இருக்கிறார்கள். பலர் நமது பணியைப் பாராட்டி உதவுவதாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதே போல தமிழ் மக்களும் வாங்குவதற்கு காத்திருக்கிறார்கள்.

ஆனால், இது பற்றிய விளம்பரத்தை நாம் நமது ‘பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிட்டோம். சிந்தனையாளன், தமிழர் கண்ணோட்டம், தென் செய்தி, நாளை விடியும், யாதும் ஊரே, நாத்திகம், பெங்களூரிலிருந்து வெளிவரும் தமிழர் முழக்கம், இப்படிப்பட்ட ஏடுகள் தான், இந்த முன் வெளியீட்டுத் திட்டத்தைப் பற்றிய செய்திகளை வெளியிட்டன. அதிக விற்பனையாகும் வணிகப் பத்திரிகைகளில், இதற்கான விளம்பரங்கள் கிடையாது. அப்படி வந்திருக்குமானால், இன்னும் கூடுதலாக, முன் பதிவுகள் வந்திருக்கக் கூடும். இப்போதே இந்த அளவுக்கு ஆதரவு இருப்பதால் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. எனவே 1926-ன் இரண்டாம் தொகுதியை - தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24 ஆம் தேதி வெளியிட இருக்கிறோம். (பலத்த கைதட்டல்) விரைவாகக் கொண்டு வரவேண்டிய தேவை இருக்கிறது.

1922-ல் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தபோது, இதே திருப்பூரில் தான், ராமாயணத்தையும், மனுதர்மத்தையும் தீயிட்டு எரிக்க வேண்டும் என்று பேசினார். அந்த ஆண்டில், காந்தி சொன்னார் என்பதற்காக, இந்தி படிப்பதற்கான பள்ளியை ஈரோட்டில் தன்னுடைய வீட்டில் துவக்கினார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது 1938-ல். ராஜாஜி கட்டாய இந்திக் கல்வியைக் கொண்டு வந்தது 1937-ல். ஆனால் நான்கே ஆண்டுகளில் 1926-ல் - அதாவது, தனது வீட்டில் இந்திப் பள்ளிக்கூடம் திறந்த நான்கே ஆண்டுகளில், இந்தியைப் பெரியார் எதிர்க்கத் துவங்கிவிட்டார்.

“நமது பார்ப்பனரல்லாதவர்களுக்கு வரும் பல கொடுமைகளில் இந்தியும் ஒன்றாக முடியும் போலிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார். ‘தமிழுக்குத் துரோகமும் இந்தியின் ரகசியமும்’ என்று எழுதியிருக்கிறார். இதைப் பதிப்பிக்கும்போது தான் பல அரிய செய்திகளை அறிய முடிந்தது.

பெரியார் எப்படிப் பிரச்சினைகளைப் பார்த்திருக்கிறார் என்பதை, அவர் எழுத்துக்களில் படித்தால் தான், மூலத்தைப் படித்தால் தான் சரியாகப் புரிந்து கொள்ள முடியும். அவருடன் பழகியவர்கள் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம். அவர் எழுதியதைப் படித்தால் தான் சரியாக இருக்கும். இதை வெளிக்கொணருவதில் பல சங்கடங்கள் உண்டு. நமது தமிழ்க்குரிசில் போன்ற தோழர்கள் ஒத்துழைப்பு கொடுத்ததால் இதை நாங்கள் வெளியிட முடிந்திருக்கிறது. இதைத் தொடர்ந்து கொண்டு வர இருக்கிறோம்.

அடுத்து, குத்தூசி குருசாமி பற்றிய கட்டுரைத் தொகுப்புகளடங்கிய நூல் ஒன்றை வெளியிட நாங்கள் திட்டமிட்டோம். அப்போதுதான், தோழர் வைகறை அவர்கள் தமது ‘சாளரம்’ பதிப்பகத்தின் மூலம், குத்தூசி குருசாமி நூல்களை வெளியிட இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ந்தோம். எங்களுக்கிருந்த நிதி நெருக்கடியில், ‘சாளரம்’ குத்தூசி நூல்களை வெளியிடுவதால், மகிழ்ந்து, நாங்கள் எங்களது முயற்சியைக் கைவிட்டோம்.

புலவர் குழந்தை ராவணகாவியம் படைத்தார்; புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் ஒரு பாடலைப் படித்து, உள்ளக் கிளர்ச்சியடைந்து, இக் காவியத்தை ஆக்கினார். கம்பர் விருத்தத்தில் மட்டுமே பாடினார். ஆனால் புலவர் குழந்தையோ எல்லா யாப்புகளிலும் பாடி, தனது புலமைத் திறனை நிறுவியிருக்கிறார். கையாள முடியாத கடும் பா வடிவங்கள் என்று கருதப்பட்ட வடிவங்களில் எல்லாம் எழுதியிருக்கிறார். ஆண்டாண்டு காலமாக மக்களிடம் ஊட்டப்பட்டு வந்த ராமன் என்ற பிம்பத்தை உடைத்து, ராவணனை உயர்த்திப் பாடிய, அந்தப் புலவர் குழந்தைக்குத் தான் நாம் விழா எடுத்துள்ளோம்.

நம்மவர்களின் விமர்சனங்கள்

இந்த விழா நடத்துவது பற்றி எவ்வளவோ விமர்சனங்கள் வருகின்றன. எதிரிகளிடமிருந்து வந்தால் நாம் விடையளிக்கலாம். ஆனால் நம்மவர்களிடமிருந்தே வருகிறது. அதுதான் வேதனை. இந்தத் திருப்பூரில், திராவிடர் கழகம், ஒரு மாநாட்டை நடத்தியது. இப்போது நாம் தமிழர் எழுச்சி விழாவை நடத்துகிறாம். இந்து மதவாத சக்திகள் வெறியாட்டம் நடத்தும், இந்தத் திருப்பூரில், இப்படி அடுத்தடுத்து, இரண்டு நிகழ்ச்சிகள் நடப்பதால் நாம் மகிழ்ச்சியே அடைகிறோம். ஆனால், அவர்கள் அப்படிக் கருதவில்லை. முதலில் தமிழர் எழுச்சி விழா என்று நடத்தலாமா என்று விமர்சனம் செய்தார்கள். ஏதோ திராவிடர் என்ற கோட்பாட்டை விட்டு, தமிழ் தேசியம் பேசுவோர் கூறுவது போன்ற நிலைக்கு வந்துவிட்டது போல் நம்மை விமர்சிக்கிறார்கள்.

அண்ணல் தங்கோ, தமிழர் கழகம் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று கூறியபோது, அதை மறுத்தவர் பெரியார். திராவிடர் கழகம் என்று தான் பெயர் இருக்கும் என்று கூறி அதற்கு வலுவான காரணங்களைச் சொன்னவர், இந்தத் திராவிடம் என்பது தமிழ் இல்லை என்று சொன்னாலும், இதில் உள்ளடங்கியிருக்கிற ஆரிய எதிர்ப்புணர்ச்சிக்கு ஈடாக, வேறு எந்தச் சொல்லைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று தான் பெரியார் சொன்னார். அது எந்த மொழிச் சொல் என்பதைவிட, அது என்ன உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது என்பதே முக்கியம் என்று சொன்னார் பெரியார். அவரே நடத்திய கடைசி மாநாடு ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு’ தான். டிசம்பர் 24-ம் தேதி பெரியார் மறைந்தார். டிசம்பர் 8, 9 தேதிகளில், அவர் கூட்டிய கடைசி மாநாட்டுக்கு வைத்த பெயர் ‘தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாடு’. பெரியார் ‘தமிழர் மாநாடு’ என்று பெயர் சூட்டினாரே, அவர் என்ன தவறாகவா பெயர் சூட்டியிருப்பார்? நாங்கள் மட்டும் என்ன தவறான பொருள் கொண்டா, இந்தப் பெயரை வைத்தோம்? இல்லை. ஆனால் அதற்கொரு விமர்சனம்.

அதே போல, இந்த அரங்குகளுக்கு நமக்காக உழைத்தவர்கள் பெயர்களையெல்லாம் வைக்கிறோம். அந்த முறையில், பெயர் வைப்பதைப் பற்றிக்கூட, நம்மீது விமர்சனம் வைக்கிறார்கள். பெரியார் சொல்வார் - நமக்கு எப்போதுமே விளம்பர வேலையை நமது எதிரிகள் செய்வார்கள் கவலைப்படாதீர்கள் என்று சொல்வார். இந்து மிஷன், ஜனசங்கம் போன்ற கொள்கை எதிரிகள் எல்லாம், பெரியாருக்கு கறுப்புக் கொடி என்பான். அதைப் பத்திரிகைகள் வெளியிடும். அப்போது செய்தி வேகமாகப் பரவும். நமது தோழர்களும், பெரியாருக்கு கருப்புக் கொடியா என்று ஏராளமாகத் திரண்டு வருவார்கள். அப்படித்தான் இவர்களும் செய்கிறார்கள். ‘தந்தை பெரியார் திராவிடர் கழகம்’ நடத்தும் நிகழ்ச்சிகள், திராவிடர் கழகத்தவர்களுக்கு தெரிவதில்லை. அதை எல்லாம் அவர்கள் படிப்பதும் இல்லை. ஆனால், திராவிடர் கழகத்தில், ‘விடுதலை’ ஏட்டில், ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். நம்முடைய மாநாட்டு அரங்கிற்கு இறையன் பெயரை வைப்பதைக் கண்டித்து, இறையனின் துணைவியார் பெயரில் ஒரு அறிக்கை வந்திருக்கிறது. அவரது பெயரில் தான் அறிக்கை வந்திருக்கிறது.

அறிக்கையை யார் எழுதியிருப்பார்கள் என்பது நமக்குத் தெரியும். இந்த அறிக்கை மூலம், “தந்தை பெரியார் திராவிடர் கழகத்துக்காரன் நமது கட்சியைச் சார்ந்தவர்களைக்கூட, அவரது தொண்டை அங்கீகரித்து, நன்றி தெரிவித்து, அவர்கள் மாநாட்டு அரங்கிற்கு பெயர் சூட்டியிருக்கிறார்கள்” என்று இந்த அறிக்கை உணர வைத்திருக்கும். அதற்காக இந்த அறிக்கைக்கு நன்றி சொல்ல வேண்டும். நாம் திருப்பூரில் விழா நடத்துகிறோம். இறையன் திருப்பூரில் வாழ்ந்தவர். அனுப்பர்பாளையத்தில் இருந்தவர். இந்த ஊரில் இருந்து கொண்டு சாதி மறுப்புத் திருமணங்களை எமகண்டத்தில், ராகு காலத்தில் நடத்தியதோடு, திருமணங்களில் சம்பிரதாயங்களைத் தகர்த்து, புலால் உணவு பரிமாறியவர். இப்படியெல்லாம் பெரியார் கொள்கைகளை செயலில் காட்டிய, இந்த ஊரில் வாழ்ந்த, இந்த ஊரில் இயக்கம் நடத்தியவர் என்ற பெருமைக்குரியவர். அது மட்டுமல்ல, இயக்கத்துக்காக உழைத்து முடிவெய்திய ‘சுயமரியாதை சுடரொளிகள்’ பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தொகுத்தளித்தவர். இந்த இயக்கத்துக்காக உழைத்து, மறைந்து போனவர்களின் வரலாற்றை நூலாக்கி நினைவூட்டியவர். அப்படி பல சிறப்புள்ள அவர் பெயரை, மனதார வைக்கிறோம்.

இது மட்டுமல்ல, சேலத்தில் நமது மாநாட்டுப் பந்தலுக்குப் பெயர் சேலம் அம்மாப்பேட்டை முத்து பந்தல். அவர் பெரியார் பெருந்தொண்டர். எப்படிப்பட்ட தொண்டர்? சேலத்திலே பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றினார். “ஒருவருடைய மனைவி, பிறரை விரும்புவதைக் குற்றமாகக் கருதக் கூடாது” என்று ஒரு தீர்மானம். அதற்குத் தவறான விளக்கங்களை எல்லாம் கூறி, போராட்டங்களை எல்லாம் அறிவித்தார்கள். சாரதா கல்லூரியைச் சார்ந்த சீதாலட்சுமி என்பவர் அப்படிப் போராட்டத்தை அறிவித்தார்.

இந்த சீதாலட்சுமியின் கணவராக இருந்த எஸ்.வி. இராமசாமி, நடுவணரசில் தொடர்வண்டித் துறைக்கு அமைச்சராக இருந்தவர். அவர் திருச்செந்தூர் கோயிலுக்கு வழிபடச் சென்றபோது, பார்ப்பன அர்ச்சகர் திருநீற்றை, அவர் ‘சூத்திரன்’ என்பதற்காக கையில் தராமல், கல் மீது போட்டுவிட்டான். அதற்காகப் பெரியார் தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டம் நடத்தினார். ஆனால், அவரின் மனைவி, பெரியாரை எதிர்த்து ஒரு ஊர்வலம் நடத்தினார். சேலத்தில், பெரியார் சிலையைத் தகர்ப்போம் என்ற முழக்கத்தோடு வந்தார்கள். அப்போது இந்த அம்மாப்பேட்டை முத்து தான், கையில் கத்தியோடு பெரியார் சிலைக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தார். திகைத்துப் போய்விட்டார்கள். காவல்துறையும் போகச் சொன்னது. ஆனால், கையில் கத்தியுடன் அசையாது நின்றார். காவல் துறையும் அருகில் வந்தால் வெட்டுவேன் என்றார். அவர் பெயரை நாங்கள் சேலம் மாநாட்டு அரங்கிற்கு வைத்தோம். அவர் இறுதி வரை திராவிடர் கழகத்தில் தான் இருந்தார். நாம் புதிய அமைப்புக் கண்ட பிறகும் திராவிடர் கழகத்தில் இருந்தவர்.

துரை. சக்கரவர்த்தி திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்தவர். விபத்தில் அவர் மரணமெய்தி விட்டார். நாங்கள் எல்லாம் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த போது, திராவிடர் கழகத்தின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கொளத்தூர் மணி ஒரு பெரியாரிஸ்டே அல்ல, அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று பேசியவர். என்னோடு 30 ஆண்டு பழகியவர். என்னைப் புரிந்தவர். இவ்வளவுக்குப் பிறகும் என்னைப் பற்றி, இப்படிப் பேசினார். அந்த சக்கரவர்த்தி மறைந்து விட்டார் என்றவுடன், நானும், பொதுச் செயலாளர்கள் இராமகிருட்டிணன், விடுதலை இராசேந்திரன் மூன்று பேரும் போய் இரங்கல் தெரிவித்தோம். நம்முடைய கழகத் தோழர் திலீபன், நெமிலியில் நடந்த கூட்டத்துக்கு துரை. சக்கரவர்த்தி நினைவுப் பந்தல் என்று பெயர் சூட்டினார்.

திண்டுக்கல் நகர திராவிடர் கழக செயலாளர் ராசேந்திரனை சிவசேனாக்காரன் தாக்கிவிட்டான். எதற்காக? நாள்தோறும் காலையில் எழுந்தவுடன் அவர் நடைப் பயிற்சிக்குப் போவார். 6 கிலோ மீட்டர் நடைபயிற்சியின் போது, திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள சிந்தனைப் பலகைகளில் ஒவ்வொரு நாளும், பெரியார் சிந்தனைகளை விடாமல் எழுதுவார். அப்படி எழுதும் போது அவரைத் தாக்கினார்கள். உடனே நம்முடைய கழகத்தைச் சார்ந்த திண்டுக்கல், செம்பட்டி, வலையப்பட்டித் தோழர்கள் 100 பேர் அணி திரண்டு, யார் தாக்கியதாகக் கருதினார்களோ, அவனது வீட்டைத் தாக்கினார்கள். நாங்கள் தலைமைக் கழகத்தில் கூடி எதுவும் முடிவெடுக்கவில்லை. அவர்களாகவே போனார்கள். அப்படி வீட்டைத் தாக்கியது சட்டப்படி தவறாகக்கூட இருக்கலாம். அப்படித் தாக்கியதால், அவன், காவல்துறையில் போய் சரணடைந்தான்.

தாக்கப்பட்டவன் திராவிடர் கழகத்துக்காரன் என்று நாங்கள் நினைக்கவில்லை. கருப்புச்சட்டைக்காரனை காவிச்சட்டைக்காரன் தாக்கிவிட்டான் (பலத்த கைதட்டல்) என்று தான் நினைத்தோம். ஆக பெரியார் இயக்கத்தில் பணியாற்றுகிறவர்கள் அனைவருமே, தமிழ்ச் சமுதாயத்திற்கு, ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பணியாற்றுகிறவர்கள் என்றே நாம் நினைக்கிறோம். அதைக்கூட விமர்சனம் செய்தார்கள். இவைகள் ஒருபுறம் இருக்கட்டும். இன்று நமது நிலை எப்படி இருக்கிறது? புதிய உரிமைகளுக்காக நாம் போராடி வரும் போது ஏற்கனவே இருந்து வரும் உரிமைகளையும் இழந்து வருகிறோம். நாம் தனியார் துறையில் இடஒதுக்கீடு கேட்டு வந்தோம். தனியார் துறை என்றால், அவர்களே முதல் போட்டு நடத்துவது அல்ல. மக்களிடம் பங்குகள் வாங்கி, அரசு நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, அரசு தரும் சலுகைகள் மான்யங்களைப் பெற்றுத் தான் தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன. தனியார் நிர்வகிக்கிற பொதுத் துறைதான் தனியார் துறை. எனவே - இந்த நிறுவனங்களில், இடஒதுக்கீடு உரிமைக்காகப் போராடி வந்தோம்.

இப்போது தனியாக பொறியியல் கல்லூரிகளில் இடஒதுக்கீடே தரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஆனால், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு மட்டும், 15 சதவீத ஒதுக்கீடு தர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இனி வருங்காலத்தில், எனது வாழ்க்கைச் செலவில், வீட்டுச் செலவில், அரசு நிதி உதவி எதையும் செய்வது இல்லை. எனவே அரசுச் சட்டங்கள் என்னைக் கட்டுப்படுத்தாது என்று கூட நீதிமன்றங்கள் சொல்லலாம். எனவே, இழக்கின்ற உரிமைகளை மீட்கவும் பெறவேண்டிய உரிமைகளைப் பெறவும் நாம் போராடும் நிலையில் இருக்கிறோம்.

நமது எதிர்காலத் திட்டமாக டிசம்பர் 24-ல் ‘குடிஅரசு’ அடுத்த தொகுதி வெளிவருகிறது. இது ஒரு திட்டம். நவம். 26 - மிகச் சிறப்பான நாள். இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள். அதனால் தான் அந்த நாளில், அந்த அரசியல் சட்டம் சாதியைக் காப்பாற்றுகிறது என்பதால், அந்தப் பிரிவுகளைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார். அதே 26 தான் இன்று உலகத்தின் பார்வையை ஈர்த்துக் கொண்டிருக்கிற தம்பி பிரபாகரன் பிறந்த நாளும் அது தான். அந்த சட்ட எரிப்புப் போரில் சிறை சென்று, சிறையில் மரணமடைந்த ராமசாமி, வெள்ளச்சாமி இருவருக்கும் ஒரு நினைவுச் சின்னம் கூட இல்லை. இதை நேற்று தோழர் செல்வேந்திரனும் குறிப்பிட்டார். அரியலூருக்கு அருகே உள்ள அயன் ஆத்தூர் என்ற சின்ன கிராமத்தில் 24 பேர் சட்டத்தை எரித்து சிறைக்குப் போயிருக்கிறார்கள். அதில் நான்கு பேரை, வயது குறைந்தவர்கள் என்று நீதிமன்றம் விடுவித்து விட்டது. 20 பேர் ஒன்றரையாண்டு, ஒன்பது மாதம் சிறைத் தண்டனை பெற்று இருந்திருக்கிறார்கள். அரியலூரில் 14 பேர், வாலாஜா நகரத்தில் 9 பேர், அந்தப் பகுதியில் மட்டுமே 45 தோழர்கள் சட்டத்தை எரித்து சிறைச் சென்றிருக்கிறார்கள். இதில் 3 பேர் இப்போது உயிருடன் இருக்கிறார்கள். அந்தப் பகுதியில் நாம் அவர்களுக்கு நினைவுக் கல்வெட்டு எழுப்பி, அரசியல் சட்டத்தை எரித்த நமது வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிற நாளாக நன்றி செலுத்துகிற நாளாக நடத்தவிருக்கிறோம். இது இரண்டாவது செயல் திட்டம்.

நமது தோழர் அதியமான் இங்கு, மனிதன் மலத்தை மனிதனே எடுக்கும் அவலம். அரசின் தொடர் வண்டித் துறையில் நடந்துகொண்டிருப்பதைக் குறிப்பிட்டார்கள். நவீன விஞ்ஞான வசதிகள் வந்துவிட்டக் காலத்தில், இதற்கு எவ்வளவோ மாற்று ஏற்பாடுகளைச் செய்ய முடியும். அரசு, அதை சிந்திக்கவில்லை. எனவே இந்த இழிவை எதிர்த்து நவ.28 ஆம் தேதி, ஆதித் தமிழர் பேரவை சார்பாக, ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தோழர் அதியமான் அறிவித்துள்ளார். அந்தப் போராட்டத்தில், மறியல் நடக்கும் எல்லா ஊர்களிலும் தந்தை பெரியார் திராவிடர் கழகமும் கலந்து கொள்ளும் என்று அறிவித்துக் கொள்கிறேன்.

அதுபோல - கௌரிக்குளம் என்ற ஊரில் கழகக் கொடி ஏற்றக் கூடாது என்று காவல்துறை கூறுகிறது. நாம் நேரில் சென்று, வட்டாட்சித் துறை அதிகாரிகள் வந்து அளந்து பார்த்தனர். காவல்துறை கோயில் நிலம் என்று சொன்ன இடத்தைத் தள்ளி, நாம் கொடி ஏற்றினோம். ஓராண்டு கழகக்கொடி பறந்து கொண்டிருந்தது. அங்கே பறந்து கொண்டிருந்த கழகக் கொடியை அகற்றி, கொடிக் கம்பத்தை உடைத்து விட்டு, பெரியார் படத்தையும் தீ வைத்து எரித்து விட்டார்கள். வழக்குப் பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே இதில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாம் காவல்துறை முன் போராட்டம் நடத்தவிருக்கிறோம். அப்போது காவல்துறையின் எல்லா நடவடிக்கைகளையும் விமர்சிக்க வேண்டியிருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பல செய்திகளைப் பேச எண்ணியிருந்தோம். மழை வந்து, உங்களையும் இருக்கவிடாது, எங்களையும் பேச விடாது செய்துவிட்டது. தமிழ் நூல்களைத் தேடிப் பிடித்து பதிப்பிக்கும் பணியை முதலிலே துவக்கியவர் தாமோதரம் பிள்ளை. ஆனால் உ.வே.சாமிநாதய்யர் தான் இதைச் செய்ததாக, பார்ப்பனர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழ் இலக்கியங்களைப் பதிப்பிக்கும் தகுதி இருக்கிறதோ இல்லையோ, நமக்குக் கவலை இருக்கிறது என்பதால் நாம் பதிப்பிக்கிறோம் என்று தாமோதரம் பிள்ளை கூறினார். அதே போல் - பெரியாருடன் பழகியவர்கள் இருக்கிறார்கள், பெரியாருடைய பணத்தை வைத்திருப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்களைவிட நமக்கு அதிக அக்கறை இருக்கிறது. பெரியாருடைய கொள்கைகளைக் கொண்டு செல்ல வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். நம்முடைய தோழர் விடுதலை இராசேந்திரன் எழுதியதைப் போல, நாம் நிறுவனங்களுக்காக இயக்கம் நடத்தவில்லை, கொள்கைகளுக்காக இயக்கம் நடத்துகிறோம்.

அதோடு நமது ‘பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு நாம் சந்தா சேர்க்க வேண்டியிருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளில் நமது நிலைப்பாட்டை நாம் நமது இயக்க ஏடு வழியாகத்தான் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. நாம் பல்வேறு நிலைப்பாடுகளை எடுக்கிறோம். ஆடு, கோழி வெட்டத் தடைச் சட்டம் வந்த போது நாம் அந்த சட்டத்தை ஆதரித்தோம். சிறு தெய்வ வழிபாடு, பார்ப்பான எதிர்ப்பு வழிபாடு, அதைத் தடுப்பதா என்றெல்லாம் சொன்னார்கள். புத்தரே சொன்ன உண்மையான கொள்கைளைக் கொண்ட மதப் பிரிவை ‘ஹீனயானம்’ என்றார்கள். அதாவது சிறிய பிரிவு; புத்தர் கொள்கைக்கு எதிரான பிரிவை ‘மகாயானம்’ அதாவது பெரிய பிரிவு என்றார்கள். அதைப் போல, நம்முடைய கடவுள்களை நாமே சிறு தெய்வம் என்று ஏற்றுக் கொண்டோம். பெரு தெய்வ வழிபாடு நடத்துகிறவர்கள், திருப்பதிக்கும், பழனிக்கும் போய்விடுகிறார்கள். ஆனால் நமது சிறு தெய்வ வழிபாடு நடக்கும் கோயில்களில் நீதிமன்றமே ஆணையிட்டாலும்கூட, தீண்டாமையைத் தடுக்க முடியவில்லை. அதைத்தான் கண்டதேவியில் பார்த்தோம். எனவே சிறு தெய்வ வழிபாட்டிலும் சாதி ஒடுக்குமுறை இருக்கிறது. எனவே தான் அரசின் ஆடு கோழி வெட்டும் தடைச் சட்டத்தை பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் நாம் வரவேற்றோம்.

நடிகை குஷ்பு பிரச்சினை

இப்போது நடிகை குஷ்புவைப் பற்றி பேசுகிறார்கள். அதிலே பலரது கருத்துகளோடு நமக்கு மாறுபாடு உண்டு. கற்பு என்பதைக் கொண்டு போய், ஒரு உறுப்பில் வைக்கிறார்கள். பெரியார் அந்த சிந்தனைப் போக்கையே உடைத்தவர். மறுமணமும் மணவிலக்கும் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு சமூகத்தில், வரப்போகிறவள் கன்னியாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி சரியாக இருக்கும்? இப்படி நமது சிந்தனைப் போக்கை, நமது ஏட்டில் தான் நாம் தெளிவுபடுத்த வேண்டும். அதற்கு நம்முடைய தோழர்கள் சந்தா சேர்க்கும் இயக்கத்தை அக்டோபர் மாதம் முழுதும் நடத்த வேண்டும்.

தனியார் துறை இடஒதுக்கீட்டை வலியுறுத்தி 2006 மார்ச் மாதம் - மதுரை டி.வி.எஸ். முன் போராட்டமும், அதை விளக்கி ஜனவரி மாதம் முழுதும் சுவரெழுத்துப் பிரச்சாரமும், பிப்ரவரி முழுதும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்களையும் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த செயல்திட்டங்களை வெற்றிகரமாக்க நீங்கள் முழு ஒத்துழைப்பு தாருங்கள். அதுவே இந்த விழாவுக்கு நீங்கள் வந்ததற்கான பயனாக இருக்கும் என்று கூறி, இந்த விழாவுக்காக உழைத்த அனைவருக்குமே என் நன்றியைக் கூறி முடிக்கிறேன்.”

Pin It